வெள்ளி, 31 ஜூலை, 2015

கண்ணீரின் நிறத்தில் மிதக்கும் நிலா - மனுஷி

கண்ணீரின் நிறத்தில் மிதக்கும் நிலா
-- மனுஷி

என் நிலா
நீல நிறத்திலும் இல்லை
எப்போதும் போல
ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும் இல்லை
சுடர் மங்கிப் போய்
கண்ணீரின் நிறத்தில் மிதந்து கொண்டிருக்கிறது
இருண்ட வானத்தின்மீது
பாவம்
அது
நகர்தலை மறந்துவிட்டது
சுவரில் வரையப்பட்ட ஓவியத்தைப் போல
உறைந்து விட்டது
என் நிலா
இனி நகரப் போவதில்லை எனில்
நீலமோ
ஆரஞ்சு மஞ்சளோ
ஏதோ ஒரு நிறத்தில் ஒளிரப் போவதில்லை எனில்
நிறமற்ற நிலாவின் கதையைத் தான்
என் குழந்தைக்குச் சொல்ல வேண்டியிருக்கும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

வாசகனின் மனப்பதிவுகளும் தேடல்களும் (வெளிரங்கராஜனின் புத்தகங்கள் பார்வைகள் நூலை முன்வைத்து) -- மனுஷி

வாசகனின் மனப்பதிவுகளும் தேடல்களும்
(வெளிரங்கராஜனின் புத்தகங்கள் பார்வைகள் நூலை முன்வைத்து)
மனுஷி

நாடகக்காரர். நாடக விமர்சகர். நாடகத்திற்கென இதழ் நடத்திய சிறுபத்திரிகையாளர். இப்படித்தான் வெளிரங்கராஜனின் ஆளுமை அறிமுகம் பலருக்கும். அவர் தேர்ந்த வாசகர்; வாசிப்பில் தீராத தாகம் கொண்டவர்; தொடர்ந்த வாசிப்பின் மூலமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தயங்காதவர்; படைப்பாளரின் மனம் புண்படாதவகையில் தனது விமர்சனத்தை நேர்மையாகப் பதிவு செய்பவர் என்பதை உரக்கச் சொல்கிறது  புத்தகங்கள் பார்வைகள் என்னும் அவரது சமீபத்திய நூல்.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பன்முகப்பட்டவை. நாடக நூல்கள் குறித்த கட்டுரைகள், சினிமா நூல்கள் குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நாவல் குறித்த கட்டுரைகள், சமகால தமிழ்ச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள், தமிழில் வாசிக்கப்படவேண்டிய நாவல்கள் குறித்த கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள் குறித்த கட்டுரைகள், மணல் கூத்து என்ற இதழ் குறித்த அறிமுகக் கட்டுரை எனப் பல தளங்களில் தனது மனப்பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளார் வெளிரங்கராஜன்.
வாசிப்புப் பழக்கம் அருகி வருவதற்குப் பல்வேறு அகப் புறக் காரணிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய சூழலில்  வாசித்தல், அது குறித்து விவாதித்தல் என்பதினூடாக வாசிப்பின் தேவை குறித்தும் நாம் பேச வேண்டியுள்ளது. குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. நம்மோடு பழகுகிற எல்லாருமே வாசிப்பாளர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை தான். என்றாலும் வாசிப்பைக் கைக்கொள்ள வேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் தேவையாக உள்ளது.
இந்த இடத்தில் ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு வெர்ஜீனியா வுல்ஃபின் கட்டுரையிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்துக் காட்டும் சில கருத்துகள் முக்கியமானவை.
தனது வாசக அனுபவத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளலாமே தவிர, இதுதான் சிறந்த நூல் என்று நாம் பரிந்துரைக்கவோ அறிவுறுத்தவோ கூடாது. மேலும், முன்முடிவுகளோடு ஒரு  பிரதியை அணுகக் கூடாது. எதிர்மறையாகத்தான் விமர்சிக்கப் போகிறேன் என்ற கொள்கையுடனோ, இந்தப் பிரதியின் எழுத்தாளனைக் காலி செய்துவிடுவது என்கிற நோக்கத்துடனோ வாசகனுக்கு இழப்பையே கொண்டு சேர்க்கும் என்கிறார். அதேபோல ஒரு புத்தகம் அதிக அளவில் விற்கப்படுவதாலேயே அது நல்ல புத்தகம் ஆகிவிடாது. எந்தவொரு நூலைக் குறித்தும் சுயமாக வாசித்து, அது உண்டாக்கிய அனுபவத்திலிருந்து அந்த நூலை மதிப்பிடுங்கள். ஏனெனில் வாசிப்பதற்கான மனநிலையும், விருப்பமும், பகிர்ந்து கொள்வதற்கான நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானது.
அந்த வகையில், வெளிரங்கராஜனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசக அனுபவத்திலிருந்து பிரதியைப் பேசுகிறது எனலாம்.
எந்தவொன்றையும் பேசுதல், கடந்து போதல், பிறகு அடுத்த ஒன்றைப் பேசத் தொடங்குதல் எனக் குரங்குத்தாவலாகப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆவணப்படுத்தலுக்கான தேவையை இக்கட்டுரைத் தொகுதி உணர்த்துகின்றது.
இந்தத் தொகுப்பில் உள்ள 34 கட்டுரைகள் மிகச்சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளா என்றால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லை. கோட்பாட்டில் குழைத்துக் கொடுக்கப்பட்ட விமர்சனக் கட்டுரைகளா என்றால் அப்படியான விமர்சனக் கட்டுரையும் அல்ல. ஆனால், தான் எடுத்துக் கொண்ட பிரதி குறித்த ஒரு முழுமையான பிம்பத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்ற பணியை இக்கட்டுரைத் தொகுப்பு சிறப்பாகச் செய்துள்ளது. அதேசமயம், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் இருக்க வேண்டிய நுட்பமான பார்வையும், விமர்சனக் கட்டுரையில் இருக்க வேண்டிய கூறுகளும் எவ்வித பூடகமும் இல்லாமல் மிக எளிமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமர்சனப் பூர்வமான பார்வை, பிரதியையோ, பிரதியின் எழுத்தாளரையோ காலி செய்வதாக இல்லாமல், தேர்ந்த வாசகனின் எதிர்பார்ப்புகளாக இருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. மேலும், வாசகனை மிரட்டுகிற, அயற்சியடையச் செய்கிற மாதிரி பக்கம் பக்கமாக நீட்டி முழக்கிச் சொல்லாமல், சின்னச் சின்ன கட்டுரைகளாக, அந்தப் பிரதியின் மீதான வாசிப்பனுவமாக மட்டும் இருப்பதும் கூடுதல் சிறப்பு.
வெளிரங்கராஜன் வாசிக்க எடுத்துக் கொண்ட பிரதி, அது நாடகப் பிரதியோ, சினிமா நூலோ, சிறுகதை நூலோ, கவிதை நூலோ, மொழிபெயர்ப்புக் கதைகளோ, நாவல்களோ, கட்டுரைத் தொகுப்புகளோ, சிறுபத்திரிகையோ எது குறித்ததாக இருப்பினும், அந்தப் பிரதி ஏன் முக்கியமானது? நாடகப் பிரதி எனில் எந்தச் சூழலில் அந்த நூல் எழுதப்பட்டது? வாசகன் ஏன் இப்படியான நூல்களை வாசிக்க வேண்டும்? என்ற பாணியில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
வாசிப்பின் மூலமாகவே இந்த வாழ்க்கையின் வரட்டுத்தனங்களில் இருந்து நம்மை நாம் மீட்டெடுத்துக் கொள்ள முடியும் என்பதை வெளிரங்கராஜன் நம்புகிறார். அது உண்மையும்கூட. படைப்புலகச் செயல்பாடுகளின் வழியாகத்தான் இந்த வாழ்க்கையின் அபத்தங்களைக் கடந்து போக முடியும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
சி. அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்ட ந.முத்துசாமியின் நாடகக் கட்டுரைகள் குறித்த நூல் குறித்த கட்டுரையில், தமிழில் நவீனத்துவம் சார்ந்த ஒரு காலகட்டத்தின் மனநிலை வளர்ச்சியின் பல்வேறு கூறுகள் இவற்றில் காணக்கிடைக்கின்றன என்றும், நவீன நாடகம் குறித்த குறித்த ஒரு செறிவான சூழலை வடிவமைக்க எழுத்துப் பத்திரிகை மிகப்பெரும் உந்துதலாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த அவதானிப்பு என்போன்ற வாசகர்களுக்குப் புதிய திறப்பைக் கொடுக்கின்றன. சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகைச் செயல்பாடுகள் கவிதைத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் பாதிப்புகளையும் மட்டுமே அறிந்திருக்கும் நிலையில், கூத்துப்பட்டறை என்ற நவீன நாடக அமைப்பு உருவாகவும், எழுத்து பத்திரிகையின் வழி ந.முத்துசாமியின் நவீன நாடகச் செயல்பாடுகள் கால்கொண்டன என்னும் அவதானிப்பும் மிக முக்கியமானவை.
அதேபோல இராமானுஜம் நாடகங்கள் குறித்த கட்டுரையில், இராமானுஜம் நாடகங்களில் பெண்களின் வதைபடும் வாழ்வு என்பது மையப்பொருளாக அமைந்து, இவருடைய நாடகங்களுக்கு ஒரு சமகாலத்தன்மையையும், நவீனக் குரலையும் தருகின்றன என மதிப்பிடுகிறார். மேலும், இராமானுஜத்தின் புறஞ்சேரி நாடகம் காப்பியச் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பற்று, ஆனால் அதிகம் பாதிப்புறும் சூழலின் எதிர்வினைகளும் விளிம்புநிலை மனிதர்களின் குரல்களும் பதிவாகின்றன என்று சொல்கிறார். இது தனக்கேயான நாடகத் துறை சார் அவதானிப்பு என்றே சொல்ல வேண்டும்.
சினிமா நூல் குறித்த கட்டுரைகளைப் பொறுத்தவரை ப.திருநாவுக்கரசுவின் சொல்லப்படாத சினிமா எனும் நூல் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. புகைப்படக் கலை வளர்ச்சி அடையத் துவங்கிய உடனேயே சுற்றுப்புறத்தையும், நிகழ்வுகளையும் காட்சி வடிவில் சேகரம் செய்யும் கலாச்சாரம் துவங்கியிருக்க வேண்டும் என்ற வரிகளுடன் இக்கட்டுரை தொடங்குகிறது. தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலுக்கான பிரக்ஞையற்று இருப்பதைச் சுட்டிக் காட்டும் முகமாகவே இவ்வரிகளுடன் இக்கட்டுரை தொடக்கம் கொள்வதாக நினைக்கிறேன். இந்த நூலில் ஆவணப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வையிலிருந்து இந்திய, தமிழக ஆவணப்பட முயற்சிகள், எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் குறித்த ஆழமான அலசல்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள், வில்லுப்பாட்டுக் கலைஞர்கள், தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் என மைய நீரோட்டத்தின் கவனத்துக்கு வராத படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களின் ஆவணப்படங்கள் தமிழ்ச்சூழலில் முன்மாதிரி முயற்சிகளாக அமைந்துள்ளன. அவற்றை ஆவணப்படுத்தியுள்ள சொல்லப்படாத சினிமா நூல் குறித்த தனது மனப்பதிவுகளை, வாசக அனுபவங்களை வாசகனிடத்தில் சொல்ல முற்பட்டுள்ளார் வெளிரங்கராஜன். இந்த நூலை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமாக ஆவணப்படுத்தல் எனும் உணர்வைத் தமிழ்ச் சூழலில் உருவாக்க முயற்சி செய்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
வீணை தனம்மாள் குறித்து சோழ நாடன் எழுதிய நூல் குறித்த கட்டுரையும், அந்தக் கட்டுரையில் வெளிரங்கராஜன் வைக்கின்ற விமர்சனமும் (நூல் மீதான விமர்சனம் அல்ல என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்) மிக முக்கியமாகத் தமிழ் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே. தனம்மாவின் பேத்தியான நடனக்கலைஞர் பால சரஸ்வதியைப் பற்றி சத்யஜித்ரே ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அதன் மூலம் பால சரஸ்வதியை உலகம் அறிந்து கொண்டது. ஆனால், அவரை உருவாக்கிய வீணை தனம்மாளைப் பற்றி நம்மிடம் முறையான பதிவுகளோ ஆவணங்களோ இல்லை எனும் ஆதங்கத்தை  வெளிரங்கராஜன் பதிவு செய்துள்ளார். இலக்கியங்கள் ஒருவகையில் முறைப்படுத்தப்பட்ட ஆவணமாக இருக்கிறது. ஆனால், நிகழ்கலைகளுக்கு முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தமிழில் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் இல்லாத காரணத்தால் நம் மண்ணின் கலைஞர்களின் ஆளுமைகள் வரலாற்றின் ஏடுகளில் இருந்து காணாமல் போகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். சோழநாடனின் நூலை வாசிக்கையில் வீணை தனம்மாள் என்னும் கலை ஆளுமை குறித்த பெருவியப்பும் பிரமிப்பும் உண்டாவதாகச் சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசிக்கின்ற வாசகனுக்கும் வீணை தனம்மாளின் ஆளுமை குறித்து வியப்பும் பிரமிப்பும் உண்டாகும். வீணை தனம்மாள் நம்முடைய சங்கப் பாணர் மரபின் தொடர்ச்சி என்றும் மதிப்பிடுகிறார் வெளிரங்கராஜன். வீணை தனம்மாள் இறக்கும்போது வீணையைக் கையில் வைத்துக் கொண்டே இறந்தார் என்பதும், அவர் இறந்த பிறகு அப்போது சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த ராஜாஜி தலைமையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 1500 இசைப் பிரியர்கள் சூழ இரங்கல் கூட்டம் நடைபெற்றது என்பதும் வீணை தனம்மாள் கலையின் மூலம் பெற்ற கௌரவத்தை உணர்த்துகிறது என்று கூறுகிறார். காலத்தின் ஏடுகளில் மறைந்துவிட்ட தனம்மாளை மீட்டெடுத்துப் பதிவு செய்துள்ள சோழநாடனும், அந்த நூலை வாசகருக்கு அறிமுகப்படுத்திய வெளிரங்கராஜனும் அன்பிற்கும் பாராட்டுக்கும் உரியவர்களே.
சினிமா நூல் குறித்த கட்டுரைகளில் விட்டல்ராவின் நவீன கன்னட சினிமா நூல் குறித்தும், அ.ராமசாமியின் ஒளி நிழல் உலகம் நூல் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்திய மற்றும் தமிழ் சினிமா மீதான காத்திரமான மதிப்பீடுகளாக உள்ளன. அ.ராமசாமியின் தமிழ் சினிமா பார்வை குறித்த மதிப்பீடுகளைச் சுட்டிக் காட்டும்போது, ‘அ.ராமசாமியும் பல இடங்களில் தமிழ் சினிமாவின் மிகைப்படுத்தப்பட்ட சாதி அரசியலையும் தூக்கி நிறுத்தப்படும் பிராமணிய மதிப்பீடுகளையும் சாடுகிறார். ஆனால் அவற்றுக்கு ஒருவிதமான நம்பகத்தன்மை வழங்கவும் முற்படுகிறார்’ என்று தனக்கேயான வகையில் மெல்லிய விமர்சனத்தை முன்வைக்கிறார்.
யூமா வாசுகியின் எளிமையான நீரோட்டமான மொழிபெயர்ப்பில் வந்துள்ள சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்று நூலைக் குறித்து ஒரு முழுமையான சித்திரத்தைக் கொடுக்கிறார் வெளிரங்கராஜன்.
நாடகப் பிரதி, சினிமாப் பிரதி குறித்த கட்டுரைகளுக்கு அடுத்த நிலையில் புனைகதைகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் எஸ்.ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பு குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் மொழி சற்று வித்தியாசமானது. கவித்துவமானது. எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த அமைப்பைத் தாண்டி, மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவைக் கவித்துவமான மொழியில் பேசும் சிறுகதைகள் வெளிரங்கராஜனையும் உள்கிரகித்துக் கொண்டது போலும்.
மொழிபெயர்ப்பு நூல்களைப் பொறுத்தவரை, நீல நாயின் கண்கள் என்னும் மொழிபெயர்ப்புக் கதைகள், கென்ய நாவலான சிலுவையில் தொங்கும் சாத்தான், ஜப்பான் நாவலான தூங்கும் அழகிகள் இல்லம் ஆகிய நூல்கள் குறித்த கட்டுரைகள் சிறிய அளவினது. என்றாலும்கூட மிக முக்கியமானவை. அதிலும், தூங்கும் அழகிகள் இல்லம் குறித்த இவரது கட்டுரையை வாசிக்கும் வாசகன், அந்த நாவலைத் தேடிப் பிடித்து படித்து முடிப்பான் என்பதில் ஐயமில்லை. அவ்வளவு அழகாக அந்த நாவல் குறித்த சித்திரத்தை வாசகன் மனதிற்குள் கொண்டு வந்து விடுகிறது வெளிரங்கராஜனின் எழுத்து.
தமிழ் நாவல்களைப் பொறுத்தவரை, சுதாகரின் 6174 அறிவியல் நாவல், லஷ்மி சரவண குமாரின் கானகன், இரா.முருகவேளின் மிளிர் கல் நாவல் குறித்து வாசக அனுபவத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். கானகன் நாவல் தமிழில் முக்கியமான நாவல் என்பதையும், லஷ்மி சரவணகுமார் அண்மைக்கால எழுத்தாளர்களின் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் என்பதையும் பதிவு செய்வதுடன், நாவல் மீதான சிறு விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். நாவலில் மிருகங்களின் சூட்சுமம் தெரிந்த தங்கப்பன் அது குண்டடிப்பட்டதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அதை அப்படி நெருங்க முயற்சிப்பானா? எனக் கேள்வி எழுப்பி, அவனது வீழ்ச்சிக்கு இன்னும் எதிர்பாராத தருணத்தை லஷ்மி சரவணக்குமார் உருவாக்கியிருக்க வேண்டும் என ஒரு வாசகனாக தனது எதிர்பார்ப்பையும் அவர் முன்வைக்கிறார்.

