சனி, 1 ஆகஸ்ட், 2015

தூக்குக் கயிற்றுக்கு மிக அருகில்

தூக்குக் கயிற்றுக்கு மிக அருகில்
- மனுஷி
அந்த இரவில் நட்சத்திரங்கள்
மின்னிக் கொண்டிருப்பதை
அவன் காண விரும்பினான்
உறங்க மறுத்து.
இமைகளுக்குள் துறுத்திக் கொண்டிருந்தது
மரணம்
தூசியைப் போல.
கண்களை மூடியபடிப் பார்த்துக் கொண்டிருந்தான்
மேகங்கள் கலைந்து செல்வதை
இருளும் பாதி வெளிச்சமும் படர்ந்திருந்த
அறைக்குள் இருந்தபடி.
அதிகாலையில் குளித்து முடித்தபின்
குளிர்க் காற்றை
எவ்விதப் பதற்றமும் இன்றி
உள்ளிழுத்துக் கொண்டான்.
அவனுக்கு
மிகச் சிறந்த உணவைத் தயார் செய்தார்கள்
அந்த உணவை,
அவனுக்களிக்கப்பட்ட கடைசி உணவை
எந்தவிதக் கருணையுமின்றி
மறுத்துவிட்டான்.
கடைசி உணவை
அவன் உண்ண மறுத்தது பற்றி
யாருக்கும் வருத்தமில்லை.
அவனுக்கென தயார் செய்யப்பட்ட
தேவ உணவில்
அவன் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை என
சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
பிறந்த நாளிலேயே
இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுபடுவது
ஆகச் சிறந்த கருணை எனவும்
பேசிக் கொண்டார்கள்.
அவன் மரணம் குறித்து
யாருக்கும் சிறு வருத்தமும் இருக்கவில்லை
அங்கு.
ஒரு மாபெரும் தலைவரின் இறுதிச் சடங்கிற்கு
நாடே தயாராகிக் கொண்டிருக்கையில்
கூண்டுக்குள் இருக்கும்
ஒரு சிறு பறவை
ஒரு நள்ளிரவின் முடிவில் வீழ்த்தப்பட்டு
துடிதுடித்து இறந்து போவது பற்றி
யாரும் கவலை கொள்ள மாட்டார்கள்.
மிக எளிதாக அதைக் கடந்து போகும்
மன தைரியம் வாய்க்கப்பெற்றவர்களே
அங்கிருந்தார்கள்.
நல்ல ஆடை ஒன்றை 
உடுத்திக் கொண்டபின்
இலட்சங்களை உண்டு கெட்டித்திருந்த
தூக்குக் கயிற்றின் முன்னால்
நிறுத்தப்பட்ட
அந்தக் கடைசி நொடியில்
அவனது ஒரே கடவுளிடம்
தன் ஒரே கோரிக்கையை வைத்தான்
'அடுத்த பிறவியென ஒன்று
இருக்குமானால்
எந்த மதமோ
மார்க்கமோ இன்றி
ஒரு மனிதனாக மட்டுமே பிறக்க வை.
இந்த வாழ்க்கையை
ஒரு மலரை நுகர்ந்து லயிப்பது போல
வாழ்ந்து முடிக்க வேண்டும்’ என.
தூக்குக் கயிறு
அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டிருப்பதை
மிகப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்
கடவுள்
கைகளைப் பிசைந்தபடி.
அப்போதைக்கு
அவ்வளவுதான் செய்ய முடிந்தது
அவரால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக