வியாழன், 19 ஏப்ரல், 2018

மெரீனாவில் ஒரு தென்குமரி


மெரீனாவில் ஒரு தென்குமரி

சென்னை துறைமுகத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு மெரினா வழியாக வளசரவாக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன். மத்தியான வெயில் சுட்டெரித்தது. சிக்னலில் நிற்கும்போது ஒரு நிமிடம் காலைக் கீழே வைத்தால் கூட நெருப்பில் கால் வைத்தது போல தகித்தது. என்ன வெயில்.. என்ன வெயில்.. மழை மட்டுமா அழகு. சுடும் வெயில் கூட ஒரு அழகு என்று எப்படிச் சொல்ல முடிந்தது அந்தக் கவிஞனால். ஆனால் இயற்கையின் அத்தனை அழகையும் இயல்பையும் ரசித்துத்தான் ஆக வேண்டும்.  
அடிக்கின்ற கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாகக் குடித்தால் நன்றாக இருக்கும். இடதுபுறத்தில் ஜூஸ் கடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன். மனசுக்குள் 'என்றென்றும் புன்னகை... ஒளிவிழா புன்னகை' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மெரினா சாலையில் வண்டி ஓட்டினால் அலைபாயும் மனசுக்குள் இந்தப் பாடல் வந்து ஒட்டிக் கொள்ளும். இப்போது சென்னையின் தூசு கண்களை உறுத்தாமல் இருக்க ஸ்டைலா கண்ணாடி வேறு வாங்கிவிட்டதால் பெண் மாதவனாகவே நினைப்பு என் மனசுக்குள்.
மாதவன் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த ஆர்ச் அருகில் ஆர்ச்சின் நிழலில் ஒரு அம்மா தள்ளுவண்டியில் சர்பத், லெமன் ஜூஸ் வைத்திருந்தார். அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். பூப்போட்ட காட்டன் புடவை. உழைத்து வளர்ந்த திம்மென்ற உடல்வாகு. கருத்த களையான முகம். ஆரஞ்சு நிற கனகாம்பரம் பூ கொண்டையை இன்னும் அழகாகக் காட்டியது. கனகாம்பரம் பூவெல்லாம் இன்னும் வைக்கிறார்களா என்னும் வியப்பு எனக்குள். நான் பல நேரங்களில் இந்த உலகத்தைப் பார்ப்பதேயில்லை போலிருக்கிறது.
இதுவல்லவோ சரியான நேரம் என்று தள்ளுவண்டி முன்பு நிறுத்தினேன். லெமன் சோடா குடித்து ரொம்ப நாள் ஆகிறது என ஒரு லெமன் சோடா சொன்னேன். கண்ணாடித் தம்ளர் தளும்பத் தளும்பக் கொடுத்தார். அந்த வெயிலுக்கு இதமாக தொண்டைக்குள் இறங்கியது. பாதி கிளாஸ் குடித்து முடித்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டேன். அந்த இடைவெளியில் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று ஸ்கூட்டியின் முன்னால் மாட்டியிருந்த பையில் இருந்து காசை எடுத்தேன்.
எம்மா, புடவை ரொம்ப அழகா கட்டி இருக்க. ஆனா இந்தப் புடவையைக் கட்டுறதுக்காகவாது கொஞ்சம் நல்லா சாப்பிட மாட்டியா.. ரொம்ப ஒல்லியா இருக்க. கொஞ்சம் உடம்பு வச்சா தானே பார்க்க இன்னும் லட்சணமா இருக்கும்.
நீண்டநாள் பழகிய வாஞ்சையுடன் வந்த குரலும் வார்த்தைகளும் மனதை நெகிழச் செய்தன. எங்கம்மா, சென்னைக்கு வந்த பிறகு என்ன சாப்பிட்டாலும் உடம்பு மட்டும் ஏறல. வெளி சாப்பாடு சாப்பிட்டால் உடம்புல ஒட்ட மாட்டேங்குது என்றேன். எம்பொண்ணு பாரதியும் இப்படித்தான் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பு இளைச்சு வந்துச்சு. இப்போ வேலைக்குப் போகுது. வீட்டுல சமைச்சு தர்ரேன். இப்போ நல்லா இருக்கா பார்க்க என்றார். நீயும் வா ஒருநாள் சமைச்சு தர்றேன் சாப்பிட்டுப் போ என்ற வார்த்தையில் அப்பழுக்கில்லாத அன்பை உணர்ந்தேன்.
உங்க பொண்ணு பேரு தான் எனக்கும். பாரதி. இங்க தான் காலேஜ்ல வொர்க் பண்றேன் என்றேன். காலேஜ்ல சொல்லித் தரப் புள்ள மாதிரியா இருக்க என்று சொல்லி சிரித்துவிட்டு, நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா இருக்க என்று சொல்லிக் கொண்டே அங்கே சர்பத் கேட்டு வந்த ஒருவருக்கு சர்பத் ரெடி பண்ணிக் கொடுத்தார்.
சர்பத் கிளாஸுக்குள் மிதக்கும் ஐஸ்கட்டி போல நானும் அன்பில் மிதந்து கொண்டிருந்தேன். ஒரு சின்ன புன்னகையும், எளிய உரையாடலும் தான் அன்பின் தொடக்கமாக இருக்கிறது.
லெமன் சோடாவுக்குக் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டால் தான் உடம்புல ஒட்டும். இங்க தான் பக்கத்துல வீடு ஒரு நாள் வா என்றார் உரிமையாக. ஒருநாள் மட்டும் தானா? என்று கிண்டலாகக் கேட்டேன். நீ எம்மாஞ்சோறு சாப்பிட போற. தெனம் கூட வா என்றார் அந்தப் புன்னகை மாறாமல்.  
உங்க பேரு என்னம்மா..
என் பேரு தென்குமரி.
தென்குமரி. ரொம்ப அழகான தமிழ்ப் பெயர். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க என்றதும் அவர் முகமெல்லாம் வெட்கமும் சிரிப்பும்.
அரபிக் கடலோரம் ஒரு தென்குமரி.. சூப்பர்ல என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியைக் கிளம்பினேன்.
வெயில், வெம்மை தணிந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக