செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மீனம்மா


ஆரோவில்லுக்கு வந்த நாள் முதலாய் தினமும் காலையில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஓங்கி ஒலிக்கும் குரல் மீனம்மாவுடையது. எங்கள் தெருவின் கர்ஜனை குரல். எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மீனும்மா… எம்மா மீனும்மா… என்ற மீனம்மாவின் குரல் டங்கென்று வந்து தட்டி எழுப்பிவிடும்.

நாற்பதைக் கடந்த பெண்மணி. அநாயசமாக அள்ளிச் சொருகிய நூல் சேலை. கொஞ்சம் ஒல்லியான தேகம். ஆனால் உருவத்துக்கும் குரலுக்கும் ஏக தூரம். பத்து வீட்டுக்குக் கேட்கும் அவர் குரல்.

எனக்கும் மீனம்மாவுக்கும் இடையிலான வியாபார நிமித்த தொடர்பு வெறும் ஐம்பது ரூபாய் தான். ஏனென்றால் தொடக்கத்தில் ஐம்பது ரூபாய்க்கு சங்கரா மீன் வாங்குவதோடு நிறுத்திக் கொள்வேன். வேறெந்த உரையாடலும் இருக்காது. 

நான் சமைக்கக் கற்றுக் கொண்டது ஆரோவில் வீட்டுக்கு வந்தபிறகுதான். அதிலும் அசைவம் சமைக்கக் கற்றுக் கொண்டது மீனம்மாவால்தான். பிறகு சங்கரா மீன் தான் என்னுடைய பிரதான அசைவ உணவாக ஆகிப் போனது.

ஐம்பது ரூபாய்க்கு மீனம்மா கொடுக்கின்ற பத்து அல்லது பன்னிரெண்டு மீன்கள் எனக்கும் டைகருக்கும் போதுமானது. டைகர் அசைவம் தவிர வேறொன்றும் சாப்பிடாதவன். பின்னாளில் தயிர் சாதம் கூட சாப்பிடும் அளவுக்கு அவன் தாராள மனம் கொண்டவனாக மாறிப் போனான் என்பது வேறு கதை. இப்போது டைகருக்கும் அவன் மனைவி மைக்கன்னிக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டியிருக்கிறது. 

ஒருமுறை மீன் வாங்கினால் பாதிப் பாதியாகப் பிரித்து இரண்டு நாட்களுக்கு மீன் குழம்பும் மீன் வறுவலும் என சமையல் களைகட்டும்.

ஒருநாள் இறால் கொண்டு வந்தார் மீனம்மா. எம்மாஃப்ரஷ்ஷா எறா இருக்கு வாங்கிக்க என்றார்.

இறால் நண்டு என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. என் பால்ய காலம் தொடங்கி, கல்லூரியில் படிக்கும் வரை நான் சுத்த சைவம். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் இவை தவிர வேறு சாப்பிட்டதாக நினைவில்லை. முட்டை கூட சாப்பிட மறுத்த காலம் அது. ஆனால், அக்கா வீட்டில் இறால் சமைத்தாலோ, நண்டு சமைத்தாலோ சைவத்திற்குப் பிரேக் விட்டுவிடுவேன். சோறு கூட சாப்பிட மாட்டேன். இறால், நண்டு மட்டும் தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுவேன். வீட்டில் கிண்டல் செய்வார்கள். இறால் நண்டு என்றால் மட்டும் சைவம் கண்ணுக்குத் தெரியாது இவளுக்கு என்று. 

எது தேவையோ அதுவே தர்மம் என்று அப்போதே இருந்திருக்கிறேன் போல. 

மீனம்மா இறால் கொண்டு வந்திருக்கிறார் என்றதும் நேராகப் போய் நூறு ரூபாய்க்கு வாங்கி, ஆய்ந்து தரச் சொல்லிவிட்டு, கூடவே எப்படிச் சமைக்க வேண்டும் என்கிற சமையல் டிப்ஸையும் கேட்டுக் கொண்டேன்.

அன்றைய இறால் தொக்கு அவ்வளவு சுவையாக இருந்தது.

அடுத்த சில நாட்களில் நண்டு கொண்டு வந்தார். மீன் கூடையில் இருந்த நண்டைப் பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் இருநூறு என்று சொன்னதும் பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டேன். கூடவே நண்டு சமைப்பது எப்படி என்று சமையல் குறிப்பையும் கேட்டுக் கொண்டேன்.

எங்கள் தெருவுக்குத் தினமும் மீனம்மா வந்தாலும் வாரத்தில் இரண்டு நாளாவது என்னிடம் மீன், இறால், நண்டு இவற்றை விற்றுவிட்டுத்தான் கிளம்புவார். காசு இல்லம்மா என்றாலும் பொறவு கொடேன். என்னா இப்போ ஆயிப் போச்சு. இப்பவே எடுத்து வச்சா தான் ஆச்சுனு நிக்கற போல பேசுற. ஆக்கித் துன்னுட்டு நல்லா இருந்தா குடு. இந்தா என்று கூறு கட்டி வைத்துவிடுவார்.

சில நாள் மீனம்மா வந்து குரல் கொடுத்தால் இன்று மீன் வாங்குவதே இல்லை என்று தீர்மானத்தோடு இருப்பேன். ஆனாலும் அவர் மீன்களை எடுத்து வைத்துவிட்டு இந்தா இந்தக் கூறு எடுத்துக்க. நூறு ரூபா தான். ஐஸ்ல லாம் வச்சு எடுத்துனு வர மாட்டேன். வலை மீன். சும்மா எடுத்துக்க என்பார். 

இவ்வளவு உரிமையா எடுத்து வைக்கிறாங்களே, வேண்டாம் என்று சொல்லக் கூடாது எனச் சங்கடத்தோடு வாங்கிச் சென்று விடுவேன். ஆனால், அவர் சொல்வது போல மீன் ஃப்ரெஷ்ஷாகத்தான் இருக்கும்.

வலைக்குள் மாட்டிய மீன் போல மீனம்மாவின் வாய்ச் சாமர்த்தியத்திற்கு நான் மட்டுமல்ல. பக்கத்து வீடு, எதிர்வீடு, மேல்வீடு என சிக்காமல் இருக்க முடியாது. வெறும் வியாபார யுக்தி மட்டும் அல்ல அந்தக் குரல். தொடக்கத்தில் மீனம்மாவின் சத்தமான குரல் கேட்கும்போது என்ன இவ்ளோ அதிகாரமா மீன் வாங்கிக்க சொல்றாங்க எனத் தோன்றும். ஆனால் போகப் போகப் புரிந்தது அது வெள்ளந்தி மனதின் குரல் என.

இப்போதெல்லாம் அதிகமாக நண்டும் இறாலும் கொண்டு வருகிறார். ஒருமுறை நான் சொல்லி இருந்தேன். நண்டு இறால் என்றால் எனக்கு உயிர் என்று. அதனால் நண்டு எடுத்து வந்தால் ஒரு கூறு எடுத்து ஆய்ந்து ஒரு கவரில் போட்டு எனக்காக எடுத்து வைத்துவிட்டுப்போகிற அளவுக்கு அவருக்கும் எனக்கும் உரிமை உண்டாகி இருந்தது.

இன்றும் ஃப்ரெஷ் நண்டு கொண்டு வந்திருந்தார். பெரிய பெரிய நண்டு. கவலை மீனும் இருந்தது. பெரிதாகச் சமைக்கிற மனநிலை இல்லை. அதனால் புல்லட்டுக்கும் புரூஸ்லிக்கும் மட்டும் ஐம்பது ரூபாய்க்கு வாங்கலாம் என்று மீனம்மாவிடம் போனால் ஏழு பெரிய நண்டைக் கூறு கட்டி வைத்து எறனூரு ரூபாய் எடுத்துக்க என்றார். எம்மா, ஏற்கனவே உனக்கு நான் பாக்கித் தரனும், நண்டுலாம் வேண்டாம். மீன் மட்டும் ஐம்பது ரூபாய்க்குக் கொடுங்க என்றேன்.
நண்டு வாங்க வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் இருந்தாலும் பாக்கியைக் கொடுத்துவிட்டுத்தான் வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டேன். அதற்குள் புல்லட்டும் புரூஸ்லியும் மீனம்மாவின் குரல் கேட்டு மீன் கூடை அருகில் மீன் கேட்டு பெரிய கலாட்டாவே செய்து விட்டார்கள். பெரிய மீன் என்பதால் அவரிடம் கேட்டு ஒரு மீனை இரண்டு துண்டாக்கி இரண்டு பேருக்கும் போட்டதும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்த மீனுக்காகக் கத்தினார்கள்.

மீனை ஆய்ந்து கொண்டே, எம்மா, நண்டு தான் உனக்குப் பிடிக்குமே ஒரு கூறு எடுத்துக்க என்றார். இல்லம்மா பாக்கி செட்டில் பண்ணிட்டு வாங்கிக்கிறேன் என்றேன் மீண்டும். அட காசு யாரு கேட்டா. சும்மா செஞ்சு சாப்டு. சாப்பிடறதுக்குத்தானே எல்லாம். காசு இருக்கும்போது அம்மாகிட்ட கொடு. இல்லனா பரவால்ல. என்னா வந்துடுச்சு இப்ப. காசு இல்லனுலாம் வேனாம்னு சொல்லாத.

அவர் சொன்னதும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். அந்த மீன் நண்டை விற்றால் தான் அவருக்கு வருமானம். ஆனாலும் எப்படி இவ்வளவு நம்பிக்கையும் தாராள மனமும். நினைக்க நினைக்க மனம் நெகிழ்ந்தது.

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மீனை ஆய்ந்து பாத்திரத்தில் போட்டுவிட்டு நண்டை ஓடு நீக்கி ஆய்ந்து கொடுத்தார்.

மீதி இருந்த நண்டை விலைபேசி பக்கத்து வீட்டில் விற்றுவிட்டு, எம்மா, பாரதி ஒரு டீத்தண்ணி போட்டு கொடேன் என்றார்.

மீனம்மாவின் அன்பினால் தேநீரின் சுவை கூடியிருந்தது.

நானும் மீனம்மாவின் சியர்ஸ் சொல்லிக் காலை நேரத் தேநீரைக் குடித்து முடித்தோம்.

சியர்ஸ்……

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கோல்கொண்டா கோட்டையும் காளி ஓவியமும்




மழைத் தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் நானும் எனது தோழியும் தேநீர் அருந்தியபடிப் பேசிக் கொண்டிருந்தோம்.

பேச்சினூடாக, ஒரு சிறு பயணத்தைத் திட்டமிட்டோம். நாங்க தேர்வு செய்த நகரம் ஹைதராபாத். அந்த நகரம் எந்தவித சலனமும் இல்லாமல் எங்களை அழைத்தது. அதன் குரலை மதித்து அடுத்த நாளே டிக்கெட் புக் செய்து கிளம்பிவிட்டோம். எந்த நகரத்திற்குச் சென்றாலும் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. என்னுடைய தோழிக்கு தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் அத்துப்படி. அதனால் மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

கூகுளின் உதவியுடன் தினம் ஒரு இடத்திற்குச் செல்வது என எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அதுவொரு நல்ல அனுபவம். சார்மினார், பிர்லா மந்திர் கோயில், அருங்காட்சியகம் எனப் பல இடங்களுக்குச் சென்றிருந்தோம். அதில் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றபோது மனதில் இனம் புரியாத பரவசம்.

ஹைதராபாத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று கோல்கொண்டா கோட்டை என்று சொல்கிறார்கள். ஆம். அதிசயம் தான். அது மன்னர்கள் வாழ்ந்த கோட்டையா அல்லது ஒரு நகரமா என்று ஆச்சரியம் வருவது தவிர்க்க முடியாது. பரந்து விரிந்த மதில்களும் கட்டிடங்களும் பிரம்மாண்டத்தின் உச்சம். எனக்குத் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

கோல்கொண்டா கோட்டையின் அரசியல் வரலாற்றைவிடவும் கோட்டையின் அழகியல் மனதைக் கவ்விக் கொள்ளும். ஏனெனில் வரலாற்றுத் தகவல்கள் கூகுளில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறை ஓவியத்தின் வரலாறுதான் கிடைக்கவே இல்லை. அந்த ஓவியம் சொல்லும் கதை என்ன என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஏனெனில், கோட்டையின் பிரம்மாண்டத்தை விட என்னைக் கவர்ந்தது கோட்டையின் உச்சியில் இருந்த காளி கோவில் தான். கோவில், கருவறை காளி, கோவிலின் எதிரில் இருக்கும் மரம், மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கலர் கலரான ஜிகினா மாலைகள், ஊஞ்சல்கள், கயிறுகள்  என பெண் தெய்வக் கோயிலுக்கான அடையாளங்களுடன் இருந்தன.

காளி கோவிலுக்கு இடதுபுறம் இருந்த பாறையும் அந்தப் பாறையில் வரையப்பட்டிருந்த நீல வண்ணத்தாலான ஓவியமும் மிக முக்கியமானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் காளி ஓவியத்தில் மண்டையோட்டு மாலைகளுடன் அச்சமூட்டும் கண்களுடன் ஆக்ரோஷமாக நாக்கைத் தொங்கவிட்டபடி ஒரு காலைத் தூக்கி ஒரு காலைத் தரையில் வைத்து சூளாயுதத்துடன் காளி நின்று கொண்டிருப்பாள். அவளது பாதத்தின் கீழ் அரக்கனின் உருவம் கிடந்தநிலையில் இருக்கும். அந்த அரக்கனின் உடலின் மீது காளியின் கால்கள் பதிந்திருக்கும்.
கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் பாறையில் வரையப்பட்டிருக்கும் காளி, நீல வண்ணத்தில் மேலே சொன்ன தோற்ற அமைப்புடன் இடையில் புலித்தோல் அணிந்து ஆக்ரோஷமாக இருக்கிறது. ஆனால், பாதத்தின் கீழ் அரக்கனுக்குப் பதிலாக மயங்கிய நிலையில் சிவன் உடுக்கையைக் கையில் பிடித்தபடி வீழ்ந்து கிடக்கிறார். சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு கையில் இருக்கும் உடுக்கையை நோக்கி நகர்வது போன்றதொரு தோற்றம் இருக்கிறது. தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இந்த ஓவியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


பாறை நின்றிருந்த தோற்றம், காளி கோவிலுக்குச் செல்லும் பாதையை  பாதியாக அடைத்தபடி இருந்தது. லாவகமற்ற வகையில் பிரம்மாண்டமானத் தோற்றம் அது. எவ்வளவோ முயன்றும் முழு ஓவியத்தைப் படமாக எடுக்க முடியவில்லை. அதனால் காளியின் முகத்தில் இருக்கின்ற கம்பீரத்தை இரு கண் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
ஓவியத்தின் அருகில் அமர்ந்து கொண்டேன். காளியின் உக்கிரமும் மயங்கிய கிடக்கும் சிவனும் ஆழமாகக் கண்களுக்குள் இறங்க, எனக்குள் காளி சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள். வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது அந்த அனுபவம்.