புதன், 12 டிசம்பர், 2018

ஜிட்டு எனும் அன்பன்




கடைக்குப் போகிறேன் என்றாலே டைகர், மைக்கண்ணி கூடவே வருவார்கள். இப்போதெல்லாம் டைகர் - மைக்கண்ணியின் மகன் ஜிட்டுவும் கூடவே வரத் தொடங்கிவிட்டான். தெருவில் பாட்சா தீம் மியூசிக் போடாத குறையாக, புடைசூழத்தான் சென்று வருகிறேன். கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் அதுவே தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. டைகர், தெருவில் போகிற வருகிற பைக்குகளைத் துரத்திக் கொண்டோடுவதால் சிலர் நின்று திட்டிவிட்டுப் போவார்கள். வீட்டுக்குப் போடா என்று விரட்டினாலும் கேட்கவே மாட்டான். ஆனாலும், இரவில் கடைக்குப் போய் வருவதானால் டைகர் தான் எனது பாதுகாப்பாளன். அவன் கூட வந்தால் இரவு மனிதர்களின் பயமின்றி எந்த நேரத்திலும் வெளியில் நடக்கலாம். அவ்வளவு பாதுகாப்பு.

இரவு சமைப்பதற்கான மனநிலை இல்லாததால் ஆரோவில் பஸ் ஸ்டாப்
எதிரில் உள்ள பிரியாணி விலாஸில் பிரியாணி வாங்கக் கிளம்பினேன். தெருவில் நடக்கத் தொடங்கியதும் டைகர் பின்னாடியே வந்தான். அவ்வளவு ஒன்று நேரமாகிவிடவில்லை என்பதால் டைகரைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடியே நடந்து சென்றேன். பாதி தூரம் நடந்து சென்றபின் அவதானித்தேன். என் பின்னால் நிழலைப் போல ஜிட்டு நடந்து வந்தான். தெருமுனை வரை தான் அவன் பின் தொடர்ந்து வரப் பழகியிருந்தான். இப்போது பஸ் ஸ்டாப் வரை வர ஆரம்பித்துவிட்டான். ஐம்பதடி தூரத்தில் ஈசிஆர் பஸ் ஸ்டாப். டைகர் மெயின் ரோடு வரை வருவான். சாலையைக் கடக்க வேண்டும் என்றால் மனிதர்களைப் போல நின்று இருபுறமும் பார்த்துவிட்டு பஸ்ஸோ காரோ பைக்கோ வரவில்லை என்றால் தான் சாலையைக் கடப்பான்.

கதிர் கூட துருதுருவென்று சாலையைக் கடக்கப் போய் தான் விபத்தில் அடிபட்டுப் போனான். அவன் அடிபட்ட சாலையை இப்போது பார்க்க நேர்ந்தாலும் மனம் நடுங்கும். ஜிட்டு அத்தனை துருதுரு பையன் இல்லை. ஆனாலும், அவனும் கதிரைப் போலத்தான்.

ஜிட்டு, என்ன இது புதுப்பழக்கம். இவ்ளோ தூரம் நடந்து வர. இங்கல்லாம் வரக் கூடாது. வீட்டுக்குப் போ என்றேன். என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சொல்றதைக் கேளு. பஸ், கார்லாம் போகும். உனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. வீட்டுக்குப் போ. நான் பிரியாணி வாங்கிட்டு வர்றேன் என்றேன் அதட்டலாக. அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.

சும்மா மிரட்டுவதற்காக ஒரு சிறு குச்சியை எடுத்து வீட்டுக்குப் போ என்றேன். திரும்பிப் போவது போல பாவனைக் காட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் என் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

நேரம் ஆகுது தம்பி. படுத்தாத. சரி. இந்த இடத்திலேயே நில்லு. நான் போய் பிரியாணி வாங்கி வர்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன். ஐந்தடி போனதும் திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். என்னையே பார்த்தபடி. சின்ன அசைவு கூட இல்லை. நானும் அவன் அந்த இடத்திலிருந்து நகர்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

சாலையைக் கடந்து பிரியாணி விலாஸ் போய் பிரியாணி ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருந்தது. பிரியாணி வாங்கிய கையோடு பால் பாக்கெட் சர்க்கரை டீத்தூள் வாங்கிக் கொண்டு போகலாம் என அங்கிருந்து பத்து கடைகள் தள்ளி இருந்த மளிகைக் கடைக்குச் சென்றேன். பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து இன்னொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினேன்.

சட்டென்று மனம் நின்றது. ஜிட்டுவை அங்கே இருக்கச் சொன்னோமே கிளம்பியிருப்பானா இல்லை அங்கேயே இருப்பானா என்று ஒரு சிறு சந்தேகம். நிச்சயம் கிளம்பியிருப்பான் என்றது ஒரு மனம். ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்..... அந்தக் கேள்வியில் அங்கேயே ஒரு கணம் நின்று எதற்கிந்த தயக்கம் என்றபடி வந்த சாலைவழியே திரும்பி நடந்தேன்.

நான் எங்கே காத்திருக்கச் சொன்னேனோ அங்கே ஓரமாக அதே போஸில் நின்றிருந்தான் ஜிட்டு வாலையை ஆட்டிக் கொண்டு.

ஜிட்டுக் குட்டி... என்றதும் என்னை நோக்கி ஓடிவந்தான்.

ஓடிப் போய் அள்ளி அணைத்துக் கொண்டேன்.

அன்பிற்கு மொழியில்லை. அது உணர்வுகளால் ஆனது.

1 கருத்து: