ஞாயிறு, 10 மே, 2020

பிரம்மாண்டத்தின் பெரும் கனவு : யானை மலை - மனுஷி

முதன்முதலாக மதுரைக்கு வந்த போது பார்த்து வியந்தது பெரிய யானை ஒன்று கம்பீரமாகப் படுத்திருப்பது போன்ற அந்த மலைதான்.

ஒருநாள் இந்த மலையில் ஏறவேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டேன்.
ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும்போதெல்லாம் யானை மலையின் மீதான பிரமிப்பும் மலையில் ஏற வேண்டும் எனும் ஆர்வமும் துளிர்த்துச் செழித்து வளர்ந்து கொண்டே இருந்தது. 

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு நாள் எனக்கு வாய்த்தது. 

இராஜபாளையத்தில் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்றைய இரவே மதுரைக்குத் திரும்பி இருந்தேன். 
அதிகாலையில் கிளம்பினால்தான் மலை ஏற முடியும் என்பதால் அன்றைக்கு இரவு சீக்கிரமே தூங்க வேண்டியிருந்தது. ஆனாலும் வழக்கம் போல 2 மணிக்குத் தூக்கம் கண்களைத் தழுவியது. 
மலை ஏற வேண்டும் எனும் பெரு விருப்பம் அதிகாலையில் விழிக்க வைத்தது. எனக்கு நானே நன்றி சொல்லிக் கொண்டு எழுந்து கிளம்பினேன். 

சூடான தேநீர் அருந்திவிட்டு யானை மலையின் அடிவாரத்தை நெருங்கும்போது நன்றாக விடிந்திருந்தது. 
மலை ஏறும் அனுபவத்தைப் போல வேறெதுவும் அத்தனை குதூகலத்தையும் நிறைவையும் தருமா எனத் தெரியவில்லை. 
எனது முதல் மலைப் பயணம் சதுரகிரி தான். வாழ்வில் மறக்க முடியாதது. அதேபோல யானை மலையும். 
பாறையில் செதுக்கப்பட்ட, படிக்கட்டுகள் என்று சொல்ல முடியாத குறுகிய வழியில் மலைக்கு ஏறினேன். கருவேல மரங்களின் ஒல்லியான கிளைகள் வழியைத் தடுப்பது போல குறுக்காக நீண்டிருந்தன. அவைகளைக் கைகளால் விலக்கிவிட்டு நடக்கும்போது கையைக் கீறியது. 
டிஸ்கவரி சேனலில் காடு மலை என கேமராவோடு பயணிக்கும் பியர் கிரில்ஸ் எனக்குள் கூடு பாய்ந்தது போலிருந்தது. 
பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு நடக்கப் படிக்கட்டுகள் இல்லை. வெறும் பாறைகள் தான். மொட்டைப் பாறையில் பார்த்துப் பார்த்து மேலே ஏற வேண்டியிருந்தது. மலை ஏற ஏற வெயிலும் ஏறிக் கொண்டிருந்தது. 
என் கால்களை விடவும் மனம் வேகமாக மலை ஏறியது. 

அரை மணி நேரத்தில் யானையின் கழுத்துப் பகுதிக்குச் சென்றுவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நுனா மரங்கள். கோரைப்புற்கள் வெயிலில் காய்ந்து ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. காலை வெயிலில் செங்குத்தான பாறையில் ஏறியதால் உடல் வேர்த்தது. மருந்துக்கும் ஒரு காற்று இல்லை. 

அங்கிருந்து பார்த்தால் ஒரு குகை தெரிந்தது. அதன் மேல் ஏறுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. செங்குத்தான வழுக்குப் பாறை. உடும்பைப் போல பாறையைப் பற்றிக் கொண்டு வேகவேகமாக ஏறி யானையின் கண் பகுதிக்குச் சென்றேன். 

யானையின் முதுகுப் பகுதி போல செங்குத்தாக இருந்த பாறையினால் வெயில் இல்லாமல் அந்த இடத்தில் கொஞ்சம் குளுமையை உணர முடிந்தது. மலை ஏறியக் களைப்பில் கொஞ்சம் நேரம் கால் நீட்டிப் படுத்துக் கொண்டேன். 
அங்கிருந்து பதினைந்தடி தூரத்தில் ஒரு குகை. சமணப்படுகைகள். இவ்வளவு உயரத்தில் வந்து எப்படி சமணர்கள் தவம் செய்திருப்பார்கள் என நினைக்க ஆச்சரியமாக இருந்தது. தலையையும் உடலையும் குறுக்கிக் கொண்டால் அந்தக் குகைக்குள் அமரலாம். தலையை முட்டிக் கொள்ளும் உயரம்தான் குகை. 

