ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டுக்கான காத்திருப்பு

வருடத்தின் கடைசி நாள் என்பது இன்னொரு வருடத்திற்கான காத்திருப்பாக மாறிப் போகிறது.

பை பை சொல்லிவிட்டுச் செல்வதற்குத் தயாராக இருக்கிற ஆண்டில், செய்ய நினைத்துச் செய்ய முடியாமல் போனதைச் சரி செய்ய புத்தாண்டை வரவேற்கிறேன். புதிதாக புத்தாண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பனிபொழியும் இக்கடைசி இரவினை புத்தாண்டின் தொடக்கத்திற்கு இப்படித்தான் அழைத்துச் செல்கிறேன்.

நாட்கள் ஒவ்வொன்றும் கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போய்விடுகின்றன. இப்போ தானே புத்தாண்டு கொண்டாடினோம் அதுக்குள்ள அடுத்த புத்தாண்டா என நினைக்கும்படி நாட்கள் ஓட்டம் பிடித்து ஓடி விட்டன.

2017 ஆம் ஆண்டிற்குள் நினைத்துப் பார்க்க சுவாரஸ்யமான நிகழ்வுகள், வாழ்க்கைக்கான படிப்பினைகள், பெருமை கொள்ளும் தருணங்கள் என ஏராளம் இருக்கின்றன. மகிழ்ச்சியாக சிரித்து குதூகலித்த தருணங்களை மட்டும் விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறேன். மனம் கசந்து அழுத நாட்கள் ஏராளம். அதைப் பற்றி இப்பொழுது புகார்கள் ஏதுமில்லை.

பெருவனத்தில் நிலைத்திருக்கும் மரங்களைப் போல சில நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் இருப்பார்கள். மரத்தில் வந்தமரும் பறவைகள் போலவும், முதிர்ந்து விழும் சருகுகள் போலவும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகாரின்றி கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே ஜென் நிலை.

நண்பர்களோடு அதிக நாட்களை, அதிக நேரங்களைச் செலவிட்டது இந்த வருடத்தில்தான். இலக்கியக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடல், குழந்தைகளுக்கான கதை சொல்லல் என உருப்படியான விடயங்களை இந்த ஆண்டில் செய்திருப்பது நிறைவாக இருக்கிறது. விருதுகள் மூலம் எனக்கிருக்கும் சமூகக் கடமை மற்றும் பொறுப்புணர்வை எனக்குணர்த்திய காலத்திற்கு நன்றிகள்.

அன்பின் கரம் பற்றிக் கொண்டு வாழ்க்கையை நேர்மறையாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டதும் இந்த வருடத்தில். அதற்காகவே இந்த வருடத்தின் கடைசி இரவில் அழுகையும் மகிழ்ச்சியும் கலந்து விடை தருகிறேன்.

போய் வா எனது 2017 ஆம் ஆண்டே. எனது வாழ்நாளில் விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்  கொண்டது உன்னிடமிருந்துதான். வலித்தாலும் கூட அந்தப் படிப்பினைக்குப் பரிசாக எனது மகிழ்ச்சியைப் பரிசளிப்பேன்.

எது நிகழ்ந்த போதும் வாழ்க்கை அழகானது.

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே... 

வாழ்த்து அட்டைகளின் காலம்

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே வாழ்த்து அட்டைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சினிமா நடிகர்கள் / நடிகைகள் படங்கள், பப்ளி பப்ளி குழந்தைகள், அழகான அடக்கமான தமிழ்ச் சாயல் கொண்ட பெண்களின் ஓவியங்கள், வண்ண வண்ண மலர்க் கொத்துகள் இவைகள் தான் வாழ்த்து அட்டைகளில் இருக்கும். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் என மூன்று பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்து அட்டைகள் இருக்கும்.

முதலில் எத்தனை பேருக்கு இந்த வருடம் வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்று எழுதி வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்கு எந்த நடிகர் அல்லது நடிகை பிடிக்கும் என்பதை டிக் செய்து கொள்வோம். எங்களுடைய பள்ளி ஆசிரியர்களில் யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று அது ஒரு தனி லிஸ்ட்.

எங்களுக்கு நான்காம் வகுப்பு எடுத்த ஆசிரியர் மட்டும் இப்போது கூட நினைவில் இருக்கிறார். மற்ற வகுப்பாசிரியர்கள் அவ்வளவாக மனதில் நிற்கவில்லை. நான்காம் வகுப்பு சொல்லிக் கொடுத்த சார் அந்தக் காலத்து விஜய்காந்த் போல இருப்பார். காற்றில் அலையும் தலைமுடி.  பேண்ட் சட்டை, கறுத்த கலையான முகம். ம் குண்டான உடல். ஏய் விஜயகாந்த் சாரு வந்துட்டாராப்பா என்று கேட்கிற அளவுக்கு அச்சு அசலாக இருப்பார். அவருக்கு மட்டும் விஜய்காந்த் புகைப்படம் போட்ட வாழ்த்து அட்டையை ஒவ்வொருவரும் தனித்தனியாக போஸ்ட் செய்துவிட்டு இரண்டொரு நாளில் வகுப்பில் ஆவலோடு காத்திருப்போம். அவர் வாழ்த்து அட்டை வந்தது பற்றி ஏதாவது சொல்கிறாரா என. அவர் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு நாங்களே கோரசாக கேட்போம். வாழ்த்து அட்டை அனுப்பினோம் சார் என்று. சிரித்துக் கொண்டே வந்துச்ச்சு வந்துச்சு என்பார். அவ்வளவு தான் அவர் ரியாக்‌ஷன். அந்தப் பதிலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கிறிஸ்துமஸ் தொடங்கி பொங்கல் வரை ஒரு நீண்ட விடுமுறை வரும். கடைசி நாளில் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பசங்களா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கிளம்புவார்.

ஐந்தாம் வகுப்பு முடித்து அந்தப் பள்ளியில் இருந்து அடுத்து கெடிலம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தோம். என் நினைவு தெரிந்து எட்டாம் வகுப்பு வரை அவருக்கு நாங்கள் வாழ்த்து அட்டையும் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியும் அனுப்பி இருக்கிறோம். அடுத்தடுத்த வருடங்களில் அப்படியே அந்த வாழ்த்துத் தொடர்பு மங்கிப் போனது. நானும் மேற்படிப்புக்காக ஊரைவிட்டு விழுப்புரம், பாண்டிச்சேரி என இடம் மாறிக் கொண்டே இருந்ததில் பள்ளி தோழிகளிடமிருந்து முற்றிலுமாக வேரறுந்து போனேன்.

அடுத்து ஆசிரியர்களுக்கு அனுப்பியது போக அடுத்து ஊரில் இருக்கும் உறவினர் வீடுகளில் இருக்கும் எஞ்சோட்டு பெண்களுக்கு வாழ்த்து அட்டையின் உள்ளே பொம்மையெல்லாம் வரைந்து புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளை எழுதி அனுப்புவோம். மூன்றாவது கட்டமாக அடுத்த தெரு, பக்கத்து வீட்டில் இருக்கும் உடன் படிக்கும், விளையாடும் தோழிகளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம். மாலையில் விளையாட வரும்போது முதல் கேள்வி. ஏய் பொங்கல் வாழ்த்து கார்டு அனுப்பினேன் வந்ததாப்பா என்பதாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டையை போஸ்ட் செய்யும்போதும், தோழி அனுப்பிய வாழ்த்து அட்டையைப் பெயர் சொல்லி தபால்காரர் அழைக்கும்போதும் பண்டிகைக்கான உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

அதற்கடுத்து கல்லூரிக் காலத்தில் அப்படி வாழ்த்து அட்டை அனுப்பும் அளவுக்கு யாரிடமும் நட்பாகப் பழகவில்லை. நானுண்டு. வகுப்பறை உண்டு. நூலகம் உண்டு என்று இருந்துவிட்டேன். படிக்க வந்த சூழல் அப்படி எனக்குள் என்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் என்னுடைய உறவுக்கார அக்காவின் நண்பர் ஒருவர் ஸ்கூல் முடித்து வரும்போது ஒரு வாழ்த்து அட்டையைக் கையில் கொடுத்தார். வீட்டுல போய் படிச்சு பார் என்று சொல்லிவிட்டு விசுக்கென்று பைக்கில் பறந்துவிட்டார். ஆடம்பரமான வாழ்த்து அட்டைக்குள் ஒரு காதல் கடிதம். படித்துவிட்டு அப்படியொரு அழுகை. எனக்கென்ன காதலிக்கும் வயதாகிவிட்டதா அதற்குள் என்று தேம்பித் தேம்பி அழுதேன். அக்கா வந்து சமாதானம் செய்தார். இதெல்லாம் இந்த வயசில் நடக்கும். இயல்பு தான். பிடிக்கல என்றால் சொல்லிடு. அழாதே என்று ஆறுதல் சொன்னார். நான் வளர்ந்த பெண் என்ற உணர்வை அந்தக் காதல் அட்டை எனக்கு உணர்த்தியது. அந்த அட்டையைக் வெந்நீர் சூடாகிக் கொண்டிருந்த அடுப்பில் போட்டு விட்டு அது கொழுந்துவிட்டு சிவப்பு நிறத்தில் எரிவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நானுண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோதும் சில வாழ்த்து அட்டைகள் ஒற்றை ரோஜாப் பூவுடன் என் முன் வரும். ஒன்று வாங்கவே மாட்டேன். அல்லது வாங்கி அந்தப் பையன் கிளம்பிய அடுத்த நொடியே படித்தே பார்க்காமல் கிழித்து ரோட்டோரம் எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடப்பேன்.

என் வாழ்க்கையின் முன் வந்து நின்ற இளம்பருவத்துக் காதல்களை இப்படித்தான் விரட்டியடித்தேன்.

2005க்குப் பிறகு வாழ்த்து அட்டை கலாச்சாரம் மாறிவிட்டதாக உணர்கிறேன். எல்லார் கையிலும் ஒரு ரிலையன்ஸ் போன் அல்லது பிளாக் & வொயிட் நோக்கியா போன் இருக்கும். மெசேஜ் பூஸ்டர் போட்டுக் கொண்டு எல்லா உரையாடல்களும் வெறும் மெசேஜ்களாகச் சுருங்கி விட்டன. காதலைச் சொல்வதாக இருந்தாலும் சரி. பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் வாழ்த்தாக இருந்தாலும் சரி. குட்டி குட்டி மெசேஜ்கள் தான். முகம் பார்த்து தயக்கமும் நடுக்கமுமாக காதலைச் சொல்லும் காலம் மலையேறிப் போனது செல்போன்கள் நமது மூன்றாவது கையாக மாறிக் கொண்டிருந்தபோதுதான். அதுவும் ஆண்டிராய்டு போன் வந்த பிறகு வாழ்வின் மகத்தான தருணங்கள் எல்லாம் ஸ்மைலிக்களாக இன்னும் சுருங்கிவிட்டது.

வாழ்த்து அட்டைகளில் கையெழுத்து தாங்கி வரும் வார்த்தைகளுக்கு இணையான உணர்வு விலையுயர்ந்த செல்போன் மெசேஜ்களில் ஸ்மைலிகளில் கிடைப்பதேயில்லை.

திங்கள், 20 நவம்பர், 2017

உலகின் அழகிய பெண் 2017 : மானுஷி சில்லர்

நான் தேடித் தேடி யோசித்து யோசித்து எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர் மனுஷி.

2017 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர். என்ன அதிசயம். வாழ்த்துகள் பெண்ணே.

என்னுடைய பெயரில் (புனைபெயரில் என்றாலும் கூட) 20 வயது இளம்பெண், இந்தியப் பெண் உலகின் அழகிய பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

17 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பெண் உலக அழகிப் பட்டம் வென்றிருக்கிறார். இதைப் பெருமையாகக் கொள்வதா என்கிற கேள்வியைச் சில நண்பர்கள் எழுப்பி இருந்தார்கள். கோபம் கொண்டார்கள். இதைச் சிலாகிப்பவர்களை முட்டாள்கள் என்று ஒரு தோழி பதிவிட்டிருந்தார்.

உலகில் தோன்றிய எல்லாமே அழகு தான். அதற்கு மொழி கிடையாது. இனம் கிடையாது. வயது கிடையாது. பால் வேறுபாடு கிடையாது. அழகென்பது அன்பாலானது.

வணிக அரசியல் நோக்கத்திற்காகத்தான் உலக அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்மை தான். பெண்ணின் உடல் காட்சிப் பிண்டமாகக் காட்டப்படுகிறது. மறுக்கவே இல்லை.வணிக உள்நோக்கம் கொண்ட வெற்றியைக் கொண்டாடுவது நியாயமா என்கிற கேள்வி மிக மிக நியாயமனது. ஆனால் வாழ்த்து தெரிவிப்பவர்களை முட்டாள் என்று சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கிறது. நமது கருத்தை, விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் பொதுவெளியில் கருத்தை முன்வைக்கும்போது இப்படியான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் அல்லவா? உணர்ச்சிவசப்பட்ட கோபத்தை விட, பக்குவமான கோபம் தான் மாற்றத்திற்கான விதை.

இங்கே சில கேள்விகளை எழுப்ப வேண்டும்.

உலக அழகிப் போட்டி மட்டும் தான் வணிக அரசியல் உள்நோக்கம் கொண்டதா? கிரிக்கெட்டில், அரசியலில், சினிமாவில், கல்வியில், சின்னத்திரை விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் வணிக உள்நோக்கம் இல்லையா? ஆண்கள் ஆடுகிற 20/20 கிரிக்கெட்டில் சியர் கேர்ஸ் எதற்கு? சினிமாவில் கதாநாயகனைத் தொட்டுத் தடவி ஆட கூட்டமாக வெள்ளைத் தோல் பெண்கள் எதற்கு? மூலைக்கு மூலை சூப்பர் மார்க்கெட்டுகள் எதற்கு? நமது பணத்தைக் கரைத்து அவர்கள் கல்லா நிரப்புவதற்காவா? இவ்வளவு ஏன்? நமது கருத்துச் சுதந்திரத்தைக் காத்திரமாக வெளிப்படுத்த துணை செய்யும் முகநூல் கூட வணிக அரசியல், விளம்பர அரசியலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. டைம்லைனில் நான்கு  நிலைத்தகவலுக்கு அடுத்து ஆன்லைன் ஷாப்பிங் விளம்பரங்கள் வருகின்றன. பொருளை வாங்கச் சொல்லித் தூண்டுகின்றன.
நாம் எங்கே சென்றாலும் பொருட்களை வாங்கத் தூண்டும் வாசகங்களும் கலர் கலர் புகைப்படங்களும் விளம்பரப் புன்னகைகளும் வியாபார தந்திரம் கொண்டவை தானே. தூண்டும் இத்தகைய விளம்பர உத்திகளை முதலில் விமர்சிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதன் மூலம், விமர்சிப்பதன் மூலம் மாற்றுச் சிந்தையோடு இயங்குகிறோம் என்கிற கற்பனைக்குள் சென்று விடத் தேவையில்லை. எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது மனோவியாதியாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க் கருத்தை முன்வைக்கும்போது யாரை விமர்சிக்கிறோம், எதை விமர்சிக்கிறோம், விமர்சனங்களை எப்படி முன்வைக்கிறோம் என்பது மிக முக்கியம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.
உலக அரங்கிற்கான அரை கூவலை உள்ளூர் வணிக அரசியலில் இருந்தே துவங்கலாம்.

திங்கள், 13 நவம்பர், 2017

பை சைக்கிள் தீவ்ஸ் - எளிய மனிதனின் வாழ்க்கை

மூன்றாவது முறையாக ஒரு படத்தைப் பார்க்கும்போதும் முதல் முறை பார்க்கும் போது இருக்கிற உணர்வு ஒருசில படங்கள்தான் கொடுக்கும். அப்படியொரு படம்தான் ’பை சைக்கிள் தீவ்ஸ்’.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான இத்தாலி நகரத்தின் ஒரு ஏழைக்குடிமகனின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வதினூடாக அன்றைய இத்தாலியின் சூழலை, மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் ஆன்மாவைத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் விட்டோரியோ.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி நகரத்தில் கதாநாயகன் ரிச்சிவுக்கு சைக்கிள் இருந்தால் போஸ்டர் ஒட்டும் வேலை என்ற நிபந்தனையுடன் வேலை கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பெட்ஷிட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் நல்ல விலைக்கு விற்று, அதில் சைக்கிள் வாங்கிக் கொண்டு பெருமிதமாக வேலையில் சேர்கிறார் ரிச்சி. சிறுவயது மகனை பெட்ரோல் பங்கில் இறக்கி விட்டுவிட்டு, மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, முதல்நாள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கையில் அவரது சைக்கிள் களவாடப்படுகிறது. முடிந்தவரை துரத்திப் பிடிக்க முயற்சி செய்கிறார். சைக்கிளைத் திருடியவன் சிட்டாகப் பறந்துவிடுகிறான். போலிஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கிறான். சரியான நடவடிக்கை இல்லை. குறி சொல்லும் பெண்ணிடம் செல்கிறான். அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிறகு ஒருவழியாக, சைக்கிள் திருடியவனை அடையாளம் கண்டு பிடித்துக் கேட்கையில் கைகலப்பு உருவாகி, அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். சைக்கிள் இல்லாமல் வேலை இல்லை என்கிற எண்ணம் மனதைக் குடைந்தெடுக்க, வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் சுவரோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிவிடுகிறான். ஆனால், அவ்வளவு சாமர்த்தியம் இல்லாமையால் மாட்டிக் கொண்டு அடி வாங்குகிறான். பின்பு, மகன் புரூனோவுக்காக போலீஸிடம் போகாமல் மன்னித்து அனுப்புகிறார்கள். சிறுவயது மகன் முன்பு திருட்டுப் பட்டத்துடன் ரோட்டில் அடி வாங்கியது மனதை உறுத்த, கூனிக் குருகி நடந்து வருகையில் மகன் புரூனோ அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.
வேலை கிடைத்தவுடன் குறி சொல்லும் பெண்ணிடம் நன்றி சொல்ல செல்லும் மனைவி மரியாவிடம் விவாதம் செய்து முற்போக்குவாதம் பேசும் ரிச்சி, சைக்கிள் திருடு போனபின் தன் மகன் புரூனோவுடன் அதே குறி சொல்லும் பெண்ணை நாடிச் செல்வது மனித வாழ்வின் மிகப்பெரும் முரண். ஆனால், அங்கும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்தக் காட்சி மிகப்பெரும் பகடியாக இருக்கிறது. மனிதர்களின் இயலாமையை, கையறுநிலையை முதலீடாக வைத்துப் பணம் பார்க்கும் ஆன்மீகத்தைப் போகிற போக்கில் நக்கலடிக்கிறது இந்தப் படம்.
அதேபோல, சைக்கிள் காணவில்லை என்றதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும் காட்சியும் கூட இந்தச் சமூகத்தின் மீதான, அதிகார நிறுவனங்களின் மீதான நல்ல விமர்சனம். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி, சைக்கிளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் தொலைத்தவனிடமே ஒப்படைப்பதும், கண்டுபிடித்துத் தருவது தனது கடமை இல்லை என வாதிடுவதும், வேறொரு அதிகாரி எதுவும் பிரச்சினையா என்று கேட்கும் போது இந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லை, வெறும் சைக்கிள் தான் என்று சொல்லிவிட்டுச் செல்வதும் கையறு நிலையில் ரிச்சி வெளியேறிச் செல்வதும் யதார்த்தமான காட்சியமைப்பு. ஏதோவொரு மனிதனின் வாழ்க்கை, இன்னொரு மனிதனுக்கு மிக மிக சாதாரண விஷயமாக இருக்கிறது.
இந்தப் படம் முழுக்கவும் சைக்கிள் என்பது வெறும் சைக்கிளாக இல்லை. ரிச்சி என்ற ஏழைக் குடும்பஸ்தனின் வாழ்க்கையாகவே இடம்பெறுகிறது. காலம் மிகவும் விசித்திரமானது. ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி, அதை வெகுசீக்கிரமே நீர்க்குமிழி போல உடைத்து விட்டு, தேடித் திரிய வைக்கிறது. பெரும்பாலும் இழந்த அந்த வாய்ப்பைத் திரும்பப் பெறுவதற்கான அல்லது கிடைத்த அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமாக, தேடலாக இந்த வாழ்க்கை அமைந்து விடுகிறது. படம் முழுக்க சைக்கிளைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் ரிச்சி மற்றும் புரூனோ. சைக்கிள் கிடைத்து, மீண்டும் அவன் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்பு அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. ரெஸ்ட்ராண்ட் காட்சி, ஆலயத்தில் கடவுளை வழிபடும் காட்சி ஆகியவற்றினூடாக சமூகத்தில் காணப்படும் வர்க்க வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நுட்பமாக விமர்சனம் செய்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது புரூனோதான். அவனுக்காகத்தான்  இந்தப் படத்தை மூன்றாம் முறையாகவும் பார்த்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு முதல்முறையாகப் பார்த்தபோது இருந்த காதல் இப்போதும் இம்மியும் குறையாமல் இருக்கிறது அவன்மீது.
சைக்கிளைத் துடைத்துக் கொண்டே தன் அப்பாவிடம் பேசுவதாக இருக்கட்டும், சைக்கிளைத் தொலைத்துவிட்டுத் தாமதமாகத் திரும்பும் அப்பாவிடம் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததைக் கோபத்துடன் வெளிப்படுத்துவதாக இருக்கட்டும், அப்பாவுடன் சைக்கிளைத் தேடிக் கூடவே ஓடுவதாக இருக்கட்டும், அப்பா அடித்தவுடன் அவருடன் பேசாமல் முரண்டு பிடித்தபடி நடந்து செல்வதாக இருக்கட்டும், ரெஸ்ட்டாரண்டில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்போது எதிர் டேபிளில் இருக்கும் வசதியான வீட்டுப் பையனைப் பார்வையால் வெறுப்பேற்றுவதாக இருக்கட்டும், கடைசியாக திருட்டுப் பட்டம் சுமந்து மனம் வெதும்பி நடக்கும் தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொள்கிற இடத்திலும் என, புரூனோ ஒரு கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறான் மனதில். புரூனோவின் முஅப்பாவோடு வேலைக்குக் கிளம்பும்போது கண்ணாடி பார்த்து தலை சீவிவிட்டு, அந்த மப்ளரை கழுத்தைச் சுற்றித் தூக்கிப் போடுகிற ஒரு காட்சி போதும் அவனை ரசித்துக் கொண்டே இருக்க.
படத்தை இன்னும் சிலாகித்துப் பேச எவ்வளவோ இருக்கிறது படம் முழுக்க. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சைக்கிள் திருடியவனைக் கண்டுபிடித்தும் சைக்கிளைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி, வேறு வழியில்லாமல் சைக்கிளைத் திருடி மாட்டிக் கொண்டபின், அடி வாங்கி, மன்னிக்கப்பட்டு சாலையில் மகனுடன் நடந்து வருகையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை. நான் புரிந்து கொள்கிறேன் அப்பா உன்னை என்பது போல பற்றிக் கொள்கிற அந்தப் பிஞ்சுக் கரம் தான் சபிக்கப்பட்ட இந்த வாழ்க்கையில் நமக்களிக்கப்படுகின்ற உச்சபட்ச கருணை. வரம். நம்பிக்கை. எல்லாமும். அந்த ஒற்றை நம்பிக்கையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது இந்த வாழ்க்கை இன்னமும்.
(பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் இறுதிக் காட்சியைக் கண்ணீரின்றி கடந்து வருகிற யாரும் பாக்கியவான்களே.)

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

தேனி பாராட்டு விழா

தேனி இலக்கிய சந்திப்பு :
2008இல் கவிஞர் உமாமகேஸ்வரியை ஒரு நேர்காணலுக்காகச் சந்திக்க தேனிக்குச் சென்றிருக்கிறேன். அதன்பிறகு 2010இல் பல்கலைக்கழக துறைசார் நண்பர்களுடன் சுருளி அருவிக்குச் சுற்றுலா சென்றேன். அதன்பிறகு தேனிக்குச் செல்லும் வாய்ப்பு வரவில்லை. ஆனால், தேனியை நினைத்தாலே பிரம்மாண்டமான மலைகளும் குளிர்ச்சியும் நினைவுக்குள் வந்துபோகும்.
யுவபுரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டபோது தேனியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறோம் என்று விசாகன் தோழர் சொன்னார். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். தேனிக்குச் செல்லும் உற்சாகம் மனதெங்கும் நிறைந்திருந்தது.
ஜூலை 29 அன்று இராஜபாளையத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய விழாவில் கலந்து கொண்டபின், அடுத்த நாள் செல்வக்குமார் அண்ணா மற்றும் அவரது நண்பர் ராஜா ஆகியோருடன் தேனிக்குப் பயணம் செய்தேன். இராஜபாளையத்தில் இருந்து கிளம்பியதும் எங்களோடு மழையும் பயணம் செய்தது. ஜன்னலோர இருக்கையில் மழையை, மலையை ரசித்தபடி மூன்று மணி நேரப் பயணம். 
சரியாக மாலை 4 மணி அளவில் தேனியில் விசாகன் தோழரை நிகழ்ச்சி நடைபெறவிருந்த தெய்வா ஹோட்டலில் சந்தித்தேன். பிறகு ஏற்பாடு செய்திருந்த அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தார். கொஞ்ச நேரத்தில் ‘எது என்னை எழுதத் தூண்டியது?’ என்பது பற்றிச் சிறு வீடியோ பதிவு ஒன்றை அவரது கேமராவில் பதிவு செய்தார். பத்துநிமிட உரையாடலுக்குப் பிறகு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குச் சென்றோம்.
முகநூல் தோழியான பிரிதம் நிலாவைச் சந்தித்தது கூடுதல் கொண்டாட்டமாக இருந்தது. கற்றல் இனிது பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என ஆவலோடு இருந்தேன். தேனி நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அன்பில் நெகிழ்ந்து போனேன். எங்கே சென்றாலும் அன்பானவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
மழையும் மழை நிமித்தமுமான விடுமுறை நாளினை இலக்கிய நிகழ்வுக்கு ஒப்புக் கொடுத்த அறிஞர்கள், எழுத்தாளர்களால் அரங்கு நிறைந்திருந்தது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்கியிருந்தார்கள். சா. தேவதாஸ் தோழர், யமுனா ராஜேந்திரன் மற்றும் கதைப்பித்தன் ஆகியோருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த அறிமுகத்தினையும் விமர்சனங்களையும் ஷாஜகான், நேசமித்ரன், ஆர்.எஸ். லட்சுமி, தி. குமார், பொன்முடி, மணிமொழி, கூடல் தாரிக் ஆகியோர் மிக நேர்த்தியாக முன்வைத்துப் பேசினர்.
தலைமையுரையில் ஏர் மகாராசன் தோழர், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதை நூல் குறித்து ஆழமான உரையை நிகழ்த்தினார். பெண் கவிதைகளின் நீண்ட வரலாற்றினைச் சுட்டிக் காட்டிப் பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவரது பெண் மொழி இயங்கியல் புத்தகத்தை எனது முதுகலை வகுப்பில் வாசித்திருக்கிறேன். அவரைத் தேனி நிகழ்வில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக, பாராட்டு விழாவில் ஏற்புரைக்கு முன்பு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பு செய்வார்கள். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தோழர்கள் என்னை அன்பு மகளாக வரித்துக் கொண்டார்கள். இப்போது நினைத்தாலும் சந்தோஷத்தில் நெகிழ்ந்து கண் கலங்குகிறேன். தலையில் கிரீடம் சூட்டி, ரோஜா மலர் மாலை அணிவித்து, பெரிய தட்டில் புத்தகங்களையும் அழகான சுடிதார் ஒன்றையும் வைத்து சீர்வரிசையாக அளித்துப் பெருமை செய்தார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட இளவரசி போல உணர்ந்த தருணம் அது. மலர் மாலை மற்றும் கிரீடத்துடன் எனது சுருக்கமான ஏற்புரையை வழங்கினேன்.
மகாராசன் தோழர், ஷாஜகான் தோழர், ஆர்.எஸ். லட்சுமி அம்மா, விசாகன் தோழர், செல்வக்குமார் அண்ணா என என்னைச் சுற்றி இவ்வளவு அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தேனி நிகழ்வில் தெரிந்து கொண்டேன். விசாகன் தோழருக்கு என்றென்றைக்குமான அன்பும் நன்றியும்.
தேனி இலக்கியச் சந்திப்பு, தேனீ போல இன்னும் சுறுசுறுப்பாக எழுத்தில் இயங்குவதற்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!