ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி - மனுஷி

 

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி

ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று”.

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் கண்கள் வழியாகப் பார்த்த வீராணம் ஏரியைப் பார்க்க வேண்டுமென 3 வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான தருணம் கைகூடாமல் இருந்தது.

நாம் எதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறோமோ அதை நோக்கிப் பிரபஞ்சம் நம்மை அழைத்துச் செல்லும். அப்படித்தான் கடம்பூர் மாளிகையிலிருந்து வீராணம் ஏரியை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். வந்தியத்தேவன் தன் குதிரையில் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை வழியாக வீராணம் ஏரியைக் கடந்து தஞ்சாவூர் சென்ற பொன்னியின் செல்வன் நினைவுகளை மனதில் சுமந்தபடி எனது ஸ்கூட்டியில் பயணித்தேன். உச்சி வெயில் தலையில் சுள்ளென்று இறங்க 10 கி.மீ கூகுள் உதவியுடன் பயணித்ததும் வீராணம் ஏரி என்கிற வீரநாராயணன் ஏரி எனது இடது புறம் பரந்து விரிந்து நீண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரிதான். 



கிட்டத்தட்ட 11 கி.மீ தூரத்திற்கு ஏரி இருந்தது. ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து ஏரியின் அழகை ரசிக்க வேண்டுமென நினைத்தால் ஏரிக்கரையின் சிமெண்ட் தடுப்புகளில் வெயில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தது. ஓய்வெடுக்க இடமில்லை.  இன்னும் கொஞ்சம் தூரம், இன்னும் கொஞ்சம் தூரம் எனச் சென்றேன். ஒரு பெரிய புங்கை மரம் சாலைக்கும் ஏரிக்குமாக தனது கிளைகளைப் பரப்பி நிழலைக் கொடையளித்திருந்தது. அதனருகில் படிக்கட்டுகளும் சிறிய கோவிலும் இருந்தது. அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம் ‘அய்யா, இங்க மதகு எங்க இருக்கு” என்றதும், “இதான் மதகு. 30 மதகு கிட்ட இருக்கு. உங்களுக்கு எங்க போகனும் என்றார். அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நன்றி சொல்லிவிட்டு அந்த மர நிழலில் வண்டியை நிறுத்தினேன். வரும் வழியில் இடைவெளிவிட்டு அங்கங்கே இரும்புக் கூண்டு போல் இருந்தது. அதெல்லாம் பாசன மதகுகள்தான் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயிலைத் தாண்டி, இரும்புக் கூண்டின் அருகில் இருந்த சிமெண்ட் தரையில் (கரையில்) அமர்ந்து ஏரி நீருக்குள் கால் நீட்டினேன். நீரின் கருணை உடலுக்குள் பரவியது.


9ம் நூற்றாண்டில் ஒரு பெரும் போருக்காகக் காத்திருந்த சமயத்தில் இராஜாதித்திய சோழன் தனது வீரர்களைக் கொண்டு இந்த ஏரியை உருவாக்கினான் என்று வரலாறு சொல்கிறது. தனது தந்தையான முதலாம் பராந்தக சோழனின் பெயரான வீரநாராயணன் என்பதை இந்த ஏரிக்குப் பெயராக வைத்தார்கள் என்றும், அதுவே பின்னாளில் வீராணம் ஏரியாக நிலைபெற்றுவிட்டது என்றும் படித்ததும் ஏரி நீரில் கால்களை நனைத்து விளையாடிய சமயத்தில் நினைவுக்கு வந்து போனது. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இடது புறமிருந்து வலது புறம் வரை சுற்றிலும் நீர். அந்த நீரில் சூரியன் வெள்ளித் தட்டென மின்னி மிதந்து கொண்டிருந்தது. அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹரில் நடைபெற்ற இந்திய அளவிலான கவிஞர்கள் சந்திப்பு மாநாட்டுக்கு, கௌஹாத்தியிலிருந்து காரில் பயணித்த போது பிரம்மபுத்திரா நதியைப் பார்த்தேன். அது நதியா கடலா எனப் பிரமித்துப் போனேன். அதே பிரம்மிப்பு வீராணம் ஏரியைப் பார்த்தபோதும் தோன்றியது.

சற்று நேரத்தில் இரண்டு இளைஞர்கள் அந்த மதகு அருகில் வந்தார்கள். ரொம்ப பக்கத்தில் போகாதிங்க ரொம்ப ஆழமா இருக்கும் என்று அவர்களை எச்சரிக்க நினைத்தேன். அவர்கள் அந்த ஊர்க்காரப் பிள்ளைகள் போலும். அணிந்திருந்த டீ சர்ட்டைக் கழற்றி மதகின் சிமெண்ட் தரையில் வைத்துவிட்டு அசால்ட்டாக ஏரிக்குள் குதித்து நீச்சலடித்துச் சாகசம் செய்து கொண்டிருந்தனர். நீருக்குள் தலைகீழாகக் குதித்தனர். உள்மூழ்கி மூச்சடக்கினர். மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல கை கால்களைப் பரப்பி மிதந்தனர். நீரில் நின்றனர். சர்க்கஸ் பார்க்கும் சிறுமி போல கண்கள் விரிய பார்த்து ரசித்தேன். சிறிது நேரத்தில் இருவரும் வந்த வேலை முடிந்தது என்பது கிளம்பிச் சென்றனர்.

சற்று தூரத்தில் ஒரு வயதான முதியவர், ஏரியின் படிக்கட்டில் தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஏரி நீருக்குள் நின்றபடித் துவைத்துக் கொண்டிருந்தார். மீன் பிடிப்பதற்காகத் தூரத்தில் சில படகுகள் மிதந்து சென்றன. நீண்ண்ண்ண்ண்ட மரக் கோலின் உதவியுடன் படகு நகர்ந்து கொண்டிருந்தது. அவர் கையில் இருந்த கோல் முழுவதுமாக ஏரிக்குள் இறங்கி ஆழம் பார்த்து வெளியே வந்தது. அந்த இடத்தை விட்டு வெளியேறியதும், ஏரிக் கரையின் சிமெண்ட் கட்டையில் மதகு எண் 7 என்று எழுதி, அதன் நீள ஆழ அகலங்கள், நீர்க் கொள்ளளவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுமார் 48 அடி ஆழம். நிலத்தில் விளையாடுவது அந்த இளைஞர்கள் நீரில் விளையாடியதும், நீரில் நின்றபடி அந்த முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்ததும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

அங்கு இருந்த சிறிய கோவிலின் பக்கத்தில் வயது முதிர்ந்த சிறுமியைப் போல் ஒரு மரம் இருந்தது. சொல்லப் போனால் அது மரம் இல்லை. மரத்தின் உடல் மட்டுமே. சந்தனத்தால் முகம், கண், புருவம், மூக்கு, வாய், நெற்றியில் பொட்டு, தலையில் கனகாம்பரப் பூ நிறத்தில் பிளாஸ்டிக் மலர்ச்சரம், கழுத்தில் கண்ணாடி வளையல் மாலை, இடுப்பில் சரிகைத் துணி, வேப்பிலை இலை பாவாடை – அச்சு அசப்பில் வயதில் மூத்த சிறுமியின் சாயல் தான் அந்த மரத்திற்கு. சங்க இலக்கியத்தில் இயற்கையை வழிபடும் மரபு இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. நீரை வணங்குதல், மரங்களில் உள்ள தெய்வங்களை வணங்குதல், இயற்கையை வழிபடுதல் என்பதே பழந்தமிழர்களின் வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இதிலிருந்து தான் இன்றைய உருவ வழிபாடு தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த மரத் தெய்வத்தைப் பார்த்தபோது அந்த ஏரியைக் காவல் செய்யும் யட்சி இவளாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. அவளருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பழங்காலத்தின் அருகில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.



கிளம்பும்போது  ஒருமுறை ஏரியைச் சுற்றிக் கண்களால் ஒளிப்பதிவு செய்தேன். அங்கு நான் கண்டது வீராணம் ஏரி எனும் கடலைத்தான்.



ஞாயிறு, 25 மே, 2025

ஆதிக் கருவறையின் வாசம் : விருத்தாச்சலம் பழமலைநாதர் கோவில் - மனுஷி

விருத்தாச்சலத்தில் உள்ள எனது பள்ளித் தோழியின் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நீண்டநாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். தோழியுடன் பேசும்போதெல்லாம் விருத்தகிரீஸ்வரர் கோவிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீப நாட்களாகப் பெய்த கோடை மழையில் அக்கினி வெயில் சற்றே தணிந்திருந்தது. காலைத் தேநீரை அருந்திவிட்டு விருத்தாச்சலம் கிளம்பினேன். இரண்டு மணி நேர பைக் பயணத்தில் தோழியின் வீட்டை அடைந்தேன். சுடச்சுட சுவையான தேநீருடன் வரவேற்றார். சிறு உரையாடலுக்குப் பின், மதிய உணவை முடித்துக் கொண்டு தோழியின் மகளுடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குக் கிளம்பினேன்.

தோழியின் வீட்டிலிருந்து 15 நிமிடத்தில் கோவிலுக்குச் சென்றோம். மணிமுத்தாறு பாலத்தைக் கடக்கும்போது இருபுறமும் அந்த ஆற்றைப் பார்த்தேன். பக்தி இலக்கியத்தில் சுந்தரர், சிவபெருமானிடம் பெற்ற 12000 பொற்காசுகளைச் சுமந்து செல்ல முடியாதென மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் அந்தப் பொற்காசுகளை எடுத்துக் கொண்டார் என்று படித்த ஞாபகம் மனதுக்குள் வந்து போனது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் மணிமுத்தாறின் எந்த இடத்தில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு திருவாரூர் நோக்கிய தனது பயணத்தைச் சுந்தரர் தொடர்ந்திருப்பார்?

ஆறு என்று சொல்வதற்குச் சற்றே யோசிக்க வைக்கும்படியான தோற்றத்தில் புதர் மண்டிப் போய், முள் செடிகளும் புற்களும் முளைத்து அங்கங்கே சாக்கடை போய் தேங்கிய நீருடன் பரிதாபமாய் இருந்தது மணிமுத்தாறு. பாலத்தைக் கடந்து வலது புறம் திரும்பியதும் கோவிலை வந்தடைந்துவிட்டோம் என்ற அடையாளங்களுடன் கடைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

வண்டியை நிறுத்திவிட்டு, கோபுரத்தின் முன்பு நின்று பெரிய வணக்கத்தைச் செலுத்தும்போது ‘பெரிய நாயகி உடனுறை பழமலைநாதர் கோவில்’ என்ற பெயர்  கோவிலின் நுழைவாயில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். இந்தப் பெயரையும் பக்தி இலக்கியத்தில் வாசித்த ஞாபகம் வந்தது.

உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சிறிய வன்னிமரம் பசிய இலைகளுடன் கிளைபரப்பி நின்றிருந்தது. சங்க இலக்கியத்தில் தெய்வம் உறைகின்ற மரமாகவும் சோழர்களின் குல மரமாகவும் இந்த வன்னிமரம் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கும். 

ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் உள்ள புலிகுண்டு மலைக்குச் சென்றபோது அந்த மலை உச்சியில் வன்னி மரத்தைப் பார்த்தேன். தண்ணீர் அரிதாய்க் கிடைக்கும் இடத்தில் கூட வன்னி தனது வேர்களை ஆழ ஊன்றி வளரும் என்பது உண்மைதானோ என்று அப்போது தோன்றியது. ஏனெனில் வெயில் ஏறி காய்ந்து போன மொட்டைப் பாறையில் கூட அத்தனை பசுமையோடு செம்மாந்து நின்றிருந்தது புலிகுண்டு மலை உச்சியில் அந்த வன்னிமரம்.

பழமலைநாதர் கோவிலில் இருந்த வன்னி மரத்திற்கு அடுத்து, முதுபெரும் கிழவி தனது கூந்தலை வெயிலில் உலர்த்திக் கொண்டு நிற்பது போல நின்றிருந்தது அரமரம் ஒன்று. அரசமரத்தின் அடியில் உடல் பின்னிக் கொண்டிருக்கும் நாகங்களின் சிலையும், அதன் பக்கத்தில் காளை மாட்டின் (பசுவாகக் கூட இருக்கலாம்) வயிற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தது அம்மன் சிலை. அவ்வளவு அழகு அந்த முகம். அரச மரத்தின் கிளைகளில் வேண்டுதலுக்காகக் கட்டப்பட்ட தொட்டில்கள் காற்றின் தாலாட்டில் ஆடிக் கொண்டிருந்தது. அரச மரத்தின் வேர்ப்பகுதி, அதன் உடல் பகுதியைத் தொட்டுப் பார்க்க உடல் சிலிர்த்தது. காலம் காலமாய் உழைத்து உழைத்து காப்புக் காய்த்த கிழவியின் கைகளை, கால்களைத் தொடுவது போல் இருந்தது. மரத்தை அண்ணாந்து பார்த்தால் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்பது போல் இலைகளில் அத்தனை மினுமினுப்பு.





அரச மரத்தை அடுத்து, ஆழத்துப் பிள்ளையாரைப் பார்க்கச் சென்றோம். ஆழத்துப் பிள்ளையார் கோவிலின் முன்பு கொடிமரம் இருந்தது. அதைத் தாண்டிச் செல்லும்போது கோவிலின் வாசலில் சுவரில் சாய்ந்தபடி வெறித்த பார்வையோடு எதிரில் உள்ள சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். கைகள் மட்டும் சில்லறைக்காகத் தவமிருந்தது. அந்தக் கைகளைப் பார்க்காதது போல் செல்வது அத்தனை எளிதாய் இல்லை. பதினெட்டுப் படிகள் இறங்கி உள்ளே சென்றதும், அகல் விளக்கின் வெளிச்சத்தில் ஆழத்துப் பிள்ளையார் அமைதியாக அமர்ந்திருந்தார். 


கோவில் மண்டபத்துத் தூண்களில் செதுக்கப்பட்ட அழகழகான சிற்பங்களைப் பார்த்த்துவிட்டு, ஆழத்துப் பிள்ளையாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு படியேறி வரும்போது, வாசலில் அமர்ந்திருந்த பாட்டியின் கண்களும் கைகளும் காசு கேட்டது. பையில் கைவிட்டு சிறு தொகையை அவரது கையில் வைத்துவிட்டு, பழமலைநாதராம் விருத்தகிரீஸ்வரரைப் பார்க்கச் சென்றேன்.

பழமலைநாதரைப் பார்க்கச் செல்லும் வாயிலில் கண்டராதித்தன் கோபுரம் அழகிய வண்ணங்களோடு வானைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பெயரைப் பார்த்ததும் இதுவும் சோழர் காலத்து வரலாற்றிற்குச் சாட்சியம் கூறும் கோயில் என்று புரிந்தது கோபுரத்தில் என்னென்ன புராணக் கதைகள் சிலைகளாகக் காட்சியளிக்கின்றன என்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தோம். 

டியூப்லைட் வெளிச்சத்தை டம்மி செய்வது போல், கருவறைக்குச் செல்லும் வழியில் இடதுபுறம் ஏற்றி வைக்கப்பட்ட அகல்விளக்கு பிரகாசித்தது. பழமலைநாதரைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து 63 நாயன்மார்களின் சிலைகளையும் பார்த்துவிட்டு, கருவறையின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவிட்டுத் திரும்பினேன். 63 நாயன்மார்களின் சிலையில் திருஞானசம்மந்தருடைய சிலை மட்டும் உருவத்தில் பெரியதாய், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர் சிலைகளிலிருந்து கொஞ்சம் தள்ளியும் வைக்கப்பட்டிருந்தது ஏன் எனப் புரியவில்லை. இலக்கியத்தில் சிறுவயது பாலகனாய் படித்த சம்மந்தர் எப்படி இத்தனை பெரியவனாய் இந்தக் கோவில் சிலை வடிவம் கொண்டார் என்பது புரிபடவில்லை.

பழமலை நாதர் கோவிலுக்குப் பல சிறப்புகள் இருந்தாலும், கருவறை சிவனுக்குப் பக்கத்தில் அதாவது பழமலைநாதர் இருக்கின்ற மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள வன்னிமரம் இக்கோவிலின் பழம்பெரும் சிறப்பு. சுமார் 2500 ஆண்டு பழமையான வன்னி மரம். முதுமையின் சுருக்கங்கள் உடலெங்கும் கொண்ட வயதான பாட்டனைப் பார்ப்பது போல் இருந்தது.



முன்பொருகாலத்தில் விபசித்து முனிவர் இங்கே தங்கியிருந்து, இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் திருப்பணிகள் செய்த தொழிலாளிகளுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்துக் கொடுப்பாராம். வீட்டிற்குப் போய் பார்த்தால் அவரவர் செய்த வேலையைப் பொறுத்து வன்னி இலைகள் காசுகளாக மாறி இருக்குமாம். 2500 ஆண்டுகளை உண்டு செறித்துச் செம்மாந்து கிளைபரப்பி நிற்கும் வன்னி மரத்திற்கு இப்படியொரு கதையுண்டு. என்னளவில் இந்த வன்னிமரம் தான் சாமி. கடவுள். இறைவன் எல்லாம்.

நான் சென்ற நேரம், வன்னி மரத்தின் தொப்பையில் ஆழ்ந்த யோசனையுடன் குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. வன்னிமரத்தைச் சுற்றி வந்து கும்பிட்டுச் செல்லும் யாரையும் அது தொந்தரவு செய்யவில்லை. சொல்லப்போனால் யாரையும் அது கண்டுகொள்ளவும் இல்லை. சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அடுத்து என்ன செய்வது எனத் திட்டமிடுவது போலொரு உடல்மொழி அதனிடம். முதிய வன்னிமரத்தின் வேர்ப்பகுதியில் சில சிலைகள். யார் என்ன என்ற தகவல் ஏதுமில்லை. ஆனால், சிலைகளுக்கு அருகில் இருந்த கல்தூண்களில் தாராசுரத்தில் இருப்பது போல் மினியேச்சர் சிற்பங்கள் அழகாய் நடனமாடிக் கொண்டிருந்தன.



அங்கிருந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னிதியின் முன்புறம் உள்ள சுவரில் இருந்த சிற்பம் என் கவனத்தை ஈர்த்தது. ஆணும் பெண்ணும் இணைந்து நிற்பது போலொரு சிலை. பெண் சிலையின் கழுத்தின் தொங்கவிடப்பட்ட சரிகை ஆடை பெண்ணுடலை மறைத்திருந்தது. சிலையின் முழுமையைக் காண ஆவல் மேலிட, யாரும் பார்க்காத நேரத்தில் துணியை மெல்ல நகர்த்தினேன். உருண்டு திரண்டிருந்த பெண்ணின் வலது மார்பைத் த



னது கைகளால் தாங்கிப் பிடித்தபடி காதலில் லயித்திருக்கும் காட்சி.. அப்படியொரு அழகு அந்தச் சிலையில்! காதலின் அதி அற்புத உணர்வை வெளிப்படுத்தும் இந்தச் சிலையை, ஆண்பெண் உறவின் அழகை ஏன் ஆடையால் மூடி வைக்க வேண்டும் எனத் தோன்றியது. சிலையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதேபோல் ஆடையைப் பெண் சிலை மீது போர்த்திவிட்டு பிரகாரத்தினுள் நடந்தேன். ஆனால், சிலையின் காட்சி கண்கள் வழியாக மனதுக்குள் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது.

பழமலைநாதர் கோவிலுக்கு மொத்தம் 5 கோபுரங்கள். கண்டராதித்தன் கோபுரம் என்று பெயர் தாங்கியிருப்பதைப் போல மற்ற கோபுரங்கள் எந்தச் சோழனின் பெயரைத் தாங்கி நிற்கின்றன என்று பார்ப்பதற்காக கோவில் வளாகத்திற்குள் நடந்தேன். மற்ற கோபுரங்கள் பெயரற்றவையாய் இருந்தன. மாலைச் சூரியன் அந்தியின் மறைந்து கொண்டிருந்த நேரம், கோவிலின் பின்புறம் இருந்த கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கருங்கற் கோபுரத்தின் மேல் உள்ள சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோழியின் மகள் அங்கே இருந்த ஆந்தை ஒன்றைக் கண்டு என்னிடம் காட்டினாள். கருங்கற்கோபுரத்தின் மேல் ஒரு சிலையென எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆந்தையை முதன் முதலில் அப்போதுதான் நேரில் பார்த்தேன். அதனோடு பேசும்போது முட்டைக் கண்களால் எனக்குப் பதில் சொல்வது போல் இருந்தது. பிறகு ஆந்தையிடன் விடைபெற்றுக் கொண்டு, விருத்தாம்பிகை சன்னிதியில் அம்மனைத் தரிசித்துவிட்டு, பிரசாதம் சாப்பிடக் கிளம்பினோம்.

ஐந்தரை மணிக்கு மேல் ஆகி இருந்ததால் பிரசாதம் விற்கும் இடத்தில் எல்லாம் காலியாகியிருந்தது. அல்வா, முறுக்கு, சோமாஸ், தட்டை, எல்லடை போன்ற இத்தியாதி நொறுக்குத் தீனி பிரசாதங்களே இருந்தன. பிரசாதக் கவுண்ட்டரில் இருந்த பெரியவரிடம் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டோம்.

தண்ணீர் குடித்தபடி, கண்டராதித்தன் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கோபுரத்தின் மேல் உள்ள சிற்பம் ஒன்றைச் சுட்டிக் காட்டி அது என்ன தெரியுதா என்றார். கீழே கிடத்தப்பட்ட ஒரு உடல். அதனருகில் ஒரு ஆண். பெண் தனது முந்தானையால் விசிறிவிடும் காட்சி சிலையாக இருந்தது கோபுரத்தில். அந்தப் பெரியவர் சொன்னார். காசியை விட வீசம் அதிகம் இந்தக் கோவிலுக்கு. மற்ற ஊரில் இறந்தால் எமன் வந்து நம்மைக் கூட்டிட்டுப் போவார். ஆனா இந்த ஊரில் இறந்தால் சிவன் நம்மைக் கூட்டிட்டுப் போவார். பார்வதி தேவி தனது முந்தானையால் விசிறி விட்டு, நமது பாவங்களையெல்லம போக்கி, நேராகச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அதைச் சொல்வதுதான் அந்தச் சிற்பம் என்று சிற்பத்தின் காட்சியைக் கதையாக விளக்கினார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கோயிலிருந்து கிளம்பினோம். வெளியில் முகப்பு கோபுரத்தின் முன்பு இருந்த பிள்ளையாரை மக்கள் வணங்கிவிட்டு கோவிலின் உள்ளே சென்று கொண்டிருக்க, மக்களுக்கு இடையில் ஒரு கொம்பு முளைக்காத பசு ஒன்று நீண்டநேரமாக வரிசையில் நின்று பிள்ளையாரைத் தரிசிப்பது போல கற்பூர தீபத்தின் முன்பு நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது.

பசுவின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்ற  யோசனையுடன் வண்டியில் கிளம்பினேன்.

அரசமரத்தின் கிளையில் ஆடிக் கொண்டிருந்த தொட்டிலும், 2500 ஆண்டு பழமையான வன்னிமரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கின் சிந்தனையும், ஆந்தையின் முட்டைக் கண்களும், சிவனது கருவறையின் வெளியில் ஒலித்த கோவில் மணியோசையும், சக்கரத் தீர்த்தத்தில் சென்று மறைந்த ஆரஞ்சு நிறச் சூரியனின் கதகதப்பும் வழித்துணையாய் கதைபேசிக் கொண்டே வந்தனர் பாண்டிச்சேரி வரை. ஆதிக் கருவறையின் வாசம் நினைவுக்குள் வந்தமர்ந்து கொண்டது.