புதன், 11 ஜனவரி, 2017

தீபாவளி டிரெஸ் - மனுஷி

தீபாவளி டிரெஸ் - மனுஷி

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதை டம், டப், டமடமடமடம என வெடிக்கும் வெடிச்சத்தங்கள் சொல்லின. வெடிச்சத்தங்களுக்கு முன்பாகவே செய்தித்தாளின் முதல் மற்றும் கடைசிப் பக்கங்களில் தீபாவளி அதிரடி சலுகை விற்பனை விளம்பரங்கள் கலர்ஃபுல்லாக அறிவித்தன. டீவி, வாஷிங் மெஷின், ஏசி, ஃப்ரிட்ஜ், அயர்ன் பாக்ஸ், மின் விசிறி, லேப் டாப், கிச்சன் ஐட்டங்கள், இண்டக்‌ஷன் ஸ்டவ், மொபைல் என எல்லா சாதனங்களும் அதிரடி சலுகை விலையில். இவை இயங்குவதற்கு மின்சாரம் மட்டும் இருக்காது. அதற்கெல்லாம் பண்டிகைக்காலச் சலுகைகள் கிடையாது போலும். பட்டுப் புடவைகள் தொடங்கி நவநாகரிக ஆடை வகைகள் அணிந்த அழகழகான வெள்ளைத் தோல் பெண்கள் ஆண்கள் குழந்தைகள். ஆடை வகைகளைப் பார்க்கும்போது மட்டும் சின்ன வயசில் அம்மா வாங்கிக் கொடுக்கும் பட்டுப் பாவாடைச் சட்டையை நினைத்து ஏங்குவாள் காயத்ரி. இப்போது பீரோ நிறைய விதவிதமான உடைகள் இருந்தாலும் சின்ன வயதில் அம்மா வாங்கிப் போட்டுவிட்டு அழகு பார்த்த பட்டுப் பாவாடைச் சட்டைகளுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது.

அம்மா இறந்த பிறகு பண்டிகைக் கொண்டாட்டங்கள் என்பதே இல்லாமல் போய்விட்டது அவளுக்கு. பிறந்தநாளும்தான். அவளுக்கு எல்லா நாளும் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார நாட்களே. ஆனாலும் ஒவ்வொரு பண்டிகைக் காலம் நெருங்கும்போதும் ஒருவித ஏக்கம் அவளைத் தொற்றிக் கொள்ளும். நண்பர்களும், தோழிகளும் 'எங்கள் வீட்டுக்கு வாயேன்' என்று உரிமையோடு அழைக்கும்போதெல்லாம் 'இல்லப்பா, அக்கா வீட்டுக்குப் போறேன்' என்று சொல்லிவிட்டு அவளது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாள். 
*****
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதே பள்ளிக் கூட வகுப்பில் வீட்டில் செய்யும் பலகாரங்கள்,  தீபாவளிக்கு எடுத்திருக்கும் புது டிரெஸ் இதுதான் பேச்சாக இருக்கும். ஆசிரியை வகுப்புக்கு வந்தவுடன் மிஸ் தீபாவளிக்கு டிரெஸ் எடுத்திட்டிங்களா என்பதைக் கேட்டுவிட்டுத்தான் வகுப்பில் பாடம் எடுக்கவே விடுவார்கள். தீபாவளி முறுக்கு அதிசரம் சுட்டிருந்தால் அதைப் புத்தகப் பைக்குள் வைத்துக் கொண்டு வந்து பகிர்ந்து சாப்பிடுவார்கள். அந்த ஒருவாரம் மட்டும் பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடைகள் காற்று வாங்கும்.

தீபாவளி முறுக்கு அதிரசம் மட்டுமல்ல. அதிரசப் பாவும் கூட அவர்களுக்குத் தீனியாக மாறிவிடும்.