கவிதைத் தொகுப்புகளைப் பொறுத்தவரை சங்கர் ராம சுப்பிரமணியனின் ராணி என்று தன்னை அறியாத ராணி, பயணியின் மீள மேலும் மூன்று வழிகள், ந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி, தவசி கருப்பசாமியின் அழிபசி முதலிய கவிதைத் தொகுப்புகள் குறித்து எழுதியுள்ளார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளை மட்டும் சுட்டிக் காட்டி அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். மற்ற பிரதி குறித்த கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் கவிதை குறித்த கட்டுரைகள் ஒன்றரை அல்லது இரண்டு பக்க அளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்ட முடியாது. ஏனெனில், சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் குறித்து இந்த மாதிரியான இரண்டு பக்க அளவில் கூட யாரும் பதிவு செய்வதில்லை என்பது வருத்தமான விடயம்.
இவை தவிரவும், அ.மார்க்ஸின் சொல்வதால் வாழ்கிறேன், கவிஞர் வைத்தீஸ்வரனின் திசைகாட்டி, இந்திரா பார்த்தசாரதியின் கடலில் ஒரு துளி, கி.பார்த்திபராஜாவின் தமிழ் மொழி அரசியல், எச்.பீர்முஹம்மதுவின்  கீழைச் சிந்தனையாளர்கள் அறிமுகம், ரவி சுப்பிரமணியனின் ஆளுமைகள் தருணங்கள், அஜயன் பாலாவின் சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் முதலிய கட்டுரைத் தொகுப்புகள் குறித்த பார்வைகள் எளிமையாகவும் அதேசமயம் முக்கியமான கட்டுரைகளாகவும் அமைந்துள்ளன. பல்வேறு தளங்களில் தனது வாசிப்பு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள வெளிரங்கராஜனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஒரு பெண் எழுத்தாளரின் / பெண் கவிஞரின் பிரதிகள்கூட இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
மொத்தத்தில், வெளிரங்கராஜனின் புத்தகங்கள் பார்வைகள் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடிக்கையில் ஒரு நூலகத்திற்குள் சென்று வந்த அனுபவத்தை வாசகனால் உணர முடியும். மேலும், வாசிக்கின்ற நூல்கள் குறித்து பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிய முடியும்.
இந்தக் கட்டுரைகளை வாசித்து முடிக்கும் வாசகன், இதில் இடம்பெற்ற பிரதிகளில் பத்து நூல்களையாவது விலை கொடுத்து வாங்குவான் எனில் அது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றி. அதில் ஐந்து நூல்களையாவது நேரம் ஒதுக்கி வாசிப்பான் எனில் அது வெளிரங்கராஜனின் பத்தி எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. 
                  ********
நூல் : புத்தகங்கள் பார்வைகள்
ஆசிரியர் : வெளி ரங்கராஜன்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
விலை : 100/-

சாத்தானுடன் தேநீர் அருந்துதல்

சாத்தானுடன் தேநீர் அருந்துதல்

1. இள மஞ்சள்நிறத் தேநீரோடு
சூரியனை
வரவேற்பதிலும் வழியனுப்புவதில்
பித்தநிலை
பெருவிருப்பமுடையவன்
சாத்தான்.
சூரியனின் மஞ்சள் நிறம்
தேநீர்க் கோப்பையின் உள்ளிறங்கியதை
உற்றுப் பார்த்தபின்
லயித்து ருசிக்கிறான் முதல் மிடறை.
சாத்தானின் வயிற்றுக்குள் குளிர்ந்து
மிதக்கிறது சூரியன்
ஒளிக்கற்றைகளை மெல்ல பரப்பி.
நிலவு ஒளிரும் சாமப்பொழுதில்
மதுவருந்த அழைக்கிறான் சாத்தான்.
சூரிய உதயத்தில் புறப்பட்ட கடவுள்
சிக்னல் நெரிசலில் சிக்கித்தவிக்கிறார்
மதுவின் முதல் மிடறு சுவைக்கும் பேராசையுடன்.