திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பாரதி என்றொரு மனிதன் -- மனுஷி

சென்னைக்குப் போவதா வேண்டாமா என்கிற குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் கிளம்பத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாகிவிட்டது. பக்கத்து வீட்டில் பால் பாக்கெட்டுகளைக் கொடுத்து நாய்க்குட்டிக்கு வைக்கச் சொல்லியாகிவிட்டது. அவன் குலைத்துக் கொண்டேயிருப்பான். ஆனாலும் என்ன செய்வது? முழுநேரமும் அவனோடு இருக்க முடியாது என்பதை அவனுக்கு என்ன மொழியில் சொல்லிப் புரிய வைப்பது? மெல்லமாய் அணைத்துக் கொண்டேன். மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். தலையைத் தடவி விட்டேன். தலையைத் தூக்கி நாவால் கையை நக்கினான். இரண்டு நிமிடம். பிறகு மணியாகிடுச்சு தம்பி என்றபடி நெற்றியில் முத்தமிட்டு, அவன் குரைக்கக் குரைக்க போக மனமில்லாமல் இரும்புக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறினேன். போகாதே என்று சொல்வது போல குரல் உயர்த்திக் கத்தினான். தெருமுனை வரை குரைப்புச் சத்தம் கேட்டது குழந்தையின் அழுகுரல் போல .

வார விடுமுறை நாள் தான் என்றபோதும் பேருந்து காலியாகவே இருந்தது. பஸ் ஏறிவிட்ட செய்தியை மட்டும் சொல்லிவிட்டு 'எங்கதே' (இமையம்) நாவலில் மூழ்கினேன். கமலா, மனம் முழுக்க உலவிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தேவதையின் சாயல். கமலாவோடு பயணித்துக் கொண்டிருக்கையில் சட் சட் என்று மழைத்துளி கைகளின் மேலும் பேண்ட் மீதும் விழுந்தன. அப்போது தான் கவனித்தேன். வெளியில் குளிர்ந்து வானம் மழையைச் சுமந்து கருத்திருந்தது. சின்ன சின்ன முத்துத் தூரல்களால் சாலை பொலிவாக இருந்தது. கமலாவை விடவும் மழை முக்கியம் என மனம் சொல்ல, புத்தகத்தை மூடிப் பத்திரமாக உள்ளே வைத்தேன். கடந்தமுறை பயணத்தில் வாசித்துக் கொண்டு வந்த 'அப்பத்தா' (பாரதி கிருஷ்ணகுமார்) சிறுகதைத் தொகுப்பு கைமறதியாய் எங்கோ காணாமல் போனது மனதுக்குள் வருத்தமாய் வந்து உறுத்தியது. (இப்போது அப்பத்தாவைக் கடன் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன்). முகத்தில் வந்து விழுந்த மழைத்துளிகள் 'பரவாயில்லை வேற புக் வாங்கிக்கலாம்' என ஆறுதல் சொல்வன போல இருந்தன. மழையை ரசிக்க ஒரு மழை மனசு வேண்டும். நல்லவேலையாக அப்போது செல்போனில் சார்ஜ் இல்லை. கூடுதலான மகிழ்ச்சி இந்த மழைப் பயணத்தில்.

பேருந்து மத்திய கைலாஷ் போகாது என்றதும் போச்சுடா என்று மனம் விட்டுப் போனது. தூறல் தூறிக் கொண்டு தான் இருந்தது. ஆட்டோவில் கேட்டால் எண்பது ரூபாய் என்றார் ஆட்டோக்காரர். அறுபது ரூபாய்க்குப் பேசி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் எழுபது ரூபாய் கொடுப்பது என முடிவுக்கு வந்து ஆட்டோவில் ஏறினேன். சிக்னல், மழையில் நனைந்து கொண்டிருந்தது. அனுமன் வால் போல சிக்னலில் நனைந்தபடி நின்றிருந்தன வாகனங்களும் பைக்குகளும். நல்லவேளை ஹார்ன் அடித்து யாரும் எரிச்சல் படுத்தவில்லை.

சிக்னல் கடந்தவுடன் கொஞ்சம் விரைவாகச் செல்லும்படிச் சொன்னேன்.தமிழ் நல்லா பேசுறிங்களே.  தமிழ் தெரியுமா? என்றார்.நல்லா தெரியுமே என்றதும் பார்த்தால் வடநாட்டு பொண்ணு போல இருக்கிங்க அதனால் கேட்டேன் என்றார். அவர் சொன்னதும் ஒரு முறை ஆட்டோவில் இருந்த சின்ன வட்டக் கண்ணாடியைப் பார்த்தேன்.
தேடித் தேடி வாங்கிய கருப்பு முழுக்கை டீ சர்ட். மூடிய கழுத்து. வெளிர் நீல ஜீன்ஸ். முடியை வாரிச் சுருட்டி கிளிப் போட்டிருந்தேன். இடது முன் நெற்றியோரம் கற்றை முடி தவழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பொட்டும் இல்லாமல் வடநாட்டுப் பெண் என்று நினைப்பதற்கான தோற்றச் சாயலுடன் முகம் இருந்தது. சிரித்துக் கொண்டேன்.
எப்போதும் போல அடுத்த கேள்வி. படிக்கிறிங்களா வேலை பார்க்கறிங்களா? என்றார். படிக்கிறேன். பிஎச்டி தமிழ் என்றேன். ஓ. பார்த்தால் ஸ்கூல் பொண்ணு போல இருக்கிங்க. இது எல்லாரும் சொல்கிற வார்த்தை தான். பெரிதாய் காட்டிக் கொள்ளவில்லை. உள்ளுக்குள் மட்டும் என்னையும் அறியாமல் சந்தோஷமாகப் புன்னகைத்தேன். பிஎச்டியில் என்னமா படிப்பிங்க என்றார். நான் பாரதியார் பற்றிப் படிக்கிறேன் என்றேன். காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடினாரே அவரா என்றார். அப்போது தான் வெளியில் மழையைப் பார்ப்பதை விட்டு அவரைப் பார்த்தேன். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோற்றம். தலையில் இளமை மிச்சமிருப்பதன் அடையாளமாக அங்கங்கே சிறு சிறு கருப்பு முடிகள். பாரதியின் வரிகளைச் சொல்லி பாரதியாரைப் பற்றி நினைவு கொண்டதால் அவர்மீது மரியாதை வந்தது. பாரதியார்னாலே கம்பீரம் தான் ஞாபகத்துக்கு வரும். எங்க ஸ்கூல்ல பாரதியார் பத்தி படிக்கும்போது எங்க சார் சொல்வார் முறுக்கு மீசை. மிடுக்கான நடை. அகண்ட கண்கள். கருப்புக் கோட் போட்ட கம்பீரமான மனுஷன் என்று சொல்வார் என்றதும் எனது உடல் புல்லரித்தது. பாரதிக்கு ஒரு தெளிவு இருந்தது யாருக்காக எழுத வேண்டும் என. அது நிறைவேறி இருப்பதாக உணர்ந்தேன். மலையாளத்தில் பஷீரை மக்கள் தெரிந்து வைத்திருப்பது போல பாரதிக்குப் பிறகு தமிழில் யார் இருக்கிறார்கள் என்று யோசித்தபடி இருந்தேன்.
இந்த காலத்துப் புள்ளைங்களுக்கு தமிழ்னாலே கசக்குது. பரவால்ல நீயாவது தமிழ்ல பேசுற. தமிழ் எடுத்துப் படிக்கற. நல்லா இருக்கும் வாழ்க்கை என்றார். சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. நீர்ப்பூக்கள் என் தலையில் விழுந்து வாழ்த்திவிட்டு அவரது வார்த்தையை உறிஞ்சிக் கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக