திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பாரதி என்றொரு மனிதன் -- மனுஷி

சென்னைக்குப் போவதா வேண்டாமா என்கிற குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் கிளம்பத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாகிவிட்டது. பக்கத்து வீட்டில் பால் பாக்கெட்டுகளைக் கொடுத்து நாய்க்குட்டிக்கு வைக்கச் சொல்லியாகிவிட்டது. அவன் குலைத்துக் கொண்டேயிருப்பான். ஆனாலும் என்ன செய்வது? முழுநேரமும் அவனோடு இருக்க முடியாது என்பதை அவனுக்கு என்ன மொழியில் சொல்லிப் புரிய வைப்பது? மெல்லமாய் அணைத்துக் கொண்டேன். மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். தலையைத் தடவி விட்டேன். தலையைத் தூக்கி நாவால் கையை நக்கினான். இரண்டு நிமிடம். பிறகு மணியாகிடுச்சு தம்பி என்றபடி நெற்றியில் முத்தமிட்டு, அவன் குரைக்கக் குரைக்க போக மனமில்லாமல் இரும்புக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறினேன். போகாதே என்று சொல்வது போல குரல் உயர்த்திக் கத்தினான். தெருமுனை வரை குரைப்புச் சத்தம் கேட்டது குழந்தையின் அழுகுரல் போல .

வார விடுமுறை நாள் தான் என்றபோதும் பேருந்து காலியாகவே இருந்தது. பஸ் ஏறிவிட்ட செய்தியை மட்டும் சொல்லிவிட்டு 'எங்கதே' (இமையம்) நாவலில் மூழ்கினேன். கமலா, மனம் முழுக்க உலவிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தேவதையின் சாயல். கமலாவோடு பயணித்துக் கொண்டிருக்கையில் சட் சட் என்று மழைத்துளி கைகளின் மேலும் பேண்ட் மீதும் விழுந்தன. அப்போது தான் கவனித்தேன். வெளியில் குளிர்ந்து வானம் மழையைச் சுமந்து கருத்திருந்தது. சின்ன சின்ன முத்துத் தூரல்களால் சாலை பொலிவாக இருந்தது. கமலாவை விடவும் மழை முக்கியம் என மனம் சொல்ல, புத்தகத்தை மூடிப் பத்திரமாக உள்ளே வைத்தேன். கடந்தமுறை பயணத்தில் வாசித்துக் கொண்டு வந்த 'அப்பத்தா' (பாரதி கிருஷ்ணகுமார்) சிறுகதைத் தொகுப்பு கைமறதியாய் எங்கோ காணாமல் போனது மனதுக்குள் வருத்தமாய் வந்து உறுத்தியது. (இப்போது அப்பத்தாவைக் கடன் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன்). முகத்தில் வந்து விழுந்த மழைத்துளிகள் 'பரவாயில்லை வேற புக் வாங்கிக்கலாம்' என ஆறுதல் சொல்வன போல இருந்தன. மழையை ரசிக்க ஒரு மழை மனசு வேண்டும். நல்லவேலையாக அப்போது செல்போனில் சார்ஜ் இல்லை. கூடுதலான மகிழ்ச்சி இந்த மழைப் பயணத்தில்.

பேருந்து மத்திய கைலாஷ் போகாது என்றதும் போச்சுடா என்று மனம் விட்டுப் போனது. தூறல் தூறிக் கொண்டு தான் இருந்தது. ஆட்டோவில் கேட்டால் எண்பது ரூபாய் என்றார் ஆட்டோக்காரர். அறுபது ரூபாய்க்குப் பேசி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் எழுபது ரூபாய் கொடுப்பது என முடிவுக்கு வந்து ஆட்டோவில் ஏறினேன். சிக்னல், மழையில் நனைந்து கொண்டிருந்தது. அனுமன் வால் போல சிக்னலில் நனைந்தபடி நின்றிருந்தன வாகனங்களும் பைக்குகளும். நல்லவேளை ஹார்ன் அடித்து யாரும் எரிச்சல் படுத்தவில்லை.

சிக்னல் கடந்தவுடன் கொஞ்சம் விரைவாகச் செல்லும்படிச் சொன்னேன்.தமிழ் நல்லா பேசுறிங்களே.  தமிழ் தெரியுமா? என்றார்.நல்லா தெரியுமே என்றதும் பார்த்தால் வடநாட்டு பொண்ணு போல இருக்கிங்க அதனால் கேட்டேன் என்றார். அவர் சொன்னதும் ஒரு முறை ஆட்டோவில் இருந்த சின்ன வட்டக் கண்ணாடியைப் பார்த்தேன்.
தேடித் தேடி வாங்கிய கருப்பு முழுக்கை டீ சர்ட். மூடிய கழுத்து. வெளிர் நீல ஜீன்ஸ். முடியை வாரிச் சுருட்டி கிளிப் போட்டிருந்தேன். இடது முன் நெற்றியோரம் கற்றை முடி தவழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பொட்டும் இல்லாமல் வடநாட்டுப் பெண் என்று நினைப்பதற்கான தோற்றச் சாயலுடன் முகம் இருந்தது. சிரித்துக் கொண்டேன்.
எப்போதும் போல அடுத்த கேள்வி. படிக்கிறிங்களா வேலை பார்க்கறிங்களா? என்றார். படிக்கிறேன். பிஎச்டி தமிழ் என்றேன். ஓ. பார்த்தால் ஸ்கூல் பொண்ணு போல இருக்கிங்க. இது எல்லாரும் சொல்கிற வார்த்தை தான். பெரிதாய் காட்டிக் கொள்ளவில்லை. உள்ளுக்குள் மட்டும் என்னையும் அறியாமல் சந்தோஷமாகப் புன்னகைத்தேன். பிஎச்டியில் என்னமா படிப்பிங்க என்றார். நான் பாரதியார் பற்றிப் படிக்கிறேன் என்றேன். காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடினாரே அவரா என்றார். அப்போது தான் வெளியில் மழையைப் பார்ப்பதை விட்டு அவரைப் பார்த்தேன். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோற்றம். தலையில் இளமை மிச்சமிருப்பதன் அடையாளமாக அங்கங்கே சிறு சிறு கருப்பு முடிகள். பாரதியின் வரிகளைச் சொல்லி பாரதியாரைப் பற்றி நினைவு கொண்டதால் அவர்மீது மரியாதை வந்தது. பாரதியார்னாலே கம்பீரம் தான் ஞாபகத்துக்கு வரும். எங்க ஸ்கூல்ல பாரதியார் பத்தி படிக்கும்போது எங்க சார் சொல்வார் முறுக்கு மீசை. மிடுக்கான நடை. அகண்ட கண்கள். கருப்புக் கோட் போட்ட கம்பீரமான மனுஷன் என்று சொல்வார் என்றதும் எனது உடல் புல்லரித்தது. பாரதிக்கு ஒரு தெளிவு இருந்தது யாருக்காக எழுத வேண்டும் என. அது நிறைவேறி இருப்பதாக உணர்ந்தேன். மலையாளத்தில் பஷீரை மக்கள் தெரிந்து வைத்திருப்பது போல பாரதிக்குப் பிறகு தமிழில் யார் இருக்கிறார்கள் என்று யோசித்தபடி இருந்தேன்.
இந்த காலத்துப் புள்ளைங்களுக்கு தமிழ்னாலே கசக்குது. பரவால்ல நீயாவது தமிழ்ல பேசுற. தமிழ் எடுத்துப் படிக்கற. நல்லா இருக்கும் வாழ்க்கை என்றார். சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. நீர்ப்பூக்கள் என் தலையில் விழுந்து வாழ்த்திவிட்டு அவரது வார்த்தையை உறிஞ்சிக் கொண்டன.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

எனக்குப் பிடித்த சிறுகதை - வெறும் நுரை -- டொனால்ட் ஏ ஏட்ஸ்

உலக சிறுகதை

வெறும் நுரை

(டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர். பத்திரிகையாளராகவும், அயல் உறவுத்துறை அதிகாரியாகவும் செனட்டராகவும் பணியாற்றியவர். நிறைய கட்டுரைகளும், குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் எழுதியவர். 'வெறும் நுரை மட்டும்' என்ற இந்த கதையாலேயே கொலம்பியா முழுக்க பிரபலமடைந்தவர். லத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்புகளில் அடிக்கடி இடம்பெறும் கதை இது. Patmenees என்பவரால் தொகுக்கப்பட்ட 'Contemporary Latin American, Short Stories (1974)’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு தேர்ந்த தொழிலாளி. தன் தொழில் மேல் தான் கொண்ட மரியாதையை எந்தக் காரணத்தாலும் சிதைத்துக் கொள்ளமாட்டான். வாய்ப்பு கிடைத்தாலும் கூட, ஒரு கலைஞன் தன் கடமை தவறமாட்டான் என்கிறது இந்த உலகப் புகழ் பெற்ற சிறுகதை.)

உள்ளே நுழைந்தபோது அவன்  ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக் கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை. என்னுடைய உணர்ச்சியை மறைத்துக்கொள்ளும் முயற்சியில் நான் தொடர்ந்து தீட்டிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் அவனுடைய துப்பாக்கி உறை தொங்கவிடப்பட்டதும், குண்டுகள் பொருத்தப்பட்டதுமான பெல்ட்டை அவிழ்த்து சுவற்றிலிருந்த ஒரு கொக்கியில் தொங்கவிட்டு அதன்மேல் தன்னுடைய ராணுவத் தொப்பியை வைத்தான். பிறகு என் பக்கம் திரும்பி கழுத்துப்பட்டியின் முடிச்சை நெகிழ்த்திக்கொண்டு, "வெப்பம் கடுமையாக இருக்கிறது எனக்கு சவரம் செய்து விடு'' என்று நாற்காலியில் உட்கார்ந்தான்.

நான் கவனமாக சோப்பைத் தயாரித்தேன். சிறு துண்டுகளாக வெட்டி கப்பில் போட்டு கொஞ்சம் வெந்நீர் விட்டு பிரஷ்ஷால் கலக்க ஆரம்பித்தேன். உடனே நுரை எழத் தொடங்கியது. 'எங்கள் பிரிவில் இருக்கும் மற்ற சிப்பாய்களுக்கும் இதே அளவு தாடி இருக்கும்' என்று அவன் சொன்னான். புரட்சியாளர்களை பிடிக்கும் பரபரப்பில் சில நாட்களாக இவனும் இவனது குழுவினரும் சவரம் செய்யவில்லை. நான் நுரை கலக்குவதைத் தொடர்ந்தேன். 

"நாங்கள் காரியத்தை சரியாகச் செய்தோம். தெரியுமா. முக்கியமானவர்களைப் பிடித்து விட்டோம். சிலரைப் பிணமாக எடுத்து வந்தோம்; சிலரை உயிருடன் பிடித்துள்ளோம். ஆனால் விரைவில் அவர்கள் எல்லாரும் இறப்பது நிச்சயம்.'

"எத்தனை பேரை பிடித்தீர்கள்?'' நான் கேட்டேன்.

"பதினாலு பேர். காட்டுக்குள் ரொம்பதூரம் போய்தான் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்களைப் பழிவாங்கியே தீருவோம். ஒரு ஆள்கூட இந்த வேட்டையில் உயிர்தப்ப முடியாது'' என்றபடியே நாற்காலியில் பின்புறமாக சாய்ந்தான். 

'எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்' என்றான் அவன்.

'ஆமாம்' என்றேன்.

'அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் நடந்தது அற்புதமான சம்பவம், இல்லையா?'

'ஆமாம். நன்றாக இருந்தது' என்று சொல் லியபடி பிரஷ்ஷை எடுக்கத் திரும்பினேன்.

களைப்பை வெளிப்படுத்தும் பாவத்தோடு அவன் கண்களை மூடிக்கொண்டு சோப்பின் குளிர்ச்சியான ஸ்பரிசத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நெருக்கமாக எப்போதும் அவன் என்னருகில் இருந்ததில்லை. நான்கு புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதைப் பார்ப்பதற்காக பள்ளிக்கூட உள்முற்றத்தில் நகர மக்கள் எல்லாரையும் கூடச் சொல்லி அவன் உத்தரவிட்டிருந்த அந்த ஒரு நாளில் அவனை முகத்துக்கு நேராக ஒரே ஒரு கணம் பார்த்திருக்கிறேன். சிதைந்துபோன உடல்களின் கோரக் காட்சி, அன்றைய சம்பவத்தை ஏவி நடத்திய அவனுடைய முகத்தை நான் பார்ப்பதைத் தடுத்தது. அந்த முகத்தை இப்போது நான் என் கையில் ஏந்தப் போகிறேன்.

அவனுடைய பெயர் கேப்டன் டோரெஸ். கற்பனை நிரம்பியவன்தான். ஏனென்றால் வேறு யார் புரட்சியாளர்களை நிர்வாண மாக்கி தூக்கிலிட்டபிறகு சுட்டுப் பயிற்சி பெற அவர்களுடைய உடல்களை இலக்குக் குறிகளாக்குவார்கள்?

சோப் நுரையைப் பூசுவதை நிறுத்திவிட்டு ஆர்வம் தொனிக்காத பாவனையில் கேட்டேன், 'புரட்சியாளர்களை சுட்டுக் கொல்லப் போகிறீர்களா?'

'அதுமாதிரிதான். ஆனால் போன தடவைபோல வேகம் இருக்காது.'

அவனுடைய தாடிக்கு நான் தொடர்ந்து சோப் நுரையைத் தடவினேன். என்னுடைய கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அதை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எனக்கு சாதகமாக இருந்தது. அவன் என்னுடைய கடைக்கு வராமலிருப்பதையே நான் விரும்பியிருப்பேன். என்னுடைய குழுவிலிருக்கும் பலபேர் அவன் இங்கு நுழைந்ததைப் பார்த்திருக்கக்கூடும். 

என்னிடம் வரும் எந்த வாடிக்கை யாளருடைய தாடியையும், கவனமாக வும், மென்மையாகவும் எந்த ஒரு மயிர் கண்ணும் ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட வெளியேற்றாதபடியும் சவரம் செய்யும் கடமை எனக்கு உண்டு. நான் ஒரு ரகசிய புரட்சியாளன் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயம் நான் ஒரு மனசாட்சி யுள்ள நாவிதனும்தான். என்னுடைய தொழிலுக்குத் தேவைப்படும் துல்லியம் குறித்த பெருமிதமும் எனக்குண்டு.

ஒரு பக்க காதோர முடி யிலிருந்து கீழ்நோக்கி  சவரத்தைத் தொடங்கி னேன். கண்களை மூடிக் கொண்டிருந்த அவன் அப்போது கண்களைத் திறந்து துணியின் அடியி லிருந்து ஒரு கையை எடுத்து சோப்பு நுரை நீங்கி சவரம் செய்யப்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்துவிட்டு சொன்னான். 'இன்றைக்கு ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.'

'அன்றைக்கு நடந்தது போலவா?' என்று பீதியுடன் கேட்டேன்.

'அதைவிட மேலானதாகவும் இருக்கலாம்' என்றான் அவன்.

மீண்டும் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். நான் சவரத்தைத் தொடர்ந் தேன். 

'அவர்கள். எல்லாரையும் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா?' மருட்சியுடன் கேட்டேன்.

'எல்லாரையும்தான்.'

இப்போது மறுபக்க காதோர முடியிலிருந்து சவரக்கத்தி கீழ்வாக்காக இறங்கியது. கழுத்துப்பகுதியை மிருதுவாக சவரம் செய்ய முயன்றேன்.

எங்களில் எத்தனை பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரின் உடல்களை உருக்குலைக்க அவன் உத்தரவிட்டிருக்கிறான்? அதைப் பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுடைய எதிரி என்பது டோரெஸுக் குத் தெரியாது. பிறருக்கும் தெரியாது. கொஞ்ச பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. அப்படி இருந்தால்தான் நகரத்தில் டோரெஸ் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையும், புரட்சி யாளர்களை வேட்டையாட அவன் என்ன திட்டமிடுகிறான் என்பதையும் என்னால் புரட்சியாளர்களுக்குத் தெரிவிக்க முடியும்.

நான் ஒரு புரட்சியாளன். கொலைகார னில்லை. இவனைக் கொல்வது எவ்வளவு எளிதானது. கொல்லப்பட வேண்டியவன் தான். 

ஒரு சிறு சத்தத்துடன் இந்தத் தொண்டையை என்னால் அறுத்துவிட முடியும்! எதிர்த்துப் போராட அவனுக்கு நான் நேரம் தரமாட்டேன். கண்களை மூடிக்கொண்டிருப்பதால் மின்னும் கத்தி யையோ அல்லது என்னுடைய மின்னும் கண்களையோ அவன் பார்க்கமாட்டான்.

ஒரு உறுதியான இழுப்பு, ஒரு ஆழ்ந்த வெட்டு எந்த வலியையும் தடுத்துவிடும் என்று நான் திடமாக நம்புகிறேன். அவன் துன்பப்படமாட்டான். ஆனால் நான் அந்த உடலை என்ன செய்வது? எங்கே மறைப் பேன்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் வெகு தொலைவில் எங்காவது அடைக்கலம் தேடவேண்டியிருக்கும். ஆனால் என்னைப் பின்தொடர்ந்து அவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள். 'கேப்டன் டோரெஸைக் கொன்றவன். அவனுக்கு சவரம் செய்யும்போது அவனுடைய கழுத்தை அறுத்தவன்-கோழை' என்பார்கள்.

அடுத்து மறுதரப்பில்  'நம் எல்லார் சார்பிலும் பழிவாங்கியவன். நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய பெயர் அவனுடையது. அவன் நம் ஊரில் நாவிதனாக இருந்திருக் கிறான். நம்முடைய போராட்டத்தை ஆதரித்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை' என்பார்கள்.

கொலைகாரனா? அல்லது வீரனா? இந்த சவரக்கத்தியின் முனையைச் சார்ந்து தான் என்னுடைய விதி இருக்கிறது. என்னுடைய கையை லேசாக திருப்பி, கத்திக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அதை உள்ளே அமிழ்த்திவிட முடியும்.

ஆனால் நான் ஒரு கொலைகாரனாக ஆக விரும்பவில்லை. நீ வந்தது சவரம் செய்துகொள்வதற்காக. நான் என்னுடைய வேலையை கௌரவமாக செய்கிறேன். என்னுடைய கைகளில் ரத்தம் படிவதை நான் விரும்பவில்லை. வெறும் நுரை மட்டும் போதும். நீ தூக்கிலிடுபவன். நான் வெறும் நாவிதன். சமூக அமைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.

இப்போது அவனுடைய தாடை சுத்தமாகவும் மழமழப்பாகவும் சவரம் செய்யப்பட்டு விட்டது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் பார்த்தான். கையால் முகத்தைத் தடவி அதன் புத்துணர்ச்சியை உணர்ந்தான்.

'நன்றி' என்று சொன்னான். கொக்கியிலிருந்து அவனுடைய பெல்ட், துப்பாக்கி, மற்றும் தொப்பி ஆகியவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டான். கால் சட்டைப் பையிலிருந்த சில நாணயங்களை எடுத்து என்னுடைய வேலைக்காகக் கொடுத்துவிட்டு கதவை நோக்கி நடந்தான்.

வாசற்படியில் கொஞ்சம் தயங்கி நின்றபின் அவன் சொன்னான். 'நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். அது நடக்குமா என்று பார்க்கத்தான் வந்தேன்.

ஆனால் கொல்வது அவ்வளவு எளிதல்ல.   இந்த  விஷயத்தில் நீ என்னுடைய வார்த் தையை நம்பலாம்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அவன் நடந்து போய்விட்டான்.

நன்றி: ஆக்கிரமிக்கப்பட்ட வீடு 
(புதுப்புனல் வெளியீடு)
டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர்

Via : http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=621:2015-01-31-14-27-13&catid=40:-2015

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அம்மா என்பவள்

யாருடைய முகநூல் பக்கத்தில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. இறக்கை குறும்படம் பற்றி சின்ன பதிவு கூடவே ஒரு லிங்க். யூடியூபில் பார்த்தபின்   வானத்தில் பறந்து போகும் பறவைகளின் சாயலில் அம்மாக்களின் முகம் தெரிந்தது.

அன்னையர் தினம் அன்று அம்மா குறித்து எழுதப்பட்ட பிரபஞ்சனின் சிறுகதை, சுமதி ரூபனின் சிறுகதை, கரிகாலனின் கவிதை, இளம்பிறையின் கவிதை இவற்றுடன் ம நவீன் இயக்கிய இறக்கை குறும்படத்தையும் நினைத்துக் கொண்டேன். (நவீன், வல்லினம் எனும் இணைய இதழையும் நடத்தி வருகிறார்)
இறக்கை குறும்படம் அம்மா எனும் பிம்பம் குறித்த சமூக மதிப்பீட்டின்மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைக்கிறது.

அம்மா என்பவள் எப்போதும் சமைத்துக் கொண்டேயிருப்பவள். வீட்டு வேலைகளைப் பார்ப்பவள். குழந்தைகளை வளர்ப்பவள். அப்பாவின் பேச்சினை மீறி யாதொன்றும் செய்யத் துணியாதவள். கருணை மிக்கவள். சகிப்புத் தன்மை கொண்டவள். விட்டுக்கொடுப்பவள். கருணையும் அன்பும் கொண்டவள்..... இப்படி இப்படியாகத்தான் அம்மாவை வடிவமைத்து வைத்திருக்கிறது சமூகம். உணர்வுகளும் கனவுகளும் சுய விருப்பு வெறுப்புகளும் கொண்ட சக மனுசி என்கிற உணர்வு கிஞ்சித்தும் அவளுக்கு இருந்துவிடக் கூடாது. அப்படி கனவுகளைச் சுமப்பவள் 'நல்ல' அம்மா என்ற வரையறைக்குள் வரமாட்டாள்.

நமது ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே இது தொடங்கி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன என்று குழந்தைக்குக் கற்பிக்கையில் அம்மா சமைப்பாள்; அப்பா பேப்பர் வாசிப்பார்; அக்கா வீடு பெருக்குவாள்; தம்பி விளையாடுவான். அங்கேயே தொடங்கிவிடுகிறது குடும்ப அமைப்பிற்குள் அம்மா என்பவள் யார் என்பது குறித்த கற்பிதம். அக்காவும் கூட அம்மாவின் இன்னொரு நீட்சியாக ஆகிப் போகிறாள். வெண்ணிலாவின் கவிதை ஒன்றில் பேப்பர்க்காரன் வந்தால் அப்பாவைக் கூப்பிடவும் காய்கறிக்காரன் வந்தால் அம்மாவைக் கூப்பிடவும் யாரும் சொல்லித் தராமலேயே கற்றுக் கொள்கிறது குழந்தை என்று எழுதியிருப்பார். குழந்தைகள் வீட்டில் இருந்தே கற்றலை துவங்கிவிடுகிறார்கள். வீட்டில் உள்ள பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள். அதன்பின்பு பள்ளிக்கூடத்தில் தங்களது கற்றலை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஆண் பெண் உறவுநிலைசார் மதிப்பீடுகள் இப்படித்தான் குழந்தைகள் மனதில் பதியப்படுகின்றன.

என் அம்மாவுக்கு இறக்கைகள் இருக்கிறது. அவள் வானத்தில் பறப்பாள். அவளது எல்லை வானம் தான். ஆனால் சமையலறையும் படுக்கையறையும் தான் அவளது எல்லையாகச் சுருக்கப்படும் அவலம் தான் நிதர்சனம் என்பதை நறுக்கென ஆறு நிமிடத்தில் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கதைக்கருவுக்கான களனாக பள்ளிக்கூடத்தைத் தேர்வு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. என் அம்மா குறித்து அந்தச் சிறுமி எழுதி வந்த 'நிஜ' அம்மாவைச் சிவப்பு மையால் அடித்துக் காட்டியிருப்பதும், அம்மா செய்யும் வீட்டு வேலைகளைப் பட்டியல் போடும் மாணவனைப் பாராட்டுவதும் கல்விமுறை மீதான காத்திரமான விமர்சனம்.
நமது கல்விமுறையில் இருக்கின்ற கோளாறுகள் களையப்பட வேண்டும் மாற்றுக் கல்விக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இக்குறும்படம்.

கடைசிக் காட்சியில் குறைந்த ஒளியில் சமையலறையில் வானலில் எதையோ வறுத்துக் கொண்டிருக்கும் அந்த அம்மா ஜன்னலின் வழியாக பறந்து விரிந்த ஆகாயத்தில் வெள்ளைப் பறவை பறந்து செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பதாகக் காட்டியிருபது கவித்துவம்.

பள்ளிகளில் இம்மாதிரியான குறும்படங்களைத் திரையிட்டு அது சார்ந்த ஒரு உரையாடலை / விவாதத்தை நிகழ்த்த வேண்டும்.
மாற்றத்தை நோக்கி நமது கால்கள் நகரட்டும்.

படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

குறும்படத்தைக் காண :- 

https://youtu.be/kvBKlA9KrSU

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஒரு ரூபாய் காயின் போன்கள்

ஒரு ரூபாய் காயின் போட்டு பேசும் போனைப் பார்த்து வருடக் கணக்காகிறது.

மஞ்சள், நீலம், சிவப்பு என மூன்று வண்ணங்களில் அங்கங்கே சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும். குறிப்பாக பெட்டிக்கடைகளுக்கு அருகில். பேருந்து நிலையம் என்றால் எப்போதும் யாராவது யாருக்காவது பேசுவதற்காக அந்த ரிசீவரைக் காதில் வைத்தபடி நம்பரை அழுத்திக் கொண்டு அல்லது கீ கீ சப்தம் வரும்போது 'டொக்'கென்று இன்னொரு நாணயத்தைப் போட்டு பேச்சைத் தொடர்வதைப் பார்த்திருக்கிறேன். காயின் போன் பயன்படுத்துவோருக்குச் சில்லறை தரவெனவே தனியாகச் சில்லறைகளை வைத்திருப்பார்கள் சில கடைகளில்.

ஊருக்குச் சென்றால் பேருந்தை விட்டு இறங்கியதும் முதலில் கண்கள் தேடுவது காயின் போனைத்தான். அப்போதெல்லாம் பல மொபைல் நம்பர்கள் என் நினைவில் இருந்தன. இப்போது போல் சார்ஜ் தீர்ந்து மொபைல் செத்துப் போக, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பு அப்போது இல்லை. ஆண்ட்ராய்டு காலம் போல் அது ஒரு காயின் போன் காலம்.

மொபைல் வாங்குவதற்கு முன்பு கடிதம் வழியாகத்தான் நண்பர்களிடன் உரையாடிக் கொண்டிருந்தேன். எம்.ஏ. சேரும் வரை இந்த நிலை தான். (கடித உரையாடல் போல சுகமாய் இருப்பதில்லை மொபைல் உரையாடல்). எம்.ஏ. சேரும்போது எங்கள் வகுப்பில் ஒரேயொரு பையன் மட்டும் மொபைல் வைத்திருந்தான். அதுவும் ரிலையன்ஸ் மொபைல். அதனுடைய ரிங்டோன் கேட்கும்போதெல்லாம் போன் வச்சுட்டு ரொம்ப தான் சீன் போடுறான் என்று மனசுக்குள் நினைத்ததுண்டு.

பத்து நண்பர்கள் இருந்தால் அதில் ஒருத்தர் அல்லது இரண்டு பேர் தான் மொபைல் வைத்திருப்பார்கள். அது கிட்டதட்ட பொது செல்போன் போலத்தான். யாரேனும் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால் அந்த நம்பரைக் கொடுத்து விடுவோம்.

எங்கள் விடுதி வாசலில் கூட ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் போன் வைக்கப்பட்டது. மஞ்சள் நிறப் பெட்டி அது. வெளியிலிருந்து யாரும் அழைக்க முடியாது. இங்கிருந்து யாருக்கு வேண்டுமானாலும் நாணயத்தைப் போட்டுப் பேசிக் கொள்ளலாம். அந்தக் காயின் போன் பிஸியாகவே இருக்கும். கொஞ்ச நாளில் எல்லோர் கையிலும் போன் புழக்கம் வர ஆரம்பிக்கவே காயின் போனுக்கு வேலை இல்லாமல் போனது.

போன் வாங்குவதற்கு முன்பு மாலைப் பொழுதில் தோழிகளுக்கும் சில ஆண் நண்பர்களுக்கும் போன் செய்வதுண்டு. ஆனால் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு மட்டுமே அழைப்பேன். கையில் சில்லறைகளை வைத்துக் கொண்டு செகண்ட்ஸைக் கண்கள் மேய, கொண்டு வந்த சில்லறைக் காசுகளுக்குள் பேசி முடித்து விட வேண்டும் என்கிற சிறு பதற்றத்துடன் பேசியிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு ரூபாயிலும் அதிகபட்சம் 10 ரூபாய் வரையிலும் பேசியிருப்பதாக எனக்கு நினைவு.

ஒருமுறை நான் காயின் போனில் பேசிவிட்டுச் சென்ற பிறகு, அருகிலிருந்த யாரோ ஒரு பையன் அதே எண்ணுக்கு ரீடயல் போட்டு எனது நண்பன் எனப் பேசி, அது ஒரு சில மாதங்கள் வரை எனக்குத் தெரியாமலேயே நட்பாகத் தொடர்ந்து, பின் காதலாக மலர்ந்தது தனிக்கதை.

ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு கிடைத்த பரிசுத் தொகையில் எனக்கே எனக்காக இரண்டு பொருட்கள் வாங்கினேன். ஒன்று சைக்கிள். இன்னொன்று மொபைல். ஆயிரம் ரூபாயில் நோக்கியா 1100 கருப்பு வெள்ளை மொபைல். அதுவும் தோழி பயன்படுத்திய மொபைல். செல் வாங்கியதும் சிம் கார்டு போட்டால் தான் பேச முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட அப்போது இல்லை. அந்த அறியாமை நிறைந்த நாட்கள் கூட அழகானவை தான்.

நாட்கள் உருண்டோட உருண்டோட மொபைல்கள் மாறிக் கொண்டேயிருந்தன. நிறைய அனுபவங்கள். கண்ணுக்குத் தெரியாமல் சிலவும் தெரிந்து சிலவும் மாறியிருந்தன. சில காணாமல் போயிருந்தன. சில இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டிருந்தன. அப்படித்தான் கண்ணைவிட்டு மறைந்து போயிருந்தது ஒற்றை நாணய போன்.

நேற்று புதுவையில் செஞ்சி சாலை அருகில் ஒரு தேநீர்க் கடை பக்கத்தில் இந்த காயின் போனைப் பார்த்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. ஒரு ஒற்றை நொடியில் எட்டு வருடங்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டது மனம். இப்போது பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன் தராத மகிழ்ச்சியை காயின் போன் தந்தது.
-- மனுஷி

கதை - கவிதை - கடற்கரை

இலக்கிய உரையாடல்கள் மீண்டும் மீண்டும் குளிரூட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்படாத அறைகளுக்குள் விவாதிக்கப்படுகின்றன. அந்த அறையைத் தாண்டி கலை இலக்கிய உரையாடல்கள் பொதுவெளியில் மக்கள் கூடும் இடங்களை நோக்கி இடம்பெயர வேண்டும் என்பதைத் தொடர்ந்து நண்பர்களோடு பேசி வருகிறேன். எனது கருத்தினைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது சனிக்கிழமை மாலை மெரினா கடற்கரை மணலில் நிகழ்ந்த நான்கு நூல்கள் அறிமுகக் கூட்டம்.
மேடை, மைக், பேசுபவர், பார்வையாளர்கள் என்கிற அமைப்பு, நான் சரியா தான் பேசுறேனா என்கிற சின்ன பதற்றத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் கடற்கரை மணலில், மக்கள் பார்வையில் படும்படியாக வட்டமாக அமர்ந்து வாசித்த நூல் குறித்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது போல ஒரு நிகழ்வை ஒருங்கமைத்த கார்த்திக் புகழேந்தி மற்றும் அகரமுதல்வனுக்கு அன்பும் பிரியங்களும். மிக இயல்பாக உரையாடலை நிகழ்த்த முடிந்த நிறைவையும் மகிழ்வையும் தந்தது அந்த நிகழ்வு.
லதா அருணாச்சலம், கணேஷ் பாலா, விஜய் மகேந்திரன், தேவர் அப்பா என அன்பின் இனிய நண்பர்கள் பலரைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
இலக்கிய உரையாடலில் பங்கெடுக்க மேகம் கூட இறங்கி வந்தது மழையாக.
கடற்கரை காற்றும், மணலும் கதையும் கவிதையும் நண்பர்களுமாக ஒரு நாளைக் கொண்டாடுவது வரமன்றி வேறென்ன?

##அரசனின் இண்டமுள்ளு சிறுகதைத் தொகுப்பு குறித்த பதிவு விரைவில்...