சனி, 21 ஏப்ரல், 2018


தியேட்டரில் படத்தின் பெயர்களைத் திரையில் பார்க்கும்போது நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ஒளியமைப்பாளர் இவர்கள் பெயர்களை மட்டும் தான் பார்த்து மனதில் இருத்திக் கொள்வேன். அதைத்தாண்டி, கதையைக் கவனிப்பதுண்டு. சினிமாவை ரொம்ப தொழில்நுட்பம், குறியீடு, கோட்பாடு என்றெல்லாம் பார்க்கும் அளவிற்குத் தெரிந்து வைத்திருக்கவில்லை. 

ஒரு திரைப்படத்தில் மேலே சொன்னவர்களைத்தவிரவும் படத்தில் பங்காற்றுகின்ற கலைஞர்களை மிகச் சமீபமாகத்தான் கவனிக்கத் தொடங்கி இருக்கிறேன்.

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா இவர்கள் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில்  (2013) பெயர் போடும்போது கவனித்தேன். இரண்டு ஆச்சரியங்களும் அதிர்ச்சியும். ஒன்று தனுஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம். இரண்டாவது பாடலாசிரியர் வாலி, Poetu தனுஷ். படம்  பார்ப்பதற்கு முன்பே எஃப் எம்மில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எதிர் நீச்சலடி, வென்று ஏத்துக் கொடி, அட ஜாலியா வாலி சொன்னபடி... என்ற பாடலும், ஓஹோ மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாயே என்ற பாடலும் அடிக்கடி கேட்டு வரிகள் எல்லாம் மனப்பாடம் ஆகியிருந்தது. ஜப்பானில் பிறந்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே.. என்ற வரியில் லயித்துப் போய் அமர்ந்திருந்தேன். சொல்லப் போனால் இந்த வரிக்காகத்தான் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும் என்று போனதே.

அந்தப் படம் பார்த்தபோது Poetu தனுஷ் என்பதைப் பார்த்து, தனுஷ் பாடல் எழுதுகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன்பே பாடல்கள் எழுதி அவர் பாடலாசிரியராக ஆகிவிட்டார் என்பது எனது கவனத்திற்கு வராமலே போய்விட்டது. அவரே படத்தைத் தயாரித்து, அவரே பாடல் எழுதி, அவரே பாட்டும் பாடி, அவரே வந்து ’சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ என்று ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிவிட்டும் போவதெல்லாம் சாதாரண விசயமல்ல.

ஆனாலும் கூட, நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே பாடலின் வரிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு தனுஷ் என்ன பாடல் எல்லாம் எழுதி இருக்கிறார் என்று ஒரு பட்டியல் எடுத்தேன்.

3 படத்தில் எனக்குப் பிடித்த கண்ணழகா காலழகா பாடல்,, போ நீ போ பாடல், நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் பாடல் என நான் மெய் மறந்து ரசிக்கும் பாடல் வரிகளை தனுஷ் தான் எழுதி இருக்கிறார். ’இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணும் விதி இல்லையா… என்ற வரியை மனதுக்குள் பலமுறை முணுமுணுத்திருக்கிறேன். ஒய் திஸ் கொலவெறி பாடலைக் கேட்கும்போது மனசுக்குள் இதெல்லாம் ஒரு பாட்டா என கொலவெறி வருவது தனிக்கதை.

வேலையில்லா பட்டதாரி படத்தில் அட ஊதுங்கடா சங்கு பாடலையும், ஹேய்.. இங்க பாரு கூத்து ஜோரு பாடலையும், ஏ சுட்ட வட போச்சு டா வாட் ய கருவாட் பாடலையும் ஒரு ஜாலி மனநிலையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒதுக்கித் தள்ளிவிடாதபடி ஏதோவொரு மேஜிக் இந்த மூன்று பாடல்களிலும் இருக்கிறது. அனிருத்தின் துள்ளல் இசை காரணமாக இருக்கலாம்.

அதே படத்தில் அம்மா அம்மா பாடல் பல நேரங்களில் என்னை நெகிழ்ந்து அழச் செய்திருக்கிறது. பகலும் இரவாகி பயமானதே அம்மா. விளக்குன் துணையின்றி இருளானதே என்ற வரிகளில் தான் எத்தனை உண்மை.

இப்படியே தனுஷ் எழுதிய பாடல்களின் பட்டியலில் பிறை தேடும் இரவிலே உயிரே எனைத் தேடி அலைகிறாய் பாடலும் இணைந்து கொண்டது ஆச்சரியம். நான் அடிக்கடி கேட்டும் பாடல்களில் ஒன்று இந்தப் பாடல். சைந்தவியின் குரலுக்காகவும் இந்த வரிகளுக்காகவும் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் இரவில் தூங்கச் செல்லும்போது கேட்கும்போது இருக்கும் சுகமே தனிதான்.

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்தச் சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

Pirai Thedum- MAYAKKAM ENNA HD - www.Tamilsweet.net 


இப்படிச் சொல்லும் ஓர் இதயம் தானே காதலின் தொடக்கம்.


தனுஷை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராகவும் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது.


வியாழன், 19 ஏப்ரல், 2018

நட்புக்கு வயது தடையில்லை

மாலை மூன்று மணி. மெரினா சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காலியாக இருந்தது. இடது புறம் நீல நிறக் கடல். பரந்து விரிந்த மணற்பரப்பு.

உச்சி வெயிலின் போது தோன்றும் கடலின் நீல வண்ணத்திற்குக் கூடுதல் அழகு.

காமராஜ் சாலை வழியாக வடபழனி செல்ல வேண்டும் என்பது எனது திட்டம். வழி தவறிய ஆட்டுக்குட்டியாக இல்லாமல், முடிந்தவரை யாரிடமும் வழி கேட்காமல் செல்வதற்கு முயற்சி செய்தேன்.

அந்த வழி கொஞ்சம் பழக்கமான வழி தான். கல்லூரியில் இருந்து கிளம்பும் போது இரண்டு முறை கரன் கார்க்கி தோழர் வண்டியில் அமர்ந்து சாலையின் இருபுறமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் தூரம் தள்ளி, கொஞ்சம் தூரம் தள்ளி ஓரமாக நிற்கும் ஆட்டோக்காரர்களிடம் மூன்று முறை வடபழனி செல்ல வழி கேட்டுத்தான் போனேன்.

சில சமயம் ஆட்டோக்காரர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றிப் போனால் சுத்துதே சுத்துதே சென்னைனு சுத்திக் கொண்டே இருப்பேன்.. போய்ச் சேர வேண்டிய இடத்தைச் சேர மாட்டேன். (அப்படிச் சுற்றி அலைந்த கதையைத் தனியாக எழுதலாம். அவ்வளவு கதை இருக்கிறது.)

ஆனால் இந்த மூன்று ஆட்டோக்காரர்களும் சொன்ன வழி பெரிய சுத்தலில் விடவில்லை. மிகச் சரியாக ஜெமினி பாலம் வரை சென்று விட்டேன். அதன்பின் எனக்கே வழி தெரிந்தது.
சென்னையில் எனக்கும் கூட வழி சரியாகத் தெரிகிறதே என்கிற பெருமிதத்தோடு வள்ளுவர் கோட்டத்திற்குச் செல்லும் சாலையின் இடப்புறம் திரும்பினேன். வளைவில் ஐந்து பள்ளி மாணவர்கள் லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பாண்டிச்சேரியில் இப்படி மாலை நேரங்களில் சாலையோரங்களில் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் லிஃப்ட் கேட்பார்கள். பல நேரங்களில் லிஃப்ட் கொடுத்திருக்கிறேன். சின்ன சின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்குத் தேவை தானே.

நீல நிற பள்ளிச் சீருடையில் இருந்த மாணவர்கள் வளைந்து திரும்பும் பைக்குகள் முன்னால் கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டும் காணாமல் கடந்து போக நினைத்த என்னை எது தடுத்து நிறுத்தியது எனத் தெரியவில்லை. வண்டியை நிறுத்தினேன்.

அக்கா அக்கா. இங்க தான்க்கா பக்கத்துல வீடு. கொஞ்சம் இறக்கி விட்ருங்கக்கா.

ஐந்து பேர் இருக்கிங்களே டா.

நீங்க ஒரு ரெண்டு பேரை மட்டும் கூட்டிட்டு போங்க.

என்கிட்ட லைசென்ஸே இல்ல டா. இதுல ட்ரிபிள்ஸ் என்றால் கஷ்டம்..போலிஸ் பிடிச்சிடுவாங்க.

என்னது லைசன்ஸ் இல்லையா. சரி பரவால்லக்கா. லைசென்ஸ் வேற இல்ல அப்படியே ரெண்டு பேரைக் கூட்டிட்டு போனால் போலிஸ் பிடிச்சா கூட ஒரே ஃபைன் தான் போடுவாங்க.

டேய் என்ன டா லாஜிக் இது

அக்கா அக்கா ப்ளீஸ்க்கா

அதெல்லாம் வேண்டாம். வேண்டுமென்றால் ஒருத்தர் வாங்க கூட்டிட்டு போறேன்.

டேய் அக்கா கூட்டிட்டு போறாங்க உட்காருங்கடா

என்னது உட்காருங்கடா வா. டேய் ஒருத்தர் தான் டா.

அக்கா. அதெல்லாம் நீங்க ஓட்டுவிங்க. டேய் நீ தள்ளி உட்காரு டா.

ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்னை கன்வின்ஸ் செய்து (கன்வின்ஸ் செய்து விட்டதாக நம்பி) ஒரு வழியாக இரண்டு வாண்டுகள் வண்டியின் பின்னால் உட்கார்ந்து கொண்டனர்.

சீக்கிரம். போங்கக்கா போலீஸ் புடிக்க போறாங்க.

டேய் வாயத் தொறக்காதிங்கடா.

செல்லக் கோபமாகத்தான் சொன்னேன்.

அடுத்த கணமே எங்களுக்குள் உரையாடல் தொடங்கியது. வழக்கமாகக் கேட்கிற கேள்விகள் தான். பொதுவாக இப்படி குட்டி வாண்டுகளுடன் போகும்போது கேள்வியை நான் தொடங்குவேன். அவர்கள் பதில் சொல்வார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவர்கள் கேள்வியைத் தொடங்கினார்கள்.

நீங்க படிக்கிறிங்களா?

இல்ல வேலை பார்க்கிறேன். நீங்க என்ன படிக்கிறிங்க.?

நான் ஏழாவது படிக்கிறேன்க்கா. என் பேரு லோகேஷ்வரன். என் பின்னால் இருந்தவன் சொன்னான்.

அவனுக்குப் பின்னால் இருந்தவன் சொன்னான். என் பேரு சிவ கைலாஷ். ஆறாவது படிக்கிறேன்.

தினமும் இப்படித்தான் லிஃப்ட் கேட்டுப் போவிங்களா? பஸ் கிடையாதா இந்த ரூட்ல.

பஸ்லாம் எதுக்குக்கா. நடந்து போற தூரம் தான் வீடு.

இந்த வார்த்தையைக் கேட்டதும் மனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்று நினைவுக்குள் வந்து போனது. வீட்டுக்கு வழி கேட்டவரிடம் நடக்கிற தூரம் தான் என்றேன். எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று நானும் சொல்லவில்லை. எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று அவரும் சொல்லவில்லை என்பதாக அந்தக் கவிதை இருக்கும்.

சரி. அப்போ நடந்தே போயிருக்கலாமே.

இல்லக்கா. பயங்கர கை வலி. கால் வலி. தலைவலி.

கைவலி கால் வலி ஓக்கே. அதென்ன தலைவலி. சும்மா சொல்லாதடா.

தலை இருக்குல்ல. அப்போ தலை வலிக்கும்க்கா. லோகேஷ் சொன்னான். என்னுடைய கையை எடுத்துத் தலையைத் தொட்டுப் பார்த்தேன். தலை இருந்தது.

ஸ்பீடு ப்ரேக்கர் ஸ்லோவா போகனும். - இது கைலாஷ்

சரிங்க சார்.

சாரா. நாங்க என்ன ஸ்கூல்லையா வேலை பார்க்கிறோம் என்றான் கைலாஷ்

அக்கா நீங்க ரொம்ப நல்லா பேசுறிங்க. உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. லோகேஷ் சொல்லிவிட்டு, ஆங். இந்தக் கடைகிட்ட நிறுத்துங்க. இதோ இந்த எதிர்ல ஒரு சந்து போகுதா.. அப்படியே உள்ள போயி, அப்புறம் கொஞ்சம் நடந்து போயி இப்படிக் கொஞ்சம் திரும்பினால் எங்க வீடு வந்துடும் என்றான்.

வீடு வராது. நாம தான் வீட்டுக்குப் போவோம் என்று நான் சொன்னதும் டேய் அக்கா செமையா காமெடி பண்றாங்க டா என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

சரிக்கா. டா டா பை பை. நாளைக்கும் இதே டைம் வருவிங்களா? வந்தால் எங்களை பிக் அப் பண்ணிக்கோங்க. பேசிட்டே வரலாம் என்று சொல்லிவிட்டு, இருவரும் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் நடந்தார்கள்.

கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது முடிந்த வரை இந்த வழியாகவே வரலாம். ஆனால் இதே நேரம் என்பது கொஞ்சம் கடினம் தான்.

அடடா. இவ்வளவு பேசினோம். அந்தக் குட்டி நண்பர்கள் படிக்கும் பள்ளி எதுவெனக் கேட்க மறந்து விட்டேனே..

மதிய வெயிலில் ஜொலிக்கும் கடலின் நிலத்தில் சீருடை அணிந்திருக்கும் அவர்கள் எந்தப் பள்ளியென யாரேனும் சொல்லுங்களேன்...

மெரீனாவில் ஒரு தென்குமரி


மெரீனாவில் ஒரு தென்குமரி

சென்னை துறைமுகத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு மெரினா வழியாக வளசரவாக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன். மத்தியான வெயில் சுட்டெரித்தது. சிக்னலில் நிற்கும்போது ஒரு நிமிடம் காலைக் கீழே வைத்தால் கூட நெருப்பில் கால் வைத்தது போல தகித்தது. என்ன வெயில்.. என்ன வெயில்.. மழை மட்டுமா அழகு. சுடும் வெயில் கூட ஒரு அழகு என்று எப்படிச் சொல்ல முடிந்தது அந்தக் கவிஞனால். ஆனால் இயற்கையின் அத்தனை அழகையும் இயல்பையும் ரசித்துத்தான் ஆக வேண்டும்.  
அடிக்கின்ற கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாகக் குடித்தால் நன்றாக இருக்கும். இடதுபுறத்தில் ஜூஸ் கடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன். மனசுக்குள் 'என்றென்றும் புன்னகை... ஒளிவிழா புன்னகை' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மெரினா சாலையில் வண்டி ஓட்டினால் அலைபாயும் மனசுக்குள் இந்தப் பாடல் வந்து ஒட்டிக் கொள்ளும். இப்போது சென்னையின் தூசு கண்களை உறுத்தாமல் இருக்க ஸ்டைலா கண்ணாடி வேறு வாங்கிவிட்டதால் பெண் மாதவனாகவே நினைப்பு என் மனசுக்குள்.
மாதவன் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த ஆர்ச் அருகில் ஆர்ச்சின் நிழலில் ஒரு அம்மா தள்ளுவண்டியில் சர்பத், லெமன் ஜூஸ் வைத்திருந்தார். அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். பூப்போட்ட காட்டன் புடவை. உழைத்து வளர்ந்த திம்மென்ற உடல்வாகு. கருத்த களையான முகம். ஆரஞ்சு நிற கனகாம்பரம் பூ கொண்டையை இன்னும் அழகாகக் காட்டியது. கனகாம்பரம் பூவெல்லாம் இன்னும் வைக்கிறார்களா என்னும் வியப்பு எனக்குள். நான் பல நேரங்களில் இந்த உலகத்தைப் பார்ப்பதேயில்லை போலிருக்கிறது.
இதுவல்லவோ சரியான நேரம் என்று தள்ளுவண்டி முன்பு நிறுத்தினேன். லெமன் சோடா குடித்து ரொம்ப நாள் ஆகிறது என ஒரு லெமன் சோடா சொன்னேன். கண்ணாடித் தம்ளர் தளும்பத் தளும்பக் கொடுத்தார். அந்த வெயிலுக்கு இதமாக தொண்டைக்குள் இறங்கியது. பாதி கிளாஸ் குடித்து முடித்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டேன். அந்த இடைவெளியில் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று ஸ்கூட்டியின் முன்னால் மாட்டியிருந்த பையில் இருந்து காசை எடுத்தேன்.
எம்மா, புடவை ரொம்ப அழகா கட்டி இருக்க. ஆனா இந்தப் புடவையைக் கட்டுறதுக்காகவாது கொஞ்சம் நல்லா சாப்பிட மாட்டியா.. ரொம்ப ஒல்லியா இருக்க. கொஞ்சம் உடம்பு வச்சா தானே பார்க்க இன்னும் லட்சணமா இருக்கும்.
நீண்டநாள் பழகிய வாஞ்சையுடன் வந்த குரலும் வார்த்தைகளும் மனதை நெகிழச் செய்தன. எங்கம்மா, சென்னைக்கு வந்த பிறகு என்ன சாப்பிட்டாலும் உடம்பு மட்டும் ஏறல. வெளி சாப்பாடு சாப்பிட்டால் உடம்புல ஒட்ட மாட்டேங்குது என்றேன். எம்பொண்ணு பாரதியும் இப்படித்தான் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பு இளைச்சு வந்துச்சு. இப்போ வேலைக்குப் போகுது. வீட்டுல சமைச்சு தர்ரேன். இப்போ நல்லா இருக்கா பார்க்க என்றார். நீயும் வா ஒருநாள் சமைச்சு தர்றேன் சாப்பிட்டுப் போ என்ற வார்த்தையில் அப்பழுக்கில்லாத அன்பை உணர்ந்தேன்.
உங்க பொண்ணு பேரு தான் எனக்கும். பாரதி. இங்க தான் காலேஜ்ல வொர்க் பண்றேன் என்றேன். காலேஜ்ல சொல்லித் தரப் புள்ள மாதிரியா இருக்க என்று சொல்லி சிரித்துவிட்டு, நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா இருக்க என்று சொல்லிக் கொண்டே அங்கே சர்பத் கேட்டு வந்த ஒருவருக்கு சர்பத் ரெடி பண்ணிக் கொடுத்தார்.
சர்பத் கிளாஸுக்குள் மிதக்கும் ஐஸ்கட்டி போல நானும் அன்பில் மிதந்து கொண்டிருந்தேன். ஒரு சின்ன புன்னகையும், எளிய உரையாடலும் தான் அன்பின் தொடக்கமாக இருக்கிறது.
லெமன் சோடாவுக்குக் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டால் தான் உடம்புல ஒட்டும். இங்க தான் பக்கத்துல வீடு ஒரு நாள் வா என்றார் உரிமையாக. ஒருநாள் மட்டும் தானா? என்று கிண்டலாகக் கேட்டேன். நீ எம்மாஞ்சோறு சாப்பிட போற. தெனம் கூட வா என்றார் அந்தப் புன்னகை மாறாமல்.  
உங்க பேரு என்னம்மா..
என் பேரு தென்குமரி.
தென்குமரி. ரொம்ப அழகான தமிழ்ப் பெயர். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க என்றதும் அவர் முகமெல்லாம் வெட்கமும் சிரிப்பும்.
அரபிக் கடலோரம் ஒரு தென்குமரி.. சூப்பர்ல என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியைக் கிளம்பினேன்.
வெயில், வெம்மை தணிந்திருந்தது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மாணிக் பாட்சாவும் ப்ரியாவும்

கரண்ட் பில் கட்ட கடைசி தேதி என்று வேகவேகமாகப் போனால் சிஸ்டம் சரியில்லை. ஆன்லைனில் கட்டுங்க என்று சொல்லிவிட்டார்கள். (கம்யூட்டர் சிஸ்டம் தானுங்க சரியில்லையாம்).

சரி வீட்டு வாடகைக் கொடுத்து விடலாம் என்று வீட்டு ஓனருக்குக் கால் பண்ணால் அவர் வெளியூரில் இருக்கேன் நாளை மாலை வந்து கொடுங்க என்று சொல்லிவிட்டார். என்னடா இது சோதனை?

வங்கி வேலையையாவது முடிக்கலாம் என்று நானும் தோழியும் வங்கிக்குக் கிளம்பினோம். ஏடிஎம் கார்டு தொலைஞ்சு போய் ஒன்றரை மாதம் ஆகியும் கல்லூரியில் விடுமுறை கிடைக்காததால் கார்டை பிளாக் செய்ததோடு சரி. பணம் தேவைப்படும்போது செக் புக்கைக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போ செக் புக்கும் காலி ஆகிவிட்டது. வேறு வழியே இல்லை. கிடைத்த இரண்டு நாள் விடுமுறையில் வங்கி வேலையை முடிப்பது என முடிவு செய்தேன். எனது வங்கிக் கிளையில் ஏடிஎம் கார்டுக்காக ஒரு லெட்டர் கொடுத்துவிட்டு செக் புக் ஒன்று வாங்கி வரலாம் என்று போனால் இன்றைக்கு முடியாது நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

திங்கள் கிழமையில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்று திட்டமிட்ட எதுவுமே செய்ய முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா... பாடலைப் பாடிக் கொண்டே மதிய உணவு சாப்பிடக் கிளம்பினோம். சுவையான பீஃப் பிரியாணியும் வறுத்த மீனும் மீன் போண்டாவும் சாப்பிட்டு முடித்த பின் உருப்படியா ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஆரோவில்லுக்குள் ஒரு ரவுண்டு போகலாம். மாலை நேரத் தேநீரை அங்கே குடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பினோம்.

