திங்கள், 4 மே, 2020

கவிஞராய் வாழ்வதன் துயரம் – மனுஷி


கவிஞராய் வாழ்வதன் துயரம் மனுஷி

இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார்.
பொதுவாக ட்விட்டரில் யாரேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. காரணம், ட்விட்டரில் 90% ஐடிக்கள் சொந்தப் புகைப்படம் வைப்பதில்லை. சொந்தப் பெயரில் இருப்பதில்லை. முகத்தையும் பெயரையும் மறைத்துக் கொண்டு மாயாவி மனிதர்களைப்போல உலாவரும் மர்மம் எனக்கு விளங்கவில்லை. விளங்கிக் கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.
சொந்தப் பெயரில் இருப்பதில்லை என்பது ஒருபுறம் என்றால் வைத்துக்கொள்கின்ற பெயர்கள் கூட வித்தியாசமாக இருக்கும். அதில் சமீபத்தில் எனக்கு ஒரு ஐடியில் இருந்து ஒருவர் பின்தொடர்ந்தார். அந்த ஐடியின் பெயர்கொரானா அத்தைமகன்’. பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?
மேலும், முகநூல் பதிவர்கள் போல அல்ல ட்விட்டர் பதிவர்கள். முகநூல் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது ட்விட்டரில் இருப்பவர்களின் செயல்பாடுகள். சகட்டுமேனிக்குக் கெட்டவார்த்தைகள் புழங்குகின்ற இடமாக ட்விட்டர் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்கள்.கருத்து சொல்வார்கள். தத்துவங்களை அள்ளி வழங்குவார்கள். ஆனால் ஆரோக்கியமான வாதங்களுக்கு அங்கே இடமில்லை. பெண்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் அடங்கிய ஐடிக்கள் இருப்பதிலேயே பெரும் அசூயை.
ட்விட்டர் மீதான ஒவ்வாமை ஒருபுறம் என்றாலும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் என்னை வந்து சந்தித்த பெரும்பாலா இளைஞர்கள், பெண்கள் ட்விட்டரில் என் கவிதைகளைப் பின் தொடர்வதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார்கள். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். என்ன புத்தமெல்லாம் வாங்கி வாசிக்கலாம் என ஆலோசனைகளும் கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கணம் சிறு நம்பிக்கை துளிர்த்த்து. என் தலைமுறை அவ்வளவு ஒன்றும் பாதாளத்திற்குள் விழுந்துவிடவில்லை. புத்தகங்களைத் தேடி வாசிக்கின்ற, கவிதைகளை நேசிக்கின்ற பண்பை அவர்கள் கைவிட்டுவிடவில்லை என்பது பெரும் ஆறுதல்.
இருக்கட்டும்.
இங்கே பேச வந்தது வேறொரு விஷயத்தைப் பற்றி.
கொரானா எனும் நோய் மனித சமூகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான காலத்தில் முகநூல், ட்விட்டர் மாதிரியான சமூக வலைதளங்கள் பெரிய வடிகால்களாக  இருக்கின்றன. கட்டாயத் தனிமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நமது எல்லோருடைய மனநிலையும், வாழ்க்கைப்பாடுகளும் என்ன என்பதை அவர்கள் பதிவிடும் பதிவுகள் வெளிப்படுத்திவிடுகின்றன.
இந்தச் சமயத்தில் யாரேனும் நலம் விசாரித்துக் குறுஞ்செய்தி அனுப்பினால் பதில் சொல்கிறேன். பார்த்தப் படங்கள் குறித்து, வாசித்த நூல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தால் அவர்களோடு பேசுகிறேன். புத்தகங்கள் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்பவர்களுக்குச் சமீபத்தில் வாசித்த புத்தகங்கள் குறித்தும், என் வாசிப்பு அனுபவத்திலிருந்து வாசிக்க வேண்டிய நூல்களையும் அவர்களுக்குச் சொல்கிறேன்.
ஒருமுறை கணேஷ் பாலா வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அவருடைய கணிணியில் இருந்து மொபைலுக்கு அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகத்தின் பிடிஎஃப் காப்பியை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அதில் சில ஏற்கனவே வாசித்தவை என்றாலும் அடிக்கடி வாசிக்கத் தூண்டுபவை. எனது பயணங்களின் போது வாசிக்க ஏதுவாக இந்த பிடிஎஃப் புத்தகங்கள் எனக்குத் துணையாக இருக்கின்றன.
இந்தக் கொரானா காலத்தில் புத்தகம் வாசிக்க விருப்பமுள்ள நபர்களுக்கு பிடிஎஃப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன்.
தொடக்கத்தில் நான் சொன்ன ட்விட்டர் ஐடியின் மெசேஜை முதலில் அப்படித்தான் பார்த்தேன்.
அக்கா, எனக்கொரு உதவி. செய்ய முடியுமா?
இதுதான் அந்த மெசேஜ்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றால் நிச்சயமாக இந்த மெசேஜை அப்படியே கடந்து போயிருப்பேன். உதவி எனக் கேட்கும் காலகட்டம் அப்படிக் கடந்துபோக முடியவில்லை.
என்ன, சொல்லுங்க என்று பதில் அளித்தேன்.
அரை மணி நேரத்திற்குப்பிறகு, நான் என் லவ்வரை ரொம்ப மிஸ் பண்றேன். அவளுக்கு அனுப்ப ஒரு கவிதை வேண்டும். எனக்கு எழுதித்தர முடியுமா என்று மெசேஜ் வந்தது.
நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது எனும் 23ம் புலிகேசியின் துயரம் தோய்ந்த குரல் எனக்குள் கேட்டது.
முதல் வேலையாக அந்த உதவி கேட்டத் தம்பியின் ஐடியை ப்ளாக் செய்தேன்.
கவிஞர் என்றால் இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் கேள்விக்குள் உடனே செல்லவில்லை.
ஒரேயொரு கேள்வி தான். காதலிக்கத் தெரிகிறவர்களுக்குத் தன் நேசத்திற்குரியவர்களுக்கு மனசுக்குள்ளிருந்து நான்கு வரி எழுதத் தெரியாதா? தெரியவில்லை என்றால் அப்புறம் என்னத்துக்கு கவிதை கேட்கிறது?
எங்க ஏரியாவில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள், தேர்வுகளுக்காகவோ, போட்டிகளுக்காகவோ கவிதை எழுதிக் கொடுங்க அக்கா என்று சில தலைப்புகளோடு வருவார்கள். எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதில் சிலர் பரிசும் வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் காதலியின் பிறந்தநாள் வருகிறது, அவளுக்குச் சொல்ல ஒரு கவிதை வேண்டும், காதலியைப் பிரிந்திருக்கிறேன் அவளைச் சமாதானம் செய்வது போல ஒரு எழுதிக் கொடுங்க, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அவளை ப்ரோபொஸ் பண்ண ஒரு கவிதை கொடுங்க, தங்கச்சிக்குப் பிறந்தநாள் வருது ஒரு கவிதை கொடுங்க, அண்ணனுடைய பிறந்தநாளுக்குக் கவிதை வேண்டும், காலேஜ் ஃபேர்வெல் டே வருது அதுல ஃப்ரண்ட்ஸ்க்குச் சொல்றபோல கவிதை வேண்டும்…. இப்படி கவிதை வேண்டும்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
காதலிப்பவர்கள், காதலின் உன்மத்தத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னாலும் அது கவிதையாகத்தானே இருக்கும். பிரிவின் துயரத்தில் இருப்பவர்களுக்கு மனதின் கண்ணீரிலிருந்து சொல்லும் எந்த ஒரு சொல்லும் காதலை வலுப்படுத்தும் தானே. இருந்தும் இவர்களது உணர்வுகளுக்கு இன்னொருவரைச் சிந்திக்கச் சொல்லிக் கேட்கும் அபத்தம் ஏன் இங்கே நிகழ்கிறது? நமக்கு என்ன வருமோ அதைச் செய்யலாமே. கவிதையில் சொன்னால் தான் சொன்னதாகுமா?  
இது போதாதென்று என் பள்ளிக்கல்லூரித் தோழிகள் ஏய் நீ கவிஞர்னு சொல்ற என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்லு என்பார்கள். 96 படத்தில் ராமிடம் ஜானு கேட்பது போல செல்லச் சிணுங்களோடு இல்லாமல், நீ என்னைப் பற்றிக் கவிதை சொன்னால் தான் நீ கவிஞர் என நாங்க நம்புவோம் என்பதாகத்தான் இருக்கும்.
எனக்கு அப்படியெல்லாம் கவிதை எழுத வராதும்மா என்று சொன்னால், அப்போ நீயெல்லாம் என்ன கவிஞர் என்று நக்கலடிப்பார்கள். கவிதை என்பது உணர்வும் அனுபவமும் சார்ந்தது, தனிப்பட்ட நபரைப் புகழ்ந்து போற்றித் துதிபாடும் கவிதைகளை நான் எழுதுவதில்லை என்று சொன்னால் அவர்களுக்குப் புரியவில்லை. கவிஞர் என்றால் சொன்னால் எழுதனும் என்ற அந்தக் கோட்டிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மத்தியில் தான் கவிதைக்கென வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துவிட்டு வாழவேண்டியும் இருக்கிறது.
நா. முத்துக்குமாரின் கவிதை ஒன்று உண்டு.
காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்.
-       நா. முத்துக்குமார்
இந்த வரிகளை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

என் ஆகச் சிறந்த துயரம், கவிதை.
பெரும் சாபம் கவிஞராய் வாழ்தல்.

1 கருத்து:

  1. இவர்களுது உணர்விற்கு இன்னொரு நபரை சிந்திக்க சொல்லுவது அபத்தம் என குறிப்பிட்டது .... தெளிவான சொற்கள்.....

    பதிலளிநீக்கு