அங்கே குகைக்குள் குங்குமம், மஞ்சள், விளக்கு வைத்த அடையாளம். அதற்குள் போய் அமர்ந்து கொண்டு பதினைந்து நிமிட தியானம். எந்தச் சிரமமும் இல்லாமல் மனம் ஒருநிலைப் பட்டது. குகையின் வாசனையும் சில்லென்ற காற்றும் காலம் தாண்டி அழைத்துச் சென்றது. மனசுக்குள் இன்னமும் உயிர்த்திருக்கும் ஆதிமனுஷியை உணரத் தொடங்கினேன். 
கண்முன்னால் நிகழ்ந்த மேஜிக் அது. 
வாழ்க்கைவின் மீதான தேடலை மலைப்பயணங்களில் கண்டடைய முடியும். வாழ்வில் நிகழ்ந்துவிடுகிற மேஜிக் அதுவாகத்தான் இருக்க முடியும். 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஐஸ்கிரீமைப் போல கரைந்திருந்தது. அங்கிருந்து கீழிறங்கும் போது ஏறியதை விடவும் கடினமாக இருந்தது. வழுக்கும் பாறையில் ஒரு அடி சருக்கினாலும் அவ்வளவு தான். என்னால் இறங்க முடியும் எனத் தோன்றவில்லை. ஆனாலும் இறங்கித்தான் ஆக வேண்டும். முதலில் ஷூவைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறும் காலில் மெல்ல மெல்ல இறங்கினேன். 
அந்தப் பாறையின் மேலேறியதும் இறங்கியதும் நினைத்துப் பார்த்தால் கனவு போலிருக்கிறது. 

மலையிலிருந்து இறங்கும் வழி மறந்திருந்தது. மறந்திருந்தது என்பதை விடவும் வேறு ஏதேதோ பாதையில் தடுமாறிக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். 

மலைப் பயணங்கள் மிகப் புதிரானவை, நாம் வந்த வழியை மறந்து தேட வைப்பதில் மலைகளுக்கு அலாதி இன்பமுண்டு என ஒருமுறை நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. கொஞ்சம் தேடி, வந்த வழியை அடையாளம் கண்டு கீழிறங்கியதும் நின்று அந்த மலையைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 400 மீட்டர் உயரம் கொண்ட அந்த பிரம்மாண்டம் கண்களை விட்டு அகல மறுத்தது. 
கனவின் பிரமையிலிருந்து விலகாத மனதுடன் யானை மலையின் இடது புறத்தில் இருக்கும் சமண புடைப்புச் சிற்பங்களைக் காணச் சென்றேன். அடிவாரத்தில் இருந்த வீட்டில் வழி கேட்டுக் கொண்டு மிகச் சரியாகவே சென்று சேர்ந்தேன். 

கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால் தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையின் இடது புறம் பாறையின் உச்சியில் செதுக்கப்பட்டிருந்தன.  எதிரில் இருந்த பாறையில் அமர்ந்து சிற்பங்களைப் பார்த்துக்.கொண்டிருந்தேன். அது சிலை செதுக்குவதற்கு வாட்டமில்லாத பகுதி அது. மேலும் எட்டாத உயரமும் கூட. அப்படிப்பட்ட இடத்தில் பாறையின் முகப்பில் இத்தனை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் அந்தக் கலைஞனை நினைத்து மனம் வியந்தது. 
சிலைக்கு அருகில் பெரும்பாறையை ஒட்டியபடி சிறு ஒட்டுப்பாறை ஒன்று இருந்தது. அதன்மீது தாவி ஏறி அமர்ந்து கொண்டேன். கம்பீரமாக இருந்தது. 

மலையை விட்டு இறங்கிய பிறகும் அந்தக் குகையிலும், ஒட்டுப்பாறையின்மீதும்  மாறி மாறி அமர்ந்திருக்கிறது மனம் ஒரு கற்சிலையைப் போல. 

1 கருத்து:

  1. அழகான பதிவு, தங்களோடு சேர்ந்து மலை ஏறிய உணர்வு... தைரிய மங்கை, வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு