ஞாயிறு, 3 மே, 2020

போதும் லாக் டவுன் நாட்கள் - மனுஷி

மொபைல் சார்ஜர் மற்றும் பென் ட்ரைவ் வாங்குவதற்காக ராஜா தியேட்டர் சிக்னல் வரை சென்றேன். தெரிந்த மொபைல் கடை என்பதால் நேற்றே கடை திறப்பார்களா எனக் கேட்டுக் கொண்டேன். சில நாட்களாக காலை 10 மணி முதல் 1 மணி வரை கடை திறந்திருக்கும் என்றதால் சென்றேன். 
கிளம்புவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை போனில் அழைத்து கடை திறந்திருக்கிறதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். 
பதினோரு மணிக்கே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. 
இன்றைக்கு வெளியில் செல்ல ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு கிளம்பினேன். 
ஆரோவில் பஸ் ஸ்டாப் அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல்துறை நண்பர்கள் என் வண்டியைப் பார்த்ததும் புன்னகையோடு கையசைத்தார்கள். நானும் வணக்கம் சொன்னேன். 
வழக்கத்திற்கு மாறாக சாலையில் பைக்குள் அதிகமாகவே போவதும் வருவதுமாக இருந்தன. 
பேருந்துகள், லாரிகள், கார்கள் செல்லாத ஈசிஆர் சாலையை ரசித்தபடியே போய்க் கொண்டிருந்தேன். 
சிவாஜி சிலை சிக்னல் அருகில் இருந்த காவல் நண்பர்களும் பெரிதாக வண்டிகளை நிறுத்தவில்லை. உட்கார்ந்தபடியே எங்கே என்றார்கள். வண்டியின் வேகத்தைக் குறைத்து மொபைல் ஷாப் என்றேன். சரி சரி என்றபடி அனுப்பி வைத்தார்கள். 
ஒன்றரை மாதத்திற்குப் பிறகு சிவாஜி சிலை தாண்டி முத்தியால்பேட்டை வழியாகச் சென்றேன். 
அங்கிருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரையிலும் ஏராளமான பைக்குகள். ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியிருக்கும் பாண்டிச்சேரியின் சாலைகளைக் கண்டு மகிழ்ச்சியடைவதா பதற்றம் கொள்வதா எனத் தெரியவில்லை. அஜந்தா சிக்னலில் காத்திருந்து சிக்னலைக் கடக்கும் அளவுக்கு பைக்குகள். 
எப்பொழுதும் பளபளப்பான உடைகள் தொங்கிக் கொண்டிருக்கும் மேக்ஸ் ஷோரூம் பூட்டியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காந்தி வீதியின் சில கடைகள் திறந்திருந்தன. முக்கியமாக, பெட்டிக்கடைகள். 
கந்தன் காப்ளக்ஸ் சிக்னல் அருகில் தடுப்பு போடப்பட்டதால் பைக்குகள் பாரதி வீதி வழியாகச் செல்ல திருப்பி விடப்பட்டன. 
பாரதி வீதியில் இருக்கும் பழக்கடைகள், மளிகைக் கடைகள், சாலையோரத்தில் கீரை, முருங்கைக்காய் முதலிய பொருட்கள் விற்கும் கடைகள் பரப்பான விற்பனையில் இருந்தன. கடைகளில் நின்று பொருட்கள் வாங்கப்படுவதால் வாகன நெரிசலில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று மொபைல் ஷாப்பை அடைய மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. 
கடையைப் பாதியாக இழுத்து மூடியிருந்தார்கள். கடையின் வெளியில் நின்றிருந்த ஒருவர் என்ன வேண்டும் எனக் கேட்டு கடையிலிருந்து ஒருவர் வெளியேறிய பின் மற்றொருவரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். 
கடையில் வாங்க வேண்டிய பொருட்களுக்குப் பில் போடும்போதுதான் கவனித்தேன். 
கடையில் மொபைல் ரிப்பேர் செய்யும் மணி அண்ணா மும்முரமாக ஒரு மொபைலைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இந்த லாக்டவுன் நாட்களில் கூட இவ்வளவு மொபைல்கள் பழுது பார்க்கவென கொண்டு வருகிறார்களா என ஆச்சரியமாக இருந்தது. 
கடையிலிருந்து வெளியே வரும்போது சின்னதாக ஒரு பேராசை. ஏதாவது ஒரு டீ கடை திறந்திருக்கிறதா எனத். தேடினேன். ஒன்று கூட இல்லை. ஜூஸ் கடையும் இல்லை. 
இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒரு சுற்று சுற்றி விடலாம் என நேரு வீதி வழியாக மிஸ்ஸன் வீதி வரை போய் செஞ்சி சாலையில் இணைந்து அஜந்தா சிக்னலைப் பிடித்து, வீடு வந்து சேர்ந்தேன். 
இனியும், கையைக் கழுவு, வீட்டுக்குள் இரு என்று சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. வயிற்றுப் பாட்டுக்கு வெளியில் வந்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இன்று உணர்ந்தேன். 
சமூக இடைவெளியைப் பின்பற்றி அவரவர் வேலையைச் செய்தாக வேண்டும் வழக்கம் போல. சுத்தமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம், 
வயிறு என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது.

1 கருத்து: