வியாழன், 28 மே, 2020

அதிரப்பள்ளி எனும் யட்சி - மனுஷி

ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் தொடங்கும்போதெல்லாம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மழையில் நனைந்து மகிழ்ந்துவிட்டு அடுத்து நனையாமல் போய் வர வேண்டும் என குடை வாங்குவேன். குடை வாங்கிய கொஞ்ச நேரத்தில் அல்லது மாலைக்குள் மழை நின்று விடும். மழைதான் நின்றுவிட்டதே என குடையை யாருக்காகவது தானம் கொடுத்துவிடுவேன். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த காலங்களில் ஹாஸ்டலில் வேலை செய்யும் அக்காக்களில் யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன். அந்தக் குடைக்காக வாரத்தின் இரண்டு நாட்கள் மீன் குழம்பு கொண்டு வருவார்கள். அடிக்கடி வீட்டு சாப்பாடு சாப்பிடும் யோகம் கிடைக்கும். மீண்டும் மழை கொட்டத் துவங்கும். மழை பெய்யத் தொடங்கியதும் கொடுத்த குடையைத் திருப்பிக் கேட்பது நியாயமில்லை தானே. 

மழை பெய்வதும் குடை வாங்குவதும் குடை வாங்கியதும் மழை நிற்பதும் தற்செயலாக நடக்கிறது என விட்டுவிட்டேன்.

எனது சிறிய கேரளப் பயணத்தில் வந்திறங்கிய நிமிடத்திலிருந்து மழை. ஏற்கனவே பெய்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் வெயிலைச் சுமந்தலையும் எனக்குத்தான் அது தெரியாமல் இருந்தது. மழையில் நனைந்தபடியே கேரளா பயணத்தைத் தொடர்ந்தேன்.

முதல்நாள் கொச்சின் கடற்கரை பயணம் மனதுக்கு நிறைவாக அமைந்தது. அதிலும் அரபிக் கடலில் நின்றிருந்த சமயம் துளித்துளியாய் சொட்டு வைத்த மழை, நான்கைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சமயம் பேரிரைச்சலுடன் பெய்யத் தொடங்கியது. தொப்பலாக நனைந்தபடி சூடாகத் தேநீர் அருந்திவிட்டு, தேசாந்திரியைப் போல சுற்றிவிட்டு இரவு ஒன்பது மணிக்கு மேல் அறைக்குத் திரும்பினேன். 

அடுத்த நாள் அதிரப்பள்ளி செல்வதென திட்டம். அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது. அன்றைக்கு என் பிறந்தநாள். அதிரப்பள்ளி அருவியின் அருகில் கொண்டாடுவது எனத் தீர்மானம் செய்திருந்தேன். 

கேரளாவில் தொடர் மழை என்பதை மறந்தே போனேன். காலை எழுந்ததில் இருந்து மழை. முந்தின நாள் பெய்த மழையின் தொடர்ச்சிதான். ஆனாலும் எனக்கான வாழ்த்தாகவே நினைத்தேன். ஏனெனில் மழை என்றால் அப்படியொரு மழை. 

மழைக்காக ஒதுங்கி நின்றால் அன்றைய நாள் அறைக்குள்ளேயே முடங்கிவிடும். எனவே, நனைந்து கொண்டே கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு குடை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கினால் அது வரை அடித்துப் பெய்த மழை தூறலாக மாறிவிட்டது. 
சாலக்குடி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்து டிக்கட் எடுப்பதற்குள் மழை மொத்தமாக நின்றுவிட்டது.
பேருந்தில் போகும்போது வழியில் கொஞ்சம் மீண்டும் மழை. போகும் வழியெல்லாம் மழை தான். குடைக்கு வேலை வந்துவிட்டது என்று நினைத்தேன். அதிரப்பள்ளி அருவி நிறுத்தத்தில் இறங்கிய ஐந்து நிமிடத்தில் மீண்டும் மழை நின்று விட்டது.

என்னடா என் குடைக்கு வந்த சோதனை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். 

மழை பெய்த ஈரம் சாலையெங்கும் படர்ந்திருந்தது. சில்லென்ற மழைக்காற்றில் கைவிரல்கள் விரைத்துக் கொண்டன. இயல்பாகவே குளிர் தாங்காது எனக்கு. மரங்கள் அடர்ந்த, மழை பெய்து அடங்கிய அதிரப்பள்ளி காடு குளிரின் உச்சத்தில் இருந்தது. 

அருவியின் சத்தம் காதுகளைத் தொட்டுத் தழுவியது. என் கனவு தேசத்தில் தனித்து உலவும் யட்சியைப் போல மனம் படபடக்கக் குளிரில் நடுங்கியபடி வேகவேகமாக நடந்தேன். ஆனால் என் மனதின் வேகத்திற்குக் கால்கள் ஈடுகொடுக்கவில்லை. 

டிக்கெட் கவுண்ட்டர் அருகில் இருந்த ஒரு பெண் என் நடையைத் தடுத்து டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என மலையாளத்தில் சொன்னார். துல்கர், நிவின் பாலி, பகத் ஃபாசில் படங்கள் பார்த்து சூழலைச் சமாளிக்கும் அளவுக்கு   மலையாளம் தெரிந்து வைத்திருந்தேன். 

ஒரு டிக்கெட் என்றதும் அந்தப் பெண் ஏற இறங்கப் பார்த்தார். ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். ஒரு காக்கி சீருடை அணிந்த போலீஸ் மேன் வந்தார். அவர் பார்வையும் தோரணையும் அத்தனை உவப்பானதாக இல்லை. 

யார் என்ன என்பதை விசாரித்தார். நானும் எனக்குத் தெரிந்த மலையாளத்தையும் ஆங்கிலத்தையும் கலந்து பதில் சொன்னேன். அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை. ஆதார் கார்டு கேட்டார். பிறகு நான் தங்கியிருந்த ஹோட்டல் நம்பரை வாங்கி அவரது செல்போனில் அழைத்து உறுதி செய்து கொண்டார். அப்படியும் கூட அவரால் சந்தேகப் பார்வையைக்.கைவிட முடியவில்லை. ஒரு பெண் எப்படித் தனியாகச் சுற்றிப் பார்க்க பாண்டிச்சேரியில் இருந்து இங்கே வர முடியும்? அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டார். எனது பிறந்தநாள் இன்று அதனால் வந்தேன் என்று சொன்னேன். அந்தக் காரணம் அவருக்குப் போதுமானதாக இல்லை. நீங்க என்ன பண்றிங்க என்றார். நான் ஒரு கவிஞர் என்றேன். எனது பெயரைச் சொன்னேன். வேண்டுமெனில் கூகுளில் செக் பண்ணிக்கலாம் என்றேன். அவரது மொபைலில் என் பெயரை டைப் செய்து பார்த்தார். கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். 

அவர் பேச்சு தோரணை மாறியது. மேடம் இங்கே பெண்கள் தனியாக வரக் கூடாது. பாதுகாப்பில்லை நீங்க திரும்பிப் போய்டுங்க என்றார். இல்ல சார். அருவி பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன் பார்க்காமல் போக மாட்டேன். சொல்லும் போதே கண் கலங்கியது. 

முதன்முறையாக என்னை நினைத்துக் கழிவிரக்கம் எனக்குள். நான் மட்டுமே தனியாக இருப்பது போலொரு உணர்வு. நண்பர்கள் சூழ வந்திருந்தால் அல்லது ஒரு பையனாக இருந்திருந்தால் இவ்வளவு விசாரணை, இத்தனை கேள்விகள், சந்தேகப் பார்வை இருந்திருக்காது. நான் வந்த நேரத்திற்கு மற்றவர்களைப் போல அருவியின் சாரலில் நனைந்து கொண்டிருப்பேன். ஆனால் இப்போது?... பிறந்தநாள் அதுவுமா அழக்கூடாது எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 

நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பெண்ணை எனக்குத் துணைக்கு அனுப்பி, மேடம் இங்க ஒரு வியூ பாயிண்ட் இருக்கு. அங்க போய் பார்க்கலாம் ஆனால் சீக்கிரம் கிளம்பிடனும் என்றார் கொஞ்சம் கனிவுடன். தேங்க் யூ சார் என்று கிளம்பினேன். ஹேப்பி பர்த் டே மனுஷி என்றார் புன்னகையோடு. அந்தப் பெண்ணும் பர்த் டே வா என்று கேட்டு கை குலுக்கி வாழ்த்து சொன்னார். 

கொஞ்சம் தூரம் நடந்ததும் அருவியின் சத்தமும், புகை போல் எழும் சில்லென்ற அருவியும் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரின் சூட்டைத் தணித்தது. குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருக்க, நான் நின்றிருந்த பச்சை கேட்டைத் தாண்டி அருவில் நனைந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது மனசு. 

அங்கே எதிரில் இருந்த தேநீர்க் கடையில் உடன் வந்த பெண்ணுக்கும் சேர்த்து இரண்டு தேநீரை வாங்கினேன். முதலில் தயக்கத்தோடு மறுத்தவர் பிறகு சினேகத்துடன் வாங்கிக் கொண்டார். டீ குடித்து முடித்ததும் கடைசி பஸ் எப்போ என்று கேட்டேன். 5.30 மணிக்கு மேல் வரும் என்றார். நீங்க போய் டியூட்டி பாருங்க நான் கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்டு பஸ் வந்ததும் கிளம்புகிறேன் என்றேன். பத்திரமா இருப்பிங்களா என்று கேட்டார். நிச்சயமாக என்று கை கொடுத்து விடை பெற்றேன். 

பெயர் கேட்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. உள்ளங்கையின் இளம்சூடு போதுமானதாக இருந்தது அந்தச் சின்னஞ்சிறு சினேகத்திற்கு.
அவர் கிளம்பிய பிறகுதான் கவனித்தேன். என்னருகில் இருந்த பச்சை கேட்டில் அமர்ந்து உன்னிப்பாக என்னைக் கவனித்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. என் கையில் இருந்த தேநீர் கப்பையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தது. தேநீர்ப் பிரியர்களின் மொழி புரியாதா என்ன? மிச்சமிருந்த தேநீரை அதன் கையில் கொடுத்தேன். ஒரு மனிதக் குழந்தையைப் போல வாங்கிக் கொண்டு தேநீரைச் சுவைத்தது. இன்னொரு தேநீரை வாங்கி வந்து பாதிக் குடித்து விட்டு மீதியைக் கொடுத்தேன். தீர்ந்து போன பழைய கப்பைக் கீழே போட்டுவிட்டு நான் கொடுத்த கோப்பையை வாங்கிச் சுவைத்தது. 
தனித்திருகிறேன் எனும் கழிவிரக்கத்தை அந்தக் குரங்கு காணாமல் போகச் செய்தது.  அதற்கு நன்றி சொல்லிவிட்டு மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

ஆள் நடமாட்டம் இல்லாத சாலை. இடது புறம் மழை ஈரம் கசியும் மரங்கள். பாசி படர்ந்த மலை. வலது புறம் சரிந்து கிடக்கும் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பேரிரைச்சலுடன் பொங்கிப் பெருகி அருவியாகித் தரையில் வீழும் ஆவலும் ஓடிக் கொண்டிருந்தது. 
மழையில் நனைந்த மாலைப் பொழுதில் யாருமற்ற இந்த அதிரப்பள்ளி வனத்தில் நான் ஒரு யட்சியாகியிருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக