திங்கள், 1 டிசம்பர், 2014

பிடிவாதம்

பிடிவாதம்
·        மனுஷி
அது ஒரு பொட்டல் காடு. ஒன்றிரண்டு பனை மரங்களும் இலை உதிர்த்து மொட்டையாய் நிற்கும் ஒன்றிரண்டு மரங்களும் தவிர்த்து சிறு புல்லும் இல்லாத புழுதிக் காடு. அங்கே நின்றிருந்த லாரி ஒன்றில் முகத்தில் எந்தவொரு சலனமும் இன்றி சில மனித உடல்களை மடியில் கிடத்தி கையில் இருந்த கூர்மையான கத்தியினால் கழுத்தை அறுத்து, அறுபட்ட உடல்களைத் தனியாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான உடல். அதன் கழுத்தை ஒரு காகிதத்தைக் கூர்மையான பிளேடால் கீறுவது போல கீறினாள். அப்போதுதான் அந்த முதியவரின் கண்களைப் பார்த்தாள். அவை, என்னை விட்டு விடு என்று கெஞ்சுவது போல இருந்தது. அந்தக் கண்கள் அவளை நிலைகுலையச் செய்தது. செய்து முடித்தாக வேண்டிய காரியத்தை இடையில் விடுவது நல்லதல்ல என்பது போல் கழுத்தின் நடுவில் கூர்மையான கத்தியை வைத்து அழுத்தினாள். வெட்டுப்பட்ட கழுத்து மடக் என்ற சத்தத்துடன் தொங்கியது.
சட்டென்று கண்விழித்தாள் ஜனனி. உடல் வியர்த்திருந்தது. என்ன பயங்கரமான கனவு? இரவு விளக்கை அணைக்கவே இல்லை. டியூப் லைட் எரிந்து கொண்டிருந்தது. சன்னல் அருகில் வைத்திருந்த செல்போன் ரொம்ப நேரமாகப் பாடிக் கொண்டிருந்தது. பதினைந்து மிஸ்டு கால்ஸ். ஜனனிக்கு மிகவும் பிடித்தமான பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…” என்ற பாடலை ரிங்டோனாக வைத்திருந்தாள். டேபிள் மேல் இருந்த அலாரம் எட்டு எனக் காட்டியது. கனவின் அதிர்விலிருந்து முழுதும் விடுபடாமல் இருந்தவள், அடுத்தும் செல்போன் பாடவே எடுத்துப் பார்த்தாள். அவளது அக்கா. பெரும்பாலும் தினமும் காலையில் செல்போன் மூலம் அவளை எழுப்பி விடுவது அவளது அக்காவாகத்தான் இருக்கும். சலிப்புடன் போனை எடுத்து ஹலோ சொன்னாள். அக்காவின் குரலில் கோபம் தொனித்தது.
போன் எடுத்துப் பேச இவ்ளோ நேரமா? அப்படி என்னதான் பண்ணுவியோ? இல்ல ரிங் அடிக்கட்டும் என்று பார்த்துக்கிட்டே இருந்தியா? திமிர் பிடிச்ச கழுத நீ. செய்வ.
பதில் பேச விடாமல் கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டிக் கொண்டிருந்த அக்காவை இடைமறித்தாள்.
தூங்கிட்டேன். என்ன விஷயம் என்று சொல்லிட்டு அப்புறம் உங்க பாட்டைப் பாடறீங்களா?
ஏன் என்ன விஷயம் என்று தெரியாதா? ஏன் இப்படி பிடிவாதமா இருக்க? இப்படி பிடிவாதமா இருந்து என்னத்த சாதிக்கப் போற? இருபது நாளா சொல்றேன் சித்தப்பா உடம்பு முடியாம இப்பவோ அப்பவோன்னு கிடக்கறார். எல்லாரும் வந்து பார்த்துட்டாங்க. உன்னை கடைசியா பார்க்கனும்னு ஆசைப்படறார்னு சொல்றேன். ஏன் இப்படி வீம்பு புடிச்சு பாவத்தை அள்ளிக் கொட்டிக்கற?
“….
எதாவது பேசித் தொலையேண்டிஇப்படி யாரும் வேண்டாம் என்று இருந்தால் நாளைக்கு நீ செத்து தனிப் பொணமா நீயே தான் சுடுகாட்டுக்குப் போகணும்
அக்காவின் கோபம் அழுகையாக மாறியது. இப்போது கோபத்தை விட்டுக் கெஞ்சினாள். வரச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே போனைத் துண்டித்தாள். அக்கா இப்படி பேசுவது முதல்முறை இல்லை என்றாலும் அவளுக்கு வலிக்கவே செய்தது. அவள் அழுகையை விழுங்கிவிட்டு அன்றைய பொழுதில் செய்ய வேண்டியவை என்ன என யோசிக்கத் தொடங்கினாலும் பழைய நினைவுகள் அவளை விடவில்லை.
*******
பத்தாவது தேர்வு முடிவு வெளியாகி இருந்தது. அன்று ஜனனிக்குப் பிறந்தநாளும் கூட. 400க்கு மேல் மதிப்பெண் வாங்கி இருந்ததால் அக்காவுக்கு ரொம்பவே சந்தோஷம். ஒன்றிரண்டு நாளில் தோழிகளோடு  பள்ளிக்குச் சென்று மார்க் ஷீட் வாங்கி வந்துவிட்டாள். அடுத்தநாள் மாலை அக்காவும் மாமாவும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
தெருவில் விளையாடிவிட்டு வந்த ஜனனியை எங்க போய்ட்ட சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு என்று அவசரப்படுத்தினர் அக்காவும் மாமாவும். எதற்கு என்ன என்று எதுவும் கேட்டுப் பழக்கமில்லாத அவள், அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி வந்தாள். அவளிடம் இருந்த நான்கு சுடிதார்கள், நான்கைந்து பாவாடைச் சட்டைகள் இவற்றுடன் அவளது சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரு பேக்குக்குள் திணித்து அவளிடம் கொடுத்து ம் போலாம்என்று சொல்ல, எங்கே போகிறோம் என்ற கேள்வியை மனத்தில் சுமந்தபடி வீட்டைவிட்டு வெளியேறினாள். அப்போது யாரிடமும் சொல்ல வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவளோடு விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் எங்கடி போற என்று கேட்க, அவளிடம் பதில் எதுவும் இல்லை. அக்கா, மாமாவின் பின்னால் ஒரு நிழலைப் போல போய்க் கொண்டிருந்தாள்.
*******
சித்தப்பா வீட்டில் நான்கு அக்கா, ஒரு தம்பி, சித்தி, சித்தப்பா என வீடு நிரம்பி இருக்கும். போதாக்குறைக்கு வீட்டு நபர்களாகப் பாவிக்கப்படும் நான்கைந்து பசு மாடுகள், இரண்டு கன்று குட்டிகள், கோழிக் குஞ்சுகள் வேறு. வீட்டுச் சூழல் அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அக்காக்களோடு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, மாடுகளுக்குப் புல் அறுக்கக் கரும்புக் கொல்லிக்கோ, மரவள்ளிக் கொல்லிக்கோ போவது, மோட்டரில் குளிப்பது என வாழ்க்கையை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஜனனி. பதினைந்து நாள் கண் மூடி திறப்பதற்குள் ஓடி விட்டிருந்த. ஒரு வெள்ளிக்கிழமை அன்று சித்தப்பாவும் மாமாவும் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்னார்கள். அப்போதுதான் அவளுக்கு ஓரளவு புரிந்தது, சித்தப்பா வீட்டிற்கு ஏன் அழைத்து வரப்பட்டோம் என்பது.
சித்தப்பா வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி. விண்ணப்பத்தை சித்தப்பாவே பூர்த்தி செய்து, கையெழுத்து போடும் இடத்தை மட்டும் அவளுக்காக விட்டு வைத்தார். அட்மிஷன் கார்டு கையில் வாங்கியபிறகு தான் அவளுக்குத் தெரிந்தது கம்ப்யூட்டர் குரூப். அவள் பள்ளிக்குச் சென்று வர வீட்டில் இருந்த லேடீஸ் சைக்கிளைச் சரி செய்து கொடுத்தார் சித்தப்பா. அவள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 
ஜனனிக்கு எப்போதுமே சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும். சிறுவயதில் அம்மாவோடு ஊரில் இருக்கும்போது எப்போதாவது வருவார். வீட்டிற்கு வரும்போது அவர் கையில் ப்ரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஒரு பாக்கெட், கொஞ்சம் மல்லிகைச்சரம் நிச்சயம் இருக்கும். இரண்டுமே அவளுக்குக் கொள்ளைப் பிரியம். சித்தப்பா கிளம்பும்போது ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் நோட்டைக் கையில் கொடுத்துவிட்டுப் போவார். அது ஒரு பெரிய தொகை அவளுக்கு. சித்தப்பா, இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை, கையில் வாட்ச், படிய வாரிய தலைமுடி, கையில் கர்சிப் சகிதமாய் பார்க்க ஒரு ஹீரோ போலவே தெரிவார்.
******
எப்போதும் வெள்ளிக்கிழமை மாலை இருட்டத் தொடங்கும் நேரத்தில் கரும்புக் கொல்லியில் உள்ள ஆயா தாத்தாவின் சமாதியில் விளக்கேற்றிவிட்டு வருவது வழக்கம். ஜனனி அங்கு வந்த நாள் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் சங்கரி அக்காவுடன் கிளம்பிவிடுவாள். அந்த வெள்ளிக்கிழமை சங்கரி அக்கா வீட்டுக்குத் தூரம் என்பதாலும், பெரிய அக்காவுக்கு சமைக்கும் வேலை இருந்ததாலும் ஜனனியைப் போய் விளக்கு வைத்துவிட்டு வரச் சொன்னார் சித்தி. எண்ணெய் திரியெல்லாம் எடுத்துக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு கேட்டைத் திறந்தபோது நன்றாக இருட்டி இருந்தது. மனத்தில் பயம் கவ்விக் கொண்டது. சிறுவயதில் கேட்ட பேய்க் கதைகள் தானாகவே நினைவுக்கு வந்தன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகாஎன்ற பாடலை மனதிற்குள் முணுமுணுத்தபடி சற்றே பெருத்த ஒத்தையடிப் பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பத்தடி தூரம் நடந்ததும் பின்னால் செருப்புச் சத்தம் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பினாள். சித்தப்பா வந்துகொண்டிருந்தார். நிம்மதியாக இருந்தது. இனி முருகன் பாட்டுக்கும் கந்தசஷ்டி கவசத்திற்கும் தேவை இருக்காது.
அப்பா நீங்களும் வர்றிங்களா?
ம்நீ தனியா போக பயப்படுவியே.
..
மீண்டும் சித்தப்பாவே தொடர்ந்தார். வந்த நாள்ல இருந்து நானும் உன்கிட்ட தனியா நிறைய பேசணும் என்று நினைப்பேன். யாராவது உன்கூட இருந்துகிட்டே இருக்காங்க.
சுற்றிலும் நல்ல இருட்டு. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமலேயே டார்ச் வெளிச்சத்தில் அவரது முகத்தைப் பார்த்தாள். அவர் புன்னகைத்தபடியே அவளது தோளில் கை வைத்தவர் மெல்ல அவளது வலது மார்பகத்தை அழுத்தினார். அடுத்து அவரது கை இடது பக்கம் நகர்ந்தது. அதற்குள் சட்டென்று அவரது கையை உதறித் தள்ளிவிட்டு, வேணாம்ப்பா.என்றாள்.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அப்பா எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். சரியா?
சொல்லிவிட்டு புன்னகைத்தபடியே இறுக்கி அணைத்துக் கொண்டார். யாராவது அந்தப் பாதையில் வர மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. அவரது பிடியில் இருந்து திமிறினாள். அவரது குரல் கடுமையானது.  
சொன்னாக் கேளு. அடம் பிடிக்காத. அப்புறம் நான் பொல்லாதவனா ஆகிடுவேன்.
அவள் பெருங்குரலெடுத்து அழுதாள். வேறு வழியின்றி பிடியைத் தளர்த்தியவர் நான் இங்கேயே இருக்கேன் நீ போய் விளக்கு வைச்சுட்டு வாஎன்றார். அவரது எண்ணம் ஈடேறாமல் போகவே அவர் தருகிற தண்டனை போல் இருந்தது. அவசியம் அந்தச் சமாதியில் விளக்கை ஏற்றித்தான் ஆக வேண்டுமா என்று நினைத்தாள். ஆனால் வேறு வழியில்லை. அவளது கை கால்கள் நடக்கும் திராணியற்று நடுங்கிக்கொண்டிருந்தன. அந்த இருட்டில் தன் உடலை ஒருமுறை பார்த்தாள். அருவருப்பாக உணர்ந்தாள். சிறுவயது முதல் அவள் விரும்பி ரசித்த உடலின் பாகம் அவளது மார்பகம்தான். தோழிகளுடைய மார்பகங்களுடன் தன்னுடைய மார்பகங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வாள். தோழிகளின் அக்காக்களின், நண்பர்களின் அக்காக்களின் மார்பகங்களைப் போல தனக்கும் எப்போது ஆகும் என்று நினைப்பாள்.
விளக்கு வைத்துவிட்டுத் திரும்பி வரும்போது தனக்கு மார்பகம் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். சற்று தூரத்தில் ஒரு கருப்பு நிழலைப் போல சித்தப்பா நின்று கொண்டிருந்தார். டார்ச் லைட் பனந்தோப்பின்மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது. உள்ளூர பயம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அழுகை வடியாத கண்களுடன், சித்தப்பாவைக் கடந்து வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் தரையைப் பார்த்தபடி வந்தாள். இருட்டு இப்போது அத்தனை பயங்கரமானதாக இருக்கவில்லை. சித்தப்பாவைக் கடக்கும்போது அவர் கடுமையான குரலில்,
வீட்டுல போய் சித்திக்கிட்டயோ, இல்ல உங்க அக்காகிட்டயோ இல்ல வீட்டுல உள்ள வேறு யாருகிட்டயோ ஏதாவது சொன்ன அவ்ளோதான்.என்றார். தேவதைக் கதைகளில் அரக்கன் கர்ஜிப்பதைப் போல இருந்தது.
இப்படி நடந்தது என்று எப்படி யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடைவது, அது அசிங்கம், அப்படிச் சொன்னால் தன்னைப் பற்றித்தானே கேவலமாக நினைப்பார்கள் என்று அவள் யோசித்தாள். வீட்டை நெருங்கும்போது , நீ மட்டும் வீட்டில் யார்கிட்டயாவது சொன்ன அப்புறம் நீ படிக்க முடியாது. தீர்மானமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவள் நேராகத் தன் புத்தகப்பை வைக்கப்பட்டிருந்த கூரை வீட்டிற்குச் சென்றாள். அவள் படிக்கவும், வீட்டுப் பாடங்களைச் செய்யவும் அந்த இடத்தை ஒதுக்கி இருந்தார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி அவள் மனதுக்குள் எழுந்தபோது கேவி கேவி அழுதாள். தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அழுதபடியே தூங்கிப் போனாள்.
          அன்று இரவு தன் உடலின்மீது ஒரு கை ஊர்ந்து வருவதை உணர்ந்தவள் திடுக்கிட்டு விழித்தாள். அருகில் சித்தப்பா அமர்ந்திருந்தார்.
ஏன் சாப்பிடாமல் தூங்கிட்ட.
அது சாப்பிடும் நேரமோ, ஏன் சாப்பிடவில்லை என்று வாஞ்சை வழிய கேட்கும் நேரமோ இல்லை. தலைக்கு மேல் மாட்டி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் 2.10 எனக் காட்டியது. அவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.
நீ அழுவதால் எதுவும் மாறிவிடாது. நானும் மாற மாட்டேன். என் அன்பைப் புரிஞ்சுக்கோ. உனக்கு எல்லாம் செய்வேன். நான் தான் உனக்கு எல்லாம்.
அழுது அழுது கண்கள் வலித்தது. கண்களில் வலியுடன் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு இனி அழவே கூடாது. நான் இருக்கேன் என்று தலையை வருடிக் கொடுத்தார். இப்படிப்பட்ட அன்புக்கு பதிலாக என்னைக் கொன்றுவிடலாம் என்று நினைத்தவள், எனக்குப் பிடிக்கலப்பா விட்டுடுங்க என்றாள் வலிமையிழந்த குரலில். சரி உனக்கா ஒருநாள் புரியும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். அதன்பிறகு அன்று இரவு அவள் தூங்கவே இல்லை. அது தொடர்கதையாகும் என்பதை அப்போது அவள் உணரவேயில்லை.
ஒருநாள் மாலையில் பக்கத்தில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் பிரம்மாண்டமான தோற்றத்துடன் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் மாரியம்மனுக்கு முன்னாள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கியே, உனக்கு தினமும் விளக்கு வைக்கறேன், காலையில் கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு இங்கிருக்கிற செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தறேன், வெள்ளிக்கிழமையில் கற்பூரமெல்லாம் ஏத்திக் கும்பிடறேன் உனக்குக் கண்ணே இல்லையா?  வேலையை வாங்கிக்கிட்டு பலன் எதுவும் கொடுக்க மாட்டியா? எனக்குத் தெரியாது உடனடியா ஏதாவது செய்யனும்.வெடித்துச் சிதறியது அழுகை. சட்டென்று சுயநினைவு வந்தவளாக பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளையாக யாரும் இல்லை.
அன்றைக்கு மதியம் சித்தப்பா பள்ளிக்கு வந்தார். லஞ்ச் டைமில் வாட்மேன் வந்து சொன்னார் உங்க சித்தப்பா வந்திருக்கார் பாப்பா. மிக மிக அலட்சியமாக மிக மிக தாமதமாக கிளம்பிப் போனாள்.
வா வெளியில் போய் ஒரு ஜூஸ் குடிச்சுட்டு வரலாம்.
நிமிர்ந்து பார்க்காமலேயே பதில் சொன்னாள்.
இல்லை. நான் வரல.
உன்கிட்ட பேசனும். வா.
என்கிட்ட எதுவும் பேச வேணாம். எனக்குக் கிளாஸ் இருக்கு.
சரி நீ கிளாஸ் முடிச்சுட்டு வா நான் இங்கேயே நிக்கறேன்.
சனியனை விரட்டி விட்டால் போதும் என்று மனத்துக்குள் நினைத்தபடி அவர் முன்னால் நடந்தாள். பத்துக் கடை தள்ளி இருந்த ஜூஸ் கடையில் ஜூஸ் சொல்லிவிட்டு சேரில் அமர்ந்திருந்தார்கள். சித்தப்பா தான் பேச்சைத் தொடங்கினார்.
இங்க பாரு. நீ இப்படியே யார்கிட்டயும் பேசாமல் அழுதுகிட்டே இருப்பதால் ஒன்னும் நடக்காது. உனக்கு வேற வழியே இல்லை. இங்க என்னைப் பாரு. நான் நினைச்சால் உன்னை என் இஷ்டப்படி எடுத்துக்க முடியும். ஆனால், நான் அவ்ளோ கெட்டவன் இல்லை. ஒரு நாள் ஆசை இல்லை இது. உன் மேல உள்ள அன்பை எனக்கு எப்படி வெளிப்படுத்தறது என்று தெரியல. ஆனா நீ புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கற.
அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த கணங்களை அழித்துவிட முடியுமானால்... தன்னுடைய கிராமத்திலேயே தன் வீட்டில் இருந்திருக்க நேர்ந்திருந்தால்... காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முயன்று தோற்றுப் போனாள்.
******
கடற்கரை காற்று இதமாக இருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தன்னை ஒளித்துக் கொண்டிருந்தான் கடலுக்குள். கடல் தனது பிரம்மாண்டத்தை விஸ்தரித்துக் காட்டியது. அலைகள் கால்களை வருடிக்  கொண்டிருந்தன. நீண்ட நேரமாக தண்ணீரில் இருந்ததால் குளிரெடுக்கவே கரைக்கு வந்து அமர்ந்தாள். அன்று முழுக்க செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. செல்போனுக்கு உயிர்க் கொடுத்தாள். செல்போனில் குறுஞ்செய்தி சிணுங்கியது.  Thaaththaa died. Pl cal me urgent. மெசேஜைப் படித்துவிட்டு டெலிட் செய்தவள், மீண்டும் கடலுக்குள் தன் பார்வையைச் செலுத்தினாள்.
கால் நனையும் அளவு கடல் நீரில் நின்றுகொண்டு தன் மகளின் கை பிடித்தபடி கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஓர்  அப்பா.

  

                                                                          ந ன் றி  :   ஃ பெமினா இதழ் (செப்டம்பர் 2014)

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

அவளை விட்டுவிடுங்கள்

அவள் நொந்து போயிருக்கிறாள்.
ஒரு துரோகம் 
அவளைத் தின்று கொண்டிருக்கிறது.
இறந்து போவதற்கான
ஆயத்த ஏற்பாடுகளை
முப்பொழுதும் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்
வாழ்தலுக்கான பேராசையைச் சுமந்தபடி.
உங்களின் அனுதாபங்கள் வேண்டாம்
அவளுக்கு.
இயேசுவின் உள்ளங்களிலும்
பாதங்களிலும் அறையப்பட்ட
ஆணியைப் போன்றவை
உங்களின் அனுதாபங்கள்.
உங்களின் அக்கறையும் தான்.
ஒருபோதும்
அவளின் வலியைக் குறைக்க வாய்ப்பில்லை
அவை.
உங்களின் கைபேசி அழைப்புகளைக் கண்டு
அவள் மனம் நடுங்குவதை
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் 
நீங்கள் இரசனை மிக்கவர்கள்.
இரகசியங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வம் மிகுந்தவர்கள்.
நீங்கள் பேச்சாற்றலில் வல்லவர்கள்.
அவளிடம் பேசுவதற்கு
ஒரே ஒரு பேச்சு மட்டுமே
மிச்சம் இருந்தது உங்களிடம்.
நீங்கள் ஞானவான்கள்.
அவளிடம் கேட்பதற்கு
ஒரே ஒரு கேள்வி மட்டுமே 
மிச்சமாய் இருந்தது உங்களிடம்.
புதையலைத் தேடும் ஆர்வத்துடன்
நீங்கள் தேடிக் கொண்டிருப்பதை
அவள் உணரத் தொடங்கிவிட்டாள்.
அவள் ஒரு பேராசைக்காரி.
வாழ்வின் கடைசித் துளி வரை
வாழ்ந்து தீர்க்க வேண்டும் என
இன்னமும் 
விரும்புகிறாள்.
அவளை விட்டு விடுங்கள்.

செவ்வாய், 25 மார்ச், 2014

கவிஞர் பூரணி

ஓவியர் சனாதன் பற்றிய தகவல்களை கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கண்ணில் பட்டது சொல்வனம் இணைய இதழில் (30.11.2013) ”ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்” என்னும் தலைப்பில் என் மதிப்பிற்குரிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள் கவிஞர் கிருஷாங்கினியின் தாயும் மூத்த பெண்கவிஞருமான பூரணி அம்மாள் குறித்து எழுதியிருந்த கட்டுரை. அந்தக் கட்டுரையின் முதல் வரியே எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 17.11.2013 அன்று பூரணி அம்மாள் மறைந்துவிட்டார். மிக மிகத் தாமதமாக என்னை வந்து சேர்ந்த செய்தி இது.
2008இல் ஒரு கோடை நாளின் மதிய வேளையில் கவிஞர் பூரணி அம்மாளையும் கவிஞர் கிருஷாங்கினியையும் என் அம்மாவும் தோழியுமான இராஜேஸ்வரியுடன் சென்று சந்தித்தேன்.இராஜேஸ்வரியின் முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக நேர்காணல் வேண்டியே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதுவரை பூரணி அம்மாளைப் பற்றி எனக்கு எந்தச் செய்தியும் தெரியாது. பூரணி கவிதைகள் என்ற நூல் வாசித்ததோடு சரி.
அன்று நாங்கள் வீட்டில் கிருஷாங்கினியிடம் நேர்காணல் எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கவிஞர் பூரணியும் மிகுந்த உற்சாகத்தோடு நேர்காணலுக்குத் தயாரானார். அவரது சுறுசுறுப்பும் ஆர்வமும் என்னை வியக்க வைத்தது. அத்தனை முதிர்ந்த வயதிலும் அவர் ஒரு சிறு பெண்ணைப் போல நடந்துகொண்டார். அவர் சமீபத்தில் எழுதி இருந்த, பதிப்பிக்கக் காத்திருந்த கவிதைகளை எடுத்துவரச் சொல்லி, அதை வாய்விட்டு படிக்கச் சொன்னார். அவரது கவிதைகளில் சமகால அரசியல் விமர்சனம் மிகக் காட்டமாக முன்வைக்கப்பட்டிருந்தது. அதேபோல அவர் பேசிய பேச்சுகளில் இருந்து இந்த வயதிலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கின்ற ஓர் இலக்கிய வாசகி அவர் என்பதை உணர முடிந்தது. அவரிடம் நேர்காணல் எடுக்க முடியாது என்பதால் கேள்விகளை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றோம். இரண்டே நாளில் அவருடைய நேர்காணலை தபாலில் அனுப்பி இருந்தார். நான் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான குணம். என் வாழ்நாளில் நான் பார்த்து அதிசயித்த மனுஷிகளில் பூரணி அம்மாள் முதன்மையானவர்.
அவர் பிறந்தது 17.10.1913. மறைந்தது 17.11.2013. ஒரு நூற்றாண்டை முழுமையாக வாழ்ந்து முடித்த மாமனுஷி.
அவரது மறைவு ஓர் பூரணத்துவமான வாழ்வின் மிச்சமாகத்தான் நினைக்கிறேன். அவரது ஆன்மாவுக்கு என் அன்பான அஞ்சலி...
நூறு நூறாய் பெருகும் என் அன்பு
ஒவ்வொரு புறக்கணிப்பிலும்.
நீ
புறக்கணித்துக் கொண்டேயிரு.
முடிவிலியாய்
உன்னைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்
என் அன்பு.