வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நிலாவின் புத்தன் - மனுஷி

1.
மழலைக் குரலால்
கதை சொல்லத் துவங்கினாள் 
நிலா.
வார்த்தைகள்
ஆசிர்வதிக்கப்பட்டன .
நிலாவிடம் கதை கேட்கும் ஆர்வத்தில்
காதுகளைத் திறந்து வைத்தாள்
இரவில் விழித்திருக்கும் பைத்தியக்காரி.
மனதையும் தான்.
நிலாவின் கதையில்
ஒரு மரம் இருந்தது.
ஒரு வானவில் இருந்தது.
ஒரு பறவை இருந்தது.
ஒரு விலங்கு இருந்தது.
ஒரு கடலும் ஒரு நதியும் இருந்தன.
நிலாவும் இருந்தாள்.
கதையில் வரும் 
எல்லாமும் நிலாவின்
கதைகளைக் கேட்டன.
சில கதைகளைச் சொல்லின .
ஒன்றுக்கொன்று 
ஆறுதலாய் பேசிக் கொண்டன.
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டன.
துக்கத்தைப் பேசிப் பேசி
ஆற்றிக் கொண்டன.
நிலா,
கண்ணீரற்ற,
வலிகளற்ற 
புன்னகையாலான ஓர் உலகத்தை
அவைகளுக்கு உருவாக்கினாள். அவளின் வார்த்தைகளுக்கு
எல்லாமும் கட்டுப்பட்டன.
நிலாவின் கதை உலகிற்குள்
யாரும் வரலாம்.
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.
எந்த நிர்பந்தங்களும் இல்லை.
எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
காற்றைப் போல இருந்தன
நிலாவின் கதைவெளி.
அங்கே அமர்ந்து
கதைகளைக் கேட்டு
முடித்த பின்
இரவைச் சுமந்தபடி
மெல்ல கைவீசி அழைக்கும்
மரத்தடியில் சென்றமர்ந்தாள்
அந்தப் பைத்தியக்காரி
மறு நாள்
நிலா சொன்ன கதையில்
ஒரு புத்தன் இருந்தான்.

********
2.
ஒரு மெழுகுவர்த்தி ஒளியில் 
இரவைக் கொண்டு வந்தாய்.

கடந்துபோன
முந்தைய எந்த இரவை விடவும்
பிரகாசமாய் 
ஒளிர்ந்தது
அந்த இரவு.

பரிசுத்தமான மகிழ்ச்சியால் 
அலங்கரிக்கப்பட்டிருந்தது
அது.

அறை முழுக்கவும்
நட்சத்திரங்களை
அடுக்கி வைக்கிறாய்.

திரைச்சீலையை விலக்கி வைப்பது போல
இரவின் கனவுகளை
மென்விரலால் ஒதுக்கி வைத்தாய்
அவை
சுவர்களில் ஓவியமாக 
ஒட்டிக் கொண்டன

நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இரவில்
வாசனையைக் கிளர்த்தியபடி
மலர்ந்தன 
ஓவியத்தில் மொட்டவிழ்ந்த மலர்கள்

திசைகளில் சென்று பரவிய வாசனையை நுகர்ந்த படி
ஏகாந்த இசையைப் பாடிச் சென்றது
தனித்திருக்கும் ஒற்றை நிலா.

கண்ணாடி முன் நின்று பார்த்தேன்
நீ
நட்சத்திரவாசியாக இருந்தாய்
நான்
இரவின் தேவதையானேன்

அன்று 
இரவை அணைத்தபடி
உறங்கினேன்
அருகமர்ந்து
தாலாட்டு பாடினாய்

இரவும் உறங்கிக் கொண்டிருக்கிறது 
பனியைப் போர்த்தியபடி

காலத்தின் விந்தையால் 
அதிகாலை பிறந்து விடினும் 
கண்ணாடியின் பிம்பத்தில் 
உறைந்திருக்கும்
ஒளியிரவின் ஆழ் உறக்கம்.

நன்றி : தளம் காலாண்டிதழ் ஜூன் - ஆகஸ்டு 2015

என் செல்லப் பறவைகளே! கொஞ்சம் சப்தமிடுங்கள் - மனுஷி

என் செல்லப் பறவைகளே!
கொஞ்சம் சப்தமிடுங்கள்
உங்களின் இந்த மௌனம்
அச்சுறுத்துகிறது
என்னை
உங்கள் மௌனம் களைத்து
சப்தமிடுங்கள்
சப்தம் 
தேவையாய் இருக்கிறது 
உங்கள் இருப்பை உணர்த்த
சப்தமிடுங்கள்
விடுதலையின் சாரத்தை
உரத்துக் கீச்சிடுங்கள்
அல்லது
அடிமையின் பாடலை,
துயரை 
ஈனக்குரலிலாவது பாடுங்கள் 
அது வெறும் குரலன்று 
அது வெறும் சப்தம் மட்டுமன்று
அதில் ஒளிந்திருக்கும் 
ஏராளமான கதைகளை
இரவின் நிசப்தத்தினூடே
கேட்கவேண்டும்

உங்கள் சப்தத்திலிருந்து 
நீங்கள் முத்தமிட்டுக் கொள்வதைக் கண்ணுறுகிறேன்
உங்கள் சப்தத்திலிருந்து 
நீங்கள் கனவு காணும்
ஒரு வனத்தைக் 
கற்பனை செய்கிறேன்
உங்கள் சப்தத்திலிருந்து 
நீண்ட தனிமையைக்
கடந்து செல்லக் கற்றுக் கொண்டேன்
உங்களின் சப்தத்திலிருந்தே
அதிகாலையில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றுவதாய் 
நம்புகிறேன் 
உங்கள் சப்தத்திலிருந்து 
என் காலைப்பொழுது
சோம்பல் முறித்துத் 
துயில் கலைவதை 
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
அது
உண்மையும்கூட
கீச் கீச் குரலெழுப்பி
என்னை
அழைக்கலாம்
உங்கள் குரலை
அதிசிரத்தையுடன் செவிமடுக்கிறேன்
என் அருகாமையை
அச்சமின்றி ஏந்திக் கொள்ளுங்கள் 
நான் மீட்பரல்ல 
அவதாரமும் அல்ல
சாதாரணி 
என்னிடம்
எல்லையற்ற அன்பும்
கொஞ்சம் வன்மமும் இருக்கிறது உங்கள் சப்தங்கள் 
என்னை ஆசிர்வதிக்கட்டும் அன்பு பெருகவோ 
வன்மம் வளரவோ 
செய்யட்டும்
உலகத்தின் மீட்பராக 
உங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ள
நீங்கள் 
சப்தமிடுங்கள்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சபிக்கப்பட்ட தேவதையின் நாட்குறிப்பிலிருந்து - மனுஷி


சபிக்கப்பட்ட தேவதையின் நாட்குறிப்பில்

சிறகு முளைத்த வார்த்தைகள் இருந்தன.

உறைந்து போன கண்ணீர்த் துளிகள்

வெம்மை மாறாமல் தளும்பிக் கொண்டிருந்தன.

 

அதீதக் காதலைச் சுமந்தலையும்

அவளது பயணக் குறிப்புகள்

பௌர்ணமி வெளிச்சத்தில் மின்னின.

அவளது நாட்குறிப்பில் இருந்து

பிடுங்கப்பட்ட சொற்கள்

அடர்வனத்தில் வாசம் வீசிக் கொண்டிருந்தன.

 

குழந்தையின் முத்தத்தையும்

கோபத்தையும் கூட

அற்புதப் புதையலைப் போல

சுமக்கும் நாட்குறிப்பின் தாள்கள்

காலக் கரையான்களால் அழிக்கப்படாதவாறு

நினைவுகளால் எழுதப்பட்டிருந்தன.

 

உங்கள் கைகளில் அந்த நாட்குறிப்பு

கிடைக்கும் நாளில்

மனக்கிளர்ச்சியோடு நீங்கள் வாசிக்கத் தொடங்கலாம்.

வாசித்து முடிக்கையில்

நீங்கள் புத்தனாகக் கூடும்.

நன்றி : அருவி கவிதை இலக்கியக் காலாண்டிதழ், ஏப்ரல் - செப்டம்பர் 2015.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நிகரன் இதழில் எனது கவிதைகள்

1. மரண வாடை

எறும்பைப் போல் உள்நுழைகிறது மரணம்
அறை முழுக்க பரவுகிறது 
அதன் வாசனை
இரவைக் கிழித்து கலவரப்படுத்தும் அதன் குரல்
சாவு வீட்டிலிருந்து
சுமந்து வரப்பட்டது
நிச்சயிக்கப்பட்ட வாழ்வை
அதன் கடைசி துளி வரை
வாழ்ந்து பார்த்துவிடும்
பேராசை 
ஒரு தெருநாயைப் போல துரத்த
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களால் வாழ்தலின் கணங்களை தீட்டிக் கொண்டிருந்தாள்
காலத்தின் கரங்களில் வாழும்
சபிக்கப்பட்ட தேவதை
அறைக்கதவைத் தட்டியபடி
காத்திருக்கும் மரணத்திற்கு 
தேவதையின் வாழ்வைச் சுவைக்கும்
கனா.
*****
2. இறுதியாக

உன் கடைசிச் சொல்லை
நீ உச்சரித்தாய்

உன் கடைசி முத்தத்தை
நீ கொடுத்தாய்

கடைசியிலும் கடைசியாய்
இறுகத் தழுவினாய்

கடைசிகளுக்கான அத்தனை சமிக்ஞைகளும்
நடந்தேறிவிட்டன சில கணங்களுக்குள்

திரும்ப வருவாய் என்பது
ஒரு கனவைப் போல
கலைந்து போன தருணத்தில்
உனக்கான
கடைசிக் கவிதையை எழுதினேன்
மௌனமாக.


சனி, 1 ஆகஸ்ட், 2015

தூக்குக் கயிற்றுக்கு மிக அருகில்

தூக்குக் கயிற்றுக்கு மிக அருகில்
- மனுஷி
அந்த இரவில் நட்சத்திரங்கள்
மின்னிக் கொண்டிருப்பதை
அவன் காண விரும்பினான்
உறங்க மறுத்து.
இமைகளுக்குள் துறுத்திக் கொண்டிருந்தது
மரணம்
தூசியைப் போல.
கண்களை மூடியபடிப் பார்த்துக் கொண்டிருந்தான்
மேகங்கள் கலைந்து செல்வதை
இருளும் பாதி வெளிச்சமும் படர்ந்திருந்த
அறைக்குள் இருந்தபடி.
அதிகாலையில் குளித்து முடித்தபின்
குளிர்க் காற்றை
எவ்விதப் பதற்றமும் இன்றி
உள்ளிழுத்துக் கொண்டான்.
அவனுக்கு
மிகச் சிறந்த உணவைத் தயார் செய்தார்கள்
அந்த உணவை,
அவனுக்களிக்கப்பட்ட கடைசி உணவை
எந்தவிதக் கருணையுமின்றி
மறுத்துவிட்டான்.
கடைசி உணவை
அவன் உண்ண மறுத்தது பற்றி
யாருக்கும் வருத்தமில்லை.
அவனுக்கென தயார் செய்யப்பட்ட
தேவ உணவில்
அவன் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை என
சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
பிறந்த நாளிலேயே
இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுபடுவது
ஆகச் சிறந்த கருணை எனவும்
பேசிக் கொண்டார்கள்.
அவன் மரணம் குறித்து
யாருக்கும் சிறு வருத்தமும் இருக்கவில்லை
அங்கு.
ஒரு மாபெரும் தலைவரின் இறுதிச் சடங்கிற்கு
நாடே தயாராகிக் கொண்டிருக்கையில்
கூண்டுக்குள் இருக்கும்
ஒரு சிறு பறவை
ஒரு நள்ளிரவின் முடிவில் வீழ்த்தப்பட்டு
துடிதுடித்து இறந்து போவது பற்றி
யாரும் கவலை கொள்ள மாட்டார்கள்.
மிக எளிதாக அதைக் கடந்து போகும்
மன தைரியம் வாய்க்கப்பெற்றவர்களே
அங்கிருந்தார்கள்.
நல்ல ஆடை ஒன்றை 
உடுத்திக் கொண்டபின்
இலட்சங்களை உண்டு கெட்டித்திருந்த
தூக்குக் கயிற்றின் முன்னால்
நிறுத்தப்பட்ட
அந்தக் கடைசி நொடியில்
அவனது ஒரே கடவுளிடம்
தன் ஒரே கோரிக்கையை வைத்தான்
'அடுத்த பிறவியென ஒன்று
இருக்குமானால்
எந்த மதமோ
மார்க்கமோ இன்றி
ஒரு மனிதனாக மட்டுமே பிறக்க வை.
இந்த வாழ்க்கையை
ஒரு மலரை நுகர்ந்து லயிப்பது போல
வாழ்ந்து முடிக்க வேண்டும்’ என.
தூக்குக் கயிறு
அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டிருப்பதை
மிகப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்
கடவுள்
கைகளைப் பிசைந்தபடி.
அப்போதைக்கு
அவ்வளவுதான் செய்ய முடிந்தது
அவரால்.