பச்சரிசியை தண்ணீரில் அலசி, வடிகட்டி, ஒரு காட்டன் புடவை அல்லது வேட்டியில் அரிசியை உலர வைப்பார்கள். பிறகு அதை உரலில் இட்டு இடித்து மாவு சலிக்கும் சல்லடையால் சலித்து எடுத்து, உலர்த்தி, அடுப்பில் பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது பொடி பண்ண வெல்லத்தைப் போட்டுக் கிண்டுவார்கள். பிறகு ஒவ்வொரு பிடியாக இடித்து, சலித்து வைத்திருக்கும் அரிசி மாவை  அந்த வெல்லப் பாகுக்குள் போடுவார்கள். மாவு போடும் போது ஒருவர் அகப்பவை அல்லது கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு முழுவதும் போட்டு முடித்தபின், சரியான பதத்தில் இறக்கி, ஏலக்காயைத் தட்டிப் போட்டு, மீண்டும் ஒரு கிண்டு கிண்டிவிட்டு அந்தப் பாத்திரத்தை மூடிவிடுவார்கள். சூடு ஆறியதும் ஒரு மெல்லிய துண்டால் வேடு கட்டி அடுக்குப்பானையின் மீது வைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் வரை இருக்கும். பிறகு தான் அதிரசம் சுடுவார்கள்.

அதிரசப் பாவு கிண்டிய வாசனை வீடு முழுக்க வீசும். அம்மா எங்கே அதிரசப் பானையை வைக்கிறார் என்பதைப் பார்த்து வைத்துக் கொள்வாள் காயத்ரி. அம்மா கடைக்குப் போகும்போது அல்லது குளிக்க, துணி துவைக்க, தண்ணீர் பிடிக்கப் போவதைக் கவனித்து விட்டு அதிரசப் பாவு உள்ள பாத்திரத்தின் கழுத்தின் மீதிருக்கும் வேடு கட்டிய துணியை லேசாகத் தூக்கிக் கையை உள்ளே விடுவாள். அந்தச் சின்னக் கைக்கு எவ்வளவு பாவு வருமோ அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பாத்திரத்தை லேசாக ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு துணியை பழையபடி இழுத்து விடுவாள். சாமிக்குப் படைப்பதற்கு முன்பு எச்சில் பண்ணால் சாமி கண்ணைக் குத்திடும் என அம்மா சொல்லி இருந்தாள். காயத்ரிக்குச் சாமியை விடவும் அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்கிற பயம் தான் அதிகம். கோபம் வந்தால் அடிக்கிற அம்மாவாக இருந்தால் பரவாயில்லை. ஏதாவது ஏடாகூடம் செய்துவிட்டால் அடிப்பதற்குப் பதிலாக அன்று முழுக்கச் சாப்பாடு ஊட்டிவிட மாட்டார். தட்டில் போட்டு வைத்தால் அவளாகத்தான் சாப்பிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் அன்றைக்குத் தனியாகத் தூங்க வேண்டியிருக்கும். அம்மாவின் கதகதப்பு இல்லாமல், புடவை வாசம் இல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராது. மேலும் அம்மாவின் கைகள் தட்டிக் கொடுக்க வேண்டும். அதனாலேயே அவளது அம்மா ஊருக்கு எங்காவது போனால் இரவு தங்காமல் வீடு வந்து சேர்வார். வந்துவிடவேண்டும்.

அதிரசப் பானையைக் குலுக்கிச் சமநிலை செய்துவிட்டால் எடுத்த பாவு தெரியாது என்பது காயத்ரியின் எண்ணம். ஆனால், பாவில் யாரும் கை வைத்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேடு கட்டுவதற்கு முன்பு சில முழு முந்திரிப் பருப்பினை மேலே போட்டு வைப்பார் அவள் அம்மா. அந்தச் சூட்சுமம் காயத்ரிக்குத் தெரியாது. அதிரசம் சுடுகிற அன்று எப்படியும் மாட்டிக் கொள்வாள். அதிரசப் பாவுடன் கைக்குக் கிடைத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துச் சாப்பிட்டது தெரிந்தும் தெரியாதது போல அதிரசம் சுடுவார் அவள் அம்மா.

முதல் அதிரசத்தைத் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்ததும் சின்ன சில்வர் தட்டில் அதை எடுத்து வைத்து சாமி அறையில் சாமிப் படத்துக்கு முன்பு வைக்கச் சொல்வார். அதன் பிறகு சுட்டு எடுக்கிற அதிரசங்கள் சாப்பிடுவதற்குத் தடை ஏதும் இல்லை.

மாலையில் இரவு உணவு முடித்தபிறகு எல்லாவற்றையும் ஏறக் கட்டிய பிறகு தான் அதிரசம் சுடும் படலம் தொடங்கும். சாப்பிட்டு முடித்த களைப்பில் கண்ணில் தூக்கம் சொக்கினாலும் அதிரச வாசனை அவளைத் தூங்க விடாது. அம்மாவின் அருகிலேயே அமர்ந்திருப்பாள். இரண்டு அதிரசம் தின்றாலே அதிகம். சாப்பிட்டுக் கொண்டே தூங்கியும் போவாள். அவளைக் கொண்டு போய் படுக்கையில் கிடத்திவிட்டு வந்து அதிரசம் சுடுவதைத் தொடர்ந்து செய்வார்.

காலையில் எழுந்தால் எல்லா வேலையும் முடிந்து இரவு முழுக்க அதிரசம் சுட்ட சுவடே தெரியாதபடி அடுப்பங்கரை சுத்தம் செய்யப்பட்டு பாத்திரங்கள் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். இரவில் சாப்பிட்ட அதிரசத்தின் மிச்ச சொச்சங்கள் பற்களில் அப்பியிருக்கும். வாய்க் கொப்பளித்துவிட்டு முதல் வேலையாக அதிரசம் அடுக்கிப் பத்திரப்படுத்தப்பட்ட இடத்தைத் தேடுவாள். அடுக்குப் பானையின் ஏதாவதொரு பானையில் தான் அதிரசம் இருக்கும்.

தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது புத்தாடைகள் தைத்து வாங்கப்பட்டிருக்கும். காயத்ரிக்கு மயில் கலரில் அகலமான சரிகை வைத்த பட்டுப்பாவாடை தைத்து வாங்கி வைத்திருந்தார் அவள் அம்மா. ஒவ்வொரு தீபாவளியின் போதும் அவளுக்குப் புதிதாகக் கொலுசை மாற்றித் தருவாள். பெரும்பாலும் அப்போது வந்த புது டிசைன் கொலுசு அவள் கால்களை அலங்கரிக்கும்.

தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரத் திருவிழா மற்றும் அவளது பிறந்தநாள் என வருசத்துக்கு நான்கு முறை அவளுக்குப் புதுத் துணி எடுப்பார்கள்.

பள்ளியில் இருந்து வந்ததும் முதல் வேலையாகப் பட்டுப் பாவடையைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள். கொலுசைக் கால்களின் மீது வைத்துப் பார்த்து விட்டு அதே இடத்தில் வைத்து விடுவாள். அவளது தீபாவளியில் இருந்த ஒரேயொரு குறை பட்டாசு. அவளது தோழிகள் எல்லோர் வீட்டிலும்  பட்டாசு வாங்கி வந்துவிட்டதைக் குதூகலத்தோடு செல்லும்போது முகம் சுருங்கும் அவளுக்கு.

தெருவில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதே 
"ம்மா, பட்டாசு வாங்கிட்டியா?"
என்ற குரலோடு தான் நுழைவாள்.

அடுப்பங்கரையில் சமைத்தபடியே "ஊருல இருந்து அண்ணன் வரும்போது வாங்கிட்டு வருவான்னு சொன்னேன்ல. அண்ணன் கூட சேர்ந்து வெடிக்கலாம்"

அம்மாவின் சமாதானம் அவளுக்கு ஏற்புடையதாக இருக்காது. சீக்கிரமாக வராத அண்ணன் மேல் கோபம் வரும். கோபம் அழுகையாக மாறும். அவளது அழுகையைப் போக்க பத்து ரூபாய் கொடுத்து கம்பி மத்தாப்பு, பொட்டுப் பட்டாசு வாங்கிக் கொள்ளச் சொல்வார். ஏற்கனவே வீட்டில் துப்பாக்கி இருக்கும். ஐந்து ரூபாய்க்குச் சுருள் பட்டாசு வாங்கிக் கொண்டு மீதியை உண்டியலில் போட்டு வைப்பாள். குட்டி டப்பிக்குள் இருக்கும் சுருள் கேப்பை எடுத்துத் துப்பாக்கிக்குள் பொருத்தி டுமீல் டுமீல் என்று சுடுவாள். பட் பட் என்று வெடித்துச் சின்னதாகப் புகை வரும். அப்போது தான் அவளுக்குத் தீபாவளி தொடங்கிவிட்டதாக  நினைப்பாள்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல் அடுப்பைப் பற்ற வைத்து முறுக்கு சுட உட்காருவார் அவள் அம்மா. அவளும் அம்மாவுக்குத் துணையாகக் கூடவே இருப்பாள். கொதிக்கும் எண்ணெயில் பிழிந்துவிடப்பட்ட முதல் முறுக்கு வழக்கம் போல சாமிக்கு. அடுத்தடுத்த முறுக்குகள் சூடு ஆற ஆற எடுத்துத் தின்று கொண்டேயிருப்பாள். அவள் தின்ற மிச்சம் தான் மறுநாள் படைக்கப் போகும்.

"நான் தான் அடுப்புல வேகுறேன். உனக்கென்ன போய் படு" என்பார். அவள் அண்ணன் ஊரிலிருந்து கொண்டு வரப் போகும் பட்டாசு தான் அவள் நினைவில் நீக்கமற நிறைந்திருக்கும். நள்ளிரவில் அல்லது அதிகாலைக்கு முந்திய மணித்துளிகளில் வந்து சேரப் போகும் பட்டாசு அவளைத் தூங்க விடாது. அவளது மனசு தூங்க வேண்டாம் என்று வம்பு செய்தாலும் அவளது கண்கள் தூங்கிவிடும்.

ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார் அவளது அம்மா. கட்டிலில் அண்ணன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பான். முகத்தைக் கழுவிக் கொண்டு முதல் வேலையாக அண்ணன் கொண்டு வந்த பையைத் தேடுவாள். மாமா கொடுத்தனுப்பிய பட்டாசு பாக்சைப் பார்த்ததும் துள்ளிக் குதிக்கும் அவள் மனசு. பட்டாசுடன் திண்ணைக்கு வந்தவளுடைய மனசு ஊமைப்பட்டாசாய் ஆகிப் போகும். வெளியில் மழை கொட்டிக் கொண்டிருக்கும்.

"மழை நின்னதும் வெடிக்கலாம்" என்றபடி பட்டாசு பாக்சை வாங்கி வைத்து விட்டு சடையை அவிழ்த்து நல்லெண்ணையைத் தேய்த்து விடுவார் அவள் அம்மா. எண்ணெய் முகம் கழுத்தெல்லாம் வழிவது ஒரேமாதிரியாக இருக்கும். அதைவிட சீயக்காய் பட்டு கண்கள் எரியுமே என்பதே அவள் கவலை.

"ஷேம்ப்பூ இருக்காம்மா"

"ஷேம்ப்பூ போட்டா முடி கொட்டும்"

சுடு தண்ணீரில் சீயக்காய்த் தேய்த்துக் குளிக்க வைத்து, தலை துவட்டி புது டிரெஸ்ஸை எடுத்துத் தருவார் அவள் அம்மா. புது ட்ரெஸ் போட்டு முடித்ததும் தண்ணீர் சொட்டும் முடியை ஒன்றாக்கி அடி முடியில் முடிச்சிடுவார். அடுத்து சாமி அறையில் வாழை இலையில் படையல் இட்டு படைத்து முடித்த கையுடன் ஒரு இலையில் இருந்து கறிக்குழம்புடன் ஒரு இட்லியை அவள் சாப்பிட வேண்டும். படையல் சோறு எப்போதும் அவளுக்குத் தான் அந்த வீட்டில்.

அடுத்து, வீட்டில் தயாராக இருக்கும் அதிரசம், முறுக்கு, சொய்யாம் உருண்டை, வடை,  பஜ்ஜி, இட்லி இவற்றில் இரண்டு இரண்டை ஒரு தட்டில் வைத்துத் தருவார். அந்தத் தெருவில் உள்ள வீடுகளில் போய் கொடுத்திவிட்டு வர வேண்டும். செய்து வைத்திருக்கும் உணவு வகைகளைப் பார்த்தால் இரவு முழுக்க அம்மா தூங்கவே இல்லை என்றே தோன்றும். ஆனால், உறங்கவேயில்லை என்ற களைப்பும் சோர்வும் அவர் முகத்திலும் கண்களிலும் இருக்காது. புதிதாக எடுத்த மொடமொடவென்று இருக்கும் வாயில் புடவையில் பேரழகாகத் தெரிவார். அம்மா, பட்டுப்புடவை கட்டி அவள் பார்த்ததேயில்லை.

மொத்தம் பதினைந்து வீடுகள். ஒரு கையில் குடை. ஒரு கையில் தட்டு. பாவாடையை இழுத்துச் செருகியபடி போவாள். அந்தந்த வீட்டில் இருக்கும் வயசுக்கு வந்த அக்காக்கள் அடுப்பங்கரையில் இருந்தபடியே "ஏய் உன் டிரெஸ் சூப்பரா இருக்கு. கொலுசு புதுசா.. ம்ம்" என்று வாய்விட்டுச் சொல்வதைக் கேட்டால் தான் தீபாவளி தீபாவளியாக இருக்கும்.

அவள் கொண்டு போன அதே தட்டில் அவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களில் இரண்டு இரண்டு வைத்துக் கொடுத்து விடுவார்கள். சிலர் மட்டும் "இன்னும் படைக்கலமா  உன் ஃப்ரண்டு கிட்ட கொடுத்து விடறேன்" என்பார்கள்.  புது டிரெஸ் புது கொலுசு பற்றி மறக்காமல் கருத்து சொல்லிவிடுவார்கள். மனசுக்கு நிறைவான தீபாவளியாக மாறிவிடும் அவளுக்கு.

பண்டமாற்று முடிந்தவுடன் பட்டாசு நினைவுக்கு வரும். மழை விட்டிருக்காது. வெடி வெடிக்கத்தானே தெருவுக்குள் இறங்கனும். சங்கு சக்கரம் கம்பி மத்தாப்பு பாம்பு மாத்திரை இவற்றுக்குத் தெரு தேவையில்லையே.

வீட்டுத் திண்ணையில் அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு சங்கு சக்கரம் விடுவாள். கம்பி மத்தாப்பு பொறி பறக்கும். கால் வாசி கூட கொளுத்தியிருக்க மாட்டாள்.

"இதெல்லாம் நைட்ல தான் கொளுத்தனும். அறிவு கெட்டவளே"

திட்டிக் கொண்டே மீதியை எடுத்துக் கொண்டு போய்விடுவான் அவள் அண்ணன்.

"நீ லேட்டா வந்தால் எப்படி நைட்ல கொளுத்த முடியும்?

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும்.

அண்ணன் எப்போதாவது பண்டிகை சமயங்களில் மட்டும் வீட்டிற்கு வருவார். பக்கத்து ஊரில் இருக்கும் மாமாவின் மளிகைக் கடையில் அண்ணன் வேலை செய்வதால் அண்ணன் வீட்டில் இருக்கும்போது அவன் சொல்வதே சட்டம். அந்தவொரு விஷயத்தில் மட்டும் ஏன் தான் இவன் வந்தானோ என்று கோபம் வரும் அவளுக்கு. மற்ற நேரங்களில் அண்ணன் எப்போ வருவான் என்று காத்திருப்பவள்தான்.

