திங்கள், 11 மே, 2015

இன வரைவியல் ஆவணம் : கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா

இன வரைவியல் ஆவணம் : கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா
-- மனுஷி

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனை உன்னதம் இதழின் ஆசிரியராகத்தான் முதன்முதலில் அறிமுகம். அதன்பிறகு தீராநதி இதழில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. ‘எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது’ என்னும் தலைப்பில் அவருடைய கட்டுரை வாசித்த எனக்கு அவருடைய எழுத்தின்மீதும், கலை இலக்கியப் பார்வை மீதும் ஆர்வம் உண்டானது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பி, தேடி வாங்கிய நூல்களில் ஒன்று பொம்மக்கா. அந்த நூலை வாங்கியதற்குக் காரணம் கௌதம சித்தார்த்தன் அல்ல. பொம்மக்கா என்ற தலைப்பு மட்டும்தான். இரண்டாவது காரணம், பின்னட்டையில் இடம்பெற்றிருந்த வாசகம். ‘பாண்டவர் கதையில் முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா’ என்ற வாசகம் நூலை வாங்கிப் படிப்பதற்கான தூண்டிலை வலுவாகப் போடுகின்றன. வாசகன் அதில் மீனாக மாட்டிக் கொள்வது தவிர்க்க முடியாது. பொதுவாக இவ்விரண்டு காரணங்களால்தான் ஒரு நூலை நான் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பேன். எழுத்தாளர் பெயர் பார்த்து வாங்குவதெல்லாம் அப்புறம்தான். என் அறையில் இருக்கும் புத்தகங்களில் முக்கால்வாசி இப்படித்தான் என் அறைக்கு வந்து சேர்ந்தன.
பொம்மக்கா நூலை வாங்கும்போது அந்த நூலைப் பற்றிப் பேசுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. பிரமிப்புக்குக் காரணம் கௌதம சித்தார்த்தனின் எழுத்துப் பயணம். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருபவர் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். இன்னும் சொல்லப் போனால் நான் பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு உன்பே தமிழ்மொழியின் ஆன்மாவுக்கேற்ற விதமாக பின்நவீன எழுத்தைக் கையிலெடுத்தவர். தமிழின் / தமிழனின் வேர்களைத் தேடும் விதமாக அவ்வெழுத்தை மாற்றித் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுவகை கதைசொல்லல் முறையை, புதுவகை கதையாடலை, ஏற்கனவே கட்டப்பட்ட புனிதங்கள் மீதான கட்டவிழ்ப்பை நிகழ்த்திக் காட்டியவர்.
இந்நூலைப் பற்றிப் பேச வேண்டுமென தோழர் கீரா கேட்டவுடன் உடனடியாக ஒப்புக் கொண்டேனே தவிர, உள்ளுக்குள் சிறு பதற்றம். என்ன பேசுவது பொம்மக்கா குறித்து? எங்கிருந்து தொடங்குவது கௌதம சித்தார்த்தனின் சிறுகதைகள் குறித்து? இந்தப் பதற்றங்களுக்குப் பின்னால் / கேள்விகளுக்குப் பின்னால் கௌதம சித்தார்த்தன் என்ற படைப்பாளன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். எனவே, அவரைக் கொஞ்சம் வெளியில் அனுப்பிவிட்டுத்தான் பிரதி குறித்த உரையாடலைத் துவக்கினேன் எனக்குள்.
பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பு முதல் பதிப்பு 2005இல் வெளிவந்துள்ளது. என் கைக்குக் கிடைத்தது 2014இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பு. பொம்மக்கா நூலில் உள்ள சிறுகதைகளை முதன் முதலில் வாசித்தபோது எனக்குள் எழுந்த கேள்வி இக்கதைப் பொருண்மைகளைச் சிறுகதைகளாக்கி வாசகனுக்குத் தர வேண்டிய அவசியம் என்ன? அதிலும் குறிப்பாக, எடுத்த உடனேயே பின் நவீன எழுத்தின் அறிமுகம் கிடைக்கின்ற, பின்நவீன எழுத்துமுறைக்குள் நுழைந்துவிடும் சாத்தியமுள்ள காலகட்டத்தின் வாசகனுக்கு இக்கதைகளைக் கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்விக்கான விடையை பொம்மக்கா கதைகளை வாசித்து முடித்து அசைபோடும் வாசகன் உணர்ந்து கொள்வான். அதுதான் பொம்மக்காவின் தனிச்சிறப்பு.
‘புதிர்க் கட்டங்களிலும் வடிவ உத்திகளிலும் தொன்மங்களிலும் நான் மேற்கொண்ட பயணம், மண் சார்ந்த தொன்மங்களின் கதையாடல்களில் கால் பதிக்க வைத்தது. நான் பிறந்த கொங்கு மண்ணின் வாசம் என் உடலெங்கும் அப்பிய வேளை, மிகப்பழைய காலம் ஒன்றின் மறைந்தொழிந்து போன வாழ்விலிருந்து வழக்கொழிந்து போன, புழக்கத்திற்கு அருகிப் போன கதைச் சொல், எண்ணற்ற அளவில் வந்து குமிந்து கொண்டிருந்தது என் மொழிக்குள். கொங்கு மண்ணின் அந்தக் கதைச் சொற்கள் இறந்த காலத்தின் புதைகுழியிலிருந்து மீண்டெழுந்து புதிய அர்த்தங்களுடன் தங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன’.
பொம்மக்கா நூலின் முன்னுரையில் (முதல் பதிப்பில்) உள்ள இவ்வரிகளே பொம்மக்கா நூலில் உள்ள சிறுகதைகளுக்குத் திறப்பினைக் கொடுக்கின்றன.
தொகுப்பில் பொம்மக்கா, ஒண்டி முனியப்பன், பாட்டப்பன், பெருமாயி, அஞ்சாங்கரம், 64 பொட்டுச்சாமி கதை, கொட்டாப்புடி சாமி, எட்டாங்கல் ஆகிய எட்டு கதைகள் உள்ளன. கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், சொல்லாடல்கள், சடங்குகள், நம்பிக்கைகள், உறவுநிலைகள் அனைத்தும் இரத்தமும் சதையுமாக புனைவாகியிருப்பதும் இத்தொகுப்பின் மீதான மதிப்பை மிகுவிக்கின்றன.
இந்த எட்டுக் கதைகளில் உள்ள ஒற்றுமை என்னவெனில், தொன்மக் கதையாடல், நாட்டார் தொன்மக் கதையாடல்களை மீட்டெழுதுதல், ஆவணப்படுத்துதல், சாதியம், அதிகார வர்க்கம், ஆண் பெண் உறவுநிலை, ஒழுக்கம்சார் மதிப்பீடுகள். இவைதான். மேற்சொன்னவற்றுக்குள் எட்டுக் கதைகளும் அடங்கிவிடுகின்றன. அனைத்துக் கதைகளும் மழை பெய்து கொண்டிருந்தது, வெயில் காய்ந்து கொண்டிருந்தது, வானம் மப்பாய்க் கிடந்தது, இன்னும் கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கவில்லை என பருவ மாற்றங்களில் இருந்தே தொடக்கம் கொள்வதும் இங்குக் கவனிக்கத் தக்கது. இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்வில் சுயம் இழந்து போன முகநூல், ட்விட்டர், இணையவாசிகள் விழித்தெழ வேண்டிய அவசியத்தையே இவை உணர்த்துகின்றன.
கதையில் இடம்பெறும் சில நம்பிக்கைகளே கதையை வளர்த்தெடுத்துச் செல்கின்றன. மேலும் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் சென்று மீளும் தன்மை கதைகளில் உள்ளன.
நாட்டார்த் தொன்மக் கதையாடலுக்கான பொதுக்கூறான மனிதர்கள் இறந்து தெய்வமாதல் என்பது இந்தத் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் அடிநாதமாக இருக்கின்றன.
பெரும்பாலும் தற்கொலை செய்து கொண்ட, அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள் அந்த இனத்தின் / குடும்பத்தின் குலதெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். மரணத்திற்குக் காரணமானவர்கள் மனத்தில் எழும் குற்றவுணர்ச்சியும் பயவுணர்ச்சியுமே இத்தகைய நாட்டார்த் தெய்வ உருவாக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன. இறந்து போனவர்கள் கனவில் வந்து தான் தெய்வம் ஆகிவிட்டதாகவும், இம்மாதிரியான சடங்கைச் செய்து தன்னை வழிபட வேண்டும் என்று சொன்னதாகவும் கதைகள் சொல்லப்படுவதுண்டு. அந்தச் சடங்கின் / வழிபாட்டின் காரணங்கள் மறைந்து போனாலும் சடங்குத்தனமாகவாவது மக்கள் வழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியான சடங்குகளும் நம்பிக்கைகளும் பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பில் நிரம்பிக் காணப்படுகின்றன.
பொம்மக்கா சிறுகதையில் புத்திக்கல்லு போடுதல் என்னும் சடங்கு
பாட்டப்பன் சிறுகதையில் கருப்பு ஆட்டைத் திருடிப் பொங்கல் வைத்தல் என்னும் சடங்கு
ஒண்டி முனியப்பன் சிறுகதையில் ஒண்டி முனியப்பன் கோயிலில் உலுந்துட்டுப் போதல் என்னும் சடங்கு
பெருமாயி சிறுகதையில் படப்புக் கல்லு மீது கோவைப்பழம் வைத்தல் என்னும் சடங்கு
64 பொட்டுச்சாமி கதை என்னும் சிறுகதையில் திருமணமாகாத வாலிபர்கள் பொட்டுச்சாமி மீது 64 பொட்டு வைத்தல் என்னும் சடங்கு
ஆகிய கொங்கு வட்டாரச் சடங்குகளின் பின் இயங்கிக் கொண்டிருக்கும் கதையாடல்களைப் புதிய அர்த்தத் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன கௌதம சித்தார்த்தனின் புனைவெழுத்துகள்.
இந்தத் தொகுப்பில் பொம்மக்காவும், செவந்தியும்தான் ஆணாதிக்கத்தின்மீது முதல் கல்லை எறியும் தேவதைகளாக இருக்கின்றனர். பாட்டப்பன், இறுக்கமான சாதிய முகத்தின் மீது கல்லெறியும் தேவகுமாரன்.
64 பொட்டுச்சாமி கதையில் ஏற்கனவே திருமணமான செவந்தி மற்றும் ராசய்யா இருவருக்குமிடையிலான பாலுறவுச் சம்பவம் மிகக் கவித்துவமாக மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது. செவந்தி மீதான காமம், பேய் மழையையைப் பொருட்படுத்தவில்லை. நெட்டைக்கால் குச்சியின் பாரம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவன் கண்முன்னால் தெரிந்ததெல்லாம் செவந்தி மீதான காதல். அவள் மீது கொண்ட மோகம். அந்த மழையையும் பொருட்படுத்தாமல் நெட்டைக் குச்சியைக் குடையாகச் சுமந்து சென்று, செவந்தியோடு உறவுகொண்டபின் நெட்டைக் குச்சைத் தூக்க முடியாமல் செவந்தியின் கணவன் உள்ளிட்ட ஊர்மக்கள் முன் மாட்டிக் கொள்கிறான் ராசய்யா. ஊர் வழக்கப்படி 64 குடும்பங்களும் ஒழுக்க மீறலில் ஈடுபட்ட அவனுக்குப் பொட்டு வைப்பதென முடிவு செய்யப்படுகிறது. அப்போது முதல் பொட்டைச் செவந்தி வைக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. ‘இது என்ன மாதிரியான தண்டனை? தண்டனை விதித்து வேடிக்கைப் பார்க்கும் இவர்களுடைய யோக்கியதை என்ன?’’ என்ற கேள்வி மிக முக்கியானது. பொட்டை நெற்றியில் வைக்க கையை உயர்த்திய செவந்தி சற்றென நிலை மாறி, அவனது தொங்கிக் கிடந்த குறியில் பொட்டை வைக்கிறாள்.
அந்தப் பொட்டு யோக்கிய வேசத்தின்மீது வைக்கப்பட்ட பொட்டு. ஆதிக்கத்தின் மீது வைக்கப்பட்ட பொட்டு. ஒருதலைபட்சமான சமூக நியதியின்மீது வைக்கப்பட்ட பொட்டு.
இந்தத் தொகுப்பில் உள்ள பொம்மக்கா சிறுகதை மிக முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பது என் கருத்து. இராமாயண, மகாபாரத கதையாடல்களைப் பொம்மக்கா வேறு கோணத்தில் / பெண்ணின் கோணத்தில் நின்று பிரசங்கிக்கிறாள். இந்தக் கதையை வாசிக்கின்ற வாசகன் மனதில் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையும், அவர் சிருஷ்டித்த அகலிகையும் நிழலாடுவதைத் தவிர்க்க முடியாது.
தந்தைக்குப் பிறகு ஊர்த் திருவிழாக்களில் இராமாயண மகாபாரதக் கதைகளைப் பிரசங்கம் செய்யும் பணியைக் கையிலெடுக்கின்ற பொம்மக்கா, புராண இதிகாசக் கதையாடல்களின் பின் புனையப்பட்டுள்ள ஆணாதிக்கக் கருத்தாடல்களை உடைத்தெறிகிறாள். பீஷ்மரையும், தருமனையும், இராமனையும், கண்ணனையும் என இத்தியாதி ஆண் பிம்பங்களின் மீதான புனிதங்களை உடைத்தெறிகிறாள். சீதை, பாஞ்சாலி முதலிய இதிகாசப் பெண்களின் பக்கம் நின்று இராமாயண, மகாபாரத பிரசங்கங்களை நிகழ்த்துகிறாள் பொம்மக்கா. சீதையைப் பற்றிச் சொல்லும்போது தங்களுடைய சாதிப் பெண்களின் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் பொம்மக்கா. “வேறு சாதிக்காரகளோடு புழங்கிய பெண்களைச் சாதி விலக்கம் செய்துவிடுவார்கள் தங்களது சாதிக்காரர்கள். ஆண்கள் என்றால் மன்னித்து சாணித் தொட்டியில் முங்கிச் சடங்கு செய்து எடுத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மன்னிப்பே இல்லை”. இந்த இடம் மிக முக்கியமானது. இந்தச் சமூகத்தில் எப்போதுமே ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி. உயர்ந்த சாதிகளுக்கு ஒரு நீதி. தாழ்ந்த சாதிகளுக்கு ஒரு நீதி. இதுதான் வரலாறாக நீண்டு கிடக்கிறது.
பொம்மக்கா சிறுகதையில் இரண்டு முக்கியச் சம்பவங்கள் பெண்ணுடல் ஒடுக்கப்படுகின்ற அவலத்தினைத் தோலுரித்துக் காட்டுகின்றன. ஒன்று, மொண்ணையன் என்பவன் தன் மனைவியை இரண்டு பொதி ஆரியத்துக்கு மல்லப்பனின் பண்ணையத்தில் அடகு வைக்கின்ற சம்பவம். மல்லப்பனின் பண்ணையத்தில் இருந்து தப்பித்து, தனது அத்தை மகனான சாமையன் வீட்டுக்குச் சென்றுவிட, அவளது ஒழுக்கத்தின்மீது விசாரணை வைக்கின்றனர் மொண்ணையனும் மல்லப்பனும். பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியைப் பிரசங்கம் செய்யும் பொம்மக்காவின் பேச்சு, இந்த வழக்கில் மொண்ணையன் மனைவி மீதான நியாயத்தை எடுத்துரைத்து மக்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்கிறது.
மற்றொரு சம்பவம், தாசப்பன் அவனது மனைவி மாத்தாயி இருவருக்குமிடையிலான பிரச்சனை. தாசப்பன், கேத்தம்மா கோவிலில் பூசை செய்ய, அவனது மனைவி பச்சை மண்ணில் பானை வனைந்து அதில் தண்ணீர் கொண்டு வந்து தருவது வழக்கம். ஒருநாள் அவள் பச்சை மண்ணில் தீர்த்தக் குடம் வனைய, குடம் உடைந்துகொண்டே இருக்கிறது. பூசைக்கு நீர் வராததால் அவளது கணவன் பதற்றமடைகிறான். நிலைமை அறிந்த அவன், மாத்தாயி ஒழுக்கம் தவறிவிட்டதாகச் சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறான். இந்தச் சம்பவம் குறித்து ஊர்மக்கள் அனைவரும் மாத்தாயிதான் ஒழுக்கம் தவறிவிட்டதாகப் பேசுகிறார்கள். ஆனால், பொம்மக்கா, மட்டும்தான் பிரச்சினையின் கோணத்தை மாற்றி யோசிக்கிறாள். மாத்தாயி குடம் வனைவது அவளுக்காக மட்டுமல்ல. அவனுக்கும் சேர்த்துதானே. எனவே, தாசப்பன் ஒழுக்கம் தவறி இருந்தாலும் பச்சை மண் குடம் சேராதுதானே என்று பொம்மக்கா எழுப்பும் கேள்வி தான், பெண்ணியக் குரலின் தொடக்கம்.
பெண், ஆளுமைமிக்கவளாக, புத்திக்கூர்மையுள்ளவளாக இருப்பினும், குடும்ப அமைப்பிற்குள் அவளது ஆளுமை முடக்கப்பட்டு சராசரி குடும்பப் பெண்ணாக வாழத்தான் இந்தச் சமூகம் பெண்ணை நிர்பந்திக்கிறது என்பதற்குப் பொம்மக்கா ஒரு சான்று. பக்தி இலக்கியத்தில் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. ஆளுமைமிக்கப் பெண்கள் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் / வாழ்க்கை மறுக்கப்படுவார்கள். ஆனால், பின்னாளில் இத்தகைய மறுக்கப்பட்ட வாழ்க்கைக்குப் பின்னால் அவர்கள் தெய்வமாக்கப்பட்டுவிட்டார்கள், கடவுளை அடைந்துவிட்டார்கள் என்பதான புனிதக் கதையாடல் பின்னப்படுகிறது. பொம்மக்கா தெய்வமானதற்கு / தெய்வமாக்கப்பட்டதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிக நுட்பமானது.
பொம்மக்கா கதையில் மட்டுமல்ல, ஒண்டி முனியப்பனும், பெருமாயியும், பாட்டப்பனும், பொட்டுச்சாமியும், கொட்டாப்புடியும் என எல்லாருமே நாட்டார்த் தெய்வங்களாக்கப்பட்டதற்குப் பின்னால், ஆணாதிக்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் அதன் கோரமுகமும் ஊடிழையாகச் செயல்படுவதை வாசகர்களால் உணர முடியும்.
நாட்டுப்புற ஆய்வாளனின் களப்பணி நேர்த்தியுடன் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய பீட்சா பர்க்கர் தலைமுறையைச் சார்ந்த ஒருவன், கதைகளையும் வாழ்க்கையையும் நினைவுகளில் புதைத்துக் கொண்டு வாழும் பாட்டிகளிடம் கதை கேட்டல் அல்லது செய்யப்படுகின்ற சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு விளக்கம் கேட்டுப் பெறுதல் எனும் தொனியே இக்கதைகளின் உயிர்நாடி. நமது அடையாளம் / மரபு / வேர் குறித்த பிரக்ஞையற்று உலகமயமாக்கல் கலாச்சாரத்துக்குள் தனது அடையாளம் இழந்து போகிற / அடையாளம் தொலைத்து வாழ்கின்ற தலைமுறைகளுக்கு இக்கதைகள் ஓர் இனவரைவியல் ஆவணங்கள் எனில் மிகையாகாது.
கௌதம சித்தார்த்தன் கொங்கு பகுதி வாழ் நாட்டார்த் தொன்மக் கதையாடல்களைப் புனைவாக்கிக் கொடுத்திருப்பது போல தமிழகம் முழுக்க ஏராளமான பொம்மக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடித் தொகுத்து ஆவணப்படுத்துதலும் புனைவாக்குதலும், அவற்றின்மீதான காத்திரமான விவாதங்களை முன்னெடுப்பதுமே தான் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை அடையாளம் காணச் சிறந்த வழி. அதற்கான சிறு நெருப்புத் துண்டுதான் கௌதம சித்தார்த்தனின் பொம்மக்கா.

(நன்றி : கணையாழி, 2015 மார்ச் )

1 கருத்து: