வெள்ளி, 7 ஜூலை, 2017

தமிழரசியல்.காம் நேர்காணல்


” விருது வாங்கினாலே விமர்சனங்களும் வந்துடும் இது புதுசில்ல” – யுவபுரஸ்கார் மனுஷி பாரதி !

June 25, 2017

இப்போது மத்திய அரசு 35 வயதுக்கு உட்பட்டோர் இலக்கியத்திற்கு ஆற்றும் சேவைக்காக வழங்கும் இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது. கவிதை எழுதும் பெண்ணான கவிஞர் மனுஷியும், குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணணும் இவ்விருதை பெற்றிருக்கும் நிலையில், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள மனுஷி பாரதியை பேட்டி காண தமிழரசியல் ஊடகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து பேசினோம்.

யுவபுரஸ்கார் விருது வாங்கியதற்காக தமிழரசியல் ஊடகம் சார்பாக வாழ்த்துக்கள் மனுஷி பாரதி. உங்களை பத்தி ஒரு சிறிய அறிமுகம் கொடுங்களேன்…

எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருநாவலூர். அங்கதான் 10வது வரைக்கும் அரசு பள்ளியில படிச்சேன். அதன் பிறகு வளவனூர்ல +1, +2 படிச்சேன். அதுக்கப்புறம் தமிழ் மொழி மேல இருந்த ஆர்வத்துல பி.ஏ.தமிழ், எம்.ஏ.தமிழ் பாண்டிச்சேரில படிச்சேன். இப்போ பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்துல பி.எச்.டி பண்ணிட்ருக்கேன். இதுபோக மூன்று கவிதைத் தொகுப்புகள் எழுதியிருக்கேன்.

யுவ புரஸ்கார் விருது உங்களுக்கு கிடைக்கும்னு நினைச்சீங்களா? இதை எப்படி உணர்றீங்க?

இந்த விருது கிடைக்கும்னு நினைச்சு பாக்கவே இல்ல. இது எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. இந்த விருது எனக்கு மிகப்பெரிய அளவுல சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் குடுத்துருக்கு. மேலும் மேலும் எழுதுறதுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் விதத்துல இந்த விருது கிடைச்சதுக்காக ரொம்ப சந்தோசப்படுறேன். முதல்முறையா ஒரு பெண் கவிதைக்கு தமிழ் சூழலிலும் இந்திய சூழலிலும் நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இது தனிப்பட்ட முறைல எனக்கு கிடைச்ச விருதா இருந்தாலும் ஒரு பெண்ணின் கவிதைக்கு கிடைச்ச விருது அப்படிங்குற கண்ணோட்டத்துல தான் நான் இத பாக்குறேன். அது கூடுதலான சந்தோசத்த எனக்கு கொடுக்குது.

அப்படியா? இதுதான் பெண்கவிதைக்கு கிடைக்குற முதல் யுவபுரஸ்கார் விருதா?

இதுவரைக்கும் தேசிய அளவுல வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதுகள்ல பெண்கவிஞர்களுக்குனு கிடைக்குற முதல் விருது இதுதான். இதுவரைக்கும் 6 விருதுகள் குடுத்துருக்காங்க. 2011ல ‘தவசி’ அவருடைய ‘சேவல்கட்டு’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2012ல ‘மலர்வதி’ என்பவர் அவருடைய ‘தோப்புக்காரி’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2013ல ‘கதிர் பாரதி’ என்பவர் அவருடைய ‘மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள்’ எனும் கவிதை தொகுப்புக்காக இந்த விருதை பெற்றார். 2014ல ‘அபிலாஷ்’ அவருடைய ‘கால்கள்’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2015ல ‘வீரபாண்டியன்’ அவருடைய ‘பருக்கை’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். 2016ல ‘லக்ஷ்மி சரவணகுமார்’ அவருடைய ‘கானகன்’ நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இப்படி ஆறு வருஷமா விருதுகள் வழங்கியிருக்காங்க. இருந்தாலும் முதல்முறையா ஒரு பெண்கவிக்கு இந்த வருடம் தான் அங்கீகாரம் கொடுத்துருக்காங்க. இந்த சந்தோஷமான நேரத்துல என்னுடைய பெயரை யுவபுரஸ்காருக்காக பரிந்துரை செஞ்ச பிரபஞ்சன் சார், நாச்சிமுத்து சார், திருமுருகன் சார்  எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இன்னும் யார் இருந்தாங்கனு தெரியல. அப்படி யாராவது இருந்தா அவங்களுக்கும் ரொம்ப நன்றி.

இந்த விருது வேற யாருக்காவது கிடைக்கும்னு எதிர்பாத்திங்களா?

இல்ல. இத பத்தி யோசிக்கவே இல்ல. எல்லாரும் திடீர்னு ஃபோன் பண்ணி சொன்னப்போ தான் எனக்கு விஷயமே தெரிஞ்சுது.

தமிழ் இலக்கியத்துல உங்களுடைய ‘ரோல் மாடல்’ யார்?

தமிழ் இலக்கியத்துல என்னுடைய ‘ரோல் மாடல்’ அப்படின்னா கவிஞர் ‘இளம்பிறை’ய சொல்லுவேன். அப்புறம் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள சொல்லுவேன். ஏன்னா, இவங்களோட எழுத்துக்கள்ல இருந்துதான் நான் எழுத்துக்கான அறம் அப்படிங்குற ஒரு விஷயத்த கத்துக்கிட்டேன். நாம எத எழுதணும்? யாருக்காக அத எழுதணும்? எழுத்துக்களுக்கு எந்த அளவு உண்மையா இருக்கணும்? இந்த விஷயங்கள் எல்லாத்தையும் அவங்க எழுத்துக்கள்ல இருந்து எடுத்துக்கிட்டேன்.

நீங்க இதுவரைக்கும் குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்னு மூன்று தொகுப்புகள் எழுதியிருக்கீங்க… அதுல உங்களுக்கு மனதிற்கு நெருக்கமான தொகுப்பு எது?

எனக்கு ‘ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’தான் மனதிற்கு நெருக்கமான தொகுப்பு. ஏன்னா மத்த ரெண்டு தொகுப்புகளையும் தாண்டி வேற ஒரு தளத்துலயும் அரசியல் ரீதியாவும் இந்த தொகுப்புல பேசியிருக்கேன். அதனால தான் அது எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு.

முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்து எழுதுற உங்களுக்கு இந்த அனுபவங்கள் எப்படி கிடைச்சது?

நான் இதுக்காக களப்பணியோ, பெண்களையெல்லாம் போய் சந்திக்கிறது அப்படியெல்லாம் எதும் பண்ணதில்ல. இந்த அனுபவங்கள் எல்லாமே என் வாழ்க்கைல நான் பார்த்த அனுபவங்கள். அதாவது என் வாழ்க்கைல கடந்து போன பெண்கள், நான் பாத்துட்டு இருக்க என்ன சுத்தியிருக்க பெண்கள் இவங்க மூலமா எனக்கு கிடைச்சதுதான். இந்த அனுபவங்கள் தான் தமிழ்நாட்டுல இருந்து இந்தியா முழுக்க இருக்க எல்லா கலாச்சாரத்துலயும் ஒரு பெண் தனது சமூகத்தால் எப்படி பார்க்கப்படுகிறாள்? என்ன மாதிரியான பிரச்சனைகளை அவள் எதிர்கொள்கிறாள்? எப்படி இந்த சமூகத்தால் ஒடுக்கப்படுகிறாள்? இதையெல்லாம் மீறி அவளுடைய உலகத்திலிருந்து என்ன மாதிரியான சுதந்திரங்களையெல்லாம் அவள் எதிர்பார்க்கிறாள்? அப்படிங்குற விஷயங்களையெல்லாம் அனுபவ ரீதியா தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கு அப்புறம் தமிழ் இலக்கியத்துக்காக என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