தோழி கேமாரவும் கையுமாகக் கிளம்பினார். ஆரோவில்லில் உள்ள தாமரைக்குளம் அருகில் பைக்கைப் பார்க் செய்து விட்டு பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் டீ இருக்கா அண்ணா என்று கேட்டால் ஒரு பத்து நிமிடம் ஆகும் என்றார். இது சரிப்பட்டு வராது என்று, பத்தடி தூரத்தில் ஒரு பாட்டி மலர்ச்செடி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் இளநீர் இருந்தது. இளநீர் குடிக்கலாம் என்று நல்ல வழுக்கையாக இரண்டு இளநீர் சொன்னோம். சீவிக் கொடுத்த இளநீரை வாங்கிக் கொண்டு குளக்கரையின் மீதமர்ந்து குடித்தோம்.சுவையான இளநீர் மாலை வெயிலுக்கு இதமாக இருந்தது.

இளநீர்க் குடித்து முடித்ததும் எங்கள் அருகில் நீண்டு வளர்ந்த காதுகளும் மை பூசியது போல கறுத்த விழிகளும் கொண்ட இரண்டு நாய்க்குட்டிகள் வந்தார்கள். அவர்களோடு இரண்டு நிமிடம் தான் பேசி இருப்போம். அதன்பின் இரண்டு பேரும் எங்களை விட்டுப் போகவேயில்லை.

தோழி, கேமராவை வெளியில் எடுத்து, குளத்தருகில் போய் நீரில் அலையும் புற்களின் நிழலைப் படமெடுத்தார். தாமரை இலைகளை, தாமரை மலரை, நீர் அருந்த வந்த பறவையைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பின் தொடர்ந்து வந்த நாயாரில் ஒருவர், தோழி படமெடுப்பதை உடனிருந்து மேற்பார்வையிட்டார். இன்னொருத்தர் என்னருகில் அமர்ந்து கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கழுத்தையும் காது மடலையும் தடவிக் கொடுக்க, காலருகில் சொக்கிப் படுத்து விட்டார்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. செவ்வானத்தின் பேரெழில் குளத்து நீரில் படரத் தொடங்கியபோது கிளம்பலாம் என்று மேலேறி வந்தால் இரண்டு நாயாரும் உடன் வந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் சூடா இரண்டு டீ சொன்னோம்.

இரண்டு நாயாரும் பக்கத்தில் வந்து விளையாடத் தொடங்கிவிட்டன. கடையில் இருந்து இரண்டு மில்க் பிக்கிஸ் வாங்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்து, கையை உயர்த்திப் பிடித்தால் எக்கி எக்கி வாயில் கவ்விக் கொண்டன. அது விளையாட்டைப் போலவே இருந்தது எங்களுக்கு.

இரண்டு நாயாரும் ஒரே மாதியான வெள்ளை நிறம். வெள்ளை நிறத்தில் அங்கங்கே பிஸ்கட் நிறம் ஒழுங்கற்ற வட்ட வடிவில் இருந்தது. அதில் ஒருவர் ஆண். ஒருவர் பெண். ஆண் நாயார் கொஞ்சம் உடல் வளர்த்தியாகவும், பெண் நாயார் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவாகவும் இருந்தது. தேநீர்க் கடை அம்மாவிடம் இவங்களை யாரும் வளர்க்கறாங்களா என்ன பேர் என்று கேட்டேன். யாரும் வளர்க்கல மா. இங்க தான் சுத்திட்டு இருக்கும் என்றார்.

கிளம்புவதற்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்று யோசித்தோம். ஹேய் உனக்கு என்ன டா பேர் வைக்கலாம். உன் பேர் என்ன டா என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒரு ஆட்டோ கடந்து போனது. இவனுக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைப்போமா.. கொஞ்சம் ஸ்டைலா இருக்கானே என்றேன். உடனே தோழியும் ஒப்புக் கொண்டார். டேய் மாணிக் பாட்சா. இந்தப் பேர் சொல்லிக் கூப்பிட்டால் வரனும். சரியா? என்றோம். எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக் பாட்சா. வந்து கையை நக்கி அன்பைச் சொன்னார்.

இவருக்கு மாணிக் பாட்சா என்று பெயர் வைத்தாகிவிட்டது. அவரது காதலி பெயர் என்ன? யோசித்துப் பார்த்தால் மாணிக் பாட்சாவின் காதலி பெயர் நினைவுக்கு வரவில்லை. ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலு இந்த ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான் என்ற பாட்டு மட்டும் தான் நினைவுக்கு வந்தது. பாட்சாவின் வாழ்க்கையில் காதலி கமர்சியல் காரணங்களுக்காகத்தானே உருகி உருகிக் காதல் செய்பவளாக வருகிறாள். அல்லது அப்படியாக உருவாக்கப்படுகிறாள். அவளுக்குப் பெயரா முக்கியம். இந்த யோசனைகளூடே இருந்தபோது ஐ திங்க் பிரியா.. கேரக்டர் நேம் என்றார் தோழி. சரி இவளுக்கு ப்ரியா என்றே பெயர் வைப்போம் என்று முடிவு செய்தோம். மாணிக் பாட்சாவுக்கும் ப்ரியாவுக்கும் இந்தப் பெயரில் உடன்பாடு இருக்கும் என்றே நம்புகிறோம்.

காதலர்களுக்கு விடை கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

மாலைப்பொழுதுக்குள் இருந்த இரவு கண்விழிக்கத் தொடங்கியது.

திங்கள், 9 ஏப்ரல், 2018

கல்லூரி வாழ்வெனும் பெருங்கனா

கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்குப் பிரியா விடையளிக்கும் விழா இன்று.

கல்லூரி எங்கும் வானவில் போல வண்ண வண்ண உடைகளில் மாணவிகள். ஒப்பனை செய்து நடந்து வரும் மலர்க் கூட்டங்கள் போல அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துறையிலும் வண்ண மின்விளக்குகள் ஒளிர பாட்டும் சிரிப்பும் ஆட்டமும் என கொண்டாட்டத்தின் சாயல். கேம்பஸ் முழுக்க குரூஃபிக்கள். செல்ஃபிக்கள். அழகழகாய் படம் பிடித்துக் கொண்டார்கள்.

கல்லூரியில் மாணவிகளைப் பார்த்தவுடன் நான் படித்த பாரதிதாசன் கல்லூரியின் நினைவில் கரைந்து போனேன். எனது கல்லுரி வளாகத்தில், நான் படித்த வகுப்பறையிலும், அதிக நேரம் செலவிட்ட கல்லூரி நூலகத்திலும் மனம் சென்று அமர்ந்து கொண்டது.

கல்லூரி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படியான கலாட்டா நினைவுகள் எனக்கு எதுவும் இல்லை. வகுப்பறை, வகுப்பறை விட்டால் நூலகம், கல்லூரி முடிந்தவுடன் வீடு. இவ்வளவு தான் மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையும் கடந்து போனது. படிக்கனும். படிக்கனும். படிக்கனும். இதைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தக் கூடாது என எனக்கு நானே தூக்கிச் சுமந்த சிலுவைக்காலம்.

பாரதி மகளிர்க் கல்லூரியில் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களது குறும்புகளைப் பார்க்கிறபோது கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்கள், குறும்புகள் இதையெல்லாம் தவற விட்டதற்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

என் வகுப்பில் உள்ள எல்லாருமே என்னிடம் நன்றாகப் பேசுவார்கள் என்றாலும் அது படிப்பு சம்பந்தமானதாக மட்டும் தான் இருக்கும். முதல் பெஞ்ச் என்பதால் அரட்டைக் கச்சேரிகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் கடைசி பெஞ்ச்காரிகள். அவ படிப்ஸ் பா. அவளை வச்சிக்கிட்டு பேச முடியாது என்று நக்கலடிப்பார்கள். நானும் நகர்ந்து விடுவேன்.

ஆனாலும் முதல் பெஞ்சில் என்னோடு அமரும் ஷீலா, லலிதா, ரமணி, ஜெயபாரதி, தனலட்சுமி - இவர்களோடு மூன்றாம் ஆண்டு படிக்கும் போது கொஞ்சம் சினேகம் அதிகமானது. கேண்டீன் போய் கட்லட் சாப்பிடும் அளவுக்கான சினேகம் மட்டுமே. மற்றபடி எங்கள் உரையாடல்கள் பாடம் சம்மந்தமானதாக மட்டும் தான் இருக்கும்.

கல்லூரியின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக மனசுக்குள் பிரியப் போகும் துயரம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஏற்கனவே ஷீலா வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ரமணியும் அந்த லிஸ்ட்டில் இருந்தாள். லலிதாவுக்கும் அதே நெருக்கடி. தனலட்சுமி பி எட் படிப்பது என முடிவு செய்திருந்தாள். எனக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்பதில் எந்த முன்முடிவும் இல்லை. பி.ஏ. படிக்கும்வரை என் வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை.

