செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

நேத்ரா எனும் குட்டி இளவரசி - மனுஷி


ஆரோவில்லில் மாரத்தானில் கலந்து கொள்வதற்காகச சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சாரதாம்மா வந்திருந்தார். அவரோடு இன்னும் இரண்டு சினேகிதிகளும். அவர்களைச் சந்தித்து ஹாய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். 

க்ரீன் ஹவுஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரோடு வந்திருந்த நேத்ரா குட்டிப் பாப்பாவைச் சந்தித்தேன். எனது அந்த இரவைக் கூடுதல் அழகாக்கிடும் குட்டி தேவதை அவள் என்பதை அவளது முதல் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன். 

சாரதா அந்தக் குட்டிப் பாப்பாவிடம் என்னை அறிமுகம் செய்யும்போது, இவங்க பேரு மனுஷி... இவங்க கதைலாம் சொல்வாங்க. நாய்க்குட்டி கூட, பூனைக்குட்டி கூடலாம் பேசுவாங்க என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். இதுவரை இப்படி க்யூட்டாக யாரும் என்னை அறிமுகம் செய்ததில்லை. 

அக்கா, நிஜமாவே நீங்க நாய்க்குட்டி கூட பேசுவிங்களா... ஆச்சரியம் அவள் கண்களில் தெரிந்தது. பேசுவேனே என்றேன். அப்படினா இந்த நாய் கிட்ட பேசுங்க பார்ப்போம் என்றாள் அங்கே உணவகத்தில் இருந்த ஒரு வெள்ளை நாயைக் காட்டி. 

இது எனக்கு வைக்கப்பட்ட சின்ன டெஸ்ட். சாரதாம்மா அறிமுகம் செய்யும்போது இருந்த குஷி இப்போது கொஞ்சமா ஜர்க் வாங்கியது. ஒருவேளை நம் குரலுக்கு அந்த வெள்ளையன் மதிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? நேத்ராவிடம் பங்கமாக மாட்டிக் கொள்வோம். ஆனாலும் மனம் தளராமல் ஹேய்... இங்க வா என்று கை நீட்டி அழைத்தேன். அந்த வெள்ளையன் அருகில் வந்துவிட்டான். கொஞ்சமாய் அவன் காது மடல்களை, கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே என்ன டா பண்ற இங்க... சாப்பிட்டியா என்றேன். என்ன புரிந்து கொண்டானோ... என் கையை நக்கிக் கொடுத்தான். என் கால் முட்டியில் தலையை முட்டி மீண்டும் தடவிக் கொடுக்கச் சொன்னான்.

நேத்ராவின் முன்பு என் கெத்தைக் காப்பாத்திட்டடா தம்பி என்று நெற்றியில் முத்தமிட்டேன். நேத்ராவுக்கோ குரலில் ஆச்சரியம்... அக்கா நிஜமாவே சூப்பர்க்கா என்று என்னோடு ஒட்டிக் கொண்டாள். 

அதன் பிறகு, நாய்க்குட்டி, நக்கி கொடுத்தால் என்ன அர்த்தம், வாலை ஆட்டினால் என்ன அர்த்தம், பூனைக்குட்டி பசி எடுப்பதை எப்படிச் சொல்லும், மிஸ் பண்ணால் என்ன செய்யும் என்றெல்லாம் சொல்லச் சொல்ல அவளுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம். 

அக்கா... நீங்க எங்க கூடவே இன்னைக்கு நைட் வந்து தங்கிடுங்க. கதை சொல்லுங்க என்றாள். இல்லடா மா நான் நாளைக்கு வந்து சொல்றேன். என் வீட்ல பூனைக்குட்டிக்குச் சாப்பாடு வைக்கனும் என்று சொல்லிக் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டேன். 

என்னை அனுப்பவே மனசில்லை.

அடுத்த நாள் சாரதாம்மாவும் அவரோடு வந்த தோழிகளும் மாரத்தானில் ஓட வேண்டும். நேத்ராவை எங்கே விட்டுச் செல்வது என்ற யோசனையில் இருந்தபோது என்னோடு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அடுத்த நாள் முழுக்க என்னோடு இருக்கப் போகிறோம் என்பதால் என்னை வழியனுப்பி வைத்தாள். 

அடுத்த நாள் மாரத்தான் தொடங்கும் இடத்திற்கு நண்பரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஒரு சூடான காபியைக் குடித்துவிட்டு அவரை அழைத்துக் கொண்டு விசிட்டர் செண்டர் சென்றேன். அங்கே அவரை இறக்கிவிட்ட பின் சாரதாம்மாவிற்கு அழைத்தால் சிக்னல் கிடைக்கவில்லை. ஆறரை மணிக்கு ஓடிக் கொண்டே வாட்ஸ் அப் காலில், நேத்ரா குட்டியும் எங்களோடு மாரத்தான் ஓடிட்டு இருக்கா... நாங்க முடிச்சிட்டு கால் பண்றோம் என்றார். 

வேறென்ன செய்ய. வீட்டுக்குக் கிளம்பினேன்.

சொன்னபடியே மாரத்தான் ஓடி முடித்து, காலை உணவும் முடித்துவிட்டு எனக்கு அழைத்தார்கள். குட்டி மாரத்தான் ஓட்டக்காரியைச் சந்திக்கும் ஆவலில் விரைவாகச் சென்றேன்.. இல்லை.. ஸ்கூட்டியில் பறந்தேன். 

அவளைப் பார்த்ததும் அள்ளிக் கட்டிக் கொண்டேன். இந்தச் சின்ன வயதில் நான்கு கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கிறாள். பெரிய விஷயம். அவள் முகத்தில் ஓடிய களைப்பு எதுவும் இல்லை. அன்று காலை பூத்த சின்னஞ்சிறு பூ போலத்தான் இருந்தாள். 

அக்கா நீங்க கதை சொல்றேன்னு சொன்னிங்க சொல்லவே இல்லை.. இப்ப சொல்லுங்க வாங்க என்று கையைப் பிடித்து இழுத்தாள். சொல்றேன் டா. உனக்குச் சொல்லாமல் இருப்பேனா என்று சொல்லிக் கொண்டிருக்கு போதே... நேத்ராவின் அம்மா, முதலில் ரூம் போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திட்டு பிறகு கதை கேட்கலாம். அக்கா கதை சொல்வாங்க என்றார். சென்னை திரும்ப வேண்டிய அவசரம் அவர் குரலில் இருந்தது. 

அவளுக்கு அதெல்லாம் ஒரு விஷயமாகவே இல்லை.. அவள் வைத்திருந்த சுனாமிகா பொம்மையை வைத்துக் கதை சொல்ல சொன்னாள். அவள் அம்மாவிற்கோ கிளம்ப வேண்டிய அவசரம்.

அதைப் புரிந்து கொண்டு, ஆமா நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு அக்கா வந்து கதை சொல்றேன் என்றேன். இல்ல நீங்க வாங்க என்று அடம் பிடித்தாள். நிஜமா நான் வந்து கதை சொல்வேன்.. நீ இப்போ அம்மா கூட போ என்றேன். 

ப்ராமிஸா..... என்றாள் கையை நீட்டியபடி.

பிராமிஸ் என்றேன் அவள் கை மேல் கை வைத்து.

காட் பிராமிஸா...

காட் பிராமிஸ்...

மதர் பிராமிஸா...

மதர் பிராமிஸ்...

டெட் பிராமிஸா..

டெட் பிராமிஸ்...

அவள் கேட்ட எல்லாவற்றின் மீதும் ப்ராமிஸ் செய்து கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன். 

ஆனால், அவளைப் பஸ் ஸ்டாப் வரை சென்று வழியனுப்பி வைக்க முடியவில்லை. ஆரோவில்லில் அன்றைய தினம் அவ்வளவு பரபரப்பாக இருந்தது எனக்கு. 

அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியம் அப்படியே என்னிடம் இருக்கிறது. 

அவளுக்கென தினம் ஒரு கதையைச் சொல்வது எனத் தீர்மானித்து விட்டேன்.

அவள் முகம் பார்த்துக் கொண்டே கதை சொல்லும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். 

என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது அவள் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா, இந்த அக்காவை நம்ம கூடவே கூட்டிட்டுப் போய்டலாம்மா... 

என் உலகத்திற்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்ட குட்டி இளவரசியின் பேரன்பின் பெருநிழல் தான் அந்த வார்த்தை. 





சனி, 1 பிப்ரவரி, 2020

கோனேரியும் குருவம்மா அக்காவும்

கழுகுமலை பயணம் முடித்து அடுத்த நாள் மடவார் வளாகம் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை - இரண்டு இடங்களுக்கும் செல்வதென முடிவு செய்தோம். 

திருவண்ணாமலை என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்பு வடிவமாக நின்று, மலையாகக் குளிர்ந்த திருவண்ணாமலையைத்தான் சொல்வார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலையா? அதிலும் பெருமாள் கோவிலா? ஆச்சரியத்தோடு கிளம்பினேன்.
நானும் சங்கீதாவும் ஸ்கூட்டியில் பறந்தோம் என்று சொல்ல முடியாது. மிதமான வேகத்தில் திருவண்ணாமலை கிராமத்தை நெருங்கியதும் பிரம்மாண்டமான யானை ஒன்று கால் நீட்டிப் படுத்திருப்பது போல இருந்தது அம்மலை. மலையை நோக்கி ஸ்கூட்டி விரைந்து செல்ல, மலை பின்னோக்கி நகர்வது போலிருந்தது. சென்ற வருடத்தில் திருச்சி சென்றிருந்தபோது, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு ஸ்கூட்டியில் சென்றிருந்தேன். அப்போதும் அப்படித்தான். மலையை நோக்கி ஸ்கூட்டி பயணம் செய்ய, மலை பின்னோக்கி நகர்ந்து விளையாட்டுக் காட்டுவது போலிருந்தது. சங்கீதாவிடம் அதைச் சொன்னேன். நான் சொன்னதை அவரும் ஒப்புக் கொண்டார். 

திருவண்ணாமலை கோவிலில் கோனேரி என்றொரு ஏரி உள்ளது. குலசேகராழ்வார் அந்த ஏரியைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று சொன்னார். ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் அளவுக்கு யாரும் என்னை அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆண்டாளுக்குப் பெருமாளின் மேல் காதல் என்றால் எனக்கு ஆண்டாளின் மேல் மாளாக்காதல். ஆண்டாளின் கவிதைகளின் மேல் தீராக் காதல். 
கோயிலை நெருங்கியதும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அதனருகில் செருப்பைக் கழற்றிவிட்டு நடக்கத் தொடங்கினோம். மொட்டை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் கோயில் வளாகம் குளிர்ந்திருந்தது. கிளை பரப்பி, அசைந்து கொண்டிருந்த மரத்தின் குளுமை தரையெங்கும் படர்ந்திருந்தது. 

கோயிலுக்குப் படியேறிச் செல்வதற்கு முன், வலது புறம் திரும்பி கோனெரியைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என அங்கே சென்றோம். 

செக்கச் சிவந்திருந்த கோனேரியின் படிக்கட்டுகளில் இரண்டு பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். 
காற்றின் தீராத பேச்சுகள் ஏரியில் நீர் வளையங்களாய் நெளிந்து கொண்டிருந்தன. ஏரியின் கரையைச் சுற்றிலும் மரங்கள். ஏரியின் நீரைக் கவ்விக் குடிப்பது போல ஏரி நீரை நோக்கித் தாழ்ந்திருந்தன. வெள்ளை வெள்ளையாய் இலைகளுக்கு நடுவில் பூக்கள். அவ்வப்போது பூக்கள் பறந்தன. உற்றுக் கவனித்தபோது தான் தெரிந்தது. பூக்கள் அல்ல. நாரைகள். 

மரத்தில் அமர்ந்திருந்த நாரைகளையும், ஏரியையும் செல்போனில் படம் பிடித்தேன். படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரும் துணி துவைப்பதை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். நம்ம ஃபோக்கஸ் ஏரியும் நாரையும் தான் என்பது போல நான் க்ளிக் செய்து கொண்டிருந்தேன். எம்மா நீ இவங்களை போட்டோ எடுக்கறனு அவங்க போஸ் கொடுக்கறாங்க பாரு என்றார் சங்கீதா. 

சாரி அக்கா, கவனிக்கல என்று சொல்லிவிட்டு அவர்களைப் படம் பிடித்தேன். இடுப்பளவு நீரில் அமர்ந்தபடி ஈரப்புடவையுடன்  முகமெல்லாம் புன்னகையாக போஸ் கொடுத்தார்கள். 

ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என நினைத்துத்தான் ஏரியின் பக்கம் காலடி எடுத்து வைத்தோம். முதலில் படிக்கட்டில் அமர்ந்தோம். இரண்டு மூன்று செல்ஃபிக்களுக்குப் பிறகு ஏரி, உள்ளே இறங்கி வா வா எனக் கூப்பிட, ஜீன்ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி விட்டு கடகடவென ஏறி நீரில் கால் வைத்தேன். அடுத்து இரண்டாம் படிக்கட்டு, அடுத்து முன்று, அடுத்து நான்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கினேன். இடுப்பு வரை நனைந்து விட்டேன். நான் கால் வைத்த முதல் படிக்கட்டில் இருந்த நீரின் குளிர்ச்சிக்கும் ஐந்தாவது ஆறாவது படிக்கட்டில் இருந்த குளிர்ச்சிக்கும் வித்தியாசம் இருந்தது. படிக்கட்டின் உள்ளே இறங்க இறங்க சில்லிட்ட நீரின் அதீத குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 
போட்டோவுக்கு போஸ் கொடுத்த இரண்டு அக்காக்களும் எங்கள் இருவரைப் பற்றி விசாரித்தார்கள். நான் பாண்டிச்சேரியில் இருந்து வருகிறேன் என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம். சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கம் போலவே எனது ஒற்றைக்கால் கொலுசைப் பார்த்து, மா, இன்னொரு கால் கொலுசைக் காணோம் என்றார். இல்லக்கா இது ஸ்டைல் என்றேன் சிரித்துக் கொண்டே.  அவர்களும் சிரித்தார்கள்.

துணி துவைக்கும் சத்தத்திற்கு இடையில் செல்ஃபோனில் கானா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. துணி துவைத்துப் பிழிந்து ஏரிக்குள் தான் அழுக்கு நீரை ஊற்றினார்கள். சிவந்த நீரில் சோப்பு நுரை கலந்த அழுக்கு நீர் கலந்தாலும் அப்படியே இருந்தது. சிவந்த நீரில் அலசிய துணி சுத்தமாகவே இருந்தது. 

ஏரியின் இடதுபுறம் நான்கைந்து பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கும் ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி இரண்டு மாடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. 

துணி துவைத்துக் கொண்டிருந்த இருவரின் அருகில் இடுப்பு வரை நனைய இறங்கி, சங்கீதாவை போட்டோ எடுக்கச் சொன்னேன். விதவிதமாகப் போட்டோ எடுத்துத் தள்ளினார். இதற்கிடையில் அந்த அக்காக்களோடு பேச்சு வளர்ந்து கொண்டே இருந்தது. அவர்களோடு தேநீருக்குச் சியர்ஸ் சொல்கிற அளவுக்கு... 
கோயிலுக்குப் போயிட்டு வரும்போது வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும் என அழைத்தார்கள். வீட்டின் அடையாளம் சொன்னார்கள். வர்றோம்க்கா என்று பேச்சுக்கு வாக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வெறும் பேச்சுக்கு அழைத்தார்கள் எனச் சொல்ல முடியவில்லை. வாஞ்சையான அழைப்பு தான். 

அக்கா உங்க பேரு என்னக்கா என்றேன். ஊதப்புடவை அணிந்த அக்கா, என் பேரு குருவம்மா. இவங்க பேரு முனீஸ்வரி என்றார். குருவம்மா அக்கா உங்க பேருல ஒரு பாட்டு இருக்கு. இருங்க யூடியூபில் போடறேன் என்று சொல்லி, தேடி "குறுக்குப் பாறையிலே மறிச்சு வழியில் நின்னு... பார்க்காமல் போறியே நீ குருவம்மா..." பாடலை ஒலிக்கச் செய்ததும் குருவம்மா அக்கா முகத்தில் அடக்க முடியாத வெள்ளந்தி சிரிப்பு. 

கோனேரியில் ஐந்து நிமிடம் என்பது குருவம்மா அக்காவுடனான தேநீர் உரையாடலில் ஒரு மணி நேரமாக நீண்டிருந்தது. எங்களின் உரையாடலை படித்துரையில் அமர்ந்து ஒரு குருகும் கேட்டுக் கொண்டிருந்தது.
கோனேரி வாழ் குருகாய்ப் பிறப்பேனே என்ற குலசேகராழ்வாரின் குரலை அங்கே உணர்ந்தேன். 

கோனேரியின் ஈரம் என்பது எளிய மனிதர்களின் வெள்ளந்தி அன்பினால் துளிர்த்துக் கொண்டிருக்கிறது எப்போதும்.