ஞாயிறு, 3 மே, 2015

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சு 
(கல்கியின் ‘குறி அறுத்தேன்’ தொகுப்பை முன்வைத்து)
-- மனுஷி

குருதியில் மலர்ந்த மகளிர் தினத்தன்று, குறி அறுத்து / குருதியில் நனைந்து / மரணம் கடந்து / மங்கையான  கவிஞர் கல்கியின் கவிதைகள் குறித்துப் பேசுவதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
கல்கியின் கவிதை குறித்துப் பேசுவதற்கு முன்னால், திருநங்கைகளின் எழுத்துகள் எனக்கு அறிமுகமானதைப் பற்றிப் பேசவேண்டும்.
கவிஞர் மாலதி மைத்ரியின் கட்டுரை ஒன்று திருநங்கைகள் மற்றும் உடல் வேட்கை (வெறி) கொண்ட ஆண்களின் / ஆணாதிக்கச் சமூகத்தின் மீதான என் பார்வையைக் கொஞ்சம் மாற்றியமைத்தது. கூவாகம் திருவிழாவில் திருநங்கைகளிடம் ஆண்கள் நடந்து கொள்ளும் வக்கிரத்தைத் தோலுரித்துக் காட்டியது மாலதி மைத்ரியின் கட்டுரை. அதன்பின்னர், திருநங்கைகளின் வாழ்வியல் குறித்த நூல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.
தமிழில் திருநங்கைகள் குறித்து, நா.காமராசன், கி.ராஜநாராயணன், சு.சமுத்திரம் போன்றோர் படைப்புகளை எழுதியுள்ளனர். ஆனால், திருநங்கைகள் குறித்து இரத்தமும் சதையுமான வாழ்க்கையை லிவிங் ஸ்மைல் வித்யாவின் “நான் வித்யா” என்னும் நூலை வாசித்து உணர்ந்தேன். திருநங்கைகளின் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் வலி, கண்ணீர், ரணம், ஏக்கம், காதல் என இவற்றைக் கண்ணீர் இன்றி கடந்து போக  முடியவில்லை. அதன்பின்னர் ரேவதியின் “வெள்ளை மொழி” வாசிக்கக் கிடைத்தது. பெண்ணாக வாழப் போராடும் திருநங்கையின் தன்வரலாறு இது. திருநங்கைகள் குறித்து பொதுப்புத்தியில் நிலவும் ஏளனங்கள், கேலி கிண்டல்கள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கும் ரேவதி, திருநங்கைகள் குறித்த நல்ல எண்ணங்களையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
அதேபோல புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான திருநங்கைகள் குறித்த ஆவணப்படம் எனக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்ணாகப் பிறந்தாலே வலியும் கண்ணீரும்தான் என்று எனக்குள் இருந்த எண்ணத்தை இத்தகைய எழுத்துகள் மாற்றின. நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். எனவே தான் இப்படியான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிற தெளிவை தலித் எழுத்து, பெண் எழுத்து இவற்றுக்குப் பிறகு திருநங்கை எழுத்து எனக்குச் சொல்லித் தந்தது.
இதுவரை கட்டுரைகளாகவும், கோட்பாடுகளாகவும், தன்வரலாறுகளாகவும் மட்டுமே திருநங்கை எழுத்துகளோடு அறிமுகமும் உறவும் இருந்தது.
புதுவையில் புத்தகப் பூங்கா என்னும் புத்தகக் கடை திறப்பு விழாவில் தற்செயலாக குறி அறுத்தேன் நூலைப் பார்த்தேன். அந்தத் தலைப்பு என்னைக் கவர்ந்தது. குட்டி ரேவதியின் முலைகள் என்னும் தொகுப்பை நினைவூட்டியது அந்தத் தலைப்பு. அன்று இரவே குறி அறுத்தேன் தொகுப்பை முழுமையாக வாசித்து முடித்தேன்.
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை சக மனிதர்களை நேசிக்கத் தெரியாத சமூகத்தின்மீது வீசப்படும் சாட்டைகள்.
கல்கி ஒரு பேரழகி. ஒரு பெண்ணாக எனக்கு கல்கியின் அழகில் எனக்குச் சின்ன, (செல்ல) பொறாமை உண்டு. ஆனால், இந்தத் தொகுப்பை வாசித்து முடித்த கணத்தில் இருந்து கல்கியை நான் கொண்டாடுகின்ற என் தாய்த் தெய்வமான கொற்றவையாகத்தான் பார்க்கிறேன். மகாகவி பாரதியின் அக்கினிக்குஞ்சாகத்தான் பார்க்கிறேன். தோழி கல்கி எனக்கு அப்படித்தான் காட்சி தருகிறாள்.
ஹைதாராபாத் கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் உள்ள பாறையில் வரையப்பட்டுள்ள சிவனின் கழுத்தில் காலை வைத்துக் கொண்டு உக்கிரமான புன்னகையுடன் வீற்றிருக்கும் காளி உயிர்ப்பெற்று வந்துவிட்டாளோ என்று கூட நினைத்தேன். அவ்வளவு காத்திரமான கவிதைகளை இந்தத் தொகுப்பு தாங்கி இருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதையை வாசித்ததும் கல்கியைக் கட்டியணைத்து முத்தமிடத் தோன்றியது. கவிதைக் காதலன் என்னும் தலைப்பில் அமைந்த இந்தக் கவிதைதான்.
“ஒரு கவிதைக் காதலன் / காதல் கவிஞன் / வாழ்க்கைத் தோழனாய் / வேண்டும் எனக்கு / என் இதயத்தையும் / அதில் நிறைந்த காதலையும் / ஒரு கவிஞனுக்கே கொடுப்பேன் / முத்தம் என்றொரு புதுக்கவிதையை / என் இதழ்களில் எழுதவும் / கவ்விய இதழ்களில் கலந்துவிட்ட மூச்சோடு / காவியம் பாடவும் / கவிதைக் காதலன் வேண்டும் எனக்கு / இப்பொழுதே தன் காதலை / கவிதையாய்ச் சொல்லவும் / எப்பொழுதும் கவிதையைக் காதலுடன் சொல்லவும் / ஒரு காதல் கவிஞன் / கவிதைக் காதலன் / வாழ்க்கைத் தோழனாய்”                                                                           
இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்குப் பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. கல்கியின் இந்தக் கவிதையில் முழுக்க முழுக்க பெண்ணின் குரல், பெண்ணின் காதல் ஏக்கம் நிரம்பித் ததும்புகிறது. இந்த ஒரு கவிதைதான் இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என்னைப் பொறுத்தளவில். இந்த ஒரு கவிதைக்காகத்தான் கல்கிக்கு என் முத்தங்கள். காதலைக் கவிதை போல நேசிப்பவர்களால் மட்டுமே, கவிதையைக் காதலைப் போல சுவாசிப்பவர்களால் மட்டுமே இப்படியான கவிதையை எழுத முடியும். இப்படியான கவிதையைக் காதலிக்க முடியும். கல்கி, ஆகச் சிறந்த காதலி. உண்மைக்காதலுக்காக ஏங்கும் தூய ஆன்மா.
காதலின் துயரத்தை பாப்லோ நெரூதா இப்படிச் சொன்னார் “இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதலாம்”. காதலின் வலியை, அதன் துயர அழகியலைக் கவித்துவத்துடன் சொல்லும் கவிதை அது. கல்கியின் “ஒரு காதலின் மரணம்” எனும் கவிதை, காதலின் துயரத்தை அழகியலுடனும் மிகுந்த கோபத்துடனும் சொல்கிறது. இந்தத் தொகுப்பில் கொண்டாடத்தகுந்த கவிதையில் அதுவும் ஒன்று.
காதலில் தனது எதிர்பார்ப்பை, ஏக்கத்தை, அதிலிருந்து உண்டான விரக்தியை எளிமையான துயர அழகியலோடு பேசும் கவிதை “ஒரு காதலின் மரணம்”. இந்தக் கவிதையை “நேற்றிரவு என் காதலைக் கொன்றுவிட்டேன்” என்று தொடங்குகிறார் கல்கி. இந்த வரி என் இதயத்துடிப்பைச் சட்டென நின்றுபோகச் செய்தது. ஒரு காதலைக் கொல்வது அவ்வளவு சுலபமா? சாத்தியமா? ஆனால், ஏமாற்றத்தின் உச்சத்தில் அது சாத்தியம். கவிதையில் அது சாத்தியம். தான் ஒரு பொம்மையாகப் பாவிக்கப்படுகிறோம், உடல் மட்டுமே ஆணுக்குத் தேவையாக இருக்கிறது என்பதை உணரும் கணத்தில் கல்கி காதலைக் கொல்லத் துணிகிறார். ஆனால் உண்மையில் அது கொலை இல்லை. கண்ணீர். துயரம் தோய்ந்த கண்ணீர் மட்டுமே. “அவனுக்கு இதயம் என்ற ஒன்று இருந்தால் / அதில் காதல் கொஞ்சம் இருந்தால் / என் இதயம் அறுத்த அவனும் / காதலின் வலியை / அனுபவித்துப் பார்க்கட்டும்” என்ற வரிகளில் கண்ணீரின் அடர்த்தியை, ஓர் அபலையின் கேவலைத்தான் என்னால் உணரமுடிகிறது.
கல்கி, வெறும் காதலையும், காதல் ஏக்கங்களையும், அதனால் உண்டான விரக்தியையும், கண்ணீரையும் மட்டும்தான் கவிதையாக எழுதி இருக்கிறாரா? அப்படியான விமர்சனத்தை இந்தத் தொகுப்பின்மீது வாசகர்கள் முன்வைக்க முடியாது. இந்தக் கவிதைகள் தனிப்பட்ட ஒரு பெண்ணின் / மனுஷியின் வலிகளும் துயரங்களும் கோபங்களும் மட்டும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிதைகள் மட்டுமல்ல. சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிற / வாழ்வு மறுக்கப்படுகிற பெண்ணின் துயரங்கள். மேலும், ஈழம் என்றொரு சிதைந்த யோனி என்னும் கவிதை, கல்கியை சமூக அக்கறை கொண்ட படைப்பாளியாக முன்னிறுத்துகிறது. ”எனக்கான தேடலில் நானும் / தன் இனத்திற்கான தேடலில் அவளும் / வலி சுமந்தோமே” என இசைப்பிரியாவுடன் தன்னை இணைத்துப் பார்க்கிறார் கல்கி. இங்குதான் ஒரு படைப்பாளியாக கல்கி உயிர்த்தெழுகிறார் எனத் தோன்றுகிறது.
“கடவுளுக்கு மனைவியாகி / ஒரே நாளில் விதவையான / ஒரு பரிசோதனை கவிதை நான்” என்ற வரியைக் கல்கியால் மட்டும் தான் எழுத முடியும். ஆனால், கல்கி வெறும் பரிசோதனை கவிதை இல்லை. வாழ்க்கையைப் போராட்டத்தோடு எதிர்கொள்ளத் துணிந்த போராட்டக்காரி. வாழ்க்கையில் சாதிக்கத் துணிந்த கலகக்காரி.
“சடங்குகளை மூட்டை கட்டி / சாக்கடைக்குள் போட்டபின் / புன்னகை செய்ய கற்றுக் கொண்டேன் / பூக்களோடு பேசக் கற்றுக் கொண்டேன் / காதலிக்க கற்றுக் கொண்டேன் / கவிதை எழுத கற்றுக் கொண்டேன் / கவிதையாகவே வாழவும் இன்று கற்றுக் கொண்டேன்”
என்ற கவிதை வரிகள் தான் கல்கி ஒரு கலகக்காரி என்பதற்கு உதாரணம்.
கல்கியின் கவிதைகள் வெறும் கவிதைகள் மட்டுமல்ல. இதில் வாழ்க்கை இருக்கிறது. உண்மை இருக்கிறது. வாழ்தலுக்கான போராட்டம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை இருக்கிறது. மனிதத்தின்மீதான காதல் இருக்கிறது.
”உங்களின் ஆணாதிக்க குறியை / அறுத்துக் கொள்ளுங்கள் / நீங்கள் யார் என்பதை / அப்போது அறிவீர்கள் /”
“போகிறது பார் பொட்டை / என்று நகைத்துச் சிரித்தார்கள் / ஆண்மையைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள்”
“சேலை கொடுத்தான் கண்ணன் / இப்போது அவன் வேண்டாம் எனக்கு”
”பாருடா கண்டார மவனே / நான் ஆம்பள இல்லடா பொம்பள / ஓங்கி ஓங்கி கைகளை அடித்தேன் வெறியோடு”
இப்படியான சொல் சாட்டைகளைப் பலம் கொண்ட மட்டும் இந்தச் சமூகத்தின்மீது வீசுகிறார் கல்கி. கல்கியின் கவிதை வரிகள் வெறும் சொற்கள் அல்ல. சொல் சாட்டைகள். நெருப்புக் கங்குகள். அழுக்கேறிப்போன சமூகத்தின் பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக் குஞ்சுகள். இந்த அக்கினிக் குஞ்சு இன்னும் சில அக்கினிக் குஞ்சுகளைத் திருநங்கை சமூகத்திலிருந்து உருவாக்கும் என்பது என் நம்பிக்கை.
கல்கியின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவை, இந்தச் சமூகத்தை / ஆணாதிக்கச் சமூகத்தை நோக்கி நேரடியாகக் கோபத்தை வெளிப்படுத்துகின்றன. ஆற்றாமையில் கண்ணீர் சிந்துகின்றன. சக மனுஷிகான வாழ்வைச் சமூகத்திடம் / குடும்பத்திடம் இரைஞ்சும் தன்மையில் அமைந்துள்ளன. இந்த நேரடி உரையாடல் தன்மையே கல்கியின் பலமாகவும் உள்ளன. ஆனால், அடுத்தடுத்த தொகுப்புகளில் நேரடி உரையாடல் தன்மையிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கவித்துவத்துடன் கவிதைகளை அவர் எழுத வேண்டும்.
தமிழ்க் கவிதை வரலாற்றில் கல்கிக்கான இடம் பிரகாசமாக ஒளிவீசிக் காத்திருக்கிறது. அந்த ஒளிக்கற்றைகளின் வழித்தடத்தில் அவர் தொடர்ந்து பயணிப்பார். தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.
கல்கிக்கு என் அன்பும் முத்தங்களும்.

நன்றி : தளம் காலாண்டிதழ் ஏப்ரல்-ஜூன் 2015

2 கருத்துகள்:

  1. தளம் காலாண்டிதழில் கவிஞர் கல்கியின் குறி அறுத்தேன் கவிதை நூல் குறித்த எனது விமர்சனம். - by Manushi bharathi.....

    vimarsanam super... nalla vimarsanam koduthu ruka.. all the best to kalki.....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு