வியாழன், 27 ஏப்ரல், 2023

பிரபஞ்சன் சாருடன் முதல் சந்திப்பும் பிறந்தநாள் பரிசும் - மனுஷி

#பிரபஞ்சன் 
பிரபஞ்சன் சாருடன் எனது நட்பு உண்டாகியபின்  வந்த அவரது முதல் பிறந்தநாள் அது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லவென கிளம்பினேன். 

ஒரு புத்தகம், அழகிய பூங்கொத்து ஆகியவற்றோடு லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பு மாடியில் போய் காலிங் பெல்லை அழுத்திய பிறகு தான் கவனித்தேன். வீடு பூட்டியிருந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடு அவருக்கு போன் செய்தேன்.. நான் வருவதற்குச் சற்று முன்பு தான் அவர் வெளியில் கிளம்பியிருந்தார். உள்ளார்ந்த வருத்தத்தோடு அதை அவர் தெரிவித்ததும் என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பரவாயில்லை சார் நாளை பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டேன். அவருக்காக கொண்டு வந்த பூங்கொத்தையும் புத்தகத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டுமென எதிர்வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களிடமே ஒரு பேனாவும் பேப்பரும் வாங்கி, மாடிப்படியில் அமர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான்காக மடித்து புத்தகத்தினுள் வைத்துவிட்டு, எதிர்வீட்டுக்காரரிடம் சார் வந்தால் மனுஷி கொடுத்தாங்க என்று சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். சரிம்மா என்றபடி வாங்கிக் கொண்டார். 

வழக்கமாக, நானும் சாரும்  காப்பி குடிக்கிற உழவர்கரை சந்திப்பில் உள்ள தேநீர்க் கடையில் சுடச்சுட ஒரு தேநீர் அருந்திவிட்டு கிளம்பினேன்... 

ஏழு மணி அளவில் பிரபஞ்சன் சாரிடமிருந்து ஒரு மெசேஜ்... மனுஷி, பேசலாமா... ஓய்வா இருக்கிங்களா என்று... 

எப்போது என்னிடம் பேச வேண்டும் என்றாலும் ஒரு மெசேஜ் செய்து நான் பதில் அனுப்பும் வரை காத்திருந்து மீண்டும் அழைப்பார் அல்லது நானே அழைப்பேன். சார் நீங்க எப்போ வேண்டுமானாலும் கால் பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஏன் அனுமதி கேட்கறிங்க என்றால், நீங்க என்னோட சினேகிதி என்பதால் நான் அதை அட்வாண்டேஜா எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பார். நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையின் நியாயத்தை என் நிலையிலிருந்து புரிந்து கொண்டு என்னோடு பழகிய ஓர் உன்னத ஆன்மா அவர். 

மனுஷி, நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசை வாங்கிக் கொண்டேன். பூங்கொத்தைவிடவும் அந்தக் கடிதம் அவ்வளவு அழகாக, உணர்வுப்பூர்வமா இருந்தது. சிறந்த பிறந்தநாள் பரிசா நான் நினைக்கிறேன். இதை உங்க கையால் வாங்காமல் போய்ட்டேன்னு வருத்தமா இருக்கு. உங்களுக்குத் தொந்தரவு இல்லனா வாங்களேன் ஒரு காப்பி குடிக்கலாம் என்றார். 

தொந்தரவு என்றால் கூட நான் வருவேன் சார் என்று சொல்லிவிட்டு என் ஸ்கூட்டியில் பறந்து போய் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன்பு நான் தனியாக காப்பி குடித்த அதே கடையில் இருவரும் காப்பி குடித்தோம். பேசினோம். அவருக்கு இட்லி பார்சல் வாங்கிக் கொண்டார். எனக்கு நிறைய சாக்லேட்டுகளும் பிஸ்கட் பாக்கெட்டும் நிறைய சினேகத்தையும் கொடுத்தார். 

பிறகு விடைபெறும் முகமாக அவரோடு கைகுலுக்கி பிறந்த நாள் வாழ்த்துகள் சார் என்றேன். இரண்டு கைகளாலும் அழுந்தப் பற்றி புன்னகையால் வழியனுப்பினார். 

அந்த உள்ளங்கையின் ஸ்பரிசத்தை, கதகதப்பைத்தான் தேடிக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் இல்லாமல் வந்து போகும் உங்கள் பிறந்தநாளில்.
 
காஃபி சாப்பிடலாமா மனுஷி என்னும் குரலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். காப்பி சாப்பிட்டேன் சார் உங்கள் நினைவாக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக