வெள்ளி, 4 செப்டம்பர், 2015

தேவகி அக்காவின் பெண் குழந்தை

சூரியன் இளஞ்சிவப்பு நிறத்திலஇறங்கிக் கொண்டிருந்தது.
லட்சுமி வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்தும்போதே பக்கத்து வீட்டு அக்கா சொன்னாள்
‘எம்மா, தேவகிக்கு வலி எடுத்துக்கிச்சு. கவர்மெண்டு ஆசுபத்திரிக்கு ஆட்டோல ஏத்திட்டு போயிருக்காங்க. சாவி அருவகால் மேல இருக்காம்’
டாக்டர் சொன்ன தேதிக்கு முன்பாகவே தேவகி அக்காவுக்கு வலி எடுத்துக் கொண்டது.
அக்காவுக்கு இது இரண்டாவது பிரசவம். முதல் பிரசவத்தில் பிறந்தவள் கிருஷ்ணவேணி. தேவகி அக்காவைப் போல கறுப்பு.
தேவகி அக்கா கறுப்பு நிறம் என்றாலும் கலையான முகம். நீளமான கருகரு தலைமுடி. வெள்ளிக்கிழமையில் தலைகுளித்து மஞ்சள் பூசி, ஈரத்தலையுடன் அவளைப் பார்க்க வேண்டுமே. வசீகரிக்கும் அழகு. குணத்திலும் தேவகி அக்காவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அவ்வளவு பாசக்காரி. வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ஒரு நிமிடம் சும்மா உட்கார்ந்து யாரும் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே தான் இருப்பாள். ஒரு நிமிஷம் உக்கார்ந்து இந்தப் படம் பாரேன்க்கா என்று சொன்னாலும்கூட, இரு இந்த ஜாமானைக் கழுவிட்டு வரேன், இந்த அடுப்பங்கரையைத் தொடச்சிட்டு வரேன், துணிய மடிச்சு வச்சுட்டு வரேன், டீ போட்டு எடுத்துட்டு வரேன் என வீட்டின் ஒட்டுமொத்த வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள். தேவகி அக்காவிடம் ‘அக்கா, இதைச் செய்து கொடேன்’ என்று சொன்னால் போதும். முகம் சுளிக்காமல் செய்து தருவாள். அவள் சமைக்கும் கைப்பக்குவத்திற்கு கிலோ கணக்கில் தங்கம் வாங்கி அவளுக்குப் பூட்டி விடலாம். அவ்வளவு ருசியாகச் சமைப்பாள்.
அவள் அழகையும், குணத்தையும் உரித்து வைத்துக் கொண்டது போல் இருந்தாள் வேணி.  ரொம்ப ரொம்ப சமத்துக் குழந்தை. இப்போது அவளுக்கு மூன்று வயது ஆகப் போகிறது. பால்வாடிக்குப் போய்க் கொண்டிருக்கிறாள்.
நடக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ஆயா வீட்டில்தான் இருக்கிறாள்.
தேவகி அக்காவின் கணவர் வேலைக்குச் செல்வதேயில்லை. வீட்டில் முப்பொழுதும் குடித்துக் கொண்டுதான் இருப்பார். இருபத்தி நான்கு மணிநேரமும் போதையிலேயே இருக்க வேண்டும் அவருக்கு. தேவகி அக்காவின் மாமியாரும் இதற்குத் துணை. அவருக்குக் குடிக்க பணம் ஏற்பாடு செய்து தருவதை ஒரு புண்ணிய காரியம் போல செய்வாள். சிலநேரங்களில் யாரிடமாவது காசு கொடுத்து வாங்கி வந்து மகன் முன் வைப்பாள் அதற்கான சைட் டிஷ்களுடன். வேலைக்கே போகாமல் வீட்டில் இருக்கின்ற எல்லாவற்றையும் அடகு வைத்து குடித்தாகிவிட்டது. கல்யாணத்தின் போது போட்டுவிட்ட நகை எல்லாம் விற்றுக் குடித்தாகிவிட்டது. ஒரு பொட்டுத் தங்கமும் வீட்டிலும் இல்லை. தேவகி அக்காவின் உடம்பிலும் இல்லை. வேலைக்குப் போவதைப் பற்றிப் பேசினாலே வீட்டில் யுத்தம் தான்.
“அத்த அவர் இப்படியே வேலைக்குப் போவாம இருந்தா என்ன தான் ஆகறது. ஒரு பொம்பள புள்ள வேற இருக்கு”
என்று என்னைக்காவது கேட்டுவிட்டால் போதும். தேளின் விஷத்தைப் போல சுருக்கென்ற வார்த்தைகள் சரசரவென அருவி போல கொட்டும்.
“என் மவன வேலைக்குப் போவ சொல்ல நீ யாருடி. எங்கவூட்டு மவராசன். அவ இஷ்டத்துக்கு தான் இருப்பான். இஷ்டம் இருந்தா இரு. இல்ல உங்கம்மா வீட்டுக்கே போயிடு. யாரும் இங்க தவம் கிடக்கல இந்த மகராசி இங்க இருந்து வாழனும்னு. இதே ஒரு மூதேவி. இது ஒரு சின்ன மூதேவிய பெத்து போட்டுட்டு நொரநாட்டியம் பேசுது” என்பாள்.
அம்மாவுக்கு ஒரு துளியும் சளைத்தவன் இல்லை தேவகி அக்காவின் கணவன்.
“இந்தா பாரு. இஷ்டம் இருந்தா படு. இல்ல போயிடு. சும்மா வேலைக்குப் போ. பொட்ட புள்ள இருக்குனு அறிவுரை மயிர பேசிக்கிட்டு திரியாத. நீ இல்லனா என்கூட படுக்க ஆயிரம் பேர் வருவாளுங்க”.
போதையில் நாக்கு குழறினாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார். இரண்டு வருடத்திற்கும் மேலாகச் சொல்லிச் சொல்லி வெறுத்துப் போய் வேணியை அம்மா வீட்டில் விட்டுவிட்டு அழுகையும் நிம்மதியுமாக வீடு வந்து சேர்ந்தாள். குழந்தையை அம்மா வீட்டில் விட்டு வந்ததைப் பற்றிக் கணவனோ, மாமியாரோ ஒரு வார்த்தையும் பேசவேயில்லை. விட்டது சனியன் என்பது போல இருந்தார்கள்.
மற்ற குழந்தைகள் போல் இது வேண்டும் அது வேண்டும் என்று அடம்பிடிக்கும் பழக்கம் வேணியிடம் இல்லை. பசித்தால், லட்சுமியிடமோ அல்லது ஆயாவிடமோ வந்து சாப்பாடு கேட்பாள். தட்டில் போட்டுக் கொடுத்துவிட்டால் போதும். ஊட்டி விட வேண்டும் என்று கூட இல்லை. அவளே பொறுப்பாகச் சாப்பிட்டு முடித்து, தட்டைக் கொண்டு வந்து சிங்க்கில் போட்டுவிட்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டு எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பாள். அல்லது டிவி பார்ப்பாள். அம்மாவைப் பார்க்கனும், அப்பாகிட்ட கூட்டிட்டு போ என்றெல்லாம் நச்சரிக்க மாட்டாள். லட்சுமி காலேஜுக்குக் கிளம்பும்போது அல்லது வெளியில் கிளம்பும்போது தன்னையும் கூட்டிச் செல்ல வேண்டுமென அடம்பிடிக்க மாட்டாள். ‘வேணி, காலேஜுக்கு வர்றியா?’ என்று கேட்டால் தவிர வெளியில் கூட்டிச் செல்லும்படிச் சொல்லவே மாட்டாள். அதேபோல வேணியை எல்லோருக்கும் பிடிப்பதற்கு இன்னொரு விஷயம் லட்சுமியின் நண்பர்களை அப்பா என்றும், தோழிகளை அம்மா என்றும்தான் கூப்பிடுவாள். அவள் அப்படி கூப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். வீட்டிற்கு வந்தவர்கள் அம்மு இங்க வாடா என்றால் சிணுங்காமல், பிகு பண்ணாமல் மடியில் அமர்ந்து கொள்வாள். அவர்கள் ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு தேங்க் யூ சொல்வாள். வந்தவர்கள் காசு கொடுத்தால் கை நீட்டி வாங்க மாட்டாள். காசு வாங்க மறுக்கும் முகபாவமும் தலை அசைப்பும் அவ்வளவு அழகாக இருக்கும். கேள்வி எதுவும் கேட்டால் மழலை மொழியில்  அமைதியாகப் பதில் சொல்வாள். வேணி அழுது, அடம்பிடித்து பார்த்ததாய் யாருக்கும் நினைவு இல்லை. யாரையும் வசீகரிக்கும் குணம் அவளுக்கு. இந்தச் சின்ன வயதில் இவ்வளவு பொறுப்பான குழந்தையைப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்.
வேணியை, பால்வாடியில் சேர்த்துவிட்ட பிறகு காலையில் லட்சுமி, கல்லூரிக்குக் கிளம்பும்போது வேணியும் குளித்து தலைசீவி டிரெஸ் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுவாள். காலையில் என்ன சாப்பாடு செய்திருக்கிறார்களோ அதைச் சாப்பிடுவாள். பிறகு ஒரு குட்டி டிபன் பாக்சில் கொஞ்சம் சாதம் போட்டுத் தரச் சொல்லி வாங்கிக் கொள்வாள். அவளுடைய சின்ன தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொள்வாள். டிபன் பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் ஒரு அவளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட பொம்மை முகம் வைத்த பேக்கில் போட்டு முதுகில் மாட்டிக் கொள்வாள். செருப்புப் போட்டுக் கொண்டு வாசலில் ரெடியாகக் காத்திருப்பாள். ’லட்சுமி அம்மா, பால்வாடிக்குப் போலாமா’ என்ற பிஞ்சுக் குரல் மட்டும் இரண்டொரு தரம் வாசலில் இருந்தபடி கேட்கும்.
வேணி தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்வதும், யாரையும் நிர்பந்தம் செய்யாமல் பழகுவதும் அவளுக்கு இயல்பாக வந்ததா? அல்லது அந்தச் சின்ன பிஞ்சு மனம் இந்த வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டதா? என்ற யோசனை தோன்றும் கணங்களில் , பள்ளிகளில் புடவை கட்டிக் கொண்டு நடனமாடும் சிறுமிகளின் முகம் கண்முன் ஊடாடும். வேணி, தேவகி அக்காவின் புடவையைக் கட்டிக் கொண்டிருப்பது போல ஒரு பிம்பம் மின்னி மறையும். அப்போதெல்லாம் துர்கனவொன்றிலிருந்து திடுக்கிட்டு எழுந்தவளைப் போல அரற்றிக் கொண்டிருப்பேன்.
*******
லட்சுமி சைக்கிளை மிதித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றாள். அது பார்வையாளர் நேரம் தான் என்பதால் உள்ளே செல்வதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. மருத்துவமனையின் வாடை வயிற்றைப் புரட்டி எடுத்தது. மூச்சு திணறுவது போல இருந்தது. மருத்துவமனை வாடையை முதலில் நினைவிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த வார்டில் அக்கா இருக்கிறாள் என்று விசாரித்துக் கொண்டு போனாள். நான்காம் வார்டில் எட்டாவது கட்டிலில் அக்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்து பெட்டுக்கார அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அக்காவின் பக்கத்து கால் முளைத்த ரோஜாப் பூவைப் போல ஒரு சிவந்த பிஞ்சு இந்த உலகத்தின் வாசனையை உள்ளிழுத்தபடி கண்மூடிக் கிடந்தது. அதன் பாதங்களைப் பார்க்க பார்க்க மனம் பட்டாம்பூச்சியைப் போல பறந்தது. சிட்டுக்குருவி, நீரில் குளித்துவிட்டு அதன் சிறகைப் படபடவென்று அசைத்து சிலுப்பும் காட்சியைப் பார்ப்பது அத்தனை ஆசையாய் இருந்தது குழந்தையின் உறக்கத்தைப் பார்ப்பதற்கு. அக்காவை எழுப்பாமல் குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். லட்சுமியின் மனதில் இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசனை சிறகடித்துக் கொண்டிருந்தது.
*****
குழந்தை பிறந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டது. தேவகி அக்காவின் மாமியார் வீட்டில் இருந்து ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்தவுடன் செல்போனில் தகவல் சொன்னார்கள்.
“தேவகிக்கு பொம்பள புள்ள பொறந்திருக்கு. கவர்மெண்டு ஆசுபத்திரியில் நாலாவது வார்டுல தான் இருக்கா”
“ம்க்கூம். திரும்பவும் பொட்டை புள்ளயா. அத எதுக்கு நாங்க வந்து பாத்துக்கிட்டு. அங்கே வுட்டுட்டு வரச் சொல்லுங்க. செலவு  மிச்சமாகும்.”
கணவனுக்கும் சேர்த்து தேவகி அக்காவின் மாமியாரே பேசிவிட்டு போனை கட் செய்தாள். இதைக் கேட்டதில் இருந்து அக்கா அழுது கொண்டே இருந்தாள். அந்தக் குழந்தையை அதன்பின் பார்க்கவே மறுத்தாள். அளவில்லாத வெறுப்பைப் பிஞ்சுக் குழந்தையின்மீது காட்டினாள். தாயின் வெறுப்பை உணரும் திராணியற்று பாலுக்கு அழுதது குழந்தை. வீல் வீலென பசியில் கத்தியது. அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டாள். எந்த வார்த்தையும் அக்காவின் காதில் ஏறவேயில்லை. அவள் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள். கண்களின் இரண்டு புறமும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. துடைத்துக் கொள்ளவும் இல்லை. அழுது அழுது கண் இமைகள் வீங்கி இருந்தன.
இருபுறமும் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் பிரக்ஞையற்றுக் கிடந்தாள். திடீரென்று அந்த அறையை மதுவின் நாற்றம் நிரம்பிவிட்டதைப் போல உணர்ந்தாள். மூச்சு முட்டியது. அருகில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைத் திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டாள். ஆனாலும் பார்க்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மனம், ஒருபுறம் பார்க்கச் சொல்லியும், மறுபுறம் பார்க்காமல் இருக்கும்படியும் அலைகழித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் அழுகை இரவின் ஆன்மாவைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் தனக்கும் இடையில் இடையில் சாராய பாட்டில்களால் சுவர் இருப்பது போலவும், தான் அந்தப் பாட்டில் ஒவ்வொன்றையும் உடைக்க உடைக்க அதன் சில்லுகள் குழந்தையின் தளிர் மேல் தெறிப்பது போலவும் காட்சிகள் மாறி மாறி வந்தன. கண்களைத் திறந்தாள். மூடியிருந்ததற்கும் திறந்ததற்கும் எந்த அவளால் உணர முடியவில்லை. அப்போது வரை கேட்டுக் கொண்டிருந்த குழந்தையின் அழுகை நின்று போயிருந்தது. மதுவின் நாற்றம் கட்டுக்குள் வந்ததாய் உணர்ந்தாள். கண்ணீர் வழிந்து காதுக்குள் நுழைய முயற்சித்துக் கொண்டிர்ந்தது. அவள் ஆடை விலகி இருப்பதை யாரோ சரி செய்தார்கள்.
இரவு மெல்ல விடியத் தொடங்கியதும் குழந்தையின் அழுகைச் சத்தம் சுத்தமாய் காணாமல் போயிருந்தது. தூக்கம் கலைந்து அம்மா குழந்தையைத் தொட்டுப் பார்த்தாள். உடம்பு சில்லிட்டிருந்தது. சத்தமிட்டு அழமுடியாமல் வாய்க்குள் அழுகையை அடக்கிக் கொண்டு மனசுக்குள் குமுறினாள்.
*************
வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து அக்கா பித்துப் பிடித்தவள் போல் இருந்தாள். சுவரை வெறித்தபடிதான் இருக்கும் அவளது பார்வை. யாரிடமும் பேசுவதில்லை. இரவில் திடீரென எழுந்து ‘குழந்தை அழுது. பால் கொடுக்கனும்’ என நைட்டியின் ஜிப்பைத் திறந்து பால் கொடுக்க எத்தனிப்பாள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு அவளது நடவடிக்கை இன்னும் திகில் தருவதாக இருந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்து குழந்தையைக் காணோம் எனச் சொல்லி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவாள். அவளைச் சமாதானப் படுத்தவே முடியாது. அவள் அழுது அரற்றும்போது தலைவிரி கோலமாய் உக்கிரமான காளியைப் போல இருப்பாள்.
திடீரென எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள். பெரும்பாலான இரவுகள் அக்காவைத் தேடிப் போய் ஈசிஆர் சாலையின் ஓரத்தில், அல்லது பக்கத்துத் தெரு முனையில் இருந்து அழைத்து வந்தனர் அம்மாவும் லட்சுமியும். ஒருநாள் இரவு, எழுந்து வெளியே போய் தெருமுனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று  கொண்டிருந்தாள்.
‘என் குழந்தையைக் காணோம். நான் போய் தேடனும்’
சொல்லிவிட்டு கத்தி அழுதாள். இன்னொரு நாள் அதே ஆட்டோ ஸ்டேண்டில் போய் அண்ணே தண்ணி வாங்கிக் கொடுங்க. உடம்பு ரொம்ப வலிக்குது என்று உரிமையாகக் கேட்டாள். அவள் திரும்பத் திரும்ப நச்சரித்ததால் அவர்களும் அப்போதைக்குக் கைவசம் இருந்த பிராந்தி பாட்டிலைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அக்கா, குடிப்பதற்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள். அம்மாவும் முதலில் கண்டித்துப் பார்த்தாள். பிறகு குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தால் போதும். இரவில் வெளியில் தேடும் வேலை மிச்சமாகட்டும் என அக்கா குடிப்பதைப் பற்றிக் கண்டுகொள்ளவேயில்லை. அவள் மனதுக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்யட்டும் என்று விட்டுவிட்டாள்.
*********
சரியாக மூன்று மாதம் முடிந்திருந்தது. அக்காவின் மாமியார் போனில் பேசினார். ‘நடந்தது நடந்து போச்சு. தேவகியை வீட்டுக்கு அனுப்பி வைங்க’ என்றாள். லட்சுமி, அனுப்ப வேண்டாம் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா நல்ல நாள் பார்த்து அனுப்பி வைத்தாள்.
அம்மா வீட்டிலிருந்து மாமியார் வீட்டுக்குப் போன பிறகு அங்கும் யாரிடமும் அக்கா பேசவேயில்லை. கடமைக்கென வீட்டு வேலைகளைச் செய்தாள். சமைத்து வைத்தாள். பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தாள். இரவில் அவள் கணவன் வலுக்கட்டாயமாகப் பேசினான். அவன் பேச்சில் ஒரு தேவை இருந்தது.
“விடு தேவகி. அந்தக் கொழந்த போனா என்ன. என்னால தான் இன்னொரு குழந்த தர முடியாதா. உன்னால தான் பெத்துக்க முடியாதா? அதையே நெனச்சிக்கிட்டு இருக்காத.”
என்று சொன்னபடி லுங்கியைத் தளர்த்திக் கொண்டு, அக்காவின் நைட்டியைத் தொடை வரை தூக்கி விட்டான். அவனது வார்த்தைகளோ, செயல்களோ அக்காவை ஒன்றுமே செய்யவில்லை. தன் காதுகளில் அரூபமான ஒரு சுவரை எழுப்பி வைத்திருந்தாள். அக்காவின் மௌனத்தைச் சரி என்பதாய் புரிந்து கொண்டவன், மெல்ல அவள் மீது படர்ந்து இயங்கிக் கொண்டிருந்தான்.
அவள் பார்வை உத்திரத்தை வெறித்தபடி இருந்தது. அவன் உச்சத்தை அடையும் நேரத்தில் அவள் காதுகளில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. பின்னர் அது பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பொலியாக மாறியது. சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்கி வெறித்த தன் பார்வையைத் திருப்பினாள். சின்னஞ்சிறு கிளியைப் போன்ற பெண் குழந்தை ஒன்று வாசல் படியைத் தாண்டி தத்தி தத்தி உள்ளே வந்து கொண்டிருந்தது.
***********
நன்றி : ஃபெமினா இதழ் (ஆகஸ்டு 2015)

1 கருத்து:

  1. மனதின் அடி ஆழம் வரை
    ஆழ்துளை கிணறு போட்டு
    காரணம் தேடி படைத்தவனை
    பங்குக்கு பழி சுமத்த துண்டுகிறது
    இந்த அக்காளின் ஆழ்ந்த துக்கம் ...
    அதை சொல்லாமல் சொல்லும் உம்
    பேனா எவ்வளவு கண்ணீர் சிந்தியதோ
    எழுதி முடித்த பின்...

    பதிலளிநீக்கு