வியாழன், 3 செப்டம்பர், 2015

மதுரை புத்தகக் கண்காட்சி கவிதை வாசிப்பு நிகழ்வு

மதுரைப் புத்தகக் கண்காட்சி கவிதை வாசிப்பு நிகழ்வில் எனக்குப் பிடித்த மூன்று கவிதைகளை வாசித்தேன்.

1. முதலில் எனது கவிதை. முத்தங்களின் கடவுள் தொகுப்பிலிருந்து.

கடவுள்கள் தியானத்தில் இருந்தபோது

நள்ளிரவில்
சிறுமிகள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டபோது
கடவுளால் கைவிடப்பட்ட,
கடவுளால் சபிக்கப்பட்ட தேவதைகளாக இருந்தனர்.
வீடுகளில்
யாருமற்ற நேரத்தில்
சாக்லேட்டுகள் தரப்பட்டு
பலவந்தமாக பாத்ரூமுக்குள்
அழைத்துச் செல்லப்படும் சிறுமிகளும்
அப்படியே.

அந்த நாள் தான்
தனது இறுதி தினமென்று
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
வலியில்
கதறவும் திராணியற்று
அவர்கள் துடித்துக் கொண்டிருந்தபோது
கடவுள்கள்
ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர்.

வன்புணர்வுக்குப் பின்பு
கிரீடம் அணிந்த தேவதைகள்
சிறுமிகளை
சிரமமின்றி அழைத்துச் செல்லவென
பரந்து விரிந்த மரத்தில் தூக்கிடப்பட்டனர்.
தங்களின் வெள்ளுடை
சிறுமிகளின் குருதியினால் கரையாகிவிடக்கூடுமென
சற்றுத் தாமதமாகவே வந்தனர்
தேவதைகள்.

அருகில்
சிறுமிகளின் நாளை குறித்த கனவுகள்
சப்தமின்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை
தேவதைகளோ
நீங்களோ
கவனிக்கவோ
கண்டுகொள்ளவோ இல்லை.

அந்தக் கனவுகள் தூக்கிடப் படுவதற்கு முன்னால்
இப்படிச் சொல்லின

"நண்பர்களே
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்".
*******
2. இரண்டாவது, சமகால தமிழ்க் கவிதைகளில்  எனக்குப் பிடித்த கவிதையாக கவிஞர் சுகுமாரனின் பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பிலிருந்து.

இன்னும் எலும்புகள்

என‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும்.
ம‌ர‌ண‌த்தால் விறைத்திருக்கிற‌து என் வீடு

நான் உன‌க்குத் த‌ரும் சொற்க‌ளில்
மிருக‌ங்க‌ளின் கோரைப் ப‌ற்க‌ள் முளைத்திருக்க‌லாம்
உன்னுட‌ன் ப‌கிர்ந்து கொள்ளும் சிக‌ரெட்டில்
விஷ‌த்தின் துக‌ள்க‌ள் இருக்க‌லாம்
உன்னுடைய‌ த‌ட்டில் ப‌ரிமாறும் உண‌வில்
ச‌கோத‌ர‌ர்க‌ளின் மாமிச‌ம் க‌ல‌ந்திருக்க‌லாம்
உன‌க்குத் த‌யாரிக்கும் தேநீரில்
க‌ண்ணீரின் உப்பு க‌ரைந்திருக்க‌லாம்

இந்த‌ நாட்க‌ள்
காக்கிநிற‌ப் பேய்க‌ளால் நிர்வ‌கிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌

இன்று
பூக‌க‌ளும் ப‌ற‌வைக‌ளும் குழ‌ந்தைக‌ளின் புன்ன‌கைக‌ளும்
பெண்க‌ளும் எரிந்து போயினர்
உறுப்புக்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள்
வெளிக‌ளில் த‌டுமாறுகின்ற‌ன‌
பிண‌ங்க‌ளின் ந‌டுவில் நொறுங்கும்
புத்த‌னின் ம‌ண்டையோட்டிலிருந்து க‌ழுகுக‌ள் அல‌றுகின்ற‌ன‌

க‌ட‌வுள் மொழி இன‌ம் என்று
துருப்பிடித்த‌ த‌க‌ர‌த்தால்
உன் தொண்டையை அறுப்ப‌து சுல‌ப‌ம் ‍- இன்று
ம‌னித‌னாக‌ இருப்ப‌து குற்ற‌ம்

பூமி எலும்புக் கூடுக‌ளின் தாழ்வாரம்
(எலும்புக‌ள் இன்னும் குவிகின்ற‌ன‌)
காற்று ‍ வெடிம‌ருந்துப் புகைக‌ளின் கிட‌ங்கு
(புகைக‌ள் இன்னும் அட‌ர்கின்ற‌ன‌)
ம‌ண‌லில் ப‌தியும் ஒவ்வொரு சுவ‌டிலும்
ர‌த்த‌மும் சீழும் ப‌டிகின்ற‌ன‌

சில‌ந்திக‌ள் பின்னிய‌ வ‌லையில்
ச‌ரித்திர‌த்தின் ஆந்தைக்க‌ண்க‌ள் வெறுமையாய் உறையும்
துய‌ர‌ங்க‌ள் விடிவின்றி நீளும்
க‌றை - ந‌ம் எல்லோர் கைக‌ளிலும்

என‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும்
இன்று
ம‌னித‌னாக‌ இருப்ப‌தே குற்ற‌ம்.
*****
3.  மூன்றாவதாக, லண்டாய் - ஆஃப்கான் பெண்களின் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. 
எழுதிய ஆஃப்கான் கவிஞரின் பெயர் தெரியவில்லை.
தமிழில் மொழிபெயர்த்தவர் கவிஞர் ச. விஜயலட்சுமி.

where is justice?

கடவுளே நீ பெண்ணாக இருந்திருந்தால்
ஒரு ஆஃப்கன் பெண்ணாக இருந்திருந்தால்
நீ வருத்தப்பட்டிருப்பாய்
நீ ஏன் பெண்களைப் படைத்தாய்?
நீ ஏன் பெண்களைப் படைத்தாய்?
தாய் பெண் குழந்தைகளைப் பெறும்போது 
அவளுக்கு கிடைப்பது எச்சரிக்கைகளே.
வெகுமதி அல்ல.
வெட்கக்கேடு.
மறுபடியும் ஒரு பெண்குழந்தை
இந்த மருத்துவர் 
மீண்டும் ஒரு பெண் பிறக்கப்
பிரசவம் பார்த்திருக்கிறார்.

அந்தத் தாயாக நீ இருந்தால்
என்ன செய்வாய்?
நானாக நீ இருந்தால்
என்ன செய்திருப்பாய்?
குடும்பத்தினர் 25 பேரின் துணிகளைத் துவைத்து
கணவரின் விருந்தினருக்காக உணவு சமைத்து
புகையையும் கண்ணீரையும் உண்டு
என்னைப் போல இராப்பகலாக உழைக்கும்
ஒரு பெண்ணின் இதயத்தைப் பற்றி
என்ன நினைப்பாய்?
கடுங்கோடையின் பிற்பகலில்
என் கணவன் மரத்தின் நிழலில் உறங்கும்போது 
நான் இன்னும் பசித்திருக்கிறேன்.
இன்னும் வீட்டு வேலைகளை முடிக்கவில்லை.
என் குழந்தையை என் தோளில் சுமந்துள்ளேன்.
மீண்டும் எட்டுமாதம் கருவுற்று இருக்கிறேன்.
எனது நான்கு வயது மகன்
காய்ச்சலால் இறந்துவிட்டான்.
பணம் செய்யும் பகற்கனவுகளுடன் மரத்தடியில்
என் கணவன்!
என் 13 வயது குட்டிப்பெண் மார்வாவை விற்றிடவும்
தரைவிரிப்பு நெய்யத் தெரிந்த மரியமை 
அதிக விலைக்கு விற்கலாமெனவும்
திட்டமிடுகிறான்.
இறைவனே !
நீ என் போலிருந்தால்
எப்படி உணர்வீர்?
ஆதரவற்ற தாய்க்கு
நீ எப்படி உதவி செய்வாய்?
இறைவா! 
நீதான் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தாய்.
நீ யாரை மேன்மையோடு அழைக்கச் செய்தாயோ 
அவர்கள் 
நான் எதற்கேனும் ஆசைப்பட்டால் 
என் மூக்கை அறுக்கிறார்கள்.
எனக்கு விருப்பமானதைக் காதால் கேட்டால்
என் காதை அறுக்கிறார்கள்.

ஆண்கள்
உடையைப் போல
என்னைப் பயன்படுத்துகிறார்கள்.
அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
என் உணர்வு பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
நான் தயாராக இருக்கிறேனா இல்லையா
என்பது குறித்துக் கவலையில்லாமல்
அவர்கள் 12 வயது மணமகளோடு விளையாடுவதை
விரும்புகிறார்கள்.
அவர்கள் என்னைத் தொடுகிறார்கள்.
காயப்படுத்துகிறார்கள்.
எனது தந்தையும் சகோதரனும்
எனது கௌரவத்தை
70 வயது கிழவனிடம் விற்கிறார்கள்.
என் விலை ஆயிரக்கணக்கான டாலர்கள்.
ஆனால் என் கண்ணீருக்கு
விலையில்.
விலையே இல்லை. 
கடவுளே!
ஆஃப்கானிஸ்தானுக்கு வந்து பார்.
தயைகூர்ந்து என் வீட்டிற்கு வா.
என் உடலில் இருக்கும் தழும்புகள்
என் நீலக்கண்கள் 
என் செதுக்கப்பட்ட நகங்கள் 
என் இரும்பைப் போல் உறுதியான உடல்
எல்லாமே புர்காவால் மறைக்கப்பட்டுள்ளன.
நான் வலிகளால் மூடப்பட்டுள்ளேன்.
கடவுளே!
குரானில் உன்னை நீதியின் கடவுள் என்றாய் 
யார் இதைத் தீர்மானித்தது?
நீ ஆஃப்கன் பெண்ணாகப் பிறந்திருந்தால் 
நீ வதைக்கப்பட்டிருப்பாய்.
நீ வதைக்கப்பட்டிருப்பாய்.

நீ என்னைப் பெண்ணாகப் படைத்தாய்.
நான் மனிதப் பிறவி இல்லையா?
கடவுளே!
யார் என் வலியைப் போக்க முடியும்?
உன்னைத் தவிர
வேறு யாரால் என் தழும்புகளை ஆற்ற முடியும்?
என் குரலைக் கேட்க முடியும்?
கடவுளே நான் சபதமிடுகிறேன்
பெண்களுக்கு எதிரான அநீதியைத்
தடுத்து நிறுத்தும் வரையில்
உன்னை மீண்டும் தொழுவதற்கு கையேந்த மாட்டேன்.
நான் உம் குரானைத் தொடமாட்டேன்.
உம்மை இறைவா என அழைக்க மாட்டேன்.
நான் இறைவா என அழைக்கமாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக