செவ்வாய், 5 மே, 2020

அன்பின் பெருவழிப் பயணம் : சமணர் மலை - மனுஷி




இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு கிளம்பும்போதே சமணர் மலைக்குச் செல்ல வேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டிருந்தேன்.
அந்த சமயம் தோழி அகல்யா மதுரையில் இருந்தாள். அவளுக்கும் பயணத்தின் மீது பெருவிருப்பம். சமணர் மலைக்கு உடன் வருவதாகச் சொன்னாள். தனிப்பயணிக்கு ஒரு துணைப் பயணி கிடைத்ததில் பெருமகிழ்ச்சியாக இருந்தது.
மதுரைக்கு வந்திறங்கியதும் முதல் வேலையாக சமணர் மலைக்கு வெயிலுக்கு முன்பாகச் சென்று மலை ஏறி விட வேண்டும் என்பது திட்டம்.
தோழியின் வீட்டில் இருந்து நடைப்பயணமாகச் சென்றோம். நடக்கிற தூரம் தான். நடக்கிற தூரம் என்றால் உலகமே நடந்து செல்கிற தூரம் தான். ஆனால் இது உண்மையிலேயே நடந்து செல்கிற தூரத்தில், பார்வைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.
காலைநேர நடைப்பயணமாகவும் அது அமைந்தது.
நாங்கள் செல்லச் செல்ல கண் தொடும் தூரத்தில் இருந்த மலை பின்னோக்கி நகர்வது போலொரு மாயை உண்டானது. சமணர் மலை நம்மோடு விளையாடுகிறது என நினைத்துக் கொண்டேன்.
சமணர் கல்வெட்டுகள், சிற்பங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆனால், எனக்கு வரலாற்று சிறப்பை விடவும் அந்த மலையில் ஏறும் அந்த அனுபவம் தான் சிலிர்ப்பாக இருந்தது.
மலையின் அடிவாரத்தில் ஒரு கூரைக் கொட்டகையில் ஒரு கடை. தேநீரும் கூட. மலை ஏறிட்டு வந்தபின் டீ குடித்துக் கொள்ளலாம் என உடனடியாக மலைக்குச் சென்றோம்.
சமணர் மலையின் இடதுபுறம் கொஞ்ச நேரம் நடந்தால் ஒரு குகை இருந்தது. அங்கே ஒரு பெரிய பாறையில் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தைச் செட்டிப் புடவு என்று சொல்கிறார்கள். அதற்கு கூகுளில் தேடிப் பார்த்தால் பெயர்க்காரணம் இருந்தது.
வானுலகவாசிகள் சாமரம் வீச, ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பற்றியிருக்க, செம்மாந்து அமர்ந்திருந்தார் மகாவீரர்.
மலையின் அடிவாரத்தில் சிறு கோவில் ஒன்று. கோவிலின் முகப்பில் பெருத்த உருவத்துடன் துவாரபாலகர் போல ஒரு சிலை. கருத்த பெரிய மீசை, முட்டைக்கு கண், தொந்தி வயிறு, இடுப்பில் கட்டியிருக்கும் அரையாடை, கையில் நீண்ட வீச்சரிவாள் எனத் தோற்றமே மிகக்  கம்பிரமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால்  காத்தவராயன், கருப்பசாமி, அய்யனார் - இப்படியான சிறுதெய்வங்களின் கம்பீரமான முகச்சாயல்.
அந்தக் காவல் தெய்வத்த்தை வணங்கிவிட்டு கோயிலுக்குள் சென்றபோது சுடச்சுட புளியோதரை, பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புளியோதரை மற்றும் பொங்கலுக்காக கோயிலுக்குள் இருந்த சாமியைக் கண்மூடி வேண்டி வணங்கினோம். பூசாரி தீபாராதனை தட்டுடன் வந்து விபூதியைக் கொஞ்சமாக அள்ளி உள்ளங்கையில் கொடுத்தார். பயபக்தியோடு நெற்றியில் இட்டுக் கொண்டு பிரசாதத்திற்கான தொன்னையை வாங்கிக் கொண்டோம்.
காலை உணவு முடிந்த திருப்தியுடன் கோயிலின் எதிரில் இருந்த குளத்திற்குச் சென்று கையைக் கழுவிக் கொண்டு, குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தாமரை அல்லி மலர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். வெயில் ஏறுது அப்புறம் மலை எற முடியாது என்று அகல்யா நினைவுறுத்தியதும் சமணர் மலையின் மீது ஏறத் தொடங்கினோம்.
மலை ஏறும் ஆர்வம் மனதை வேகமாக உந்தித் தள்ளினாலும் ஐந்து நிமிடத்திலேயே மூச்சு வாங்கியது. சுள்ளென்று இருக்கும் காலை வெயில். செங்குத்தான மொட்டைப் பாறை. பாறையிலேயே செதுக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகள். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நடக்கும் அளவுக்கான வழி. இருபுறமும் பற்றிக் கொண்டு படியேற இரும்புக்குக் கம்பி. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே செல்ல அரை மணி நேரம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.

படிக்கட்டுகள் முடிந்த இடத்தில் கண்ணெதிரே சிறிய இரும்புக்கு கம்பி வேலைகளுக்கு மேலே பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள். அங்கே இயற்கையாக அமைந்த ஒரு சுனை இருந்தது. பேச்சிப் பள்ளம் சுனை. கொஞ்சமே கொஞ்சமான பச்சை நிறத் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது. அதற்கு அருகில் தான் எட்டு தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக இருந்ததன.
சிற்பங்களின் அருகில் கொஞ்ச நேரம் அமர்ந்து கொண்டிருந்தேன். எதிரில் படர்ந்து கிளைபரப்பி கிளிப்பச்சை நிறத்தில் துளித்திருக்கும் இலைகளோடு வளைகாப்பு முடிந்த பெண்ணின் பொலிவான முகம் போல அரசமம் சூரிய ஒளியில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை பார்த்து முடித்தபின், அதற்கும் மேலே மலையின் உச்சியில் இருக்கும் தீபத்தினைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். 
அந்த மரத்தடிக்குப் போகலாம் என அகல்யாவை அங்கு அழைத்துச் சென்றேன். மொட்டைப் பாறையில் சுட்டெரிக்கும் காலை வெயிலுக்கு அரச மரத்தின் நிழலும் அங்கேயே பரவியிருந்த இளங்காற்றும் ரம்மியமாக இருந்தது. மரத்தின் வேர் தரையெங்கும் படர்ந்திருந்தது. வேரில் மடியில் சற்று நேரம் அமர்ந்து தியானம். புத்தனாகும் பெருங்கனவைத் தூண்டிவிட்டது. புத்தனாதல் அத்தனைச் சுலபமல்ல. அது ஒரு பெருவாழ்வு. இன்னும் இன்னும் செல்ல வேண்டிய பயணங்கள் வாழ்வை, மனிதர்களைக் கொண்டாடுகிற, அன்பின் பெரும்சுவையை உணர்கின்ற மனபக்குவத்தைத் தரலாம். புத்தனாதல் பெரும் கனவு தான். அது வாழ்வின் பேருண்மை.

அரச மரத்தடி இளைப்பாறலில் வியர்வை அடங்கியிருந்தது.
மீண்டும் மொட்டைப்பாறையில் மேலே நடக்க வேண்டும். தீபத்தூணை நோக்கி நடக்கலானேன். படிக்கட்டுகள் இல்லாத வழுவழு பாறை. மெல்ல நடந்து உச்சியை அடைந்தேன்.
மாதேவிப்பெரும்பள்ளி எனும் சமணப்பள்ளியின் அது. தீபத்தூணை எல்லோரும் தொட்டு வணங்கினார்கள். சுற்றி வந்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
பாறையின் விளிம்பில் போய் அமர்ந்து கொண்டேன்.  வெயில் ஒருபக்கம் நடுமண்டையில் சுள்ளென்று சுட்டெரித்தது. இன்னொருபக்கம் எங்கிருந்தோ காற்று அவ்வப்போது இதமாக வீசியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான இயற்கை. சுற்றிலும் மலைகள் வேறு. ஸ்பைடர் மேன் போல உள்ளங்கையில் இருந்து நூல் விட்டு அடுத்தடுத்த மலைக்குத் தாவி விட வேண்டும் போலொரு பேராசை.
கைகளைத் தலைக்கு வைத்து கால் நீட்டிப் படுத்துக்க கொண்டேன்.
இந்தப் பிரபஞ்சமே எனக்காக என்பது போலிருந்தது.

இதற்கு மேல் இங்கே இருந்தால் வெயில் ஸ்ட்ரா போட்டு மொத்த எனர்ஜியையும் உறிஞ்சிவிடும் எனத் தோன்றவே மெல்ல மலையிலிருந்து கீழே இறங்கினோம்.
மீண்டும் ஒருமுறை நீ வருவாய் எனும் குரல் கேட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக