புதன், 7 ஜூன், 2023

பேருந்து பயணத்தின் ஜென் கவிதை - மனுஷி

காலையில் பேருந்தில் கல்லூரிக்குப் போகும்போது வெகு அரிதாகவே உட்கார இடம் கிடைக்கும். அதுவும் சன்னலோர இருக்கை என்பதெல்லாம் அரிதினும் அரிது. 

இன்று சீட் கிடைத்தது. அமர்ந்து கொண்டேன். நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும்வரை காத்திருந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு இயர்போனைக் கழுத்தில் மாட்டிக் கொண்டேன்.

பொதுவாக, செல்போனில் பேசிக் கொண்டே டிக்கெட் வாங்கினாலோ, காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டிருந்தாலோ நடத்துநர்கள் காரணமில்லாமல் டென்ஷன் ஆவார்கள். அவர்களின் டென்ஷன் காலைச் சுற்றிக் கொண்ட பாம்பு போல அந்த நாள் முழுக்க என் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு தான் டிக்கெட் வாங்கும்வரை செல்போனை எடுப்பதில்லை எனும் முடிவு.

ஏதாவது இலக்கிய உரைகளைக் கேட்டுக் கொண்டே செல்லும்போது பாண்டிச்சேரி - விழுப்புரம் இரண்டு மணி நேரப் பயணம் உண்டாக்கும் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை. இன்று ஜென் கவிதைகள் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் பேசிய காணொளியைக் கேட்டுக் கொண்டே வந்தேன். ஏற்கனவே #ஜென்_கவிதைகள் அறிமுகம் என்னும் புத்தகத்தில் வாசித்தவை தான் என்றாலும் இந்த நாளில் இந்தப் பயணத்திற்கு அதை ஆடியோ வடிவில் கேட்டுக் கொண்டே செல்லலாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

திருபுவனை நிறுத்தத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் இறங்கிக் கொள்ள, ஒரு வயதான தாத்தா அந்த இடத்தில் அமர்ந்தார். நேராக பஸ் போகும் பக்கம் இருந்த அவர் தலை  கொஞ்ச நேரத்தில் மெல்ல மெல்லச் சரிந்து என் பக்கமாகத் திரும்பி, செல்போன் திரையை உற்றுப் பார்த்தார். 

பேருந்து பயணத்தில் இது அடிக்கடி நடக்கும்.  நாம் மெசேஜ் அனுப்புவதை ஆர்வத்தோடு பக்கத்தில் இருப்பவர் பார்ப்பார். அடுத்தவர் மொபைலின் உரையாடல். அதைப் பார்க்கிறோமே என்கிற சிறு உறுத்தல் கூட இருக்காது. சொல்லப்போனால் அடுத்து என்ன மெசேஜ் வரும். என்ன பதில் அனுப்பப் போகிறோம் எனத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இருக்கும். 

இந்தத் தாத்தா இவ்வளவு சாய்ந்து கொண்டு பார்க்கிறாரே என்று மொபைலைக் கொஞ்சம் வலப்புறமாகத் திருப்பி வைத்தேன். அப்போதும் அவர் சாய்ந்து மொபைலைப் பார்க்கத் தொடங்கினார். 

தாத்தா, கொஞ்சம் தள்ளி உட்காருங்க. சாய்ஞ்சுகிட்டே வர்றிங்க என்றேன் கடுப்பாகி. 

அவர் என்னமோ பேசுறார்.. என்ன பேசுறார்னு தெரியல. அதான் கிட்ட வந்து பார்க்கிறேன். அப்பவும் கேட்கல என்றார். 

கழுத்தில் மாட்டியிருந்த ஹெட்போனைக் காட்டி, இதன் வழியாகக் கேட்டுட்டு இருக்கேன் என்றேன். 

என்ன பேசுறார் அந்த அய்யா என்றார்.

கவிதை பற்றிப் பேசுறாங்க. கேட்கறிங்களா என்று அவர் கழுத்தில் ஹெட்போனை மாட்டி, இரண்டுபக்கமும் ஹெட்போனின் கேட்கும் பகுதியைப் பொறுத்தினேன்.

அவரைப் பார்த்தேன். மொபைல் திரையில் இருந்து கண்கள் அகலவேயில்லை. கூர்ந்து கேட்டார். அந்த உரையின் கருத்துகளை ஆமோதிப்பது போல மேலும் கீழும் தலையை அசைத்து அசைத்துக் கேட்டார். ஓரிரு இடங்களில் மெல்லச் சிரித்தார். புருவங்கள் சுருக்கி ஆழ்ந்து பார்த்தார். வெவ்வேறு முக பாவனைகள், உடலசைவுகள்,  தலையசைவுகள் அவர் உணர்ந்து,  ரசித்துக் கேட்கிறார் என்பதைக் காட்டியது. 

அரைமணி நேரம் கேட்டிருப்பார். அதற்குள் நான் இறங்கவேண்டிய சிக்னல் வந்துவிட்டது. 
தாத்தா நான் இறங்கனும் என்றேன். கழுத்தில் இருந்த ஹெட்போனைக் கழற்றி என்னிடம் தந்தார். அந்த அய்யா நல்லா கருத்தா பேசுறார். வாக்குமூலம்லாம் நல்லா இருக்கு என்றார். 

நீ என்ன பண்ற என்று என்னைக் கேட்டார். காலேஜ்ல பாடம் சொல்லித் தர்றேன் என்றேன். 

பசங்களுக்கு இந்த மாதிரி கதைலாம் கூட சொல்லிக் கொடு. வாழ்க்கையைக் கத்துக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவரும் இறங்கிக் கொண்டார். 

அவரது  குழி விழுந்த  கன்னம்,  முகத்தில்  கைகளில் இருந்த சுருக்கங்கள் லேசாக கூன் விழுந்த முதுகு - வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவத்தின் சாட்சியாய் இருந்தது அவர் உருவத்தில்

கல்வி என்பது மதிப்பெண் அல்ல. வாழ்க்கைக்கான அனுபவம் தான்.

திங்கள், 22 மே, 2023

மியாஸ் - மனுஷி

#மியாஸ் 
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேருந்தில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் இருந்து வேலூருக்கு பேருந்து இல்லை என்பதால் திருவண்ணாமலை போய் அங்கிருந்து போகலாம் என நண்பர் சொன்னார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியதால் இருக்கை கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு சிறுமியும் அவர் பக்கத்தில் அவளின் அம்மாவும் அமர்ந்திருந்தனர். நான் அவர்களிடம் கேட்டு மூன்றாவதாக அமர்ந்து கொண்டேன். 

ஜிப்மர் தாண்டியதும் பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. என் சீட் அருகே ஒரு முஸ்லீம் குடும்பம் நின்று கொண்டு பயணித்தனர். என் கால் முட்டியை உரசிக் கொண்டு தலையில் முக்காடிட்ட சிறுமி நின்றிருந்தாள். உட்கார்ந்துக்கிறியா என்று கேட்டு கொஞ்சம் நகர்ந்தேன்.  இடம் போதுமானதாகத்தான் இருந்தது. என் பக்கத்தில் இருந்த அம்மாவும் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுத்ததில் நான்கு பேரும் வசதியாகவே அந்த சீட்டில் அமர்ந்து கொண்டோம். 

டிக்கெட் எடுத்து முடித்ததும் ஜன்னல் சீட் இல்லை என்பதால் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டே வந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியின் அம்மா  பூனைக்குட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். வீட்டில் பூனைக்குட்டி வளர்ப்பதாகவும் அந்தப் பூனைக்குட்டியை எங்கு சென்றாலும் அழைத்துச் சென்று விடுவோம் என்றும் சொன்னார். நாங்க கூட பரவால்ல. இவ ஒரு நிமிடம் கூட பூனைக்குட்டியை விட்டுட்டு இருக்க மாட்டா. சில சமயம் பூனைக்குட்டிக்கு டிக்கெட் போட்டு ஊருக்குக் கூட்டிட்டு போவோம் எனப் பெருமையாகச் சொன்னார். 

காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலைத் தாண்டியும் அந்த உரையாடல் என் காதில் விழுந்தது. ஹெட்போனைக் கழற்றிவிட்டு இப்போ எங்க போறிங்க? பூனைக்குட்டியை யார் பார்த்துப்பாங்க என்று கேட்டேன். அதுவும் பஸ்ல தா வருது என்றார். பஸ்லயா என்றதும் என் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமி அவளது மடியில் போய்த்தியிருந்த சிறு துண்டை விலக்கி இங்க தான் தூங்கிட்டு இருக்கா என்றதும் அழகான குட்டிப்.பூனை ஒரு சிறு பையினுள் தூங்கிக் கொண்டிருந்தது. பூனைக்குட்டியின் பெயர் மியாஸ் என்று அறிமுகப்படுத்தினாள். நான் தலையைத் தொட்டுத் தடவினேன். வெள்ளையும் கொஞ்சம் சாம்பல் நிறமும் கொண்ட வெல்வெட் மேனி  மியாஸுக்கு. மூன்றுமாத பிஞ்சு. அழகு குட்டி. 
கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள் மியாஸ். நான் பார்க்கட்டுமா என்றதும் என்னிடம் கொடுத்தாள்.  மியாஸ் என் நெஞ்சின் மீது தலை சாய்த்து நிம்மதியாகத் தூங்கியது. 

விடுமுறைக்காக உறவுக்காரர் வீட்டுக்குச் செல்வதாகவும், அதனால் மியாஸைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என்பதால் செஞ்சியில் உள்ள தங்கை வீட்டில் மியாஸைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டுச் செல்லவிருப்பதாகவும் திரும்ப வரும்போது அழைத்துச் சென்றுவிடுவோம் என்று சொன்னார் அந்த அம்மா..

மியாஸ் எவ்வளவு சமத்தான, பாசமான பூனைக்குட்டி, வீட்டில் எப்படியெல்லாம் விளையாடும், என்னவெல்லாம் சாப்பிடும், எங்கே தூங்கும் என கண்கள் முழுக்க பெருமை மின்ன சொல்லிக் கொண்டே வந்தார்கள் சிறுமியும் அவளது அம்மாவும். 

செஞ்சிக்கு முன்பு ஓரிடத்தில் டீ குடிக்க நிறுத்தியதும் மியாஸ் கண் விழித்தது. டீ குடிக்கக் கூட இறங்காமல் மியாஸுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டு சுவாரஸ்யத்தில் மியாஸின் கண்கள் குட்டி திராட்சைகள் போல் ஆகிவிட்டன. அதுவரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பூனைக்குட்டியா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு என் மடியில் படுத்துக் கொண்டு விளையாடியது. அந்த அம்மா, சிறுமி, இன்னும் இரண்டு பெண்கள் எல்லாருமே என்ன நம்ம மியாஸ் இவங்க கூட இப்படி ஜாலியா விளையாடுது என்று ஆச்சரியப்பட்டார்கள். 

பேருந்து கிளம்பியதும் மீண்டும் சுவிட் போட்டது போல மியாஸ்  தலைசாய்த்துத் தூங்கத் தொடங்கிவிட்டது. 
செஞ்சியில் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மியாஸின் குடும்பம் என்னிடம் பை சொல்லிவிட்டு மியாஸை வாங்கிக் கொண்டார்கள். 

நெற்றியில் முத்தமிட்டு மியாஸை அனுப்பி வைத்தேன். 

என் வாழ்க்கையில் பூனைக்குட்டியோடு சிறிது தூரம் பயணித்தது இதுவே முதல் முறை. அவ்வளவு அழகாய் இருந்தது அந்தப் பயணம்.

சனி, 29 ஏப்ரல், 2023

குயிலாப்பாளையம் தாமரைக் குளத்து நண்பர்கள் - மனுஷி

#குயிலாப்பாளையம்_தாமரைக்குளம் 

வீட்டில் ஒரு தாமரைக் குளம் உருவாக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். 
ஏற்கனவே தாமரை விதைகளைத் தண்ணீரில் போட்டு முளைக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் வீட்டில் உருவாக்கிய குளத்திற்கு குளத்து மண் எடுக்க குயிலாப்பாளையம் சென்றிருந்தேன். 

வண்டியைக் குளத்தருகில் நிறுத்திவிட்டுக் குளத்துக்குள் இறங்கினேன். கூடவே இரண்டு குட்டி பசங்க என்னோடு குளத்துக்குள் இறங்கினார்கள். 
அக்கா, உங்களுக்குத் தாமரைப் பூ பறித்துத் தரட்டுமா? எத்தனை பூ வேண்டும் என்று கேட்டபடியே சரசரவென குளத்துச் சேற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். 

தம்பி எனக்கு குளத்து மண்ணும் கொஞ்சம் தாமரை விதைகளும் தான் வேணும் என்றதும் காய்ந்த தாமரை விதைகளையும் சில தாமரை மொட்டுகளையும் பறித்து வந்து தந்தார்கள்.

அக்கா பூ பறிச்சு தர்றோமே காசு தருவிங்களா? 

எவ்ளோ டா தரணும்? 

முப்பது ரூபா.

என்ன டா முப்பது ரூபா? 

சரி அம்பது ரூபா தாங்க. 

முப்பது ரூபாயே அதிகம்னு சொல்றேன். அம்பது ரூபா கேக்கிற? 

சரி முப்பது ரூபாயே தாங்க. 

தர்றேன் டா... ஆனா எனக்குக் கொஞ்சம் தாமரைக் கொடியும் நோண்டி தர்றிங்களா.. அந்தக் கிழங்கோட... 

அவ்ளோ தான.. இதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸி... 

சொல்லிக் கொண்டே மண்ணைத் தோண்டினார்கள். 

நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேர் அருந்திடாமல் ஆழமாக மண்ணை நோண்டிக் கிழங்கோடு எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த இரண்டு குட்டிப் பசங்களும் ரொம்ப அசால்ட்டா குட்டி குட்டி தாமரைக் கொடிகளை கிழங்குடனும் மண்ணுடனும் நோண்டி என் கையில் கொடுத்தனர். .ஆச்சரியமா இருந்தது. 

டேய் எப்புட்றா என்றதும்.. எங்களுக்கு இதெல்லாம் ஈஸிதான்க்கா என்றார்கள். 

குளத்து மண்ணும் தாமரை விதைகளும் கொஞ்சம் கொடிகளும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு வந்ததும் குளத்து அருகில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த  அவன் அம்மாவிடமிருந்து கை கழுவத்  தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து கொடுத்தான். 

பெரியவன் பெயர் ரஞ்சன். சின்னவன் பெயர் தமிழரசன். இருவருக்கும் நன்றியைச் சொல்லிவிட்டு, சொன்னபடியே காசையும் கொடுத்துவிட்டு பை சொன்னேன்.. 

அக்கா, நம்ம குளம் தான். இன்னும் பூ வேணும்னா வாங்க பறிச்சுத் தர்றேன் என்றபடிக் குதித்துக் கொண்டே சென்றார்கள். 

அவர்களைப் போலவே துள்ளிக் குதித்தது மனம்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

பிரபஞ்சன் சாருடன் முதல் சந்திப்பும் பிறந்தநாள் பரிசும் - மனுஷி

#பிரபஞ்சன் 
பிரபஞ்சன் சாருடன் எனது நட்பு உண்டாகியபின்  வந்த அவரது முதல் பிறந்தநாள் அது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லவென கிளம்பினேன். 

ஒரு புத்தகம், அழகிய பூங்கொத்து ஆகியவற்றோடு லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பு மாடியில் போய் காலிங் பெல்லை அழுத்திய பிறகு தான் கவனித்தேன். வீடு பூட்டியிருந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடு அவருக்கு போன் செய்தேன்.. நான் வருவதற்குச் சற்று முன்பு தான் அவர் வெளியில் கிளம்பியிருந்தார். உள்ளார்ந்த வருத்தத்தோடு அதை அவர் தெரிவித்ததும் என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பரவாயில்லை சார் நாளை பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டேன். அவருக்காக கொண்டு வந்த பூங்கொத்தையும் புத்தகத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டுமென எதிர்வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களிடமே ஒரு பேனாவும் பேப்பரும் வாங்கி, மாடிப்படியில் அமர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான்காக மடித்து புத்தகத்தினுள் வைத்துவிட்டு, எதிர்வீட்டுக்காரரிடம் சார் வந்தால் மனுஷி கொடுத்தாங்க என்று சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். சரிம்மா என்றபடி வாங்கிக் கொண்டார். 

வழக்கமாக, நானும் சாரும்  காப்பி குடிக்கிற உழவர்கரை சந்திப்பில் உள்ள தேநீர்க் கடையில் சுடச்சுட ஒரு தேநீர் அருந்திவிட்டு கிளம்பினேன்... 

ஏழு மணி அளவில் பிரபஞ்சன் சாரிடமிருந்து ஒரு மெசேஜ்... மனுஷி, பேசலாமா... ஓய்வா இருக்கிங்களா என்று... 

எப்போது என்னிடம் பேச வேண்டும் என்றாலும் ஒரு மெசேஜ் செய்து நான் பதில் அனுப்பும் வரை காத்திருந்து மீண்டும் அழைப்பார் அல்லது நானே அழைப்பேன். சார் நீங்க எப்போ வேண்டுமானாலும் கால் பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஏன் அனுமதி கேட்கறிங்க என்றால், நீங்க என்னோட சினேகிதி என்பதால் நான் அதை அட்வாண்டேஜா எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பார். நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையின் நியாயத்தை என் நிலையிலிருந்து புரிந்து கொண்டு என்னோடு பழகிய ஓர் உன்னத ஆன்மா அவர். 

மனுஷி, நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசை வாங்கிக் கொண்டேன். பூங்கொத்தைவிடவும் அந்தக் கடிதம் அவ்வளவு அழகாக, உணர்வுப்பூர்வமா இருந்தது. சிறந்த பிறந்தநாள் பரிசா நான் நினைக்கிறேன். இதை உங்க கையால் வாங்காமல் போய்ட்டேன்னு வருத்தமா இருக்கு. உங்களுக்குத் தொந்தரவு இல்லனா வாங்களேன் ஒரு காப்பி குடிக்கலாம் என்றார். 

தொந்தரவு என்றால் கூட நான் வருவேன் சார் என்று சொல்லிவிட்டு என் ஸ்கூட்டியில் பறந்து போய் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு நான் தனியாக காப்பி குடித்த அதே கடையில் இருவரும் காப்பி குடித்தோம். பேசினோம். அவருக்கு இட்லி பார்சல் வாங்கிக் கொண்டார். எனக்கு நிறைய சாக்லேட்டுகளும் பிஸ்கட் பாக்கெட்டும் நிறைய சினேகத்தையும் கொடுத்தார். 

பிறகு விடைபெறும் முகமாக அவரோடு கைகுலுக்கி பிறந்த நாள் வாழ்த்துகள் சார் என்றேன். இரண்டு கைகளாலும் அழுந்தப் பற்றி புன்னகையால் வழியனுப்பினார். 

அந்த உள்ளங்கையின் ஸ்பரிசத்தை, கதகதப்பைத்தான் தேடிக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் இல்லாமல் வந்து போகும் உங்கள் பிறந்தநாளில்.
 
காஃபி சாப்பிடலாமா மனுஷி என்னும் குரலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். காப்பி சாப்பிட்டேன் சார் உங்கள் நினைவாக.