ஞாயிறு, 31 மே, 2015

அம்மாவின் காதல் சிறுகதை - மனுஷி

புத்தாண்டு, புது மழையுடன் விடிந்திருந்தது. கீர்த்தி, மாயாவை எழுப்பி மாடிக்கு அழைத்துச் சென்று மழையில் நனைந்தாள். அம்மா, அவசர அவசரமாக துணிகளையும், பேஸ்ட் பிரஷ் சோப் எண்ணெய், டவல், ஜர்க்கின், சில புக்ஸ், பிஸ்கட்ஸ் என எல்லாவற்றையும் எடுத்துவைத்து, எதையும் சரிபார்க்க நேரமின்றி, குளித்துக் கிளம்பினாள். அன்றைக்கு அம்மாவின் நெறிகாட்டுதலில் மாயா தேநீர் தயார் செய்தாள்.

புத்தாண்டின் முதல் காலைப் பொழுதில் அருந்தும் முதல் தேநீர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தேநீரைச் சியர் சொல்லிப் பருகுவோம் என்று சொன்னாள். மாயாவுக்கு முந்தைய இரவில் வொய்ன் அருந்திய முதல் கணம் நினைவுக்குள் வந்து வந்து போனது.

********

புத்தாண்டு மலர இரண்டரை மணி நேரம் தான் மிச்சம் இருந்தது. ஒரு வருடத்தில் கடந்து வந்த நினைவுகளை அசைபோட மிச்சம் இருந்ததும் இந்த இரண்டரை மணி நேரம் மட்டும் தான். அம்மா எட்டு மணிக்கே செல்போனில் அழைத்திருந்தாள். அவளது குரலில் மழைச் சாரலின் உற்சாகம் தெறித்தது. அம்மா நல்ல மூடில் இருக்கா. நிறைய பேசலாம். இரவு முழுக்கத் தூங்கவே கூடாது. மறக்க முடியாத புத்தாண்டு கொண்டாட்டமாக, நினைவுகளில் சிறகடிக்கும் ஓர் இரவாக இது இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்தபடியே கீர்த்தியின் வீட்டு வாசலை வந்தடைந்தாள் மாயா.

வீட்டுக்குள் நுழைந்தபோது கதவு திறந்தே இருந்தது. ஹால் வெறிச்சோடியிருந்தது இரவின் தனிமையைச் சுவைத்தபடி. பெட் ரூமிலிருந்து பேச்சு சத்தம். கீர்த்தியும் அம்மாவும் தான்.

கீர்த்தியும் மாயாவும் உயிருக்கு உயிரான உயிர்த் தோழிகள். அம்மா, கீர்த்திக்கும் மாயாவுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்டுவதில்லை. விஷேச நாட்களில் கீர்த்தி வீட்டில் உள்ளவர்களுக்குப் புதுத் துணி எடுத்தால் மாயாவுக்கும் சேர்த்துதான் எடுப்பார்கள். நான்கைந்து வருடங்களாகவே வீட்டின் எல்லா விஷேச நாளிலும் மாயா இல்லாமல் இருந்ததில்லை. சொல்லப்போனால் மாயாவை அந்த வீட்டின் பெரிய பெண்ணாகத்தான் பார்த்தார்கள். விடுதியில் இருந்த நாட்களை விடவும் கீர்த்தியின் வீட்டில் தான் அதிகமாய் இருப்பாள். தூங்குவது, சாப்பிடுவது, குளிப்பது, படிப்பது என எல்லாமும் அங்கேதான். சில நேரங்களில் அம்மா சொல்வாள்

‘பேசாம ஹாஸ்டல் காலி செய்துவிட்டு இங்கேயே வந்து விடேன். எதுக்கு ஹாஸ்டலுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு. இதோ இன்னொரு பெட் ரூம் சும்மா தான் இருக்கு. அதை ஒழுங்கு பண்ணி நீ தங்கிக்கோ. உனக்கு போன் பண்ற செலவு மிச்சமாகும்’ என்பாள்.

‘அப்படியெல்லாம் வந்துட முடியாதும்மா. அப்பப்போ வந்து போனால்தான் வீட்டில் மரியாதை இருக்கும். மொத்தமா இங்கேயே வந்து தங்கிட்டா மனஸ்தாபம் வரும். மரியாதை இருக்காது. உங்க அன்பு எப்போதும் வேண்டும் தாயே. அருள் புரிவாயாக’

என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள் மாயா. அம்மாவுக்கும் புரியும் அவள் சொல்வதில் இருக்கும் நியாயம். அதனால் தவறாக நினைக்க மாட்டாள். தான் பெற்ற குழந்தைகள் என்றாலும் கூட அவர்களின் சுதந்திரத்திலும், அந்தரங்கத்திலும் அத்துமீறி நுழையக் கூடாது என்பதைச் சொல்லித் தந்தவள் அம்மா தான். அதேசமயம், எந்த நேரத்தில் அரவணைத்துக் கொள்ள வேண்டுமோ அந்த நேரத்தில் பாசங்கற்ற அன்புடன் அணைத்துக் கொள்ளத் தவறியதேயில்லை. அவளோடு எதைக் குறித்தும் வெளிப்படையாகப் பேசலாம். அவளைப் போல சிறந்த தோழியைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

          பெட் ரூம் முழுக்க துணிகளைக் களைத்துப் போட்டிருந்தார்கள். கதவுக்குப் பின்புறம் ஒரு பெரிய்ய்ய்ய சூட்கேஸ். களைந்து கிடக்கும் துணிக்குவியலில் இருந்து தேடித் தேடி சில சுடிதார்களையும், சில புடவைகளையும் எடுத்து மடித்து சூட்கேஸை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மாயாவுக்கு இப்படிக் களைத்துப் போடுவது பிடிக்காது. என்ன இதெல்லாம் என்பது போல கீர்த்தியைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்து கொண்டவளாய் ‘அம்மா நாளைக்கு டெல்லி போறாங்க. ஒரு மாதம் அம்மா தொல்லையிலிருந்து விடுதலை. அதான் பேக்கிங். வா. நீயும் ஹெல்ப் பண்ணு’ என்றாள். களேபரமான அறைக்குள் வந்து எப்படி உட்கார்வது என நின்று கொண்டேயிருந்தாள். மாயா, உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு என்றாள் அம்மா. சர்ப்ரைஸ் என்ன என்பதைச் சற்று நேரத்தில் புரிந்து  கொண்டாள். திறந்து கிடந்த காலி அலமாரியில் ஜம்மென்று நின்று கொண்டிருந்தார் ‘லா ரிசர்வ்’. விலையுயர்ந்த வொய்னாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பாட்டிலில் ஒருவிதக் கவர்ச்சி இருந்தது. பாசி நிறமா கருப்பு நிறமா என்று சொல்ல முடியவில்லை. அந்தப் பாட்டிலைப் பார்த்தவுடன் நடிகர் சத்யராஜ் வைத்திருக்கும் கர்லாக்கட்டைதான் நினைவுக்கு வந்தது. அதன் நீண்ட ஒல்லிக் கழுத்தைப் பிடித்துத் தலையைச் சுற்ற வேண்டும் போல இருந்தது. கை தவறி கீழே விழுந்து பாட்டில் நொறுங்கிவிட்டால் அவ்வளவு தான்.

          ‘அம்மா, இன்னைக்கு நைட் பார்ட்டியா வீட்டில்?’

          மனம் முழுக்க படபடத்தது. அந்த நிமிடமே மொட்டை மாடியில் நிலவொளியில் ஓர் அழகிய கண்ணாடிக் கோப்பையில் அந்தக் கருந்திரவத்தை நிரப்பி அம்மாவும் கீர்த்தியும் அவளும் சியர்ஸ் சொல்லியபடி வொய்னைச் சுவைக்கும் காட்சி வந்து போனது. முதல் மதுவைச் சுவைக்கும் அந்த நிமிடம் குறித்து நினைக்க நினைக்கப் போதை தலைக்கேறியது. ஒரு கிளாஸ் வொய்ன் முழுக்க உள்ளிறங்கியதும் போதையில் சுயநினைவின்றிப் போகுமோ? வாய் உளறிவிட்டால் என்ன செய்வது? வாந்தி எடுத்துவிட்டால் என்ன செய்வது? இது ஒருபுறம் இருக்க, மதுவருந்துவது குறித்து பெரிய விவாத நிகழ்ச்சியே மனதுக்குள் நடக்கத் தொடங்கியது. குடிப்பது ஓர் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக மாறியது. குடிப்பது சரியா? அதிலும் பெண் குடிக்கலாமா?

‘நேரம் ஆகிட்டே இருக்கு. ஸ்டார்ட் பண்ணலாமா? 12 ஆகும்போது இந்தப் பாட்டிலை நாம் முடித்திருக்க வேண்டும். இந்த வருடத்தின் கடைசி இரவு. கடைசி வொய்ன். கடைசி சியர்ஸ். கடைசி கோல்டன் ட்ராப்.’

சொல்லிக் கொண்டே பாட்டிலைத் திறந்தாள் கீர்த்தி. அம்மா அழகிய மதுக்கோப்பைகளையும் சிக்கன் 65, மற்றும் மரவள்ளி சிப்ஸ் ஆகியவற்றையும் கொண்டு வந்து வைத்தாள். களைந்து கிடந்த துணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு மூவரும் அமர்ந்து வொய்ன் அருந்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டது. வொய்ன் பாட்டிலைத் திறந்து அளவாக மூன்று கோப்பைகளிலும் ஊற்றினாள் கீர்த்தி. அளவைச் சரிபார்த்துக் கொண்டபின், தன் வொய்ன் கோப்பையைக் கையில் ஏந்தினாள். அம்மாவும்தான். மாயாவுக்குக் கைகள் உதறின. மனம் அதைவிட நடுங்கியது. செய்யக் கூடாத தவறொன்றைச் செய்வது போல இருந்தது. எதையும் செய்து பார்த்துவிடுவது என்று ஒரு மனம் சொன்னாலும் கலாச்சாரத்தில் ஊறிய மனம் அவளை அலைகழித்தது. கோப்பையைக் கையில் எடுத்துவிட்டு ரொம்ப நேரம் வைத்திருக்கக் கூடாது சீக்கிரம் எடு என்று துரிதப்படுத்தினாள் அம்மா. பிறந்த குழந்தையைத் தொட்டுத் தூக்கும் லாவகத்துடனும் ஆர்வத்துடனும் வொய்ன் கிளாஸை எடுத்தாள். சியர்ஸ் சொல்லி கிளாஸை உயர்த்திவிட்டு முதல் மதுவைச் சுவைத்தாள் மாயா. கசப்பு என்று சொல்லிவிட முடியாத ஒருவித கசப்பு அவள் நாக்கில் ஏறி தொண்டைக்குள் இறங்கியது. காது மடல்களில் வெப்பத்தை உணர்ந்தாள்.

அம்மா பேச்சைத் தொடங்கினாள். பேச்சின் இடையிடையே வொய்னை எடுத்து உறிஞ்சினாள்.

நான் என் பாய் ஃப்ரண்டைப் பார்க்கப் போறேன். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு. அதுக்காகத்தான் பேக்கிங். ஒரு மாசம் வர மாட்டேன். நீயும் இவளும் வீட்டைப் பார்த்துக்கனும்.

அம்மா, மாயாவுக்கு உன் லவ் ஸ்டோரியைச் சொல்லேன். நீ ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் எப்போ ரஹமதுவைப் பார்த்தன்னு சொல்லுமா என்றாள் கீர்த்தி. வொய்னுக்குச் சிறந்த சைட் டிஷ்ஷா என்றாள் மாயா.

அம்மாவின் முகம் சிவந்தது. அவள் கண்களில் காதல் ஒளி பற்றிக் கொண்டது. அவளது நாற்பது வயதும், அவளது திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களும் இன்னும் இன்னுமான எல்லாமும் இரவின் கருமையில் சென்று மறைந்து கொண்டன. பதினெட்டு வயது பெண்ணைப் போல காதல் கதையைச் சொல்ல வெட்கப்பட்டாள். ஆனால், சொல்லிவிடும் ஆர்வம் அவள் கண்களில் தெரிந்தது.

***********

ஏழு வருஷத்துக்கு முன்பு டெல்லிக்கு ஒரு அலுவலக வேலையா போயிருந்தேன். கூட என் அக்கா வீட்டுக்காரரும் சில நண்பர்களும் வந்திருந்தார்கள்.  என் அக்கா வீட்டுக்காரருக்கு என் மேல் அளவிடமுடியாத காதல். அதை என்னிடம் சொல்லியும் இருந்தார். விவாகரத்து ஆன புதிது. அவர் மீது அப்போது எந்த உணர்வும் அப்படி தோன்றவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை. எனக்காக எதையும் செய்யக் காத்திருந்தார். டெல்லிக்கு வந்ததும் கூட அந்தக் காதலினால்தான். ஏதாவது ஒரு கட்டத்தில் என் மனம் இறங்கிவிடாதா? காதலை ஏற்றுக் கொள்ள மாட்டேனா என்ற ஏக்கத்தில் தான்.

டெல்லிக்குப் போன வேலை முடிந்த அன்று பார்ட்டிக்குப் போயிருந்தோம். நான் அப்போதுதான் குடிக்கப் பழகியிருந்தேன். நண்பர்களோடு சேர்ந்து ட்ரிங்க்ஸ் பண்ணிவிட்டு வந்து ஹோட்டல் அறைக்கு வந்தோம். கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தூங்கப் போனோம். கொஞ்சம் போதை ஏறியிருந்ததால் படுத்தவுடன் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் டெல்லியைச் சுற்றிப் பார்ப்பதாகத் திட்டம். டாக்ஸிக்கும் சொல்லி வைத்தாகிவிட்டது.

காலையில் 6 மணி இருக்கும். டெல்லியின் குளிர் உறக்கத்தை விட்டு எழ விடாமல் அழுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அலாரம் தூக்கத்தைத் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. தொடர்ந்து அலாரமும் கதவு தட்டப்படும் ஓசையும் கேட்டுக் கொண்டேயிருந்ததால் ஒருவழியாக எழுந்து போதைத் தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்தேன்.

ஒல்லியான புகை மாதிரி ஓர் உருவம். கொஞ்சமாய் இமைகளைத் திறந்து பார்க்கிறேன். சுருக்கம் சுருக்கமான சட்டை. அங்கங்கே கிழிந்த அழுக்கு ஜீன்ஸ். சுருள் சுருளான செம்பட்டை முடி. பீடா கறை படிந்த உதடு. ஒட்டிப்போன கன்னம். அவன் நின்றிருந்தான். ஒரு கணம் என் இதயம் பூம் என்று நின்று இயங்கியது. என் காதுகளில் ஓர் குரல் சொன்னது.

“இதுதான் உன் காதல். இவன் தான் உன் மனம் இத்தனை நாளும் தேடிக் கொண்டிருந்த ஆன்மா. இவனுக்காகத்தான் நீ காத்திருந்தாய். இவனோடுதான் இனி உன் வாழ்க்கை. இவனைக் கைப்பிடித்துக் கொள்”.

அப்போது அவனது பெயர் என்ன? எந்த ஊர்? என்ன மதம்? எந்தச் சாதி? என்ன வயது? குடும்பம் எப்படிப் பட்டது? என்ன படித்திருக்கிறான்? என்ன வேலை செய்கிறான்? எதுவும் தெரியாது. ஆனால் குரல் சொன்னதை என் மனம் இறுகப் பற்றிக் கொண்டது. ஒரு கொடி, கொழுங்கொம்பைப் பற்றிப் படர்வது போல அந்தக் கணத்திலிருந்து காதல் எனக்குள் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தது. காதலின் மணத்தை உள்ளூர உணர்ந்தேன். அவனுக்குள் அப்படி மணம் கமழ்ந்ததா எனத் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பினேன்.

ஆனால், யார் நீ என்று தான் கேட்டேன்.

டாக்சி டிரைவர். பெயர் ரஹமது என்றான் இந்தியில்.

வெளியில் வெயிட் பண்ணு. கிளம்பிவிட்டு வருகிறோம் என ஓர் அதிகாரத் தோரணையில் சொல்லிவிட்டு கதவைச் சாத்தினாலும், அவனைப் பார்க்கச் சொல்லிக் கண்கள் கெஞ்சின. கண்களை மூடவே சிரமமாய் இருந்தது. கண் இமைகளுக்குள் அவனது முகம் வந்து சம்மனமிட்டு அமர்ந்து கொண்டது. அன்று இரவு போதையில் இருந்ததை விடவும் அதிக போதையில் இருந்தேன். நான் யார் என்பது கூட என் நினைவில் இல்லை.

டெல்லியைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். காரில் ஏறிய பிறகு கொஞ்சம் ஆங்கிலமும் நிறைய இந்தியும் கலந்து பேசிக் கொண்டே வந்தான். அவன் பேசியதில் இருந்து அவனைப் பற்றிய சில செய்திகள் அறைகுறையாய் தெரிந்தது. அவனுக்குப் பெற்றோர் இல்லை. டெல்லியில் ஸ்லம் ஏரியாவில் வளர்ந்தவன். பள்ளிக்கூடம் போக வாய்ப்பில்லை. இப்போது 25 வயதுதான் ஆகிறது. 5 வருடமாக டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறான். என்னோடு இருந்தவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னான். அவனும் சில கேள்விகளைக் கேட்டான். உரையாடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அவன் குரலைக் கேட்பதும், அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுமே போதுமென்றிருந்தது எனக்கு. பரவசத்தில் கால்கள் உயரப் பறந்தன. விவாகரத்து ஆன பிறகு, முப்பத்தைந்து வயதைக் கடந்த பிறகு ஒரு இந்துக் குடும்பத்தில் அதுவும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்குக் காதல் வருமா? வரலாமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இடமேயில்லை என் காதலில். அவனைப் பார்த்த அந்தக் கணத்திலிருந்து உன்மத்தமேறித் திரிந்தேன். இப்போதுவரை அந்தப் பைத்தியநிலை மாறவேயில்லை.  

டெல்லியைச் சுற்றிக் காட்டிவிட்டு மீண்டும் ஹோட்டல் வாசலில் காரை நிறுத்தினான். டாக்ஸிக்கான ஒருநாள் வாடகையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பும்போது அவனிடம் ‘என்னோடு வர்றியா?’ என்று அவன் கண்களைப் பார்த்துக் கேட்டேன். அவன் கண்களில் ஏக்கத்தைப் பார்த்தேன். ஓர் அன்புக்காக அவன் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான் என்று அவன் முகம் சொன்னது. நான் கேட்டவுடன் அவனும் ஒரு கணமும் யோசிக்காமல் ம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். அவன் ஓக்கே சொன்ன அந்தக் கணம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனக்குள் ஒலித்த குரல் அவனுக்கும் கேட்டிருக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

இத்தனை வருட காதல் வாழ்க்கையில் நிறைய சண்டை. நிறைய வாக்குவாதம். ஒருமுறை சண்டை முற்றிப் போய் ஒரு பெரிய கட்டை எடுத்து என் தலையில் அடித்துவிட்டான். அன்றே நான் இறந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. மோசமான கெட்ட வார்த்தைகளைப் பேசும் போட்டி வைத்தால் அவன் தான் ஜெயிப்பான். அவ்வளவு அசிங்கமாகத் திட்டுவான். அவனுடைய ஒவ்வொரு சொல்லையும் கேட்கும்போதெல்லாம் இனியும் ஏன் இருக்கனும் செத்துப் போயிடலாம்னு தோன்றும். அவனுக்கு ரொம்ப தாழ்வு  மனப்பான்மை. தான் படிக்கல என்று. என்னைவிட பத்து வயது சிறியவன். அதனால் என்னை விட்டு வேறு பெண்ணிடம் போய்விடுவானோ என்று எனக்குச் சின்ன இன்செக்யூரிட்டி காம்ப்ளக்ஸ். ஈகோ. இவனோடு வாழும் வாழ்க்கைக்குக் குடும்ப வாழ்க்கையையே சகித்துக் கொண்டு இருந்திருக்கலாமோ என்றுகூட ஒரு சிலநேரம் தோன்றும். ஆனால், அப்படி அவனை விட்டுப் போக முடியல. ஏதோ ஒரு புள்ளியில் மிக தீர்க்கமாக அவனோடு நான் கரைந்து போயிருக்கிறேன். அவனிலிருந்து என்னால் மீள முடியுமெனில் அது மரணம் என்னைத் தொடும் நாளாகத்தான் இருக்கும்.

புத்தாண்டின் முதல் நொடியை அறிவிக்கும் விதமாக வெளியில் பட்டாசு சத்தங்கள் இரவை விழிக்கச் செய்தன. சாலையில் ஹேப்பி நியூ இயர் என்று கத்தியபடி பைக்குகள் விரைந்து கொண்டிருந்தன. 

அம்மா, தனது காதல் நினைவுகளில் மூழ்க மூழ்க வொய்ன் காலியாகிக் கொண்டே போனது.

****************

இரயில் நிலையத்தில் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். இன்னமும் தூறிக் கொண்டிருந்தது வானம். பிளாட்பாரத்தில் இருந்த யாரும் மழைத்தூரலைப் பொருட்படுத்தவேயில்லை. அம்மா, இரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக மழைத்துளிகளை இரசித்தாள். வெளியே கை நீட்டியவள் என் கைகளை அவை முத்தமிட்டு மோட்சமடைகின்றன என்றாள். இரயில் தன் பயணத்தைத் துவக்கியபடி நகரத் துவங்கியது. கையசைத்து வழியனுப்பினார்கள் இருவரும். அம்மாவின் கால்கள் அரூபமாய் மேலெழுந்தன. அவள் மனம் ஒரு பறவையைப் போல மாறிக் கொண்டிருந்தது. காதல் வானமாக உருமாறியது.

(நன்றி : உயிர்மை ஜூன் மாதம் இதழ், 2015)

வியாழன், 28 மே, 2015

காலத்தின் கரங்களில் உறங்கும் தேவமைந்தன்

காலத்தின் கரங்களில் உறங்கும் தேவமைந்தன்

-- மனுஷி

தண்டவாளம் அருகில் சிதைந்து கிடந்தது

வெறும் உடலல்ல

சாதியம் தின்று துப்பிய

உன் காதல்

 

உன் குருதி சுவைக்கவென

வெறிகொண்டு அலைந்த வீச்சரிவாள்கள்

மெல்ல ஆசுவாசம் கொண்டுவிட்டன

உன் வேரறுத்த களைப்பில்

 

உன் மரணத்தால்

சில முகமூடிகளைக் கிழித்தாய்.

முகமற்று அலைகிறது

வரட்டு கௌரவத்தால்

உடல்களைப் பிரித்த

ஒரு கூட்டம்.

 

உடல்தான்

இங்கே தீட்டு

உடல்தான்

இங்கே பகை

உடல்தான்

இங்கே வீழ்த்தப்படும் ஆயுதம்

உடல்தான்

இங்கே பலி பொருள்

 

உடலை வீழ்த்திய பின்

களியாட்டம் கொள்ளும் குள்ளநரிகள்

காதலில் கறைந்து போன மனதை

என்ன செய்யும்?

மனதுக்குள் ஒளித்துவைத்த

காதலை என்ன செய்யும்?

கௌரவத்தின் பெயரால்

சாதியின் பெயரால்

எப்போதும்

அறுக்கப்படுவது

திவ்யாக்களின் தாலிக்கள்தான்.

சிதைக்கப்படுவது

இளவரசன்களின் உயிர்கள் தான்.

 

எரிக்கப்பட்ட குடிசைகளிலிருந்து

பற்றிப் பரவிய தீ

இன்னும் அணையவேயில்லை

அது காதலின் பாடலை

உரக்கப் பாடி ஆடுகிறது

கௌரவக் கொலைகாரர்களின்

குறிகளை ஓங்கி மிதித்தபடி

 

நடுகல் வீரனே!

நீ சுமந்து திரிந்தது

ஆதிக் காதலின் எச்சம் என

காலம் சொல்லும்

ஏனெனில்,

நீ காலத்தின் கரங்களில் உறங்கும்

தேவமைந்தன்

வெள்ளி, 15 மே, 2015

முத்தங்களின் கடவுள்

புற்கள் எப்பொழுதும் பச்சையாக இருப்பதில்லை

மனுஷியின் முத்தங்களின் கடவுள் கவிதை நூலை முன்வைத்து

- பால்ராஜ்

மனுஷியின் முத்தங்களின் கடவுள் வாசிப்பில் முளைத்த சொற்களின் நிறங்கள் கண்கள் கூசாதவை. யாரும் கடந்தே ஆகவேண்டிய அனுபவங்களேயானாலும் ஒரு கலைடாஸ்கொப்பில் கிடைக்கும் ஒளிச் சிதறலை அனுபவமாக்கத் துடிக்கும் இளமையின் பரபரப்பும் பரவசமும் தொடரும் துயரமுமேயான மனப்பதிவுகள் கவிதைகளாகின்றன.  எந்த அனுபவத்தின் அவமானத்தையும் துடைப்பதற்கு எழுத்தைத் தனதாக்கி அதையே தனது கடந்து செல்வதற்கான பாதையாய் சமைக்கும் விந்தைத் துணிச்சல் மனுஷிக்கு கவிஞர் என்பதால் இருக்கிறது.  கவிதை என்பதால் வாசகனுக்குக் கடந்து வருகிறது.  

யாருக்காகவும் எழுத முடியாது.  பட்டாம்பூச்சிபோல் வண்ணம்காட்டி திடீரென வந்துபோன சாரலாய் உதிர்ந்த கணங்கள் மனதில் அப்படியே உறைந்து உள் உறங்கிக் கிடக்கிறது.  அபூர்வமாய் கிடைத்த நாளொன்றில் நினைவுகளின் மணம் தடவிச் சென்று பின்பும் சில்லென்று பூத்துக் கிடக்கிறது.  சந்திக்கவே முடியாத தூரங்களுக்கு அப்பால் இருந்துகொண்டு காலம் தாண்டி கவிஞர்களுக்குத் தன் அனுபவத்தால் கடத்திவிட முடிகிறது.  காயங்களுக்கு மருந்திட அமானுஷ்யமாய் நட்பின் விரல்கள் நீள்கின்றன கவிதைகளின் திசை நோக்கி.  அவளுக்கான ஒரு கவிதையென அவளே விட்டுச்சென்ற நாட்கள் அப்படியே உயிர்த்திருக்கிறது சொற்களில். தொடர்ந்து அகதியாக்கப்பட்டு தனிமையின் நட்போடு தன் வாழ்க்கையைப் புதுப்பிக்க சொற்களின் போதையில் நிரம்பி கிடக்கிறாள்.  ஆணின் தீராத பகைப் புலத்தில் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பலியாகாமல் கவிதைகள் மூலம் குட்டி தேவதையாகிறாள்.  யசோதையின் தனிமையை... கண்ணகியின் தனிமையை... சீதையின் தனிமையை எனப் புராண காலத்திலிருந்து ஆண்களின் அறஉலகில் தண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றுவரை பரிசளிக்கப்படுகிறது தனிமை.  பெண்களைச் சித்திரவதை செய்வதன்மூலமே அவன் சுயசித்திரவதை செய்து கொள்கிறான்.

நிலவொளியால் அறைகள் புனிதமாகின்றன.  தினமும் நிலா பார்ப்பவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  நிலாவின் பாடம் கேட்கும் குழந்தைகள் கவிஞர்களாவது நிச்சயம்.  காணமல்போன கவிதையை அவள் தேடுகிறாளா?. அவளைப்பற்றி இல்லாத கவிதை தொலைந்து போகட்டும் என்கிறாள்.  அவளிடம்தான் அக்கவிதை முதலில் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் குழந்தையின் பொசசிவ்னஸ் கவிஞருக்கே உரித்தானது.  

ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பவன் அவளோடு விபச்சாரம் செய்தவன் ஆகிறான்.  யாரொருவர் பாவம் செய்யாதிருக்கிறார்களோ அவர்கள் இப்பெண்ணின்மீது முதல்கல்லை எறியக்கடவன்.  பிதாவே இவர்களை மன்னித்தருளும்.  இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசுவால் இன்னும் கவிஞர்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்டுள்ளது.  பலிபீடத்திற்கு தானே செல்லும் ஆட்டின் அன்பு... கவிதையில் எப்பொழுதும் பலியாவது கவிஞர்களின் பண்பு... காரியவாதிகள் பிவீர்த்துக்கொள்ளட்டும்... ஆதியிலே வார்த்தைதான் இருந்தது.

தன்னோடு பகிர மறுக்கும் யாரையும் தீட்டாக்கும் ஆணின் வக்கிர உளவியலை ஒப்புக்கொள்கிறான் வாசகன்.  சொந்த ஆண் சாதிக்குத் துரோகம் செய்து வாசகன் என்ற அடையாளத்தையாவது தக்க வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான ஆசையே அது.  தனக்குள்ளது தன்னுடையது புனிதம்.  மற்றதெல்லாம் தீட்டு.  காலம் தன் கோபத்தை பெண்களின் சாபத்தில் சேமித்து வைத்திருக்கிறது போலும்.  இயல் பூக்கங்களை பேண வாய்ப்பற்ற ஓர் உயிரிக்கு வழங்க முடியாத வறண்ட நிலத்தில் கவிதைகள் வழியாகவேனும் வெறுமையைக் கடந்து செல்லமுடியுமாகிறது.

காலையில் கரையும் காகங்கள்... கரைய எழுந்தால் அவன் கடவுளாகிறான்.  சிற்றுயிர்களிடம் இரவில் பேசும் ஒருத்தி தேவதையாகத்தான் இருக்கவேண்டும்.

ஆணின் அக்கறை... அன்பு... பரிவு... பகிர்தல் எல்லாம் ஒப்பனையாகிறது.  தின்று செரிக்கமுடியாத போலி ரப்பர் வார்த்தைகள்.  அவளுக்குத் தெரியும் எது வாழ்வு... எப்படி வாழ்வு என்பது.  அதேபோல் உன் வாழ்வும் மரணமும்.

விலக்கப்பட்ட கனி தரும் மரத்தைக் கடவுளே ஏன் படைத்தார்.

சாத்தானை அவரால் கொல்ல முடியாதா?. அல்லது இரட்டைப் பிறவியா.  புலனடக்கி வாழும் புண்ணியவான்கள் கருணையற்று சொத்து சேர்ப்பதும்... இரகசியமாய் பாவங்கள் செய்வதும்... கோயில்களுக்கு அலைவதும்... அறம்பாடுவோர் செய்யும் சீலங்கள்.  இலட்சுமணக் கோடுகளைச் சீதைகள் தாண்டுவார்கள்?. இன்பத்துப்பால் பாடிய வள்ளுவப்பெருந்தகை சொல்கிறான் மிகினும் குறையினும் நோய் செய்யுமென்று.

ஏலே பேரா சீனிக்கிழங்கு... மொச்சையும் உங்க ஆத்தாளுக்குத் தெரியாம வாங்கிட்டு வாவேன் என்ற அப்பத்தாளும்

ஏலே தாத்தாவுக்கு டவுனுல அலுவா வாங்கிட்டு வாவென்று சொன்ன தாத்தனுக்கும் உணவின் கதையை வாசித்துக் காட்டினேன்.

அன்பின் வாதையால் பேயாடும் மனம் கொண்ட பெண்கள்தான் துருப்பிடித்த ஆணிகளால் அறையப்பட்டுச் சிலுவையில் தொங்கும் சாத்தான்களை விடுவிக்கமுடியும்.  கவிதைகள் படிக்க மாயாஜாலமாய் ஆணிகள் கழன்றுகொள்ள வாய்ப்புள்ளது.

ஆங்கிலத்தில் வெள்ளிக்கிழமையை 
Unlucky day  என்று வைத்தது பெண்களின் தற்கொலை நாளாவது தற்செயலானது.

மனுஷியின் கவிதைகளில் மனிதர்களின் நேர்மறையான எதிர்மறையான உணர்ச்சியின் கொந்தளிப்பில் வார்த்தைகள் ரசவாதமாகின்றன.  சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் வேலிகளால் நெய்யப்பட்ட ஒழுக்க அற மதிப்பீடுகளைத் தன் அறியாமையின் மூலம் மதிக்காத குழந்தைகள் போல அசாதாரணமாய் தாண்டிச் செல்கிறார்.  இன்னும் தாண்டுவதற்கு அவருக்கு வலு உண்டு... தாண்டுவார் என்பது வாசகனின் ஆசை. 

வெளியீடு : உயிர்மை பதிப்பகம், 

11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&600 016.

தொலைபேசி :  +91 44 & 24993448.  மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

பக்கங்கள் : 96  & விலை ரூ 80/-
(நன்றி : தளம் காலாண்டிதழ்)