செவ்வாய், 25 மார்ச், 2014

கவிஞர் பூரணி

ஓவியர் சனாதன் பற்றிய தகவல்களை கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கண்ணில் பட்டது சொல்வனம் இணைய இதழில் (30.11.2013) ”ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்” என்னும் தலைப்பில் என் மதிப்பிற்குரிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள் கவிஞர் கிருஷாங்கினியின் தாயும் மூத்த பெண்கவிஞருமான பூரணி அம்மாள் குறித்து எழுதியிருந்த கட்டுரை. அந்தக் கட்டுரையின் முதல் வரியே எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 17.11.2013 அன்று பூரணி அம்மாள் மறைந்துவிட்டார். மிக மிகத் தாமதமாக என்னை வந்து சேர்ந்த செய்தி இது.
2008இல் ஒரு கோடை நாளின் மதிய வேளையில் கவிஞர் பூரணி அம்மாளையும் கவிஞர் கிருஷாங்கினியையும் என் அம்மாவும் தோழியுமான இராஜேஸ்வரியுடன் சென்று சந்தித்தேன்.இராஜேஸ்வரியின் முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக நேர்காணல் வேண்டியே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதுவரை பூரணி அம்மாளைப் பற்றி எனக்கு எந்தச் செய்தியும் தெரியாது. பூரணி கவிதைகள் என்ற நூல் வாசித்ததோடு சரி.
அன்று நாங்கள் வீட்டில் கிருஷாங்கினியிடம் நேர்காணல் எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கவிஞர் பூரணியும் மிகுந்த உற்சாகத்தோடு நேர்காணலுக்குத் தயாரானார். அவரது சுறுசுறுப்பும் ஆர்வமும் என்னை வியக்க வைத்தது. அத்தனை முதிர்ந்த வயதிலும் அவர் ஒரு சிறு பெண்ணைப் போல நடந்துகொண்டார். அவர் சமீபத்தில் எழுதி இருந்த, பதிப்பிக்கக் காத்திருந்த கவிதைகளை எடுத்துவரச் சொல்லி, அதை வாய்விட்டு படிக்கச் சொன்னார். அவரது கவிதைகளில் சமகால அரசியல் விமர்சனம் மிகக் காட்டமாக முன்வைக்கப்பட்டிருந்தது. அதேபோல அவர் பேசிய பேச்சுகளில் இருந்து இந்த வயதிலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கின்ற ஓர் இலக்கிய வாசகி அவர் என்பதை உணர முடிந்தது. அவரிடம் நேர்காணல் எடுக்க முடியாது என்பதால் கேள்விகளை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றோம். இரண்டே நாளில் அவருடைய நேர்காணலை தபாலில் அனுப்பி இருந்தார். நான் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான குணம். என் வாழ்நாளில் நான் பார்த்து அதிசயித்த மனுஷிகளில் பூரணி அம்மாள் முதன்மையானவர்.
அவர் பிறந்தது 17.10.1913. மறைந்தது 17.11.2013. ஒரு நூற்றாண்டை முழுமையாக வாழ்ந்து முடித்த மாமனுஷி.
அவரது மறைவு ஓர் பூரணத்துவமான வாழ்வின் மிச்சமாகத்தான் நினைக்கிறேன். அவரது ஆன்மாவுக்கு என் அன்பான அஞ்சலி...
நூறு நூறாய் பெருகும் என் அன்பு
ஒவ்வொரு புறக்கணிப்பிலும்.
நீ
புறக்கணித்துக் கொண்டேயிரு.
முடிவிலியாய்
உன்னைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்
என் அன்பு.