அடுத்ததா சிறுகதைத் தொகுப்பு வெளியிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அடுத்த இரண்டு வருசத்துல பெண்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவல் எழுதலாம்னு இருக்கேன். அப்புறம் பெண்கள் உலகத்தை தாண்டி குழந்தைகளுக்காக எழுதணும் அப்படினு ஆசையிருக்கு. குழந்தைகளோட பார்வைல அவங்க உலகம் எப்படிப்பட்டது. அந்த உலகத்துல அவங்களுக்கு என்ன தேவைப்படுது அப்படிங்குற விஷயங்களை பதிவு செய்யணும்.

இளம் எழுத்தாளர்கள்ல உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் யார்?

இளம் எழுத்தாளர்கள்ல எனக்கு பிடிச்சவங்க ரொம்ப பேர் இருக்காங்க. ஜீவலக்ஷ்மி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க இப்ப தான் எழுதிட்டு இருக்காங்க. அரசியல் சார்ந்து தீவிரமா எழுதுறவங்க அவங்க. அப்புறம் நரன் கவிதைகள், கதிர் பாரதி இவங்களையெல்லாம் படிப்பேன். தொடர்ச்சியா என் பார்வைக்கு வரக்கூடிய எல்லாரையும் படிச்சுட்டு தான் இருக்கேன். சமீபத்துல நா.பெரியசாமி அவர்களுடைய தொகுப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்த விருது உங்களுக்கு கிடைச்சுருக்குறத சமூகவலைத்தளங்கள்ல லக்ஷ்மி மணிவண்ணன் மாதிரியான இலக்கியவாதிகள் விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்களே… அத பத்தி என்ன நினைக்குறீங்க?

விருது வாங்கினாலே விமர்சனங்களும் சேர்ந்து வந்துடும். இது ஒன்னும் புதுசில்ல. வருசா வருசம் இதுதான் நடந்துட்டு இருக்கு. ஆரோக்கியமில்லாத இந்த மாதிரியான விமர்சனங்களையெல்லாம் நான் பொருட்படுத்தவே விரும்பல. எனக்கு இந்த விருது கிடைச்சத, அவங்களுக்கு கிடைச்ச விருதா நினைச்சு சந்தோசப்படுற நிறைய நண்பர்கள் மற்றும் மூத்த படைப்பாளிகள் எனக்காக இருக்காங்க.  அவங்களோட அன்பும் ஆதரவும் தான் எனக்கு பக்கபலம்.

எல்லா எழுத்தாளர்களோட நிலைமையும் பொருளாதார ரீதியா கஷ்டமா இருக்கும். உங்களோட நிலைமை எப்படி?

இப்போ படிச்சுட்டு இருக்கறதால பிரச்சினையில்ல. பகுதி நேரமா இப்பவே சில இதழ்களுக்கு எழுதி கொடுத்துட்டு இருக்கேன். பிழை திருத்தம்லாம் பண்ணிட்டு இருக்கேன். இனிமே தான் ஒரு நிரந்தரமான வேலைய தேடணும். எங்க போனாலும் எழுத்துக்காகவும், வாசிப்புக்காவும் என் நேரம் ஒதுக்கப்பட்டுட்டு தான் இருக்கும். தொடர்ந்து எழுதிகிட்டே இருப்பேன். அது ஒன்னு தான் எனக்கு பெரிய விஷயம்.

