ஞாயிறு, 24 மார்ச், 2019

ஆதார் அட்டை அரசியல்


கோடை வெயில் பல்லை இளித்துக் கொண்டு மண்டையைப் பிளந்தாலும் பரவாயில்லை என மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்கக் கிளம்பினோம். தோழி அகிலாவுடன் சென்னையில் நிறைய இடங்கள் சுற்றி இருக்கிறேன். சென்னை நகரத்தைத் தாண்டி அகிலாவுடன் முதல் பயணம். கூடவே அகிலாவின் சிங்கக்குட்டி சுபாங்கர் வருகிறான் என்றதும் மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து பாலுசாமி சார் எழுதிய #அர்ச்சுனன்_தபசு புத்தகத்தை ஒருமுறை வாசித்து மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டேன். அவனுக்குக் கதைகள் சொல்ல வேண்டுமல்லவா.

நானும் அகல்யாவும் புதுச்சேரியில் இருந்து கிளம்பினோம். சென்னையிலிருந்து அகிலாவும் சுபாங்கரும் வந்து சேர்ந்தார்கள். வெயிலின் வெம்மை தணிக்க லெமன் சோடா குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். ஒவ்வொரு சிற்பம் பற்றியும் அவனுக்கும் அகிலாவுக்கும் சொல்லிக் கொண்டு, அங்கங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியாக நகர்ந்தது அன்றைய நாள்.

மாலை 4 மணிக்குள் பஞ்சபாண்டவர் ரதம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும் எனும் திட்டமிடலுடன் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போதுதான் கடற்கரை கோயிலில் சூரியன் மறைவதைப் பார்க்க முடியும். கடந்த முறை அகல்யாவுடன் இந்தத் திட்டமிடல் இல்லாததால் கடற்கரை கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனது. நினைத்தபடி, நான்கு மணிக்கு முன்னதாக பஞ்சபாண்டவர் ரதம் செல்ல டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நுழைவாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி ஒரு ஹிந்திவாலா. டிக்கெட்டை வாங்கி பஞ்ச் பண்ணிவிட்டு ஐடி கார்டு கேட்டார். நான் எந்த அடையாள அட்டையும் கொண்டுசெல்லவில்லை. சாரி சார் ஐடி கார்டு எதுவும் கொண்டு வரவில்லை என்றேன். ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று இந்தியில் பதில் சொன்னார். சார், போன வாரம் தான் இங்கே வந்தோம். அப்போ  ஐடி கார்டெல்லாம் செக் பண்ணலையே என்றேன்.  ஐடி கார்டு அவசியம் என்று நுழைவுச்சீட்டில் அச்சிட்டு இருப்பதைக் காட்டி, ஐடி கார்டு இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று இந்தியில் சொன்னார். சார் இதுக்கு முன்பு ஐடி கார்டு கேட்டது இல்லையே என்பதை மீண்டும் சொன்னோம். வெளிநாட்டவர்களை ஐடி கார்டு செக் பண்ணாமல் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்காங்க என்றார் மீண்டும் இந்தியில். சார் நாங்க தமிழ்நாடு சார். இவங்க சென்னை, நான் பாண்டிச்சேரி, இந்தப் பொண்ணு மதுரை. எங்களைப் பார்த்தால் ஃபாரினர் மாதிரியா தெரியுது என்றோம் சிரித்துக் கொண்டே. அதெல்லாம் முடியாது. ஃபாரினரை ஐடி கார்டு இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். சார் முதலில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்க. பிறகு உங்க ரூல்ஸைப் பேசலாம் என்றேன். அவர் குரல் கொஞ்சம் கடுமையானது. அதே கடுமையான குரலில், ஐடி காட்டினால் தான் உள்ளே விடுவோம் என்பதை டிக்கெட் கொடுக்கற இடத்திலேயே சொல்லி இருக்கனும், டிக்கெட் எடுத்துட்டுமே இப்போ என்ன பண்றது என்றோம். இது செண்ட்ரல் கவர்மெண்ட் ரூல். ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுமதி இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லவும், அகிலாவும், அகல்யாவும் ஐடி கார்டைத் தேடி எடுத்துக் காட்டினார்கள். என்னிடம் இல்லை. என்கிட்ட ஐடி கார்டு இல்லை. அப்போ என்னை உள்ளே விட மாட்டிங்களா என்றேன் எரிச்சலோடு.
அங்கிருந்தவர்கள் எங்கள் உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு செக்யூரிட்டி வந்து, சரி பரவாயில்லை அனுப்புங்க என்றார். எங்களிடம் விவாதம் செய்த செக்யூரிட்டி மனசே இல்லாமல் உள்ளே அனுப்பினார்.



எங்க முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு வெளிநாட்டவர் மாதிரி தெரியுதா பேசுற மொழியை வச்சு கூட உங்களால் புரிஞ்சுக்க முடியாதா என்று தெள்ளத் தெளிவாகத் தமிழில் சொல்லிவிட்டு உள்ளே சென்றோம். அவரைப் பொறுத்தவரை இந்தி தவிர மற்ற எல்லாமும் ஃபாரின் மொழி தான் போல.
சித்தன்னவாசல் சென்றபோதும் நுழைவுச் சீட்டு சரிபார்க்கும் செக்யூரிட்டி பணியில் இந்திக்காரர் தான் இருந்தார். மாமல்லபுரத்திலும் இந்தி பேசும் செக்யூரிட்டி.

இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு எல்லா மொழி பேசும் மனிதர்களும் வருவார்கள். ஆங்கிலத்திலோ வட்டார மொழியிலோ பேசாத இந்திக்காரர்களைப் பணியமர்த்துவது என்ன நியாயம்? .
அத்தனை நேரம் மனதுக்குள் இருந்த கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் தளர்ந்திருந்தது.

தனிமனித கண்காணிப்பு அரசியலின் ஓர் அங்கமாக ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு உட்பட எல்லாவற்றோடும் இணைக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

எங்கு சென்றாலும் அடையாள அட்டையோடு செல்ல வேண்டும்தான். ஆனால் இன்றைய சூழலில் நான் என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமே மாறிப் போனது வருத்தமாக இருக்கிறது.

செவ்வாய், 19 மார்ச், 2019

சித்தன்னவாசலில் நானொரு குகைவாசி - 1



வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் நாம் பயணங்களின் மூலம் பார்த்த காட்சிகளும், பெற்ற அனுபவங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். இந்தப் புரிதல் வந்தபிறகு, நான் வாசித்த நிலப்பரப்புகளைப் போய் பார்க்கத் தொடங்கினேன். அப்படித்தான்  இளங்கலை தமிழ் வகுப்பில் ஐந்து மதிப்பெண் வினாவுக்காக மட்டுமே தெரிந்து வைத்திருந்த சித்தன்னவாசல் பயணத்தையும் திட்டமிட்டேன்.

தஞ்சாவூருக்கு இதற்கு முன்பும் நான்கைந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலக்கிய நிகழ்வுகளுக்காகச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நிகழ்வு முடிந்தபிறகு சொல்லி வைத்தாற்போல தஞ்சைப் பெரிய கோவில் சென்று பார்த்துவிட்டு, பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்து விடுவேன்.

இந்த முறை, தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் மகளிர்தினச் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேச வேண்டுமென அழைப்பு வந்ததும், சித்தன்னவாசல் செல்வது என முடிவு செய்து கொண்டேன். சொல்லப்போனால் இந்தமுறை சித்தன்னவாசல் மண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கூகுளில் போய் சித்தன்னவாசல் பற்றித் தேடினேன். இரண்டுநாள் முழுக்க, கூகுளில் சித்தன்னவாசல் குறித்த எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன். சில காணொளிகளையும் பார்த்தேன். ஆவல் இன்னும் அதிகமானது.

மார்ச் 5 நிகழ்வு முடிந்தபிறகு, தஞ்சையில் நண்பன் தினேஷ் பழனிராஜ் அவர்களிடம் சித்தன்ன வாசல் செல்வது பற்றிச் சொல்லி, உடன் வர இயலுமா என்று கேட்டதும், மறுப்பேதும் சொல்லாமல் போலாமே என்று சொல்லிவிட்டார். பயணத்தை நேசிக்கும் நண்பர்கள் வாய்ப்பது வரம் தான்.

அடுத்தநாள் திட்டமிட்டபடி, நானும் தினேஷும் பைக்கில் கிளம்பினோம். கிளம்பும்போது சரியாக காலை ஒன்பது மணி. வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு பத்து நிமிடத்தில் ஒரு கடையில் நிறுத்தி சூடான ஒரு காஃபி அருந்தியபின் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.  தேநீரை விடவும் இப்போதெல்லாம் காஃபி அருந்துவது வழக்கமாகியிருக்கிறது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வெயில் என்றால் அப்படியொரு வெயில். மருந்துக்குக்கூட இருபுறமும் மரங்கள் இல்லை. ஓரமாக நின்று தண்ணீர் குடித்து ஆசுவாசம் கொள்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. எங்கும் பைக்கை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்தோம். வெயில் மண்டையைப் பிளந்தது. ஆனாலும், பேசிக்கொண்டே சென்றதால் ஒரு கட்டத்திற்குமேல் வெயில் பெரிதாகத் தெரியவில்லை.

புதுக்கோட்டையைச் சென்றடைந்தபிறகு கூகுள் நண்பனின் துணையுடன் சித்தன்னவாசலை நோக்கிச் சென்றோம். புதுக்கோட்டையில் இருந்து 16 கி.மீ பயணத்தபின், வால் இல்லாத பெரிய பல்லி ஒன்று கவிழ்ந்து படுத்திருப்பதுபோல சித்தன்னவாசல் மலையைப் பார்த்ததும் மனசு பறபறவென்று உற்சாகமானது. இன்னும் கொஞ்சநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மலைமீது ஏறப்போகிறேன் என்பதை நினைக்கையில் மனசு பறவையானது. ஆனால் பைக்கில்தான் போய்க் கொண்டிருந்தேன்.

சித்தன்னவாசல் நுழைவாயிலின் உள்ளே போய், நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் போனோம். குடைவரை கோயிலின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு தொல்லியல் துறையின் நுழைவுச் சீட்டையும் வாங்கிக் கொண்டு மலைமேல் ஏறினோம். இரண்டு நுழைவுச் சீட்டுகள் வாங்க வேண்டும் என்பது விதி. 

கூகுளில் பார்த்த குடைவரைக் கோயில் என்னை நெருங்கி வர, கோயிலை நோக்கி வேகமாக மூச்சு வாங்கப் போய்ச் சேர்ந்தோம்.  குடைவரைக் கோயிலில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தார்கள். கோயிலின் மேற்கூரையில் இருந்த ஓவியங்களை ஒரு பள்ளி ஆசிரியர்போல குச்சியை வைத்துக் கொண்டு ஓவியங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் அங்கே பணிபுரியும் பணியாளர்.

கோயிலுக்குள் செல்வதற்கு முன் இடதுபுறம் காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தோம். குச்சி வைத்துக் கொண்டிருந்த பணியாளர், மேல்சுவரில் இருந்த தாமரைக் குளத்தில் என்னென்ன உருவங்கள் தெரிகின்றன்ன என்பதைக் குச்சியால் சுட்டிக் காட்டிச் சொன்னார். அந்த இருவரும் மாணவர்கள் பாடம் கேட்பதைப் போல பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், வரலாற்றுப் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வற்று, டேப் டெக்கார்டர் குரல்போல பேசிக் கொண்டிருந்தார் அவர். அங்கே வருகின்ற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு, மனுஷிகளுக்கு அவர் சொல்லி இருப்பார். சொல்லிச் சொல்லிக் களைத்துச் சலித்துப் போயிருந்தது அவர் குரல். ஆனால், தனக்களிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேல்தளத்தில் உள்ள ஓவியத் தாமரைக் குளத்தில் ரோஸ்நிற தாமரைகள் புத்துணர்ச்சியோடு மலர்ந்திருந்தன. சில மொட்டவிழாமல் இருந்தன. பச்சை இலைகள் குளம் முழுக்க படர்ந்திருந்தன. இலைகளும் மலர்களும் தாமரைத் தண்டுகளும் நிஜமாகவே தாமரைக் குளத்தின் தோற்றமாயையை உருவாக்கின.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க, அதில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. கூடவே, அன்னப்பறவைகளும் நீந்திக் கொண்டிருந்தன. அன்னப்பறவைகள் தாமரை மலர் போலவும் பறவையும் உடல் போலவும் மாறி மாறிக் காட்சி அளித்தன. அவற்றின் அருகில் இரண்டு கொம்புகள் கொண்ட எருமை ஒன்று நின்றிருந்தது. மேலும் இரண்டு யானைகளும் அங்கே இருந்தன. குளத்தில் தாமரை மலரைக் கொய்து கொண்டிருந்த ஆண்கள் இருந்தார்கள். அதில் தாமரை மலரைக் கொய்து தோளில் போட்டிருந்த ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியில் வரைந்த ஆயில் பெயிண்ட் ஓவியம்போல இருந்தது அந்த மேற்கூரை ஓவியம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வயது அந்த ஓவியத்திற்கு என்பது பெருவியப்பாக இருந்தது. மேலும், அவை, மூலிகைச் சாறு கொண்டு வண்ணங்களை உருவாக்கி வரையப்பட்டவை என்பது ஆச்சரியத்தை விரிவாக்கின.

அந்தத் தாமரைக் குளத்திற்கு முன்னதாக உள்ள மேற்கூரையில் தாமரைக் குளத்தில் தாமரை, மொட்டு விட்டு படிப்படியாக மொட்டவிழ்ந்து மலரும் மலர்ச்சியின் பரிணாமம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தாமரைக் குளத்தில் அமர்ந்து அதன் ஒவ்வொரு அசைவையும், மலர்தலையும் உண்ணிப்பாகக் கவனித்து வரைந்திருப்பார்கள் போல. ஓவியத்தில் உள்ள தாமரைக் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தோழி மாளவிகாவின் ஓவிய ஆராய்ச்சிக்காக ஆரோவில்லில் உள்ள தாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து குளத்தையும், பூக்களின் அசைவையும், பூச்சிகளும் மீன்களும் குளத்திற்குள் நீந்திச் செல்வதையும், பறவைகள் வந்தமர்ந்து மீன் பிடித்துக் கொண்டு பறந்து செல்வதையும் மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மாலைப் பொழுதுகள் நினைவுக்குள் வந்து போயின. அதேபோல ஊசுட்டேரியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்க் கூட்டங்களும் வந்து போயின.

கோயிலின் உள்ளே சுவரில் மூன்று புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. மூன்று தீர்த்தங்கரர்கள் கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். ஓவியங்களை விளக்கிக் கொண்டிருந்த பணியாளர், கருவறையில் தலையை நீட்டிச் சப்தம் எழுப்பினார். அந்தச் சத்தம் உள்ளுக்குள்ளே சுற்றிச் சுழன்றது. பிறகு உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று சத்தம் எழுப்பினார். அவர் செய்ததுபோல அங்கிருந்த இருவரும் உள்ளே போய் நின்று ஓம்ம்ம்ம்ம்ம் என்றுச் சொல்லிப் பார்த்தனர்.

எனக்கு அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதே போதும் எனத் தோன்றியது. உள்ளே போய் கால்களை மடக்கிக் கொண்டு கைகளைத் தொடைகளின் மேல் வைத்தபடி கண்மூடி அமர்ந்திருந்த முதல் தீர்த்தங்கரரின் வலது கைமீது கை வைத்துச் சற்று நேரம் நின்றிருந்தேன். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் மூடி மௌனித்திருந்தனர். கைவிரல்களைப் பார்த்தேன். தொடையின்மீது குறுக்காகக் கையை மடக்கி, கட்டைவிரலைச் சுண்டுவிரல் ரேகையின் அருகில் மடக்கி இருந்தனர். அவர்களைப் போலவே கைவிரலை மடக்கி நின்று பார்த்தேன்.

இரண்டாவது தீர்த்தங்கரரும் அதேபோல தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரது வலது கைக்குள் கையை வைத்துப் பற்றிக் கொண்டு அமைதியாக நின்றபடி அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தீர்த்தங்கரரின் வயிற்றில் மூச்சுக்காற்று லேசாக மேலேறி இறங்குவதைப் போலொரு பிரம்மை வந்து போனது. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். சலனமற்று அமர்ந்திருந்தார் தீர்த்தங்கரர்.

மூன்றாவது தீர்த்தங்கரர் அருகில் நின்று அவர் கையைப் பற்றிக் கொண்டு நின்றேன். வெளியில் இருக்கின்ற வெக்கை தணிந்து சில்லிட்டு இருந்தது. அவர்கள் மூவரையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தேன். என்னைத் தவிர அப்போது கருவறைக்குள் யாருமில்லை. அந்த அமைதி ஆசுவாசமாக இருந்தது.

மூவரிடமும் விடைபெறுவதாக அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். வாசலில் நின்றபடி அந்த இருவரிடமும் இன்னமும் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பணியாளர். அவர் பேச்சில் கவனம் செலுத்தி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார் தினேஷ். குடைவரை கோயிலின் இடதுபுறம் உள்ள குகை என்னை வா என்றழைத்தது.





பாறையின் மீது நடந்து பழகிய கால்களைப் போல பாறையின் மீது நடந்து வேக வேகமாகப் போனேன். குகையின் அடியில் போய்  கை கால்களை நீட்டிப்படுத்துக் கொண்டேன். பாறையின் குளிர்ச்சி இதமாக இருந்தது. குகைவாசியாகியானது போலிருந்தது. இந்தக் குகையிலேயே இருந்து விடலாம் எனத் தோன்றியது. 

அந்தக் குகையின் அடியில் ஆசை தீர அமர்ந்து, நடந்து, பாறையைத் தொட்டுத் தடவி அதன் குளுமையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

2010இல் சதுரகிரி மலைக்குப் போனபோதுகூட இப்படித்தான் உணர்ந்தேன். மலைக்குகைகளில்தான் எனது ஆன்மா உயிர்ப்போடு இருக்கிறது போல.


திங்கள், 18 மார்ச், 2019

மாமல்லபுரம் டைரி


மாமல்லபுரத்தில் மகிசாசுரவர்த்தினி மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு அம்மா குரங்கும் இரண்டு குட்டிக் குரங்கும் பாறை மீது அமர்ந்திருந்தது. பையில் பிஸ்கட் இருக்கா என்று அகிலாவிடம் கேட்டதும், உள்ளே இருக்கு எடுத்துக் கொடு என்றார்.


ஸ்நாக்ஸ் பை அகல்யாவிடம் இருந்தது. பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுப்பதற்குள் அம்மா குரங்கு பாறையிலிருந்து இறங்கி அருகில் வந்தது. பையைப் பிடுங்கிவிடும் போல நெருங்கி வந்தது. இரு உனக்குக் கொடுக்கத்தான் எடுக்கிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொல்லிக் கைக் காட்டியதும் அப்படியே அமர்ந்துவிட்டது. குட்டிகள் பாறை மேலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன.

பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்துக் கொடுக்கக் கொடுக்க வாங்கி வாயில் அதக்கிக் கொண்டது. கொஞ்சம் சாப்பிட்டது. குட்டி குரங்கு பிஸ்கட் எடுக்கும் கையையே பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குக் கொடுக்கலாம் என்று நீட்டினால் முதலில் பயந்தது. பிறகு கை நீட்டி எட்டி வாங்கிக் கொண்டது. இப்படியாக, அம்மா, பிள்ளைகள் மூவரும் பிஸ்கட்டுகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.


அந்த வழியாகப் போகிற எல்லோருமே அம்மா குரங்கு மற்றும் குட்டிக் குரங்குகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஒரு வெளிநாட்டவர் தன் கேமராவில் படம் பிடித்துக் கொண்டார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிஸ்கட்டைக் கையில் வாங்கி வாயில் அதக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தன.

பிஸ்கட்டுகள் தீர்ந்தபின்னும் எங்கள் கையைப் பார்த்தன. இங்க பாரு பிஸ்கட் எல்லாம் தீர்ந்து போச்சு என்றதும் பையைப் பிடுங்கிக் கொண்டது அம்மா. பையைக் கொடு என்று அகல்யா இழுக்க, தர மாட்டேன் என அந்த அம்மா குரங்கு இழுக்க, அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். சரி அதுவே வச்சுக்கட்டும் விடு போகலாம் என்று கிளம்பும்போது பைக்குள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதுவே கொடுத்துவிட்டது.


பிறகு பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து கீழே சிந்திய பிஸ்கட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டனர் குரங்குக் குடும்பம். குழந்தைகள் தரையில் சிந்தியதை எடுத்துச் சாப்பிடுவதைப் போல இருந்தது அந்தக் காட்சி. குழந்தைகள் தானே அவர்களும். 


பிஸ்கட் தீர்ந்த பின் எஞ்சியிருந்த ஒரு துண்டு பிஸ்கட்டுக்கு மூன்று குட்டிக் குரங்குகள் தரையில் தாவி தாவி சண்டையிட்டுக் கொண்டன. பார்க்கத்தான் குட்டிக் குரங்குகளே தவிர அவர்களின் சத்தமும் தாவலும் பெரிதாக இருந்தன. சரி சரி அடிச்சுக்காதிங்க என்று சொல்லியபடி,  பை சொன்னோம். கவனிக்கவே இல்லை.

சுபாங்கர் மட்டும் கையெடுத்துக் கும்பிட்டான். என்னடா கும்பிடற என்றதும், அது அனுமன் என்றார். அவர்கள் கவனிக்கவில்லை என்றால் என்ன. சொல்வது நம் கடமை. அனுமனுக்கு பை பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.


யாயும்_யாயும்_யாராகியரோ


ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.  சிலருக்குப் பாடல் வரிகள், சிலருக்கு இசை, சிலருக்கு நடிகர் / நடிகை… இப்படி ஏதோ ஒன்று. அப்படிச் சமீபத்தில் மனதுக்குள் ஒட்டிக் கொண்ட பாடல் சகா படத்தில் வரும் யாயும் யாயும் பாடல்.  

இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும். சரியாகச் சொல்வதென்றால் கல்லூரியில் சங்க இலக்கியம் நடத்திக் கொண்டிருந்தபோது குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை நடத்த வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள குறுந்தொகைப் பாடலைச் சொல்வதற்கு முன் வகுப்பில் குறுந்தொகையை அறிமுகம் செய்ய யாயும் யாயும் யாராகியரோ பாடலைச் சொல்லித் தொடங்கினேன். வகுப்பில் ஒரு மாணவி, மேம், இது சினிமா பாட்டு தானே என்றார். இல்ல இந்தப் பாடலில் வரும் சில வரிகள், சினிமாப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கு என்று, முன்பே வா அன்பே வா… பாடலை உதாரணத்திற்குச் சொன்னேன். இல்ல மேம், முழுப் பாட்டும் ட்யூன் போட்டு ஒரு பாட்டு யூடியுபில் வந்திருக்கு. என்ன படம் தெரியல. நீங்க கேளுங்க என்றார். அன்றைக்குக் கல்லூரியில் இருந்து வந்ததும், முதல் வேலையாக யூடியுபில் அந்தப் பாடலைக் கேட்டேன். இடையில் ’யானும் நீயும் எவ்வழி அறிதும் எனும் ஒரு வரி தவிர்த்து எல்லா வரிகளும் டியூனாகப் போட்டிருக்கிறார்கள். பாடலில் பெண் குரல் காந்தத்தைப் போல இழுத்தது. கூகுளில் தேடிப் பார்த்தேன். ரீட்டா தியாகராஜன். என்ன அழகான குரல். நரேஷின் குரலும் ரீட்டாவின் குரலும் காதலில் குழைந்து பாடலை இன்னுமொருமுறை கேளேன் என்று சொன்னது.

தினம் தினம் கேட்க ஆரம்பித்தேன்.

பிறகு, எஃப்.எம்.மில் ஒரு நாளை எட்டு முறையாவது இந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அடிக்கடி எஃப்.எம்.களில் ஒலிபரப்புவதால் கேட்டுக் கேட்டுப் பிடித்த பாடல் வரிசையில் இதுவும் வந்து சேர்ந்து கொண்டது. இதனுடைய வீடியோ வெர்ஷன் பார்க்க வேண்டும் என ஆவலும் தொற்றிக் கொண்டது.

இந்தப் பாட்டுக்காகவே படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். சகா, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. குறைநதபட்சம் பிடித்த பாடலின் வீடியோ வெர்ஷனைப் பார்க்கலாம் என யூடியுபில் தேடினேன். கல்யாண ஆல்பத்தில் மணமக்களை வீடியோ ஷூட் பண்ணது போல ஓர் உணர்வு. ஏன் வீடியோ சாங் பார்த்தோம் என்றாகிவிட்டது. வீடியோவாக அந்தப் பாடலைப் பார்த்ததை மறக்கவே நினைக்கிறேன்.

இப்போதும் அந்தப் பாடல் கேட்கும் போது வசீகரிக்கும் குரலில் போதை இருக்கத்தான் செய்கிறது.

#யாயும்_யாயும்_யாராகியரோ