ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

நான் ஏன் எழுதுகிறேன்?

 நான் ஏன் எழுதுகிறேன்?
n  கவிஞர் மனுஷி

நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியின் கோணத்தைச் சற்றே திருப்பிப் பார்க்கிறேன். ஒரு பெண் ஏன் எழுத வேண்டும்? தவறென்று தெரியாத அளவு, பெண் இரண்டாம் தர உயிரியாகப் பாவிக்கப்படும் சூழலில் ஒரு பெண் எழுதி என்னவாகிவிடப் போகிறது? அதுவும் மதமும் சாதியமும் ஒன்றுக்கொன்று போட்டிக்கொண்டு பெண்ணைக் கீழமுக்கும் இந்தியச் சூழலில் ஒரு பெண் ஏன்தான் எழுத வேண்டும்?
எழுதும் வேட்கை எப்போது துளிர்விட்டது என்பதைத் துல்லியமாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வியை ஓராயிரம் முறை கேட்டுக் கொள்கிறேன். புகழ் பெற வேண்டும் என்கிற ஆசையா? நானும் ஒரு கவிஞர் தான்; நானும் ஓர் எழுத்தாளர் தான் என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்கிற விருப்பமா? பதின்பருவத்தில் இந்த ஆசைகள் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான காரணங்களை என்னால் மிகச் சரியாகக் குறிப்பிடவியலும்.
என் வாழ்க்கையில் நடந்த சோகங்களை, நான் வடித்த கண்ணீரை, எனக்கு நானே சொல்லிக் கொள்ளவும், அந்த வலிகளிலிருந்து மீண்டெழவும் எழுத்தை வடிகால் ஆக்கிக் கொண்டேன். உண்மையில் வலி நிவாரணியாகத்தான் எழுத்தைக் கைபிடித்தேன். என் எழுத்து என்பது நான்தான்.
ஒருகட்டத்திற்குப் பிறகு, பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும், விமர்சனங்களும் எனக்குத் துச்சமாகத் தெரிந்தன.
தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியங்களைத் தினம் தினம் வாசிக்கிறேன். தஸ்லிமா நஸ்ரின், ஸில்வியா ப்ளாத், பாப்லோ நெருடா, தாஸ்தோவ்ஸ்கி, சிமோன் தெ பவர், பாவ்லோ கோலோ போன்றவர்கள் என் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். தமிழில் மகாகவி பாரதி, வங்கத்தில் தாகூர், மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீர், கமலாதாஸ், தகழி சிவசங்கரம்பிள்ளை போன்றவர்கள் எனக்குள் ஓராயிரம் விஷயங்களை என் கரம்பிடித்துச் சொல்லித் தருகிறார்கள். அவர்களுடைய மடியில் ஒரு செல்லக் குழந்தையாக அமர்ந்து கொண்டுதான், என் மழலை வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
எழுத வருகையில், என் வாழ்க்கையும், என் சோகங்களும், என் கண்ணீரும் மட்டுமே பிரதானமாகப்பட்டது. இப்போது, நான் ஒரு மூன்றாம் உலக நாட்டின் பிரஜை என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
நான் நேசிக்கும் இந்த நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டாலும், சக மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. இலங்கையில், காஸாவில் இன்னும் எங்கெங்கெல்லாம் இனப்படுகொலைகளின்போது பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதை அறிந்து என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பாலியல் வல்லுறவிற்கும், ஆசிட் வீச்சுக்கும் ஆளாகும் பெண்களைப் பற்றிய செய்திகள் என் அதிகாலைகளை அழுக்குப்படுத்திக் கொண்டிருக்கையில், என்னால் நிதானமாகத் தேநீரைப் பருக முடியவில்லை. மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதற்காக எழுதுகிறேன். முகம் இழந்த மனிதர்களுக்காக, வாழ்க்கையை நித்தம் நித்தம் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்காக, மௌனமாக விம்மிக் கொண்டிருக்கும் பெண்களுக்காக, குழந்தைமையை நுகர்வுக் கலாச்சாரத்தில் இழந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்காக, அவர்களுடன் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
வானத்தை விடவும் விசாலமானது எழுத்து என்பதைப் புரிந்துகொள்ளும் எழுத்தாளன், தொடர்ந்து வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருப்பான். சக மனிதர்களை நேசிப்பதால் மட்டுமே ஒருவன் / ஒருத்தி மனிதனாக இருக்க முடியும். ‘மனுஷி’ என்கிற புனைபெயரைச் சூட்டிக் கொண்டதும் கூட அதனால்தான். நத்தையைப் போலவே ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கையும் இருக்கிறது. என்றாலும் ‘மனிதநேயம்’ என்னும் சிறகுகள் கொண்டு, எல்லையற்ற வாழ்க்கையெங்கும் நான் பறந்து பார்க்க விரும்புகிறேன்.
எழுத்தின் வழியே கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், பூக்களையும், மண்ணின் மணத்தையும் ஸ்பரிசிக்க வேண்டும் என்பது என் பேராசை. ஒவ்வொரு மனிதனின் இதயத்தோடும் என் எழுத்து மனம் திறந்து பேச வேண்டும். சமூகமே! உனக்குள் ஏன் இத்தனை எல்லைகள்? ஏன் இத்தனை வேறுபாடுகள்? பெண்ணை, சக மனுஷியாகப் பார்க்கும் பக்குவத்தை ஏன் இழந்தாய்? ‘இதயம்’ என்னும் ஒரே மொழியின் மூலமாக நீ பேச முடியாதா? இந்தக் கேள்விகளையெல்லாம் என் எழுத்தும் இலக்கியமும் எழுப்ப வேண்டும். அதனால் எழுதுகிறேன்.
என் தாய்மொழியில் எழுதுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவால். மாபெரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ்க்கையை அதன் ஆழம் வரை தரிசித்த ஆளுமைகளும் நிறைந்த மொழி என் தாய்மொழி. அந்த மொழியில் என் எழுத்து கரைந்து போகும்போது, மானுடச் சமுத்திரத்தில் நான் கரைந்துபோவேன். அப்படிக் கரைந்து போகும்போது கிடைக்கும் பரவசம் எல்லையற்றது.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், மூன்றாம் உலக நாட்டின் கலகக்  குரலாக, என் சக மனிதர்களின் அடையாளமாக, மனித நேயத்தை வலியுறுத்தும் பெண்ணாக இருக்க ஆசைப்படுகிறேன்.
எழுத்து என் வாழ்க்கை. எழுத்து என் தவம். எழுத்து ஒன்றே நான் வாழ்ந்தேன் என்பதற்கான அடையாளம். எழுதாமல் இருந்தால் நான் இறந்துவிடுவேன். ஆயிரம் கரங்கள் கொண்டு இந்த மானுடத்தைத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே! அதனால் எழுதுகிறேன்.
இறுதியாக, முத்தங்களின் கடவுள் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.
கடவுள்கள் தியானத்தில் இருந்தபோது...
n  மனுஷி
நள்ளிரவில்
சிறுமிகள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டபோது
கடவுளால் கைவிடப்பட்ட,
கடவுளால் சபிக்கப்பட்ட தேவதைகளாக இருந்தனர்.
வீடுகளில்
யாருமற்ற நேரத்தில்
சாக்லேட்டுகள் தரப்பட்டு
பலவந்தமாக பாத்ரூமுக்குள்
அழைத்துச் செல்லப்படும் சிறுமிகளும்
அப்படியே.
அந்த நாள் தான்
தனது இறுதி தினமென்று
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
வலியில்
கதறவும் திராணியற்று
அவர்கள் துடித்துக் கொண்டிருந்தபோது
கடவுள்கள்
ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர்.
வன்புணர்வுக்குப் பின்பு 
கிரீடம் அணிந்த தேவதைகள்
சிறுமிகளை
சிரமமின்றி அழைத்துச் செல்லவென
பரந்து விரிந்த மரத்தில் தூக்கிடப்பட்டனர்.
தங்களின் வெள்ளுடை
சிறுமிகளின் குருதியினால் கரையாகிவிடக்கூடுமென
சற்றுத் தாமதமாகவே வந்தனர்
தேவதைகள்.
அருகில்
சிறுமிகளின் நாளை குறித்த கனவுகள்
சப்தமின்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை
தேவதைகளோ
நீங்களோ
கவனிக்கவோ
கண்டுகொள்ளவோ இல்லை.
அந்தக் கனவுகள் தூக்கிடப் படுவதற்கு முன்னால்
இப்படிச் சொல்லின
"நண்பர்களே 
இனி
சிறுமிகளின் பிஞ்சு யோனிக்குள்
விறைத்த குறிகளைத் திணிப்பதற்கு முன்
அச்சத்தில் உறைந்த அவர்களின் கண்களை
ஒருமுறை பாருங்கள்.
அவர்கள் சொல்ல விரும்பும்
சக்தியற்ற சொற்களைக் கேளுங்கள்".

-- (பிப்ரவரி 12, 2015 அன்று, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சாகித்திய அகாடெமி நடத்திய இளம் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய உரையின் தமிழ் வடிவம்)



1 கருத்து: