சனி, 29 ஏப்ரல், 2023

குயிலாப்பாளையம் தாமரைக் குளத்து நண்பர்கள் - மனுஷி

#குயிலாப்பாளையம்_தாமரைக்குளம் 

வீட்டில் ஒரு தாமரைக் குளம் உருவாக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். 
ஏற்கனவே தாமரை விதைகளைத் தண்ணீரில் போட்டு முளைக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் வீட்டில் உருவாக்கிய குளத்திற்கு குளத்து மண் எடுக்க குயிலாப்பாளையம் சென்றிருந்தேன். 

வண்டியைக் குளத்தருகில் நிறுத்திவிட்டுக் குளத்துக்குள் இறங்கினேன். கூடவே இரண்டு குட்டி பசங்க என்னோடு குளத்துக்குள் இறங்கினார்கள். 
அக்கா, உங்களுக்குத் தாமரைப் பூ பறித்துத் தரட்டுமா? எத்தனை பூ வேண்டும் என்று கேட்டபடியே சரசரவென குளத்துச் சேற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். 

தம்பி எனக்கு குளத்து மண்ணும் கொஞ்சம் தாமரை விதைகளும் தான் வேணும் என்றதும் காய்ந்த தாமரை விதைகளையும் சில தாமரை மொட்டுகளையும் பறித்து வந்து தந்தார்கள்.

அக்கா பூ பறிச்சு தர்றோமே காசு தருவிங்களா? 

எவ்ளோ டா தரணும்? 

முப்பது ரூபா.

என்ன டா முப்பது ரூபா? 

சரி அம்பது ரூபா தாங்க. 

முப்பது ரூபாயே அதிகம்னு சொல்றேன். அம்பது ரூபா கேக்கிற? 

சரி முப்பது ரூபாயே தாங்க. 

தர்றேன் டா... ஆனா எனக்குக் கொஞ்சம் தாமரைக் கொடியும் நோண்டி தர்றிங்களா.. அந்தக் கிழங்கோட... 

அவ்ளோ தான.. இதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸி... 

சொல்லிக் கொண்டே மண்ணைத் தோண்டினார்கள். 

நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேர் அருந்திடாமல் ஆழமாக மண்ணை நோண்டிக் கிழங்கோடு எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த இரண்டு குட்டிப் பசங்களும் ரொம்ப அசால்ட்டா குட்டி குட்டி தாமரைக் கொடிகளை கிழங்குடனும் மண்ணுடனும் நோண்டி என் கையில் கொடுத்தனர். .ஆச்சரியமா இருந்தது. 

டேய் எப்புட்றா என்றதும்.. எங்களுக்கு இதெல்லாம் ஈஸிதான்க்கா என்றார்கள். 

குளத்து மண்ணும் தாமரை விதைகளும் கொஞ்சம் கொடிகளும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு வந்ததும் குளத்து அருகில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த  அவன் அம்மாவிடமிருந்து கை கழுவத்  தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து கொடுத்தான். 

பெரியவன் பெயர் ரஞ்சன். சின்னவன் பெயர் தமிழரசன். இருவருக்கும் நன்றியைச் சொல்லிவிட்டு, சொன்னபடியே காசையும் கொடுத்துவிட்டு பை சொன்னேன்.. 

அக்கா, நம்ம குளம் தான். இன்னும் பூ வேணும்னா வாங்க பறிச்சுத் தர்றேன் என்றபடிக் குதித்துக் கொண்டே சென்றார்கள். 

அவர்களைப் போலவே துள்ளிக் குதித்தது மனம்.

1 கருத்து:

  1. சகோதரி மனுஷி அவர்களுக்கு வணக்கம்,
    என் பெயர் ஈஸ்வரானந்தம். , திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதி என் இருப்பிடம். நான் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். கவிதை, கட்டுரை, சிறுகதை என எழுதிவருகிறேன். முதன் முதலாக ஒரு கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட முயற்சித்து வருகிறேன். தாங்கள் என் கவிதை தொகுப்பை படித்துவிட்டு கவிதை தொகுப்புடன் இணைக்க வாழ்த்துரை வழங்க இயலுமா.

    தாங்கள் வாழ்த்துரை வழங்கும்பட்சத்தில்
    எம்முறையில் என் கவிதை தொகுப்பை தங்களுக்கு அனுப்புவது என்பதையும் தெரிவிப்பது நலம்.

    நன்றியுடன்.
    ச.ஈஸ்வரானந்தம்.

    பதிலளிநீக்கு