நன்றி : thamizharasiyal.com

நெய்வேலிக் குறும்படப் போட்டி விருது விழா - பயணம்



நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியின் குறும்படப் போட்டியில் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்ட செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்புக்காக நான் பெரும் முதல் அங்கீகாரம் இது.
இந்த நேரத்தில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் சில நாடகங்களில் நடித்த நினைவுகள் மனதுக்குள் வந்து போயின. அதேபோல 2010இல் புதுச்சேரியில் #பதியம்_அமைப்பு நடத்திய பத்துநாள் குறும்படப் பயிற்சிப் பட்டறை நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது அன்பான நன்றிகள். குறிப்பாக, நிழல் திருநாவுக்கரசு சார், பாரதி வாசன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அந்தக் குறும்படப் பயிற்சிப் பட்டறையில் அறிமுகம் ஆனவர் தான் Arumugam Thangavelayutham அப்பா. பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு வெறும் முகநூல் நட்பு என்பதைத் தாண்டி சொந்த மகளைப் போல பாசத்தோடு பழகுபவர் அவர். ஈழ மக்களின் துயரங்களைப் பேசும் மீண்டும் வருவோம், தமிழினி, பிஞ்சு ஆகிய மூன்று படங்களை அவர் இயக்கியுள்ளார். மூன்று படங்களிலும் நான் நடித்துள்ளேன். நடிப்பதற்கான பெரிய பிரயத்தனங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டைப் போலத்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால், ஒவ்வொரு படத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.

இரயில் பயணங்களைப் போலவே பைக் பயணங்கள் மீது பெருங்காதல் எனக்கு. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு நேற்று இயக்குநர் அப்பா, நண்பர்கள் ஸ்டீபன், ஜேம்ஸ், லெனோ ஆகியோருடன் ஸ்கூட்டியில் பயணம் செய்தோம். கிளம்பும்போது மண்டையைக் கொளுத்தும் வெயில்.
கடலூரில் அம்மா உணவகத்தில் மதிய உணவு. சுமாரான சாம்பார் சாதம். பத்தாம் வகுப்பு வரை நான் படித்த திருநாவலூர் அரசு பள்ளியின் மதிய உணவின்போது வழங்கப்படும் சாம்பார் சாதத்தின் ருசி.  ஓரளவு சுவையான தயிர் சாதம். தொட்டுக் கொள்ள ஊறுகாய் கூட இல்லை. பசி ருசி அறியாது. சாப்பிட்டு முடித்தோம் என்பதை விட அள்ளி வாய்க்குள் கொட்டிக் கொண்டோம். 25 ரூபாயில் மதிய உணவு முடிந்தது. சாப்பிட்டு முடித்த பின் தான் சூழலைக் கவனித்தேன். நிறைய கல்லூரி மாணவ மாணவிகள், எளிய மக்கள் பலரும் அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.  
சுமார் 3 மணி அளவில் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் நுழைந்தோம். வானம், கறுத்திருந்தது.  மழை பெய்வதற்காக காத்திருந்தது. ஆனால், சொல்ல முடியாத அளவுக்கு வெக்கை. பிரம்மாண்டமான கலை வேலைப்பாடுகள் கொண்ட புத்தகக் கண்காட்சியின் நுழைவாயிலை ரசித்தபடி உள்ளே நுழைந்தோம். குறும்படப் போட்டியில் பரிசு பெற்ற மூன்று குறும்படங்கள் திரையிடத் தயாராக இருந்தன. மூன்று படங்களுமே அதனதன் அளவில் தனித்துவம் வாய்ந்தவை. வம்சி (வலி), தினா ராகவ் (உண்மை அறிவாயோ வண்ணமலரே), மனோகரன் (பிள்ளையார் சுழி) ஆகிய மூவருக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். மேலும், உடன் விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த விருதினை திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி வழங்கினார். பல படங்களை இயக்கியும், பல படங்களில் நடித்தும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் சமுத்திரக்கனி. என்றாலும் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் அவர்களின் இயக்கத்தில் காடு திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த போராளி கதாப்பாத்திரம்தான் சமுத்திரக்கனி மீதான மரியாதையைக் கொடுத்தது. நல்ல சினிமாவா இல்லையா என்கிற கேள்விகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும் மதிப்பெண்சார் கல்விச் சூழல் மற்றும் பெற்றோர் குழந்தைகள் உறவுச் சிக்கல் குறித்துப் பேசிய மிக முக்கியமான படம் அப்பா. அதற்காகவும் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். அவரது கையால் இந்த விருதினைப் பெற்றது சிறந்த கௌரமாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைக்குமாயின் சமுத்திரக்கனி சாருடன் ஒருநாள் சந்தித்துப் பேச வேண்டும்.

கலைநேசன் பிரபு சாரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். விருது அறிவிப்பு வந்த நாளில் இருந்து நிகழ்வு குறித்து அவ்வளவு பொறுமையுடன் விளக்கிச் சொல்லி, என்னைப் பற்றிய தகவல்களை அறிந்து குறித்துவைத்துக் கொண்டு, வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே நெய்வேலி வந்தடையும் வரை தொடர்பில் இருந்தார். அது வெறுமனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையிலான சடங்குத்தனமான பேச்சு அல்ல.  சக மனிதர்கள் மீதான தன்னலமற்ற அன்பு. நிகழ்வு முடிந்து இரவு வழியனுப்பி வைக்கும் வரைக்கும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். அந்தப் பேரன்புக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் அண்ணன் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வு ஒன்றில் நெய்வேலி பாரதி குமார் அவர்களைச் சந்தித்தேன். அதன்பிறகு நேற்று தான் புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தேன். செஞ்சி நிகழ்வைப் பற்றி அவருக்கு நினைவூட்டியதும அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அவரைச் சந்தித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

திருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அம்மா, ஷைலஜா அம்மா, பவா தோழர், சபா தோழர் இன்னும் நிறைய பேர் வந்திருந்தார்கள். எல்லோரையும் ஒரே இடத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மகன் விருதுபெறும் போது குடும்பமாக வந்திருந்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது.

சிறந்த கதைக்கருவிற்கான விருதினைப் பெற வருகை தந்திருந்த எழுத்தாளர் அன்புத் தோழர் கரீமைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. உடன்பிறவா அண்ணன் என்கிற உணர்வினை எப்போதும் தரும் கரீம் தோழரின் நட்பும் அன்பும். கலையும் இலக்கியமும் எனக்கு என்ன செய்தது என்று யாரேனும் கேட்டால் என்னை நேசிக்கும் மனிதர்களை என்வசம் கொடுத்தது வேறென்ன வேண்டும் என கர்வத்தோடு சொல்லிக் கொள்வேன். மகிழ்ச்சி கரீம் தோழர்.

நிகழ்வு முடிந்து புத்தகக் கண்காட்சியின் சிற்றுண்டிப் பகுதிக்குப் போய் கொஞ்சமாய் வயிற்றை நிரப்பிக் கொண்டபின் விடைபெற்றுக் கிளம்புகையில் மழை கொட்டத் துவங்கியது. அப்போது மணி 9ஐத் தாண்டி இருந்தது.

இரவின் ரம்மியமும் மழைச் சாரலும் எங்கள் பயணத்தைக் கவித்துமாக்கியது. இயக்குநர் அப்பாவைச் சென்னை பேருந்தில் ஏற்றிவிட்டு, நானும் நண்பர்கள் மூவரும் சூடான சுமாரான தேநீரை அருந்திவிட்டு நெய்வேலியில் இருந்து கிளம்பினோம். அப்போது மணி 10.30.  மழையும் எங்களோடு அந்த இரவில் பயணமானது. இரவில் பெய்து கொண்டிருந்த மழைதான் எங்கள் பயணத்தை மறக்க முடியாத பயணமாக ஆக்கியது. பாட்டு பாடிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் இரவின் பயம் சிறிதும் இன்றிப் புதுவையை வந்தடைந்தோம்.

நெய்வேலி பயணத்தின் நினைவுகள் சில்லிட்டுக் கொண்டே இருக்கிறது.