சனி, 31 மார்ச், 2018

நீர்க்குமி வாழ்க்கை

இன்று மாலை மகளிர் மட்டும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மாளவிகா வீட்டில் வேலை செய்கிற சேகரி அம்மா "இது யாரு சூர்யா பொண்டாட்டி தானே" என்று கேட்டார். ஒரு நடிகையாக அவருக்கான அடையாளம் தொலைந்து போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். எத்தனைப் படங்கள் நடித்திருக்கிறார். அந்த நடிகை ஜோதிகாவை இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக மறந்து விட்டது.

பெண்ணுக்கான அடையாளம் அவளைச் சார்ந்ததாக இல்லாமல் போவதன் துயரம்  எப்போதும் மனதைத் துருத்திக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் இதுவரை யாருக்கும் ரசிகை என்று சொல்லிக் கொண்டது இல்லை.  முகவரி படத்தைப் பார்த்த பிறகு ஜோதிகாவின் மீது சின்ன கவனம் திரும்பியது.

கொழு கொழு கன்னம், துறுதுறு கண்கள், காற்றில் அலைவீசும் கேசம், இப்படி ஜோதிகாவைப் பிடித்துப் போக காரணங்கள் அதிகரித்துக் கொண்டே போயின. ஏப்ரல் மாதத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா என்ற பாடலுக்கு அஜித் குமார் வாயசைத்து நடித்துக் கொண்டிருந்த போது, எவ்ளோ க்யூட்டான மாம்பழக் கன்னம், திராட்சைக் கண்கள் என வியந்து வியந்து ரசித்தேன் ஜோதிகாவை. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சுடிதார் அணிந்த வந்த சொர்க்கமாவே தெரிந்தார்.

ஜோதிகாவின் நடிப்பை ஓவர் ஆக்‌ஷன் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். ஆனால், குஷி படத்தை ஜோதிகாவுக்காகவே பலமுறை பார்த்தேன். குஷி மட்டுமில்ல. காக்க காக்க, பூவெல்லாம் உன்வாசம்,  மொழி ஆகிய படங்களும் கூட. மாயாவி படத்தில் மட்டும் ஏனோ ஜோதிகாவை என்னால் ரசிக்கவே முடியவில்லை.  இப்பவும் நான் அடிக்கடி பார்க்கிற 5 தமிழ்ப் படங்களில் மொழி படம் முக்கியமானது. வாய் பேச முடியாத, காது கேட்காத, ஆனால் சுயமரியாதை கொண்ட பெண்ணாக அசத்தியிருப்பார்.

ஜில்லுனு ஒரு காதல் படத்துக்குப் பிறகு காதல், கல்யாணம் என சினிமாத் துறையில் இருந்து காணாமல் போய் தமிழ்நாட்டின் மருமகளாய் ஆகிப் போனார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கைக்குள் தங்களைப் புகுத்திக் கொண்டு, நடிப்புக்கு பை பை சொன்ன நடிகைகள் வரிசையில் ஜோதிகாவும் சேர்ந்து போனது பெரிய வருத்தமே.

36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ட்ரி கொடுத்த போது அவ்வளவு சந்தோஷம். படத்தில் நடுத்தர வயது பெண்ணின் கதாப்பாத்திரம் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

மீண்டும் பழைய துருதுரு ஜோதிகாவைப் பார்க்க மனசு ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மகளிர் மட்டும் படம் பெரிய ஆறுதல். அதே பேரழகோடு மாடர்ன் தேவதையாக வலம் வந்தார்.
அதிலும் கூட நடுத்தர வயதை எட்டிய மூன்று குடும்பத் தலைவிகளை அவர்களது தோழிகளோடு சேர்த்து வைத்து, அவர்களுக்கான சுயத்தை அவர்களுக்குக் காட்டுகிற ஒரு நவீனப் பெண். அவ்வளவு தான்.

திருமணத்திற்குப் பிறகும் பழையபடியே ஹீரோயின்களோடு காதல் இளவரசன்களாக நடிக்கின்ற ஹீரோக்கள் போல காதல் தேவதைகளாக ஹீரோயின்கள் நடிக்க வாய்ப்பதில்லை.

நீர்க்குமிழி வாழ்க்கை தான் நடிகைகளின் சினிமாப் பயணம்.

#jothika 😮