எதிர்பார்த்தது போல farewell விழா நாள் நெருங்கியது. எப்போதும் போலவே கல்லூரிக்கு வந்தோம். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக வகுப்பறையில் அமர்ந்திருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு செமினார் ஹாலில் விழா. ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திப் பேசினார்கள். மூன்றாம் ஆண்டு மாணவிகள் பற்றி ஜூனியர்ஸ் பேசினாங்க. கடைசியாக பேச விருப்பம் உள்ள மூன்றாம் ஆண்டு மாணவிகள் பேசலாம் என்ற போது யாரும் முன்வரவில்லை. கடைசி பெஞ்ச்காரிகள் கண்கள் குளமாகி இருந்தன. நான் முதலில் போய் பேசினேன். பிறகு இன்னும் இரண்டு மூன்று பேர் பேசினார்கள். இனிப்பு, மிக்சர், தேநீர் இவற்றுடன் விழா நிறைவு பெற்றது.

இப்போது இருப்பது போல் செல்போன்கள் இல்லை. அதனால் நோ செல்ஃபி. நோ குரூஃபி. கட்டி அணைத்து விடை பெற்றோம். எல்லாரும் என்னிடம் சொன்ன வார்த்தை " பாரதி, உன் பேரை எல்லாரும் சொல்ற மாதிரி பெரிய ஆளா வரனும். அப்போ நாங்க கூட இருக்கமோ இல்லையோ தெரியாது. எங்க ஞாபகத்துல நீ இருப்ப" என்று. அந்த வார்த்தைகளை இப்போது நினைத்து நெகிழ்ந்து போகிறேன்.

அதன்பிறகு கடைசியாக, வகுப்பறையில் எங்க பெஞ்சில் போய் அமர்ந்து ஆசை தீர அழுதோம். இதுதான் கடைசி. இதுதான் கடைசி என்பதைத் தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை.

அந்த நிமிடம் சட்டென்று முடிவெடுத்து நாம ஏன் இன்னைக்கு ஒருநாள் பீச் போகக் கூடாது என்று ஷீலா கேட்டாள். மூன்று வருடத்தில் எங்குமே போனதில்லை. இன்றைக்குப் போய் தான் பார்ப்போம். பிறகு வீட்டில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம்.

மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் முதல் முறையாக பீச் போனோம். ஐஸ் க்ரீம் சாப்பிட்டோம். சுண்டல் வாங்கினோம். கொஞ்சம் வாயில் போட்டது போக மீதி சுண்டலை ஒவ்வொன்றாக யார் தூரமாக எறிகிறார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு கடலை நோக்கி எறிந்தோம். பாறைகளில் மோதிச் சிதறும் அலைகளினூடாகத் தெரிந்த வானவில்லை ரசித்தோம்.

அன்றைக்கு மார்ச் 22. நாங்க ஆறு பேரும் ஒரு முடிவெடுத்தோம். நாம் அடிக்கடி மீட் பண்ணிக்க முடியல என்றால் கூட ஒவ்வொரு வருடமும்  யார் எங்க இருந்தாலும் மார்ச் 22 அன்று நாம இதே பீச்ல மீட் பண்ணலாம். யாரும் மிஸ் பண்ணக் கூடாது.

கொஞ்சம் சினிமாத்தனமாக இப்போ தோனுது. ஆனால் அப்போ அது மிகப்பெரிய கனவு. திருமணம் ஆகிவிட்டால் பெண்கள் இப்படியான கனவுகளைச் சமையலறைக்குள் பூட்டி வைத்து விட வேண்டியதுதான் என்பது அப்போது புரியவில்லை. கணவன், குடும்பம், குழந்தை எனச் சுருங்கிப் போய்விடுவார்கள் என்பது புரியவில்லை.

தேர்வு முடிந்தபிறகு மதிப்பெண் சான்றிதழ் & மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காகச்  சந்தித்தோம் மீண்டும். அதன்பின் ஷீலாவின் திருமணத்தில் எல்லாரையும் பார்த்தேன். அந்தத் திருமண மண்டபத்தில் பார்த்து பேசி சிரித்து கைகுலுக்கிப் பிரிந்து சென்றதோடு சரி. ஒவ்வொருத்தரும் எங்கோ ஒரு ஊரில் திருமணமாகிப் போய் விட்டார்கள். ஷீலா மட்டும் பாண்டிச்சேரியில் இருப்பதால் அவளை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. அவரவர் குடும்பம். அவரவர் குழந்தைகள். அவரவர் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

நான் மட்டும் தனியளாய் அவர்களின் நினைவுகளோடு.

இப்போது என் வாழ்க்கையை நான் என் விருப்பப்படி வாழ்கிறேன். அதனால் ஒவ்வொரு மார்ச் 22 அன்றும் மறக்காமல் பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போய் அந்தப் பாறைகளின்மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன். அந்த நாளின் பசுமையான நினைவுகள் அலைகளாக உருத்திரண்டு வருகின்றன என்னை நோக்கி.