மழை முழுவதுமாக நின்றபின் கொஞ்ச நேரத்திலேயே சுள்ளென்று வெயில் காயும். தெருவில் ஓடிய தண்ணீர் வற்றி மண் காய ஆரம்பிக்கும். அவள் அண்ணன் லட்சுமி வெடி, யானை வெடி, சரம் எல்லாம் வெடிக்க எடுத்து வருவான். திண்ணையில் வைத்ததும் அவன் வெடிப்பதற்காக வெடியில் நாக்கு நுனியை கிள்ளி கிள்ளி வைப்பாள். அவளது அண்ணன் தெருவில் மண் கூட்டி அதன் மீது வெடியை நிற்க வைத்து நெருப்பு வைப்பான். டம்ம்ம்ம் என பயங்கர சத்தமும் புகையுமாக மாறும் அந்த இடம்.

ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் தெருவில் பையன்கள் வெடி வைப்பார்கள். வெடி வெடித்ததும் கூட்டி வைத்த மணல் சிதறியிருக்கும். சிலர் மாட்டு சாணியில் வெடியைச் செருகி நெருப்பு வைப்பார்கள். வெடித்து முடித்ததும் அந்த இடத்தைச் சுற்றிச் சாணி சிதறி பார்க்கவே சகிக்காது. சிலர் கொட்டாஞ்குச்சிக்குள் வெடியைச் செருகி வெடிப்பார்கள். அப்போதான் சத்தம் காதைப் பிளக்கும். கொஞ்ச நேரத்தில் தெரு முழுக்க பேப்பர்த் துண்டுகளும் பட்டாசு வாசமுமாக நிரம்பியிருக்கும்.

மீண்டும் ஒருமுறை இட்லியும் கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவுடன் பெரிய தூக்கம் ஒன்றைப் போடுவாள். தூங்கி எழுந்ததும் மாலையில் கோயிலுக்குப் போய் வருவாள். பிறகு இரவு முழுக்க மத்தாப்பும் புஸ் வானமும் அவளது தீபாவளியை அழகாக்கும். 
*****
"அக்கா, கதவைத் திறங்க"

பக்கத்து வீட்டு யமுனா குட்டியின் குரல் கேட்டு கதவைத் திறந்தாள்.

கிளிப்பச்சை நிற சின்ட்ரல்லா கவுனும் கழுத்தில் புது தங்கச் செயினுமாக நின்றிருந்தாள் யமுனா கவுனுக்குப் பொருத்தமாக வளையலும் தலையில் கிளிப்பச்சை நிற செயற்கை ரோஜா பொருத்தப்பட்ட ஹேர்பேண்டும் அணிந்திருந்தாள். உதட்டில் லிப்ஸ்டிக் வேறு அவளது குழந்தைமை அழகை மேலும் மெருகூட்டியது.

"அக்கா, வாங்க பட்டாசு வெடிக்கலாம்"

"டிரெஸ் ரொம்ப அழகா இருக்கே யார் வாங்கிக் கொடுத்தது?"

கேட்டதுதான் தாமதம். வெட்கமும் பெருமையும் தாங்க முடியவில்லை அவளுக்கு.

"அம்மா வாங்கிக் கொடுத்தாங்க. இதே மாரி இன்னோர் டிரெஸ் கூட இருக்கு. அது ஈனிங்க்கா போட்டுக்க சொல்லிட்டாங்க"

சொல்லிக் கொண்டே பட்டாம்பூச்சி போல பறந்து போனாள்.

தீபாவளி டிரெஸ்ஸுக்கு மட்டும் அரூபமாக இரண்டு சிறகுகள் இருக்கும் போல.
****
நன்றி : ஃபெமினா (ஜனவரி 2017).