வெள்ளி, 4 செப்டம்பர், 2015

காதலின் கவிதை


அவள் காதலைப் பற்றிய
கவிதை ஒன்றை எழுதத் தொடங்கினாள்.
கண்ணீர்
மையாக நிரம்பியிருந்தது
அவள் பேனாவில்.
கைகள் நடுங்கத் தொடங்கின.
தொண்டைக்குழி அடைத்தது.

வறண்ட
பாசி படர்ந்த
குளத்தை ஒத்திருந்தது
அவளது காதல் நினைவுகள்.

இனி,
எழுதித்தான் ஆகவேண்டும் என்றாகிவிட்டபின்
காதலின் நினைவுகளை
மெல்லச் சுரண்டி எடுத்தாள்.

ஒரு காதல்
துரோகத்தில் முடிந்திருந்தது.

ஒரு காதல்
மரணத்தினால் களவாடப்பட்டிருந்தது.

ஒரு காதல்
நிராகரிப்பின் கயிற்றைக் கொண்டு
தூக்கிடப்பட்டிருந்தது.

இப்போது
ஒரு காதல்
பிரிவில் சென்று நிற்கிறது.

அவள்
காதலின் வாசலில்
வேண்டி நின்றது
ஒரு அன்பை மட்டுமே.

அது
அத்தனை கடினமானது என
அவளுக்குப் புரியவேயில்லை.

- மனுஷி

2 கருத்துகள்:

  1. எளிய வார்த்தைக்குள் இவ்வளவு கடின துயரமா ...
    மனதின் உண்மை வெளிப்பாடுகள் நிறைந்த ஒரு கவிதை ...
    அருமை ...
    அன்பு கடினமானது அல்ல
    அது தருபவர்களை பொருத்தது ...

    பதிலளிநீக்கு