ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி - மனுஷி

 

கடலென காட்சியளிக்கும் வீராணம் ஏரி

ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று”.

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் கண்கள் வழியாகப் பார்த்த வீராணம் ஏரியைப் பார்க்க வேண்டுமென 3 வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான தருணம் கைகூடாமல் இருந்தது.

நாம் எதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறோமோ அதை நோக்கிப் பிரபஞ்சம் நம்மை அழைத்துச் செல்லும். அப்படித்தான் கடம்பூர் மாளிகையிலிருந்து வீராணம் ஏரியை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். வந்தியத்தேவன் தன் குதிரையில் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை வழியாக வீராணம் ஏரியைக் கடந்து தஞ்சாவூர் சென்ற பொன்னியின் செல்வன் நினைவுகளை மனதில் சுமந்தபடி எனது ஸ்கூட்டியில் பயணித்தேன். உச்சி வெயில் தலையில் சுள்ளென்று இறங்க 10 கி.மீ கூகுள் உதவியுடன் பயணித்ததும் வீராணம் ஏரி என்கிற வீரநாராயணன் ஏரி எனது இடது புறம் பரந்து விரிந்து நீண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரிதான். 



கிட்டத்தட்ட 11 கி.மீ தூரத்திற்கு ஏரி இருந்தது. ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து ஏரியின் அழகை ரசிக்க வேண்டுமென நினைத்தால் ஏரிக்கரையின் சிமெண்ட் தடுப்புகளில் வெயில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தது. ஓய்வெடுக்க இடமில்லை.  இன்னும் கொஞ்சம் தூரம், இன்னும் கொஞ்சம் தூரம் எனச் சென்றேன். ஒரு பெரிய புங்கை மரம் சாலைக்கும் ஏரிக்குமாக தனது கிளைகளைப் பரப்பி நிழலைக் கொடையளித்திருந்தது. அதனருகில் படிக்கட்டுகளும் சிறிய கோவிலும் இருந்தது. அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம் ‘அய்யா, இங்க மதகு எங்க இருக்கு” என்றதும், “இதான் மதகு. 30 மதகு கிட்ட இருக்கு. உங்களுக்கு எங்க போகனும் என்றார். அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நன்றி சொல்லிவிட்டு அந்த மர நிழலில் வண்டியை நிறுத்தினேன். வரும் வழியில் இடைவெளிவிட்டு அங்கங்கே இரும்புக் கூண்டு போல் இருந்தது. அதெல்லாம் பாசன மதகுகள்தான் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயிலைத் தாண்டி, இரும்புக் கூண்டின் அருகில் இருந்த சிமெண்ட் தரையில் (கரையில்) அமர்ந்து ஏரி நீருக்குள் கால் நீட்டினேன். நீரின் கருணை உடலுக்குள் பரவியது.


9ம் நூற்றாண்டில் ஒரு பெரும் போருக்காகக் காத்திருந்த சமயத்தில் இராஜாதித்திய சோழன் தனது வீரர்களைக் கொண்டு இந்த ஏரியை உருவாக்கினான் என்று வரலாறு சொல்கிறது. தனது தந்தையான முதலாம் பராந்தக சோழனின் பெயரான வீரநாராயணன் என்பதை இந்த ஏரிக்குப் பெயராக வைத்தார்கள் என்றும், அதுவே பின்னாளில் வீராணம் ஏரியாக நிலைபெற்றுவிட்டது என்றும் படித்ததும் ஏரி நீரில் கால்களை நனைத்து விளையாடிய சமயத்தில் நினைவுக்கு வந்து போனது. நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இடது புறமிருந்து வலது புறம் வரை சுற்றிலும் நீர். அந்த நீரில் சூரியன் வெள்ளித் தட்டென மின்னி மிதந்து கொண்டிருந்தது. அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹரில் நடைபெற்ற இந்திய அளவிலான கவிஞர்கள் சந்திப்பு மாநாட்டுக்கு, கௌஹாத்தியிலிருந்து காரில் பயணித்த போது பிரம்மபுத்திரா நதியைப் பார்த்தேன். அது நதியா கடலா எனப் பிரமித்துப் போனேன். அதே பிரம்மிப்பு வீராணம் ஏரியைப் பார்த்தபோதும் தோன்றியது.

சற்று நேரத்தில் இரண்டு இளைஞர்கள் அந்த மதகு அருகில் வந்தார்கள். ரொம்ப பக்கத்தில் போகாதிங்க ரொம்ப ஆழமா இருக்கும் என்று அவர்களை எச்சரிக்க நினைத்தேன். அவர்கள் அந்த ஊர்க்காரப் பிள்ளைகள் போலும். அணிந்திருந்த டீ சர்ட்டைக் கழற்றி மதகின் சிமெண்ட் தரையில் வைத்துவிட்டு அசால்ட்டாக ஏரிக்குள் குதித்து நீச்சலடித்துச் சாகசம் செய்து கொண்டிருந்தனர். நீருக்குள் தலைகீழாகக் குதித்தனர். உள்மூழ்கி மூச்சடக்கினர். மரத்திலிருந்து விழுந்த இலையைப் போல கை கால்களைப் பரப்பி மிதந்தனர். நீரில் நின்றனர். சர்க்கஸ் பார்க்கும் சிறுமி போல கண்கள் விரிய பார்த்து ரசித்தேன். சிறிது நேரத்தில் இருவரும் வந்த வேலை முடிந்தது என்பது கிளம்பிச் சென்றனர்.

சற்று தூரத்தில் ஒரு வயதான முதியவர், ஏரியின் படிக்கட்டில் தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஏரி நீருக்குள் நின்றபடித் துவைத்துக் கொண்டிருந்தார். மீன் பிடிப்பதற்காகத் தூரத்தில் சில படகுகள் மிதந்து சென்றன. நீண்ண்ண்ண்ண்ட மரக் கோலின் உதவியுடன் படகு நகர்ந்து கொண்டிருந்தது. அவர் கையில் இருந்த கோல் முழுவதுமாக ஏரிக்குள் இறங்கி ஆழம் பார்த்து வெளியே வந்தது. அந்த இடத்தை விட்டு வெளியேறியதும், ஏரிக் கரையின் சிமெண்ட் கட்டையில் மதகு எண் 7 என்று எழுதி, அதன் நீள ஆழ அகலங்கள், நீர்க் கொள்ளளவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுமார் 48 அடி ஆழம். நிலத்தில் விளையாடுவது அந்த இளைஞர்கள் நீரில் விளையாடியதும், நீரில் நின்றபடி அந்த முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்ததும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

அங்கு இருந்த சிறிய கோவிலின் பக்கத்தில் வயது முதிர்ந்த சிறுமியைப் போல் ஒரு மரம் இருந்தது. சொல்லப் போனால் அது மரம் இல்லை. மரத்தின் உடல் மட்டுமே. சந்தனத்தால் முகம், கண், புருவம், மூக்கு, வாய், நெற்றியில் பொட்டு, தலையில் கனகாம்பரப் பூ நிறத்தில் பிளாஸ்டிக் மலர்ச்சரம், கழுத்தில் கண்ணாடி வளையல் மாலை, இடுப்பில் சரிகைத் துணி, வேப்பிலை இலை பாவாடை – அச்சு அசப்பில் வயதில் மூத்த சிறுமியின் சாயல் தான் அந்த மரத்திற்கு. சங்க இலக்கியத்தில் இயற்கையை வழிபடும் மரபு இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. நீரை வணங்குதல், மரங்களில் உள்ள தெய்வங்களை வணங்குதல், இயற்கையை வழிபடுதல் என்பதே பழந்தமிழர்களின் வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இதிலிருந்து தான் இன்றைய உருவ வழிபாடு தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த மரத் தெய்வத்தைப் பார்த்தபோது அந்த ஏரியைக் காவல் செய்யும் யட்சி இவளாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. அவளருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பழங்காலத்தின் அருகில் அமர்ந்திருப்பது போல் இருந்தது.



கிளம்பும்போது  ஒருமுறை ஏரியைச் சுற்றிக் கண்களால் ஒளிப்பதிவு செய்தேன். அங்கு நான் கண்டது வீராணம் ஏரி எனும் கடலைத்தான்.