செவ்வாய், 2 அக்டோபர், 2018

காஃபியும் நானும்

காஃபியும் நானும்

செல்வம் ராமசாமி சார் முகநூல் பக்கத்தில், சர்வதேச காஃபி  தினம் போஸ்ட் பார்த்தவுடன் காஃபிக்கும் எனக்குமான டாம் அண்டு ஜெர்ரி நினைவுகள் ஓடிப் பிடித்து விளையாடின.

மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டுமெனில் என்னுடைய முதல் தேர்வு தேநீர். சிறுவயதிலிருந்து தேநீரின் மீது ஒருவித ஈர்ப்பு. காஃபிக்கு இரண்டாமிடம் தான். 


புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த பிறகு விடுதி மெஸ்ஸுக்கு முதல் இரண்டு நாள் போகவே இல்லை.

கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த எனக்கு, பல்கலைக்கழக வளாகமும் விடுதி சூழலும் வேற்றுக்கிரகத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற பிரம்மையை உண்டு பண்ணி இருந்தது. யமுனா ஹாஸ்டலில் நான் ஒருத்தி தான் தமிழ்ப் பெண். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மணிப்பூர், நாகாலாந்து, மும்பை, குஜராத், அசாம், மேகாலயா...... இப்படி ஒரு குட்டி இந்தியாவே எங்கள் விடுதியில் இருந்தது. அப்போது அவர்களிடம் உரையாடும் அளவிற்கு ஆங்கிலம் தெரியாததால் வகுப்பறைக்குச் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கதவைச் சாத்திக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பேன். ஒரு வாரம் வரை தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

மெஸ்ஸில் சாப்பாடும் கூட மனதுக்கும் நாவுக்கும் உவப்பானதாக இல்லை. காலையில் சப்பாத்தி, பூரி, ஆலு பரோட்டா, பரோட்டா வகையறாக்கள் காலை உணவைத் தவிர்க்கும்படியாகச் செய்துவிட்டன. மதியத்தில் சாம்பாரும் கூட நம்ம ஊர் சாம்பார் போல இருக்காது. அதனால் தினமும் மோர் அல்லது ரசம் இதோடு முடித்துக் கொள்வேன். பிரட் ஜாம் மற்றும் பிஸ்கட்  எப்போதும் இருக்கும். அது ஓரளவு பசியாற்றிவிடும்.

விடுதியில் இரண்டாவது வாரத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலைப்பொழுதில் மெஸ் பக்கம் சென்றேன்.ஒரு கேன் நிறைய பால், ஒரு கேனில் காஃபி டிக்காஷன், ஒரு கேனில் டீ. பக்கத்தில் ஒரு தட்டில் சில பிஸ்கட்டுகள். ஹாஸ்டலில் மாலையில் டீ காஃபி உண்டு என்பதே அன்று தான் தெரிந்து கொண்டேன்.

அப்போது என்னிடம் தனியா டீ கப் இல்லை. அதனால் மெஸ் அக்காவிடன் சில்வர் டம்ளர் கேட்டு வாங்கி காஃபி கேனைத் திறந்து  கிளாஸ் நிறைய டிக்காஷனை ஊற்றிவிட்டேன். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த அந்தக்கா, எம்மாடி இரும்மா இப்படிப் பண்ணக் கூடாது என்று என்னுடைய டம்ளரில் இருந்த டிக்காஷனை மறுபடி காஃபி கேனில் ஊற்றிவிட்டு, கொஞ்சம் பால், கொஞ்சம் டிக்காஷன், கொஞ்சம் சர்க்கரை மூன்றையும் ஒரு ஸ்பூனால் கலக்கிவிட்டு இப்போ குடி என்றார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

எனக்கு நினைவு தெரிந்து நான் சுவைத்த முதல் காஃபி. வேண்டாத காலம் போல. முதல் மிடறு உள்ளிறங்கியதும் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தேன். மொட்டை மாடி சுவரின் மீதிருந்த காஃபியை அதன் பிறகு தொடவே இல்லை. 

டீக்கடைக்குச் சென்றால் கூட உடனிருக்கும் நண்பர்கள், தோழிகள் காஃபி சொல்லலாமா என்றால் எனக்கு மட்டும் டீ சொல்லுங்க என்பேன். சுமார் எட்டு வருடம் காஃபியும் நானும் பாராமுகமாவே இருந்துவிட்டோம்.

ஆரோவில் வீட்டுக்கு வந்த பிறகும் டீ மட்டும் தான் எனக்குத் துணை.

எதிர்வீட்டில் வசிக்கும் தோழி மாளவிகாவின் அறிமுகம் கிடைத்தபிறகு ஹாய் ஹவ் ஆர் யூ என்பதைத் தாண்டி ஒருநாள் காஃபி குடிக்கலாமா பாரதி என்று அழைத்தார். முதல் அழைப்பு வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அதேசமயம் எனக்கு டீ தான் பிடிக்கும் என்று சொல்லி என் விருப்பத்தை வெளிப்படுத்தவும் முடியவில்லை. சரி என்று அவர்களோடு காஃபி சந்திப்பிற்குச் சென்றேன்.

காலம் ரொம்பவே விசித்திரமானது. நான் அருந்திய இரண்டாவது காஃபி அத்தனை கசப்பான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் முதல் குமட்டலான காஃபி அனுபவத்திலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுவையான காஃபி. ரம்மியமான உரையாடல். மனம் நிறைவாக இருந்தது.

டீ குடிக்க வேண்டும் என்றால் பாரதி ஒரு டீ என்பார் மாளவிகா. எனக்கு காஃபி குடிக்க வேண்டும் என்றால் மாளவிகா ஒரு காஃபி குடிக்கலாமா என்பேன். நான் போடும் தேநீருக்கு மாளவிகா ரசிகை. மாளவிகாவின் காஃபிக்கு நான் பரம ரசிகை.

சொல்லப்போனால் சில மாதங்களாக தினமும் அதிகாலையில் மாளவிகா மொபைலில் ஒலிக்கும் ஆளுமா டோலுமா பாடலும் மாளவிகா போடும் காஃபியும் தான் எனது அதிகாலையைச் சோம்பல் முறித்து எழுப்பி விடுகிறது.

அதன்பிறகு, பிரபஞ்சன் சாருடைய நட்பு கிடைத்தபிறகு அவரோடு சேர்ந்து பாண்டிச்சேரி இண்டியன் காஃபி ஹவுஸில் காஃபி அருந்தி இருக்கிறேன். அவர் ஒரு காஃபி பிரியர். அவரோடு உரையாடிக் கொண்டே காஃபி அருந்திய தருணங்கள் மறக்க முடியாதவை. தந்தையின் நெருக்கத்தை உணரச் செய்யும் இயல்பான அன்பு அவருடையது.

அடுத்தது, சமீபத்தில் சென்னையில் தோழி அகிலாவின் வீட்டில் அதிகாலை குடித்த ஃபில்டர் காஃபி. அடடே, பேஷ் பேஷ், ரொம்ப நல்லாருக்கே டைப் காஃபி ரகம். சென்னைக்குச் சென்றால் அகிலாவின் அன்பு மணக்கும் சூடான காஃபி குடிக்கலாம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது..

காஃபியும் தோழமையும் தான் எத்தனை உன்னதமானது.


**மனுஷி**