திங்கள், 22 மே, 2023

மியாஸ் - மனுஷி

#மியாஸ் 
வேலூரில் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேருந்தில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் இருந்து வேலூருக்கு பேருந்து இல்லை என்பதால் திருவண்ணாமலை போய் அங்கிருந்து போகலாம் என நண்பர் சொன்னார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியதால் இருக்கை கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு சிறுமியும் அவர் பக்கத்தில் அவளின் அம்மாவும் அமர்ந்திருந்தனர். நான் அவர்களிடம் கேட்டு மூன்றாவதாக அமர்ந்து கொண்டேன். 

ஜிப்மர் தாண்டியதும் பேருந்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. என் சீட் அருகே ஒரு முஸ்லீம் குடும்பம் நின்று கொண்டு பயணித்தனர். என் கால் முட்டியை உரசிக் கொண்டு தலையில் முக்காடிட்ட சிறுமி நின்றிருந்தாள். உட்கார்ந்துக்கிறியா என்று கேட்டு கொஞ்சம் நகர்ந்தேன்.  இடம் போதுமானதாகத்தான் இருந்தது. என் பக்கத்தில் இருந்த அம்மாவும் கொஞ்சம் நகர்ந்து இடம் கொடுத்ததில் நான்கு பேரும் வசதியாகவே அந்த சீட்டில் அமர்ந்து கொண்டோம். 

டிக்கெட் எடுத்து முடித்ததும் ஜன்னல் சீட் இல்லை என்பதால் ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டே வந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியின் அம்மா  பூனைக்குட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். வீட்டில் பூனைக்குட்டி வளர்ப்பதாகவும் அந்தப் பூனைக்குட்டியை எங்கு சென்றாலும் அழைத்துச் சென்று விடுவோம் என்றும் சொன்னார். நாங்க கூட பரவால்ல. இவ ஒரு நிமிடம் கூட பூனைக்குட்டியை விட்டுட்டு இருக்க மாட்டா. சில சமயம் பூனைக்குட்டிக்கு டிக்கெட் போட்டு ஊருக்குக் கூட்டிட்டு போவோம் எனப் பெருமையாகச் சொன்னார். 

காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலைத் தாண்டியும் அந்த உரையாடல் என் காதில் விழுந்தது. ஹெட்போனைக் கழற்றிவிட்டு இப்போ எங்க போறிங்க? பூனைக்குட்டியை யார் பார்த்துப்பாங்க என்று கேட்டேன். அதுவும் பஸ்ல தா வருது என்றார். பஸ்லயா என்றதும் என் அருகில் உட்கார்ந்திருந்த சிறுமி அவளது மடியில் போய்த்தியிருந்த சிறு துண்டை விலக்கி இங்க தான் தூங்கிட்டு இருக்கா என்றதும் அழகான குட்டிப்.பூனை ஒரு சிறு பையினுள் தூங்கிக் கொண்டிருந்தது. பூனைக்குட்டியின் பெயர் மியாஸ் என்று அறிமுகப்படுத்தினாள். நான் தலையைத் தொட்டுத் தடவினேன். வெள்ளையும் கொஞ்சம் சாம்பல் நிறமும் கொண்ட வெல்வெட் மேனி  மியாஸுக்கு. மூன்றுமாத பிஞ்சு. அழகு குட்டி. 
கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள் மியாஸ். நான் பார்க்கட்டுமா என்றதும் என்னிடம் கொடுத்தாள்.  மியாஸ் என் நெஞ்சின் மீது தலை சாய்த்து நிம்மதியாகத் தூங்கியது. 

விடுமுறைக்காக உறவுக்காரர் வீட்டுக்குச் செல்வதாகவும், அதனால் மியாஸைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாது என்பதால் செஞ்சியில் உள்ள தங்கை வீட்டில் மியாஸைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டுச் செல்லவிருப்பதாகவும் திரும்ப வரும்போது அழைத்துச் சென்றுவிடுவோம் என்று சொன்னார் அந்த அம்மா..

மியாஸ் எவ்வளவு சமத்தான, பாசமான பூனைக்குட்டி, வீட்டில் எப்படியெல்லாம் விளையாடும், என்னவெல்லாம் சாப்பிடும், எங்கே தூங்கும் என கண்கள் முழுக்க பெருமை மின்ன சொல்லிக் கொண்டே வந்தார்கள் சிறுமியும் அவளது அம்மாவும். 

செஞ்சிக்கு முன்பு ஓரிடத்தில் டீ குடிக்க நிறுத்தியதும் மியாஸ் கண் விழித்தது. டீ குடிக்கக் கூட இறங்காமல் மியாஸுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டு சுவாரஸ்யத்தில் மியாஸின் கண்கள் குட்டி திராட்சைகள் போல் ஆகிவிட்டன. அதுவரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பூனைக்குட்டியா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு என் மடியில் படுத்துக் கொண்டு விளையாடியது. அந்த அம்மா, சிறுமி, இன்னும் இரண்டு பெண்கள் எல்லாருமே என்ன நம்ம மியாஸ் இவங்க கூட இப்படி ஜாலியா விளையாடுது என்று ஆச்சரியப்பட்டார்கள். 

பேருந்து கிளம்பியதும் மீண்டும் சுவிட் போட்டது போல மியாஸ்  தலைசாய்த்துத் தூங்கத் தொடங்கிவிட்டது. 
செஞ்சியில் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மியாஸின் குடும்பம் என்னிடம் பை சொல்லிவிட்டு மியாஸை வாங்கிக் கொண்டார்கள். 

நெற்றியில் முத்தமிட்டு மியாஸை அனுப்பி வைத்தேன். 

என் வாழ்க்கையில் பூனைக்குட்டியோடு சிறிது தூரம் பயணித்தது இதுவே முதல் முறை. அவ்வளவு அழகாய் இருந்தது அந்தப் பயணம்.