வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

துயரத்தின் பாடல்

பறவைகள்
ஓயாமல் பாடிக் கொண்டிருக்கின்றன
அவளது தனிமையை,
அவளது காதலை,
அவளது பிரிவின் வலியை,
அவளது கண்ணீரை,
அவளது பெருங்கனவை.

துயரத்தின் சாயல் அப்பியிருக்கும் அந்தப் பாடல்
அவளது பௌர்ணமியை
இருளச் செய்கின்றன.
நட்சத்திரங்களை
ஒளிமங்கச் செய்கின்றன.
மேகங்களும்
கண்ணீராகி
வழிந்தொழுகுகின்றன.

இரவு பகலாக
ஓயாமல் ஒலிக்கும் அந்தப் பாடல்
மனதைப் பிசைய
கூண்டின் கதவைத் திறந்து வைத்தாள்
துயரத்தின் பாடல்
பரந்த வெளியில்
விடுதலையின் பாடலாகுமென.
-- மனுஷி

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வாழ்தலின் விதி

கீச் கீச்சென குரலெழுப்பும்
செல்லப் பறவைகளுக்கு
என் மீது
எந்தக் கோபமும் இல்லை.
யாதொரு முரண்பாடுகளும் இல்லை.
இருந்தும்
சமீபகாலமாக
நாங்கள் பேச்சுவார்த்தைகள் அற்று இருந்தோம்.
எப்போதாவது சோம்பல் முறித்து
அவை பேசத் துவங்குகையில்
நான் மொழியற்று நின்றேன்.
நான் அருகமர்ந்து பேசுகையில்
வார்த்தைகளைச் சுவைத்தபடி
அதீதக் காதலுடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
புதுவருடத்தின் இரண்டாம் மாதத்தில்
அவை கூண்டுக்குள்
சிறகு விரிப்பதையும்
வேனிற்காலத்தின் வெப்பத்தை
சுவைக்கும் பேராவலுடன்
பெருவெளிக்குள் பயணிக்கும்
எத்தனிப்புடன் தானியங்களைக்
கொத்தித் தின்றதையும்
நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
நாங்கள் பேசிக் கொள்ள
மௌனம் கூட மிச்சமில்லாது போன
ஒரு காலைப் பொழுதில்
நான் வைத்த பெயரைச் சுமந்தபடி
என்னிலிருந்து வெளியேறி
பறந்து சென்றன
என் பறவைகள்.
வாழ்வென்பது
விட்டு விடுதலையாகி
பறத்தல்தானே மாயா.
-- மனுஷி

புதன், 10 பிப்ரவரி, 2016

உன் குரலைத் தொட

கடைசியாய் ஒருமுறை
உன் எண்ணைத் தொடர்பு கொள்கிறேன்
கடைசி என்பது எப்போதும்
கடைசியாகாமல்
இன்னும் ஒருமுறை
இன்னும் ஒரேயொரு முறை என
நீள்கிறது என் விரல்.
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கும் உன்னை
என் நினைவுகளால்
தழுவிக் கொண்டேதான்
கடைசி முறையாக
முயற்சிக்கிறேன்
உன் குரலைத் தொட.
-- மனுஷி

திங்கள், 8 பிப்ரவரி, 2016

பறவையாதல் - மனுஷி

என்னை முதன் முதலாக
நீ முத்தமிடும் கணம்
வெளியே பனி பொழிந்து கொண்டிருக்கும்.
உன் காதலால் ஒளிவீசும்
எனது முகத்தை
உனதிரு கைகளால்
பற்றிக் கொண்டிருபாய்.
உன் தோள் அளவேயான என் முகத்தருகில்
குனிந்து நீ
முத்தமிடுவாய்
என் கைகளை
பறவையின் சிறகைப் போல்
சுவரில் சாற்றி.
உன் இதழைப் பருகும்போது
நான்
பறவையாகிப் பறந்து கொண்டிருப்பேன்.