புதன், 7 ஜூன், 2023

பேருந்து பயணத்தின் ஜென் கவிதை - மனுஷி

காலையில் பேருந்தில் கல்லூரிக்குப் போகும்போது வெகு அரிதாகவே உட்கார இடம் கிடைக்கும். அதுவும் சன்னலோர இருக்கை என்பதெல்லாம் அரிதினும் அரிது. 

இன்று சீட் கிடைத்தது. அமர்ந்து கொண்டேன். நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும்வரை காத்திருந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு இயர்போனைக் கழுத்தில் மாட்டிக் கொண்டேன்.

பொதுவாக, செல்போனில் பேசிக் கொண்டே டிக்கெட் வாங்கினாலோ, காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டிருந்தாலோ நடத்துநர்கள் காரணமில்லாமல் டென்ஷன் ஆவார்கள். அவர்களின் டென்ஷன் காலைச் சுற்றிக் கொண்ட பாம்பு போல அந்த நாள் முழுக்க என் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு தான் டிக்கெட் வாங்கும்வரை செல்போனை எடுப்பதில்லை எனும் முடிவு.

ஏதாவது இலக்கிய உரைகளைக் கேட்டுக் கொண்டே செல்லும்போது பாண்டிச்சேரி - விழுப்புரம் இரண்டு மணி நேரப் பயணம் உண்டாக்கும் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை. இன்று ஜென் கவிதைகள் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் பேசிய காணொளியைக் கேட்டுக் கொண்டே வந்தேன். ஏற்கனவே #ஜென்_கவிதைகள் அறிமுகம் என்னும் புத்தகத்தில் வாசித்தவை தான் என்றாலும் இந்த நாளில் இந்தப் பயணத்திற்கு அதை ஆடியோ வடிவில் கேட்டுக் கொண்டே செல்லலாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

திருபுவனை நிறுத்தத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் இறங்கிக் கொள்ள, ஒரு வயதான தாத்தா அந்த இடத்தில் அமர்ந்தார். நேராக பஸ் போகும் பக்கம் இருந்த அவர் தலை  கொஞ்ச நேரத்தில் மெல்ல மெல்லச் சரிந்து என் பக்கமாகத் திரும்பி, செல்போன் திரையை உற்றுப் பார்த்தார். 

பேருந்து பயணத்தில் இது அடிக்கடி நடக்கும்.  நாம் மெசேஜ் அனுப்புவதை ஆர்வத்தோடு பக்கத்தில் இருப்பவர் பார்ப்பார். அடுத்தவர் மொபைலின் உரையாடல். அதைப் பார்க்கிறோமே என்கிற சிறு உறுத்தல் கூட இருக்காது. சொல்லப்போனால் அடுத்து என்ன மெசேஜ் வரும். என்ன பதில் அனுப்பப் போகிறோம் எனத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இருக்கும். 

இந்தத் தாத்தா இவ்வளவு சாய்ந்து கொண்டு பார்க்கிறாரே என்று மொபைலைக் கொஞ்சம் வலப்புறமாகத் திருப்பி வைத்தேன். அப்போதும் அவர் சாய்ந்து மொபைலைப் பார்க்கத் தொடங்கினார். 

தாத்தா, கொஞ்சம் தள்ளி உட்காருங்க. சாய்ஞ்சுகிட்டே வர்றிங்க என்றேன் கடுப்பாகி. 

அவர் என்னமோ பேசுறார்.. என்ன பேசுறார்னு தெரியல. அதான் கிட்ட வந்து பார்க்கிறேன். அப்பவும் கேட்கல என்றார். 

கழுத்தில் மாட்டியிருந்த ஹெட்போனைக் காட்டி, இதன் வழியாகக் கேட்டுட்டு இருக்கேன் என்றேன். 

என்ன பேசுறார் அந்த அய்யா என்றார்.

கவிதை பற்றிப் பேசுறாங்க. கேட்கறிங்களா என்று அவர் கழுத்தில் ஹெட்போனை மாட்டி, இரண்டுபக்கமும் ஹெட்போனின் கேட்கும் பகுதியைப் பொறுத்தினேன்.

அவரைப் பார்த்தேன். மொபைல் திரையில் இருந்து கண்கள் அகலவேயில்லை. கூர்ந்து கேட்டார். அந்த உரையின் கருத்துகளை ஆமோதிப்பது போல மேலும் கீழும் தலையை அசைத்து அசைத்துக் கேட்டார். ஓரிரு இடங்களில் மெல்லச் சிரித்தார். புருவங்கள் சுருக்கி ஆழ்ந்து பார்த்தார். வெவ்வேறு முக பாவனைகள், உடலசைவுகள்,  தலையசைவுகள் அவர் உணர்ந்து,  ரசித்துக் கேட்கிறார் என்பதைக் காட்டியது. 

அரைமணி நேரம் கேட்டிருப்பார். அதற்குள் நான் இறங்கவேண்டிய சிக்னல் வந்துவிட்டது. 
தாத்தா நான் இறங்கனும் என்றேன். கழுத்தில் இருந்த ஹெட்போனைக் கழற்றி என்னிடம் தந்தார். அந்த அய்யா நல்லா கருத்தா பேசுறார். வாக்குமூலம்லாம் நல்லா இருக்கு என்றார். 

நீ என்ன பண்ற என்று என்னைக் கேட்டார். காலேஜ்ல பாடம் சொல்லித் தர்றேன் என்றேன். 

பசங்களுக்கு இந்த மாதிரி கதைலாம் கூட சொல்லிக் கொடு. வாழ்க்கையைக் கத்துக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவரும் இறங்கிக் கொண்டார். 

அவரது  குழி விழுந்த  கன்னம்,  முகத்தில்  கைகளில் இருந்த சுருக்கங்கள் லேசாக கூன் விழுந்த முதுகு - வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவத்தின் சாட்சியாய் இருந்தது அவர் உருவத்தில்

கல்வி என்பது மதிப்பெண் அல்ல. வாழ்க்கைக்கான அனுபவம் தான்.

2 கருத்துகள்: