வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நிலாவின் புத்தன் - மனுஷி

1.
மழலைக் குரலால்
கதை சொல்லத் துவங்கினாள் 
நிலா.
வார்த்தைகள்
ஆசிர்வதிக்கப்பட்டன .
நிலாவிடம் கதை கேட்கும் ஆர்வத்தில்
காதுகளைத் திறந்து வைத்தாள்
இரவில் விழித்திருக்கும் பைத்தியக்காரி.
மனதையும் தான்.
நிலாவின் கதையில்
ஒரு மரம் இருந்தது.
ஒரு வானவில் இருந்தது.
ஒரு பறவை இருந்தது.
ஒரு விலங்கு இருந்தது.
ஒரு கடலும் ஒரு நதியும் இருந்தன.
நிலாவும் இருந்தாள்.
கதையில் வரும் 
எல்லாமும் நிலாவின்
கதைகளைக் கேட்டன.
சில கதைகளைச் சொல்லின .
ஒன்றுக்கொன்று 
ஆறுதலாய் பேசிக் கொண்டன.
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டன.
துக்கத்தைப் பேசிப் பேசி
ஆற்றிக் கொண்டன.
நிலா,
கண்ணீரற்ற,
வலிகளற்ற 
புன்னகையாலான ஓர் உலகத்தை
அவைகளுக்கு உருவாக்கினாள். அவளின் வார்த்தைகளுக்கு
எல்லாமும் கட்டுப்பட்டன.
நிலாவின் கதை உலகிற்குள்
யாரும் வரலாம்.
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.
எந்த நிர்பந்தங்களும் இல்லை.
எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
காற்றைப் போல இருந்தன
நிலாவின் கதைவெளி.
அங்கே அமர்ந்து
கதைகளைக் கேட்டு
முடித்த பின்
இரவைச் சுமந்தபடி
மெல்ல கைவீசி அழைக்கும்
மரத்தடியில் சென்றமர்ந்தாள்
அந்தப் பைத்தியக்காரி
மறு நாள்
நிலா சொன்ன கதையில்
ஒரு புத்தன் இருந்தான்.

********
2.
ஒரு மெழுகுவர்த்தி ஒளியில் 
இரவைக் கொண்டு வந்தாய்.

கடந்துபோன
முந்தைய எந்த இரவை விடவும்
பிரகாசமாய் 
ஒளிர்ந்தது
அந்த இரவு.

பரிசுத்தமான மகிழ்ச்சியால் 
அலங்கரிக்கப்பட்டிருந்தது
அது.

அறை முழுக்கவும்
நட்சத்திரங்களை
அடுக்கி வைக்கிறாய்.

திரைச்சீலையை விலக்கி வைப்பது போல
இரவின் கனவுகளை
மென்விரலால் ஒதுக்கி வைத்தாய்
அவை
சுவர்களில் ஓவியமாக 
ஒட்டிக் கொண்டன

நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இரவில்
வாசனையைக் கிளர்த்தியபடி
மலர்ந்தன 
ஓவியத்தில் மொட்டவிழ்ந்த மலர்கள்

திசைகளில் சென்று பரவிய வாசனையை நுகர்ந்த படி
ஏகாந்த இசையைப் பாடிச் சென்றது
தனித்திருக்கும் ஒற்றை நிலா.

கண்ணாடி முன் நின்று பார்த்தேன்
நீ
நட்சத்திரவாசியாக இருந்தாய்
நான்
இரவின் தேவதையானேன்

அன்று 
இரவை அணைத்தபடி
உறங்கினேன்
அருகமர்ந்து
தாலாட்டு பாடினாய்

இரவும் உறங்கிக் கொண்டிருக்கிறது 
பனியைப் போர்த்தியபடி

காலத்தின் விந்தையால் 
அதிகாலை பிறந்து விடினும் 
கண்ணாடியின் பிம்பத்தில் 
உறைந்திருக்கும்
ஒளியிரவின் ஆழ் உறக்கம்.

நன்றி : தளம் காலாண்டிதழ் ஜூன் - ஆகஸ்டு 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக