திங்கள், 21 மே, 2018

கொழுக்கட்டை நினைவுகள்

திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவரிடமிருந்து விடை பெற்ற பின், சூடாக ஒரு தேநீர் அருந்தலாம் என்று கிளம்பினேன். ஒரு ஸ்வீட் ஸ்டாலில் தேநீர் மற்றும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் புகைப்படங்கள் கடைக்கு உள்ளே வாங்க என அழைக்காமல் அழைத்தன.

ப்ளாக்.ஃபார்ஸ்ட் கேக் இருக்கா என்று விசாரித்தால் இல்ல மேடம் என்றார்கள். அப்புறம் வெளியில் போட்டோ இருக்கு என்றேன். சங்கோஜமாகச் சிரித்தார்.

விசாரித்ததற்காக ஏதாவது வாங்க வேண்டும் என கண்ணாடி வழியாக ஸ்வீட் வகையறாக்களை நோட்டமிட்டேன். எனக்குப் பிடித்த வெள்ளை ரசமலாய் கண்களை ஈர்த்தது. நாக்கில் எச்சில் ஊறியது. ஒரேயொரு பீஸ் சாப்பிடக் கொடுக்கச் சொல்லிவிட்டு, கால் கிலோ பார்சல் செய்யச் சொன்னேன்.

அந்தக் கடையில் பத்தே பத்து டேபிள். ஒவ்வொரு டேபிள் முன்பும் இரண்டு இரும்பு இருக்கைகள். ஃபேன் சத்தம் வெளியில் இருக்கும் வெயிலின் உஷ்ணத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியது.

எதைப் பற்றிய கவனமும் இன்றி ஒரேயொரு ஃபலூடாவை பாதி சாப்பிட்டு விட்டு சூழல் மறந்து பேசிக் கொண்டிருந்தது ஒரு காதல் ஜோடி. ஃபலூடா உருகி ஜூஸ் ஆகி இருந்தது.

அவர்கள் பக்கத்தில் ஸ்மார்ட்டான ஒரு பையன் மசால் தோசையைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான்.

காலியாக இருந்த டேபிளில் உட்கார்ந்து டீ சொல்லும்போது தான் கவனித்தேன். கொழுக்கட்டை அங்கே கிடைக்கும் எனத் தெரிந்து கொண்டேன். ஒரு ப்ளேட் கொழுக்கட்டை கொடுக்கச் சொன்னேன். 5 நிமிடத்தில் சுடச் சுடக் கொழுக்கட்டை வந்தது. பெரிய சைஸ் பூண்டு போல இருந்தது. இனிப்புக் கொழுக்கட்டை. ஆளை அப்படியே விழுங்கிவிடும் போல சுவை. அம்மா செய்யும் கொழுக்கட்டையின் கைப்பக்குவம் அப்படியே இருந்தது.

ஊரில் இருக்கும்போது விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களில் கொழுக்கட்டை செய்ய அம்மாவுக்கு உதவி செய்த ஞாபகங்கள் வந்து போயின.

காலையில் எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து சாணி போட்டு வீட்டை மெழுகி, பெருக்கி, வாசற்படி, கதவுகளில் பொட்டு வைத்து மங்களகரமாக வீடு மாறியிருக்கும். எத்தனை மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்குவார் என்று தெரியாது. தூக்கம் கலைந்து எழுந்து வரும்போது லட்சுமி கடாட்சமாக இருக்கும் வீடு.

இந்த வேலைகளுக்கு நடுவில் அம்மா பச்சரியை ஊரவைத்து இருப்பார். மதியம் சாப்பிட்டு முடித்த பின்,  ஊறவைத்த அரிசியைத் தண்ணீர் இல்லாமல் இறுத்து, வெள்ளைத் துணியில் உலர்த்தி, உரலில் போட்டு மாங்கு மாங்கென இடித்து மாவு சலித்து எடுப்பார்கள். பக்கத்து வீட்டு அக்கா யாராவது அம்மாவுக்கு உதவியாக மாவு இடித்துக் கொடுப்பார். அல்லது அம்மா மாவு இடிக்க, சலித்தெடுத்து பாத்திரத்தில் கொட்டுவார். மாவு ரெடி ஆனதும் இட்லி தட்டில் துணி பரப்பி, அரிசி மாவைப் பரப்பி அடுப்பில் வைத்துவிட்டு, கொழுக்கட்டைக்குத் தீனி ரெடி பண்ண ஆரம்பிப்பார் அம்மா. துருவிய தேங்காய், ஊறவைத்து வேகவைத்த பாசிப் பருப்பு, வெல்லம் மூன்றையும் சமபங்கு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைப்பார். உடன் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் சாக்கில் ஒன்றிரண்டு உருண்டைகளை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். அம்மா திட்ட மாட்டார். சாமிக்குப் படைக்காமல் சாப்பிடக் கூடாதுமா என்றபடி ஒரு சின்ன தட்டில் ஒரு உருண்டையை வைத்து, சாமி பக்கத்தில் வைத்துக் கும்பிட்டு விட்டு வரச் சொல்வார். பவ்வியமாக வாங்கிக் கொண்டு சாமி அறைக்குள் போனதும் அந்த உருண்டையில் பாதியை வாயில் போட்டுக் கொண்டு, மீதியை உருட்டி உருண்டையாக்கிச் சாமி முன்பு வைத்துக் கும்பிட்டுவிட்டு வந்து மீண்டும் கொடுக்கட்டை செய்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பிப்பேன்.

அரிசி மாவு வெந்ததும் இறக்கி, லேசாக ஆற வைத்து, கையளவு மாவு எடுத்து, தட்டி, உள்ளே தீனியை வைத்து மூடி, மீண்டும் இட்லி தட்டின்மீது அடுக்கி அடுப்பில் வைப்பார். தட்டையான வடிவில் கொஞ்சம், கும்பம் வடிவில் கொஞ்சம், உருண்டை வடிவில் கொஞ்சம் என ஒவ்வொரு ஈடாக வேகவைத்து எடுப்பார். சூடு ஆற ஆற கொழுக்கட்டையை இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டு தோழிகளைப் பார்க்கச் சிட்டாகப் பறந்து விடுவேன். இப்படியே எடுத்துட்டு போனா சாயந்திரம் என்னத்த வைச்சு படைக்கிறது என அம்மா கேட்டதே இல்லை. ஆனால் இந்தக் கேள்வி அம்மாவுக்கு உதவி செய்யும் அக்காவிடமிருந்து வரும். அடுத்து வந்து கையை வை. அவ்ளோ தான் என்பார். விடும்மா அவளுக்குத் தானே செய்யறேன் எப்ப சாப்பிட்டாலும் அவ தானே சாப்பிடப் போறா என்பார் அம்மா.

கொழுக்கட்டை சூப்பர்மா என ஒருமுறை கூட அம்மாவிடம் சொன்னதில்லை. கொழுக்கட்டை என்றில்லை. அம்மா எனக்காக செய்து கொடுத்த எந்தத் தின்பண்டங்கள் பற்றியும் எந்தக் கருத்தையும் நான் வெளிப்படுத்தியதில்லை. சாப்பிடக் கொடுப்பதை அம்மாவுக்குத் தெரிந்தும், சிலசமயம் தெரியாமலும் எடுத்துக் கொண்டு போய் தோழிகளுடன் பகிர்ந்து சாப்பிடுவதுதான் எனது ஒரே குறிக்கோள்.

இப்போதெல்லாம் தோழிகளின் வீடுகளுக்குப் போனால் குழந்தைகள், அவர்கள் செய்து கொடுக்கும் உணவைச் சாப்பிடும் போது அம்மா மீனு சூப்பர் மா. சிக்கன் டேஸ்ட்டா இருக்கு மா, சாம்பார் நல்லா இருக்குமா, கேரட் சாதம் யம்மி என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கையில் உள்ளூர ஏக்கமும் சிறு குற்ற உணர்வும் வந்து போகும்.

அப்போது அம்மாவிடம் சொல்லாமல் விட்டதற்காக, கடைகளில் அல்லது தோழி வீடுகளில் சாப்பிடும் போது மறக்காமல் உணவின் சுவையைப் பாராட்டி விடுவேன். அதுவும் தள்ளுவண்டி கடைகளில் சாப்பாடு நல்லா இருக்கு எனச் சொல்லும் போது அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் இருக்கும். கொஞ்சம் நெருக்கமும்.

கொழுக்கட்டை, தேன் போல உள்ளிறங்கியது. சாப்பிட்டு முடித்து டீ கொண்டு வரச் சொன்னேன். பேப்பர் ப்ளேட்டை எடுக்க வந்த அக்காவிடம் கொழுக்கட்டை சூப்பர்க்கா. வீட்ல பண்ண மாதிரி இருந்தது என்றேன்.

அவ்வளவு நேரம் அடுப்பில் கொழுக்கட்டை வெந்து கொண்டிருப்பதை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அக்கா யோசனை களைந்து நிமிர்ந்து பார்த்தார்.

முகத்தில் பளிச்சென்ற புன்னகை.