திங்கள், 11 மே, 2015

நிர்பயாக்களின் தேசம்

நிர்பயாக்களின் தேசம்
      -- மனுஷி

நிர்பயாக்கள்
எப்போதும் பயமற்றவர்கள்
அவர்கள்
வாழ்தலுக்கான போராட்டத்தில்
மரணத்தைச் சுவைத்தவர்கள்.

இது நிர்பயாக்களின் தேசம்
நிர்பயாக்கள் உருவாக்கப்படும் தேசம்.

நிர்பயாக்களுக்கு
எல்லா காலத்திலும் ஒரு பெயருண்டு.

முத்தொழில் செய்யும் கடவுளர்களுக்கு
நிர்வாணத்தோடு உணவு படைத்தாள்
நிர்வாணத்தைப் படைத்தாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் அனுசுயா.

நீரில்
நிழல் கண்டு நினைத்ததற்காய்
தலை துண்டிக்கப்பட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் ரேணுகா.

கணவனென்றே எண்ணி
தேவனைப் புணர்ந்து
கல்லாய் சமைந்தாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் அகலிகை.

காதலைத் தெரிவித்ததால்
மூக்கறுபட்டாள்
முலையறுபட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் சூர்ப்பனகை.

கணவன் இருக்கும் இடமே அயோத்தியென
அப்பாவியாய் பின் தொடர்ந்தவள்
தீக்குள் பாய்ந்து உயிர் விட்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் சீதை.

கணவனுக்காக
முலை அறிந்து
முலை எறிந்து
மதுரை நகர் எரித்து
வாழ்க்கை கருகினாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் கண்ணகி.

ஆயிரத்தெட்டு பொன் கொடுத்து வாங்கப்பட்டாள்
ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர் மாதவி.

காதல் மறைத்து
காமம் புதைத்து
துறவு பூண்டு
சிறைபட்டு மீண்டாள் – ஒரு நிர்பயா
அன்று
அவள் பெயர்  மணிமேகலை.

இன்னும் முடிந்தபாடில்லை
நிர்பயாக்களின் பெயர்கள்.
முடிந்தபாடில்லை
நிர்பயாக்களின் கதைகள்.

இன்று ஆசிட் வீசி கொல்லப்படுகிறார்கள்
எங்கள் நிர்பயாக்கள்
அவர்கள்
விநோதினிகளாய் பெயர் மாறுகிறார்கள்.

இன விடுதலைக்காய்
ஆயுதம் ஏந்திய இசைப்பிரியாக்கள்
உடல் சிதைக்கப்படுகிறார்கள்
அவர்கள்
எங்கள் நிர்பயாக்கள்.

இது
நிர்பயாக்களின் தேசம்
மழை பெய்யென பெய்வதற்கு
நிர்பயாக்கள் தேவை.

ஆனால்
நிர்பயாக்கள் பயமற்றவர்கள்.
இலட்சியக் கனவுகளைச்
சுமந்து திரிகிறார்கள்.
அவர்களின் ஆன்மாவில்
இன்னும் உயிர்த்திருக்கிறாள் – ஒரு கொற்றவை.

வானம் தான்
நிர்பயாக்களின் எல்லை.
பறந்துதான் அடைய வேண்டும்
அந்தத் தூரத்தை.
பறந்துதான் ஆக வேண்டும்.

சிறகுகளாய் படபடக்கின்றன
நிர்பயாக்களின் கால்கள்.

பெண்ணுடலைச் சிதைக்க சிதைக்க
குருதியிலிருந்து
உயிர்த்தெழுவார்கள் நிர்பயாக்கள்
ஃபீனிக்ஸ் பறவையைப் போல.
இது நிர்பயாக்களின் தேசம்.
நிர்பயாக்களை உருவாக்கும் தேசம்.

(மார்ச் 8 அன்று காந்திகிராமிய பல்கலைக்கழக மகளிரியல் துறையில் வாசிக்கப்பட்ட கவிதை. நன்றி : தாமரை,)

1 கருத்து: