செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு



வாடகை பைக்குகள் : நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
-- மனுஷி

வார இறுதி நாட்களில் தமிழ்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் பாண்டிச்சேரியை மையமிடுவர். அதிலும் குறிப்பாக, ஆரோவில்லில் சனி ஞாயிறுகளின் இளைஞர் பட்டாளம் அலை மோதும்.
சென்னையைப் போல அல்ல பாண்டிச்சேரி. இந்த ஊரைப் பொறுத்தவரை ஒரே நாளில் கூட எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விடலாம். அவ்வளவு சிறிய மாநிலம். கையில் ஒரேயொரு பைக் இருந்தால் போதும். பாண்டிச்சேரியில் ஜாலி சுற்றுலா வசப்படும்.
வீக் எண்ட் என்ஜாய் பண்ணும் கனவுடன் வருபவர்களுக்கென இங்கே பாண்டிச்சேரியில் வாடகை பைக்குகள் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியில் ஆறு வருடமாக இருக்கிறேன். ஆரோவில்லில் இரண்டு வருடம். மொத்தம் எட்டு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டது புதுவைக்கு மேல்படிப்புக்காக வந்து. இத்தனை வருடத்தில் மிகச் சமீபத்தில்தான் இந்த வாடகை பைக்குகள் பற்றிய விவரம் தெரிந்தது. எனக்குத் தெரிந்து இங்கே வந்து தங்கிச் சுற்றிப் பார்க்கிற எல்லோருமே பைக் வாடகை விடும் கடையைத் தேடுவதைக் கவனித்திருக்கிறேன். ஒரு நாளைக்கான பைக் வாடகை எவ்வளவு என்றெல்லாம் விசாரித்தது இல்லை. அதற்கான தேவை ஏற்படவில்லை. நான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் அக்காவும், அதற்குப் பத்தடி தூரத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் அண்ணா ஒருவரும் பைக் வாடகை விடுகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையிலும், சனிக்கிழமை காலையிலும் அங்கே கூட்டம் அலைமோதும். (இவ்விரண்டு இடங்கள் தவிர மிஸன் தெருவில் இரண்டு மூன்று பைக் வாடகைக் கடைகள் இருப்பதாக அறிந்தேன்).
பெட்டிக்கடையில் தான் பால், சர்க்கரை எல்லாம் வாங்குவது வழக்கம். அப்படி மிகச் சமீபத்தில் (பத்து நாட்களுக்கு முன்பு) கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மற்றும் பைக்குகளில் இருந்து ஒரு பைப் வழியாக பாட்டிலில் பெட்ரோலை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் பைக் கேட்டு வந்த இரண்டு நபர்களிடம் புரூஃப் வாங்கிக் கொண்டு பைக் கொடுக்கும்போது கடையிலிருந்து 50 ரூபாய்க்குப் பெட்ரோலை வாங்கி ஊத்திக் கொண்டு கிளப்பச் சொன்னார்கள்.  மறக்காமல் பெட்ரோல் போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பினார் கடை அக்கா. அவர்களும் கொடுத்த பெட்ரோலை வாங்கி பைக்கில் ஊற்றிக் கொண்டு கிளம்பினார்கள். கண்ணெதிரே இது நடந்து கொண்டிருந்தது. இது ஒரு தனி பிஸினஸ் ட்ரிக் போல என்று நினைத்தாலும், ஒருவகையான ஏமாற்று வேலை என்றே தோன்றியது.
சொந்தமாக ஸ்கூட்டி இருப்பதால் இவ்வளவு நாள் இதைப் பற்றிப் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
சென்ற சனிக்கிழமை இரவு கடைக்குப் போய் திரும்பி வரும் வழியில்  ஸ்கூட்டி நின்றுவிட தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிச்சயமாக மெக்கானிக் ஷாப் திறந்திருக்காது. ஞாயிற்றுக்கிழமை மாலை கவிதை நூல் விமர்சனக் கூட்டம் இருந்தது. மேலும், மார்க்கெட் செல்வதற்கு நிச்சயம் வண்டி இல்லாமல் நடக்காது என்பதால் ஒரேயொரு நாள் வாடகை வண்டி வாங்கிப் பார்க்கலாம் என்று பெட்டிக்கடை அக்காவிடம் போனேன். ஸ்கூட்டி எதுவும் இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலையே எடுத்துப் போய்விட்டார்கள் என்றார். இருந்தது ஒரேயொரு டிவிஎஸ் 50 மட்டும் தான். வண்டி ஓட்டப் பழகிய நாளில் இருந்து இதுவரை டிவிஎஸ் 50 மட்டும் ஓட்டிப் பார்த்ததே இல்லை. ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு வழியில்லை. அதுமட்டுமில்லை. பழகித்தான் பார்ப்போமோ என்ற எண்ணம். (இந்த விஷயம் தெரியாமலே போய்விட்டதே என்று வரலாறு நாளைக்குச் சொல்லிவிடக் கூடாது). எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். சைக்கிள் அல்லது ஸ்கூட்டி ஓட்டுவது போலத்தான் இதுவும்.
டிவிஎஸ் 50 தரும்போதே ஒரு பாட்டில் கொண்டு வந்து இருக்கிற பெட்ரோல் எல்லாவற்றையும் ஒரு பம்ப் வழியாக எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்யற அளவுக்கு பெட்ரோலை மீண்டும் ஊற்றினார். சாவி கொடுக்கும்போதே, பக்கத்தில் இருக்கிற பெட்ரோல் பங்க்கில் ஆயில் கலந்து பெட்ரோல் போட்டுக்கொள்ளச் சொன்னார். ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் தேவை எதைப் பற்றியும் யோசிக்க விடவில்லை. மதிய சமையலுக்குப் பிறகு கொஞ்சம் கவிதை நூலை மீண்டும் ஒருமுறை வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமே என்பது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மாலை 6 மணிக்கு நிகழ்வு. 5.30க்குக் கிளம்பினால் போதும் என மனக்கணக்கு போட்டுக் கொண்டு நிதானமாகக் கிளம்பி வெளியில் வந்து டிவிஎஸ் 50ஐ உதைத்துக் கிளப்பினால் கும்பகர்ணன் போல அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. உதைத்து உதைத்துச் சோர்ந்து போய், அந்தக் கடைக்கே தள்ளிக் கொண்டு போனேன். இதை விட்டுவிட்டு வேறு வண்டி கிடைத்தால் நல்லா இருக்கும். இனிமேல் பேருந்தில் போய்ச் சேருவது என்றால் ரொம்பவும் தாமதாமகும் என்பதால் வேறு வண்டி கேட்டால், இதே நல்லா ஓடுமே, நாங்களே இதுல தான் மார்கெட்லாம் போய்ட்டு வரோம், அதெப்படி உனக்கு மட்டும் ஸ்டார்ட் ஆகல என்று அந்த அக்காவின் கணவர் இரண்டு மிதி மிதித்தார். கிளம்பிவிட்டது. அப்போதே மணி 6ஐத் தொட்டுவிட்டது. வண்டியை ஓட்டிக் கொண்டு போனால் பத்து நிமிடத்தில் மறுபடியும் வண்டி நின்று விட்டது. எவ்வளவு உதைத்தும் கிளம்புவேனா என்றது? வண்டியை ஏதாவது ஒரு கடை முன்பு நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஆட்டோவில் செல்லலாம் என்று பார்த்தால் ஞாயிற்றுக்கிழமை காரணமாக எல்லா கடையும் மூடியிருந்தது. யார் செய்த புண்ணியமோ பத்து நிமிட வண்டி தள்ளலுக்குப் பிறகு ஒரு கடை திறந்திருப்பதைப் பார்த்து, அங்கு விஷயத்தைச் சொல்லி வண்டியை நிறுத்திவிட்டு ஆட்டோ பிடித்துப் போய்ச் சேர மணி 6.45 ஆகி இருந்தது. ஏற்கனவே நிகழ்ச்சியைத் தொடங்கி இருந்தார்கள். சின்னதாய் மன்னிப்புக் கேட்டபடி போய் அமர்ந்து கொண்டேன்.
பேசி முடிக்க மணி 9.30ஐத் தாண்டி இருந்தது. நல்ல நாளிலேயே 8.30க்குக் கடை சாத்துகிறவர்கள் 9.30க்கு நிச்சயமாகத் திறந்து வைத்திருக்க மாட்டார்கள். பழையபடி ஆட்டோ பிடித்து அங்கிருந்து பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடியே கடை மூடியிருந்தது. கடைக்குப் பக்கத்தில் அனாதை போல அந்த வண்டி நிறுத்திய நிலையில் இருந்தது. ஆட்டோவில் வரும்போதே ஆயில் கலந்த பெட்ரோலை தண்ணீர் பாட்டிலில் வாங்கி வந்திருந்ததால், ஊற்றிக் கிளப்பினால், கிளம்புவேனா என்று எருமை மாடு கணக்காக நின்று கொண்டிருந்தது. வண்டி நிற்கும் இடத்திற்கும் வீட்டுக்கும் குறைந்தது மூன்று  கிலோ மீட்டர் தூரம். மணி வேறு பத்தைத் தாண்டி இருந்தது. நடராஜா சர்வீஸ் தான் என்று வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து வீடு வந்து சேர்ந்தேன்.  
மறுநாள் அசதியில் நன்றாகத் தூங்கி எழுந்து காலை மற்றும் மதியம் இரண்டு வேலைக்கும் சேர்த்து ஒரே வேலையாகச் சாப்பிட்டு முடித்து வண்டியைக் கொண்டு போய் விடலாம் என உதைத்துக் கிளப்பினால் கிளம்பாமல் இப்போதும் அடம்பிடித்தது. மறுபடியும் தள்ளிக் கொண்டே போய் கடையில் நிறுத்தி நடந்த கதையைச் சொன்னால், அந்த அக்கா காச் மூச் என்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த வண்டி ரொம்ப ராசியான வண்டி, நாங்க ஓட்டிட்டுப் போகும்போது நல்லா தானே போச்சு இப்ப எப்படி ஸ்டார்ட் ஆகாம போகும், ஆயில் நிறைய போட்டு பெட்ரோல் போடச் சொன்னேனே போட்டிங்களா, ஏங்க வந்து இந்த வண்டியப் பாருங்க, எம்மா தெரிஞ்ச பொண்ணுனு தானே இந்த வண்டியைக் கொடுத்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவருடைய கணவர் வந்து பழையபடி வண்டியில் இருக்கும் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். அவர்கள் கடைக்குள் வைத்திருந்த பெட்ரோலை பாட்டிலில் எடுத்து வந்து ஊற்றி, உதைத்து கிளப்பினார். இரண்டு உதையில் உர்ரென்று கிளம்பியது. என் கண்முன்னாலேயே கடையிலிருந்து கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போய் திரும்பி வந்தார். ஏதோ மாயவித்தை காட்டுவது போல இருந்தது. போகும் போதும் தள்ளிக் கொண்டு போய், வரும்போதும் தள்ளிக் கொண்டு வந்த நான் சொல்வது பொய் என்பது போல ஆகிப் போனது அங்கு. அந்த வண்டியில் பிரச்சினை இருக்கிறது என்பதை நிரூபிக்க அங்கு வழியே இல்லை. வண்டியில் இருந்து பெட்ரோல் எடுத்து உள்ளே பத்திரப்படுத்துவதைக் கேள்வி கேட்கவும் அங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.
சரிக்கா, வாடகை எவ்வளவு ஆச்சு சொல்லுங்க என்றேன். நேற்றும் இன்னைக்கும் சேர்த்து 400 ரூபாய் என்றார். அடக் கொடுமையே… கொஞ்சம் முன்னாடி கிளம்பி பஸ் ல போய் இருந்தால் 5 ப்ளஸ் 5 என பத்து ரூபாயில் முடிந்திருக்கும். போகும்போது ஆட்டோவுக்கு 100, வரும்போது ஆட்டோவுக்கு 100, பெட்ரோல் ஒரு 50, இது இல்லாமல் ஓடாத வண்டிக்கு வாடகை 400…
எங்க போய் முட்டிக் கொள்வதென தெரியவில்லை.