வெள்ளி, 29 மே, 2020

ஆசானின் அனுபவ மொழி - தேவதேவன் கவிதைகள் - மனுஷி

திருவண்ணாமலையில் #தளம்_சமூக_உரையாடல்_மையம் & #வெற்றி_டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் #கவிஞர்_தேவதேவன்_கவிதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மனதுக்குள் மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தேவதேவன் கவிதைகள் குறித்துப் பேச வேண்டும் என்று #தோழர்_ஷபி கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். ஆனால், தேவதேவன் கவிதைத் தொகுப்பு அப்போது கைவசம் இல்லை. நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் இல்லை என்றே சொல்லிவிட்டார்கள். நம்முடைய புத்தகச் சேகரிப்பில் ஒரு தொகுப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா புத்தகங்களையும் கலைத்துப் போட்டுத் தேடியதில் #விண்_வரையும்_தூரிகை நூல் மட்டுமே கண்டெடுத்தேன். அது மட்டுமில்லாமல் தேவதேவன் வலைப்பூவில் (poetdevadevan.blogspot.com) சில கவிதைகள் இருந்தன. அவற்றை வாசிக்கத் தொடங்கியபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. 

பொதுவாக, நவீன கவிதைகளை வாசிப்பது போல ஒரே வாசிப்பில் அல்லது இரண்டாவது வாசிப்பில் தேவதேவன் கவிதைக்குள் நுழைந்து பயணித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அவரது கவிதைகள், நண்பர்களோடு உரையாடுவது போன்ற உணர்வினைத் தரவில்லை. மாறாக, அனுபவம் முதிர்ந்த ஓர் ஆசானுடன் அமர்ந்து மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் ஒருநிலைப்பட்ட மனதுடன் உரையாடுவது போல இருந்தன. 

எந்தெந்த கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும் என்கிற திட்டம் இருந்தாலும், தேவதேவன் கவிதை குறித்துப் பேசப்போவதில் ஒருவிதத் தயக்கம் இருக்கவே செய்தது. அந்தக் கவிதை அனுபவத்தைப் பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது மனம். எல்லாமும் நிகழ்வு நடக்கும் இடத்தை அடையும் வரைதான்.

சிலுசிலு காற்று இதமாகத் தழுவிச் செல்லும் மரத்தடி. கருங்கல் பெஞ்சுகள். இரவின் ரம்மியத்தை உணரச் செய்யும் ஒளியமைப்பு. பிரம்மாண்டமான தேவதேவன் பேனர். அதன் முன்னால் சிறு புள்ளியென நான்கைந்து நாற்காலிகள். அந்தத் திறந்தவெளி, தேவதேவன் கவிதைகளைப் போலவே பெரும் அனுபவத்தைக் கொடுத்தது. 

இருளில் அமர்ந்து கொண்டு / எதையும் வாசிக்க முடியாது / ஒளி? / கண்முன் உள்ள / இருளைக் / கண்டு கொள்வதிலன்றோ / தொடங்குகிறது அது? (தேவதேவன்) 

பழுத்து விழாது / ஒட்டிக் கொண்டிருக்கும் இலைகள் / தான் தொட்டதனால்தான் உதிர்ந்தது என்றிருக்கக் கூடாது என்ற / எச்சரிக்கை நேர்ந்து / அப்படி ஒரு மென்மையை / அடைந்திருந்தது காற்று (தேவதேசன்)

இந்தக் கவிதைகளை, அந்தக் குறைந்த ஒளியில், மெல்லிய மரங்களின் அசைவில்  வாசித்தபோது மனதுக்குள் எழுந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லி விடமுடியாது. அது பேரனுபவம். 

பறத்தலின் ரகசியத்தைச் சிற்றுயிர்களுக்கும் கற்பித்துவிடும் தேவதேவனின் கொக்கு போல, அவரது கவிதைகள் இப்பிரபஞ்சத்தின் இரகசியத்தை யாவருக்கும் சொல்லித் தருகிறது அனுபவ மொழியுடன். 

நிகழ்வில் கலந்து கொண்டு தேவதேவன் கவிதைகள் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் பச்சோந்தி, கவிஞர் ஃபீனிக்ஸ், கவிஞர் ஜெகதீசன், கவிதைகள் வாசித்த மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, அமரபாரதி, நா.கோகிலன் என அனைவருமே தேவதேவன் கவிதைகள் தரும் மௌனத்தை, அனுபவத்தை அந்த இரவின் மீது படரச் செய்தனர். 

இறுதியாக, தேவதேவனின் ஏற்புரை புது அனுபவத்தைக் கொடுத்தது. 
நிகழ்வு முடிந்து திரும்புகையில் நேர்மறை எண்ணங்கள் மனதை இலகுவாக்கின. திறந்தவெளி இலக்கிய அரங்குகள் இப்படித்தான் மனதின் சுவர்களை உடைத்து, காற்றில் மிதந்துவரும் இறகென இலகுவாக்கிவிடும்போல. 
நிகழ்வினை ஒருங்கமைத்த தோழமைகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து சொல்லவேண்டும் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை.

2 கருத்துகள்: