புதன், 11 மே, 2016

யட்சியின் மடியில்

எனது மௌனங்களில் ஒன்றை
உனக்குப் பரிசளிக்கிறேன்.
கையிலேந்தி நட.
படுக்கையருகில் வைத்து உறங்கு.
உனது மதுவில் பிழிந்து குடி.
உனது தொலைதூர பயணத்தில் ஏதேனும்
ஒரு நீர்நிலையில் கரைத்துவிடு.
அல்லது
உனது காதலிக்குப் பரிசாகக் கொடு.

எனது பாதையில் கொட்டிக் கிடக்கும்
மலர்களைச் சேகரித்தபடி
வனத்தைத் தேடிப் போகிறேன்.
அங்கே காத்திருக்கிறாள் யட்சி
என் சொற்களை மடியிலேந்தியபடி.
-- மனுஷி

புதன், 4 மே, 2016

அந்தச் சாலையோரத்தில் - மனுஷி

அந்தச் சாலையோரத்தில் நின்று கொண்டுதான்
நிராதரவாய் அழுது கொண்டிருந்தாள் அவள்.
அந்தச் சாலையோரத்தில் தான் 
இரத்த வெள்ளத்தில் நினைவு தப்பிக் கிடந்தான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இறந்து போன பறவையின் சடலத்தைப் புதைத்து வைத்தாள்
ஒரு சிறுமி.
அந்தச் சாலையோரத்தில் தான்
செவ்வந்திப் பொழுதில்
தனது நேசத்திற்குரியவளில் உதடுகளில்
முத்தமிட்டான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
சக்கரத்தில் நசுங்கி இறந்து கிடந்தது ஒரு நாய்.
அந்தச் சாலையோரத்தில் தான்
தாகமாய் நின்று கொண்டிருந்தார் கடவுள்.
அந்தச் சாலையை நோக்கித்தான்
ஒரு பாட்டில் தண்ணீருடன்
சைக்கிளில் போகிறான் சாத்தான்.
-- மனுஷி

மீன் குஞ்சு - மனுஷி

மீன் குஞ்சு

          உண்டியலைக் கொட்டிச் சில்லறைகளையும் சில ரூபாய் நோட்டுகளையும் தனித்தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ஜான்சன். அவ்வப்போது கிச்சன் பக்கம் திரும்பி அம்மா பார்க்கிறாரா என்றும் கவனித்தான். மதிய உணவுக்கான தயாரிப்புகளில் தீவிரமாக இருந்தார் அவனது அம்மா. கண்ணும் கருத்துமாக உண்டியல் காசை எண்ணிப் பார்த்தான். மொத்தமாக எண்பத்து ஒன்பது ரூபாய் இருந்தது. இன்னும் ஒரு ரூபாய் இருந்தால் முழுசாக தொண்ணூறு ரூபாய். அவனது அப்போதைய தேவையும் அவ்வளவுதான். மொத்தக் காசையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதன் தலையை முறுக்கி ஒரு ரப்பர் பேண்டால் சுற்றினான். கால்சட்டையில் பிளாஸ்டிக் கவரை எடுத்து வைத்துக் கொண்டு அம்மாவிடம் போனான்.
           “அம்மா, ஒரு ரூபாய் காசு வேணும்”.
           “எதுக்கு?”
          “வேணும்மா.”
          காசு கேட்டதற்கான காரணத்தைச் சொன்னால் நிச்சயமாக திட்டுதான் கிடைக்கும். அம்மா நம்பும்படியான காரணத்தை யோசிக்காமல் போய்விட்டோமே என்று முழித்தான். என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அப்பாவின் பேண்ட் கண்ணில் பட்டது. சும்மா தான்ம்மா கேட்டேன் என்று சொன்னபடி சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே கொஞ்சம் சில்லறைகள் இருந்தன. அப்போது அவன் ரொம்பவும் நியாயமாக நடந்து கொண்டான். கையில் வந்த சில்லறைகளில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை அப்படியே போட்டுவிட்டுச் சிட்டாகப் பறந்தான் மீன் தொட்டிக் கடைக்கு.
************
          தன்னுடைய பள்ளி நண்பர்களின் வீட்டில் மீன் தொட்டி இருப்பதைப் பார்த்திருக்கிறான். நம் வீட்டிலும் மீன் தொட்டி இருந்தால் ஜாலியா மீன் குட்டிகளோடு விளையாடலாம் என்ற ஆசை அவனுக்கு. ஆனால், வீட்டில் கேட்டால் கன்னம் பழுக்கப் பூசைதான் கிடைக்கும். தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள காசு சேகரிக்கத் தொடங்கினான். மீன் குஞ்சுகள் விற்கும் கடையில் போய் விலையை விசாரித்துக் கொண்டான். ஒரு சின்ன மீன் தொட்டி தொண்ணூறு ரூபாய் என்று சொன்னார்கள். அப்போது அவனுடைய பெரிய இலட்சியம் தொண்ணூறு ரூபாயைச் சீக்கிரமாகச் சேர்ப்பதுதான். அதற்காக, அம்மா கடைக்குப் போகிற வேலை சொன்னால் மறுக்காமல் செய்தான். மிச்ச சில்லறைகளை உண்டியலில் போட்டுக் கொண்டான். எப்போதாவது அப்பா தருகிற காசுகளையும் உண்டியலில் பத்திரமாகப் போட்டு வைத்தான். ஒருவழியாக அவனது லட்சியம் நிறைவேறிவிட மான் போல துள்ளிக் கொண்டு ஓடினான் கடைக்கு. கவரைப் பிடித்து கண்ணாடி டேபிளின் மீது கொட்டினான். கடைக்கார அண்ணன் எண்ணிப்  பார்த்து தொண்ணூறு ரூபாய்க்கு அவன் கேட்ட மீன் தொட்டியைக் கொடுத்தார். அந்த நொடியில் அவனது கால்கள் தரையில் நிற்காமல் பறந்தன. ஆனால், கடையிலேயே நின்று கொண்டிருந்தான். ஐந்து நிமிடத்திற்குப் பிறகுதான் அவனுக்குப் புரிந்தது தொண்ணூறு ரூபாய்க்கு மீன் தொட்டி மட்டும்தான். அதில் போட்டு வளர்க்க மீன் குஞ்சுகளுக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று. வெறும் மீன் தொட்டியை வாங்கிக் கொண்டு போய் என்ன செய்வது? மீன் குஞ்சுகள் வாங்க இன்னும் காசு சேர்க்க வேண்டும் என்று நினைக்கும்போதே அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு ‘அண்ணா, கொஞ்சம் காசு கம்மி பண்ணிட்டு, மீன் குஞ்சு தாங்கண்ணா’ என்றான்.
பள்ளிக்கூடம் விட்டு வரும்போதெல்லாம் மீன் தொட்டிக் கடைக்குள் சென்று ஒருமுறை மீன் தொட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு, மீன் குஞ்சுகளோடு ரகசியமாக ஏதேதோ பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவான். இப்போது மீன்கள் இல்லாமல் வீட்டுக்குப் போவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு, ‘இந்தாடா ரெண்டு மீன் குஞ்சு தரேன். வச்சுக்கோ. உனக்காகத்தான் தரேன். யாரையும் சொல்லிக் கூட்டிட்டு வந்துடாத. புரிஞ்சுதா?’. அந்த வார்த்தைகள், சொர்க்கத்திலிருந்து அவன் காதுகளில் வந்து விழுந்த தேவவார்த்தைகளைப் போல இருந்தன அவனுக்கு. மிகவும் கவனமாக மீன் தொட்டியை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்தான். மீன் தொட்டியைப் பார்த்தார் அவனது அப்பா. அவனை ஒரு பார்வை பார்த்தார். இந்த மீன் தொட்டி வாங்க பணம் ஏதுடா என்பது போல இருந்தது அவரது பார்வை. உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கியது என்பதைப் பெருமை பொங்கச் சொன்னான். அவர் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அவனுக்கும் அதைப் பற்றிப் பெரிதாக வருத்தம் இருக்கவில்லை. தலைகால் புரியாத சந்தோஷத்தின் உச்சத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம்
மீன் தொட்டியில் கல் போட்டு வச்சா மீனெல்லாம் ஜாலியா அது மேல ஏறி விளையாடும் என ஜான்சனின் நண்பன் சொல்லி இருந்தான். தெருமுனையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்லைச் சின்ன சின்னதாக உடைத்துக் கொண்டு வந்து மீன் தொட்டியில் போட்டுவிட்டு, பெருமை பொங்க ஒருமுறை மீன் தொட்டியைப் பார்த்தான். பிறகு விளையாடப் போய்விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து இரண்டு மீன் குஞ்சுகளில் ஒன்று செத்து மிதந்தது. செத்த மீன் உடலைப் பார்த்த கணத்தில் அவனது மகிழ்ச்சியும் செத்துப் போயிருந்தது. அம்மாவை அழைத்துச் சொன்னான். முதுகில் ஒரு அறை கொடுத்து அம்மா சொன்னார், “மரமண்டை மீன் தொட்டியில் செங்கல்லை உடைச்சு போட்டா அது சாகாமல் என்ன செய்யும்? புள்ளையாடா நீ. மீன் செத்துப் போன சோகத்துடன் அம்மா திட்டியதும் சேர்ந்து கொள்ள அழுது தீர்த்தான். மேலும், மீன் தொட்டியில் கூழாங்கல்லைப் போட்டால் மீன் சந்தோஷமாக இருக்கும் என்பது கூட தெரியாமல் போச்சே என நினைக்கையில் இன்னும் அழுகை பீறிட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கத் துடைக்க அருவி போல கொட்டியது கண்ணீர். அழுதபடியே தூங்கியும் போனான்.
மீன் தொட்டியைச் சுத்தம் செய்து நீர் நிரப்பி, கொஞ்சம் கூழாங்கல்லையும் போட்டு எஞ்சியிருந்த ஒற்றை மீனைப் பத்திரமாக அதில் நீந்த வைத்தார் அவன் அம்மா.
*******
சனி ஞாயிறு முடிந்து விடுதிக்கு அவனைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். புத்தக மூட்டையுடன் இந்த மீனையும் ஒரு ப்ரில் இங்க் பாட்டிலில் போட்டு எடுத்துக் கொண்டான். எப்போதும் வாரத்தின் முதல் நாள் அழுகையும் பிடிவாதமுமாக விடியும். ஹாஸ்டலுக்குப் போகமாட்டேன் என அழுது அடம்பிடித்தாலும் கொண்டு போய் விட்டு விடுவார்கள். இந்தமுறை வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குச் செல்வது குறித்த வருத்தம் இல்லை. அழுகை இல்லை. உற்சாகத்துடன் கிளம்பினான்.
*************
அந்த விடுதியில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு மேசை கொடுக்கப்பட்டிருந்தது. வெளியே இழுத்து மூடும் மேசை இல்லை. மேலே தூக்கிப் பொருட்களை உள்ளே வைத்துவிட்டு மூடும் வகையில் செய்யப்பட்ட மேசை. அதற்குள் நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், ஸ்கேல் வகையறாக்கள் வைத்துக் கொள்ளலாம். முதல் வேலையாக, தனது மேசையில் உள்ளறையை ஒழுங்குபடுத்தி, கொண்டுவந்த ப்ரில் இங்க் பாட்டிலை மேசையின் உள் மூலையில் வைத்தான். சந்தோஷமும் நிம்மதியும் பெருக்கெடுத்தது அவன் முகத்தில். ஏதோவொரு சாக்லேட் வாங்கியபோது கொடுத்த இலவசமாகக் கிடைத்த குட்டி பொம்மையைத் தேடினான். அவனது சுண்டு விரலை விட ஒல்லியான, குட்டையான பொம்மை. அதை மீன் குஞ்சு விளையாடுவதற்கென இங்க் பாட்டிலில் போட்டு வைத்தான்.
“நான் ஸ்கூலுக்குப் போற நேரத்துல இது கூட விளையாடு. நான் வந்ததும் நிறைய கதை சொல்றேன் உனக்கு.”
சொல்லிவிட்டு மேசையை மூடினான்.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முதல் வேலையாக மேசையைத் திறந்து பார்த்தான். அந்தக் குட்டிப் பாட்டிலுக்குள் நீந்திக் கொண்டிருந்தது மீன் குஞ்சு. மேசையை மூடி வைத்தான். முகம் கழுவிக் கொண்டு எல்லோரும் ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரம். இவன் மட்டும் மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை மேசையைத் திறந்து பாட்டிலைப் பார்த்துவிட்டு மீண்டும் மூடினான். மீண்டும் திறந்தான். பாட்டிலைப் பார்த்தான். மூடினான். அவ்வப்போது மீன் குஞ்சுவுடன் பேசினான். அப்படி மேசையைத் திறந்து பாட்டிலில் மீனைப் பார்த்துவிட்டு மூடும்போது முறைத்தபடி வார்டன் நின்று கொண்டிருந்தார். பாதி பயமும் கொஞ்சம் அசடு வழிந்தபடியும் அவரைப் பார்த்தான்.
“படிக்கச் சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க?”
தனது விரல்களால் பாட்டிலை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டே ‘ஒன்னும் பண்ணல சார்’ என்றான். மேசைக்குள் பார்த்தார். பாட்டிலை வைச்சு விளையாட்டிட்டு இருக்கியா, ஒழுங்கா படிடா என்றபடி அடுத்தப் பையனை நோக்கிப் போனார். இவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் முழுமையாக அங்கே இருந்து போனதும் மற்ற பையன்கள் அவனைச் சுற்றி வந்து நின்றபடி, என்னடா சொன்னார் என்று கோரசாகக் கேட்டனர். “ஏய், அந்தாளுக்குக் கண்ணே தெரியலடா. இவ்ளோ பெருசா மீன் குட்டி நீந்திக்கிட்டு இருக்கு. வெறும் பாட்டிலை வச்சு விளையாடிட்டு இருக்கியானு சொல்லிட்டுப் போறாரு”. அவன் சொல்லி முடிக்கையில் எல்லோருமே சேர்ந்து சிரித்தனர்.
*********
மீன் குஞ்சை மேசையில் வைத்துவிட்டுப் பள்ளிக்கூடம் போய் வருவது வருத்தமாக இருந்தது. இனிமேல் மீன் குஞ்சையும் தன்னோடு வகுப்புக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தான். புத்தகப் பையில் வாட்டர் பாட்டில் வைக்கும் இடத்தில் மீன் உள்ள இங்க் பாட்டிலை வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டே போனான். பள்ளிக்கூட வாசலை நெருங்கும்போதுதான் கவனித்தான் இங்க் பாட்டிலைச் சரியாக மூடாமல் விட்டதால் பாட்டிலில் உள்ள தண்ணீர் எல்லாம் வரும் வழியிலேயே சிந்திவிட்டிருந்தது. பாட்டிலுக்குள் அந்தக் குட்டி மீன் துடித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தான். எங்காவது ஒரு கையளவு தண்ணீர் கிடைத்தால் கூட போதுமே என்று தேடினான். வழியில் குழாய் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான். அவனது கெட்ட நேரம். அபப்டி எதுவும் இருக்கவில்லை. வகுப்பறைக்குச் சென்று நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் அதுவரை மீன் குஞ்சு உயிரோடு இருக்க வேண்டுமே.
ஐந்தடி தூரத்தில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று இருந்தது. குடிசை என்று கூட அதைச் சொல்ல முடியாது. மூன்று கழியை நட்டு, அதன்மேல் வெள்ளைச் சாக்குகளை கூடாரம் போல போட்டிருந்தார்கள். பாட்டிலைக் கையில் ஏந்தியபடி அங்கே ஓடிப் போய் தண்ணீர் கேட்டான்.
“குடிக்கவா தம்பி”
“இல்ல. என் மீன் குட்டிக்கு. வர வழியில் தண்ணி தளும்பிக் கீழ கொட்டிடுச்சு”. சொல்லும்போதே அழுதான்.
“இதுக்கெல்லாமா அழுவாங்க. இந்தா” என்றபடி இங்க் பாட்டில் நிறைய தண்ணீரை ஊற்றிக் கொடுத்தார் செருப்புத் தைக்கும் அந்த அம்மா. பாட்டிலுக்குள் இருந்த மீன், தண்ணீர் பட்டதும் உயிர் பெற்று எழுந்தது போல ஆசுவாசம் கொண்டு நீந்தியது. அது நீந்துவதைப் பார்த்தவுடன் இவனுக்கு உயிர் வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டான். அழுகாச்சியுடன் கூடிய சந்தோஷத்தில் அவனது  முகம் பிரகாசமானது. தனது மீன் குஞ்சின் உயிரை மீட்டுக் கொடுத்த அந்தம்மா அப்போது அவனுக்குக் கடவுளாகத் தெரிந்தார். அந்தச் செருப்புத் தைக்கும் கூடாரம் அவன் வணங்கும் கோவிலாகத் தெரிந்தது. அந்தம்மாவிற்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து தனது நன்றியைத் தெரிவித்தான். அவர் வாங்க மறுத்தார். “உங்களாலதான் இந்த மீன் இப்போ உயிரோட இருக்கு”. சொல்லும்போதே குரல் நடுங்கியது.
ஏற்கனவே ஒரு மீனைப் பறிகொடுத்த சோகம் அவன் மனதில் இன்னும் மறையவே இல்லை. அவனது அழுகைக்குப் பின்னால் அதுவும் இருந்தது.
இனிமேல் உன்னைப் பத்திரமா பாத்துக்கறேன் என்று மீன் குஞ்சிடம் சொல்லிக் கொண்டே போனான்.
அன்னைக்குத் தொடங்கி, பள்ளிக்கூடம் விட்டு ஹாஸ்டலுக்குப் போகும்போதெல்லாம் அந்தக் கோயிலின் முன்னால் நின்று அந்தத் தெய்வத்திடம் பேசிவிட்டுப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான்.