செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கா...கா...கா...



கா… கா… கா….
n  மனுஷி
          கூகுளில் காக்கைகளைப் பற்றித் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் பறவைகளைப் பற்றிப் படிப்பவள் இல்லை. பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சி மாணவியும் இல்லை. இரண்டு நாட்களாகக் காகங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். நண்பர்களிடமும் காகங்களைப் பற்றித்தான் பேசினாள். காகங்களைப் பற்றிய தகவல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சேகரித்துக் கொண்டே வந்தாள். காக்கைகள் மீதுள்ள விருப்பத்தினால் அல்ல. அவைகள் மீது தீராத கோபத்தினாலும், பயத்தினாலும்தான். உதவி செய்யப் போய் இப்படி உபத்திரவத்தை அள்ளி மடியில் வைத்துக் கொண்டோமே என்று தன்னையே நொந்து கொண்டாள். சில சமயங்களில் காக்கைகளால் ஹவுஸ் அரஸ்ட் செய்யப்பட்டு விட்டதைப் போல உணர்ந்தாள்.
********
          நித்யாவுக்குக் காக்கைகள் பற்றிப் பெரிதாய் எந்தவித நல்லெண்ணமோ கெட்ட அபிப்ராயமோ இருந்ததில்லை.
சொல்லப்போனால், அவள் முதன்முதலில் கேட்ட கதை காக்காவினுடையதாகத்தான் இருக்கும். ஆறு கட்டங்களில் படங்களின் மூலம் சொல்லப்பட்ட கதை. பாட்டியிடம் வடை திருடிக் கொண்டு போய் நரியிடம் ஏமாந்த காக்கையின் கதை. அந்த வயதில் வடையை நரியிடம் கோட்டை விட்ட காக்கைக்காக நிறையவே பாவப்பட்டிருக்கிறாள். காக்கையிடம் நைசாகப் பேசி வடையை அபகரித்துச் சென்ற நரியின் மீது அவளுக்குக் கோபம் கோபமாக வரும். காக்காவிடம் வடையை ஏமாற்றிப் பறித்துச் சென்றதால்தான் திராட்சைப் பழத்தை நரியால் எட்டிப் பறித்துத் தின்ன முடியாமல் போனது என்று தோழிகளிடம் பேசி இருக்கிறாள். (உண்மையில் ஏமாந்தது பாட்டி தானே).
அதன்பிறகு பானையில் இருந்த குறைந்த தண்ணீரைக் குட்டி குட்டிக் கூழாங்கல்லை எடுத்துப் போட்டு தண்ணீர் மேலே வர, குடித்துவிட்டு தாகம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் பறந்து சென்ற காகத்தின் கதை. காக்கையின் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்திருந்திருக்கிறாள்.
தன் வம்சத்தை அழிக்கும் செயலில் விடாப்பிடியாக ஈடுபட்டு வந்த பாம்பை, தன் நண்பன் நரியின் உதவியால் கொன்று பழி தீர்த்துக் கொண்ட காக்கைப் பெற்றோரின் கதையைக் கேட்டபோது அவளுக்குப் பெரிய சந்தேகம். தன்னை ஏமாற்றிய நரியுடன் காக்கை எப்படி சினேகமானது? அதுவும் குடும்ப நண்பனாக ஆனது என்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே தூங்கி இருக்கிறாள்.
          காக்கா பற்றிய கதைகள் ஒருபுறம் என்றால் சின்ன வயதில் அமாவாசை கிருத்திகை, தீபாவளி இந்த மாதிரி முக்கியமான நாட்களில் வடை பாயாசம் அப்பளத்துடன் நடுவீட்டில் அவள் அம்மா படைப்பாள். காமாட்சி அம்மன் விளக்கு, கூடவே குட்டி குட்டி குத்து விளக்குகள் இரண்டு அகல் விளக்கு இவற்றின் ஒளியில் சாமி அறை லட்சுமி கடாட்சமாக இருக்கும். வத்தி வாசனை வேறு பக்திப் பரவசத்தைக் கூட்டும். சாமிப் படங்களுக்குக் கீழே பெரிய வாழை இலையில் சோறு குழம்பு அப்பளம் வடை கூட்டு பொறியல் எல்லாம் இருக்கும். பெரிய இலையில் இருக்கும் அத்தனை ஐட்டங்களும் பக்கத்தில் உள்ள குட்டி இலையிலும் இருக்கும். படைத்து முடித்தவுடன் அந்தக் குட்டி இலையை மாட்டுத் தொட்டிக்கு மேலேறி ஓட்டு மேல் வைத்துவிட்டு வரச் சொல்வாள் அம்மா. நித்யாவும் ஓட்டு மேல் வைத்து விட்டு கா… கா… கா… என்று கூப்பிட்டு முடிப்பதற்குள், அதற்காகவே காத்திருந்தது போல காக்கைகள் பேரிரைச்சலுடன் பட்டாளமாகக் கிளம்பி வந்து முறையாகச் சாப்பிட்டுப் போகும். சிலசமயங்களில் வீம்புக்கென ஒரு காக்காவும் வராமல் போனால், அவைகள் வந்து சாப்பிடும்வரை வீட்டில் உள்ளவர்கள் பட்டினிதான். காக்கா சாப்பிடும்வரை அப்பளத்தை மட்டும் சாப்பிடறேனேம்மா என்றால்கூட அம்மா விடமாட்டாள். பசி தாங்காமல் அப்பளத்தையோ வடையையோ அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துக் கொண்டு போய் தெருவாசலில் நின்றபடி தின்றுவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வந்து அப்பாவியாய் நிற்பாள்.
சாதாரண நாளில்கூட காக்காவுக்குச் சாப்பாடு வைத்து அவை சாப்பிடுகின்றனவா என்று பார்த்துவிட்டுத்தான் பெரியப்பா சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்து மீதமிருக்கும் ஒரு கை சாப்பாட்டைக் காக்காவுக்கு வைக்கப் போய் திட்டு வாங்கிய நாட்கள் உண்டு. என்னடி பொம்பள நீ… ஒரு வீட்டுல வாழப் போற பொண்ணு. எச்சி சோற காக்காவுக்கு வைக்கப் போற. வெளங்குமா குடும்பம் என்று திட்டுவாள் பெரியம்மா.
இந்த மாதிரி இரண்டு மூன்றுமுறை திட்டு வாங்கிய பிறகு ஞானோதயம் வந்ததோ என்னவோ. சாப்பிடுவதற்கு முன்பு ஒரு பிடி சோற்றை எடுத்துத் தனியாக எடுத்து வைத்துவிட்டுச் சாப்பிடுவாள். சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் எஞ்சி இருப்பவற்றை நாய்க்கும், சாப்பிடுவதற்கு முன்பு எடுத்து வைத்த ஒரு பிடி சோற்றைக் காக்காவுக்கும் வைத்துவிட்டு வருவாள். காக்கா சாப்பிடும் வரை சாப்பிடாமல் காத்திருப்பதில் அவளுக்கு உடன்பாடு இருந்ததில்லை. உண்மையில் பசி பொறுக்க முடியாது அவளால்.
          இப்படி காக்கைகள் பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் சம்பவங்களும் அவளிடத்தில் நிறைய உண்டு.
இவை எல்லாவற்றையும்விட மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று உண்டு. பொதுவாக, சின்னக் குழந்தைகளின் முதல் நண்பனாக காக்கைகள் இருக்கின்றன. அதெப்படி? அங்க பாரு காக்கா….. காக்கா வா வா வா… என்று பால்கனியில் இருந்து காக்காவை வேடிக்கை காட்டி அழுகையை நிப்பாட்டுகிற, சோறூட்டுகிற அம்மாக்களைப் பார்த்திருக்கிறாள். அவளுமேகூட தோழிகளின் குழந்தைகளுக்குக் காக்காவைக் காட்டி அவர்களுடைய அழுகையை நிப்பாட்டி இருக்கிறாள். தன் தோழியின் மகன் காக்கைகளைக் கண்டால் மிகவும் குஷியாகிவிடுவான். அவன் முகத்தில் தவழும் மகிழ்ச்சியைப் பார்த்த நாள் முதல் காக்கைகள்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொண்டாள். குழந்தைகளின் மனதைக் கவரும் முதல் உயிரினம் காகமாகத்தான் இருக்க வேண்டும் என்பாள்.
*******
நித்யா வாடகை வீடு பார்த்துக் கொண்டு வந்தபிறகு கொஞ்ச நாளில் காக்கைகள் அவளுக்கு நண்பர்கள் ஆயின. காலையில் எதேச்சையாக ஒருநாள் தான் தின்று கொண்டிருந்த பிஸ்கட்டுகளில் இரண்டை நொறுக்கி மொட்டை மாடி சுவரில் வைத்தாள். அவள் வைத்துவிட்டு நகர்ந்த சில நொடியில் பறந்து வந்த ஒன்றிரண்டு காக்கைகள் ஒரு துகள் விடாமல் தின்று தீர்த்தன. மனதுக்குள் துள்ளிக் குதித்தாள். அதன்பிறகு தினமும் அவற்றுக்கு பிஸ்கட்டோ, பன்னோ, அல்லது சிப்ஸோ, மதியத்தில் வீட்டில் சாப்பிட நேர்ந்தால் பிரியாணி, சாப்பாடு, பரோட்டா, இட்லி என ஏதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். பிஸ்கட்டுகளோ பிற ஸ்நாக்ஸ் ஐட்டங்களோ இல்லாத நேரங்களில் ஆப்பிள் போன்ற பழ வகைகளைத் துண்டு துண்டாக நறுக்கி அவைகளுக்கு உண்ணக் கொடுத்திருக்கிறாள். அவள் வைத்துவிட்டுப் போன உணவை விரும்பி உண்ணும் காக்கைகள் அவளை நம்பவே இல்லை. ஒருவித அச்சத்துடனேயே அவளைப் பார்த்தன. ஒருநாள் பிஸ்கட் வைக்கும்போது தென்னைமரக் கீற்றில் அமர்ந்திருந்த இரண்டு காக்கைகளிடம்,
‘இங்க பாரு, நான் ஒன்னும் செய்ய மாட்டேன். நம்பிக்கை இருந்தால் நான் வைக்கும் பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிடு. இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பது எனக்குப் பிடிக்கல. இவ்ளோ நாள் உனக்கு காலையிலும், மதியத்திலும் சாப்பாடு கொடுக்கறேன். குடிக்க தண்ணி வைக்கறேன். இப்பவும் கொலைகாரனைப் பார்ப்பது போல பார்க்கறிங்க. கோவம் வருது.’
என்று சொல்லிவிட்டு வந்தாள். இரண்டு காகமும் அவளையும் விநோதமாகப் பார்த்தன. பின்பு வழக்கம்போலவே அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும் பிஸ்கட்டுகளைத் தின்றுவிட்டு பறந்தன. ஒன்றிரண்டு நாட்களில் இந்த நிலை மாறியது. அவள் சாப்பிட ஏதாவது வைக்க வரும்போது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மொட்டை மாடிச் சுவரில் பயமின்றி அமர்ந்திருந்தன. வைத்துவிட்டு நகர்ந்ததும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டு பறந்தன.
          நாட்கள் செல்லச் செல்ல சரியான நேரத்திற்குச் சாப்பிட்டாக வேண்டிய சர்க்கரை நோயாளி போல எட்டு மணிக்கெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டன. அலாரம் அடிக்கிறதோ இல்லையோ எட்டு மணியானால் ஜன்னல் பக்கத்தில் வந்தமர்ந்து கா… கா… கா..வென கத்தி எழுப்பிவிடும். அதன் கூச்சல் தாங்காமல் எழுந்து வெளியில் வந்ததும் சாப்பாடு போடு என்று அதிகாரம் செய்வது போல இருக்கும் அதன் கத்தலும் பார்வையும். பாத்ரூம் போய்விட்டு வந்து போடலாம் என்றால் அதற்குள் பாத்ரூம் சுவர் மீது அமர்ந்து கூச்சல் போடும். ‘ச்சே நிம்மதியாக பாத்ரூம்கூட போக முடியல, சனியன்’ என்று திட்டியபடியே காலை உணவைப் போடுவாள். காக்கைகள்மீது சலித்துக் கொண்டாலும் ஒருநாள்கூட அவற்றிற்கு உணவு போடாமல் தவிர்த்ததே இல்லை. எங்காவது ஊருக்குச் சென்றாலும்கூட அவற்றின் நினைவு வரும். தான் உணவிடவில்லை என்றாலும் கூட அவற்றிற்குப் பசி தீரும். உண்ண உணவு கிடைக்கும். ஆனாலும் காக்கைகள் பசியாக இருக்குமே என்று வருந்துவாள்.
அப்போதெல்லாம் அவள் நினைத்ததே இல்லை. காகத்தால் இப்படி மன உளைச்சலுக்கும் பிரச்சனைக்கும் உள்ளாவாள் என்று.
******
தெருவை ஒழுங்குபடுத்தி சிமெண்ட் சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கி இருந்தன. சாலை சீரமைப்புப் பணியாளர்களின் பேச்சரவங்கள், தெருவில் மண்ணைக் கொட்டி நிரவிக் கொண்டிருக்கும் வாகனத்தின் இரைச்சலும், சாலையைப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்த மரங்களை வெட்டும் சத்தமும் தெருவை ஆக்கிரமித்திருந்தன. அப்படி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது வேப்பமரத்தில் இருந்து தொப்பென்று விழுந்தது ஒரு கூடு. காக்கைக் கூடு. அந்தக் கூட்டினுள் பிஞ்சுக் குழந்தையைப் போல இருந்தது காக்கைக் குஞ்சொன்று. வெட்டுப்பட்ட மரக்கிளையில் இருந்து விழுந்த குட்டிக் காக்காவைப் பற்றிச் சிறிதும் அக்கறையோ வருத்தமோ இன்றி தொடர்ந்து தங்கள் வேலையில் மும்முரமாய் இருந்தனர். நித்யா ஓடிப்போய் அந்தக் கூட்டுடன் குட்டிக் காக்காவைத் தூக்கி வந்தாள். வீட்டுக்குள் வைத்துவிட்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இதனுடைய அம்மா வருமா? வந்து தேடுமா? இங்கே வீட்டில் இருக்கிறது என்பதை எப்படி அதனிடம் சொல்வது? பால்கனி சுவரில் வைக்கலாம் என்றால் அவ்வப்போது வந்து போகும் வெள்ளைப் பூனைக்கு நல்ல விருந்தாகிவிடுமே என்று பயந்தாள். வீட்டுக்குள் ஒரு காகத்தை வளர்க்க முடியுமா? கிளியோ புறாவோ என்றால் பிரச்சனை இல்லை. வீடுகளில் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறாள். அவற்றிற்கு என்ன பிடிக்கும், என்ன சாப்பிடும், எப்படி நடந்து கொள்ளும் என்பது குறித்து கொஞ்சம் தெரியும். காக்காவும் பறவைதான் என்றாலும் அதை வீட்டில் வைத்து வளர்ப்பது பற்றி அவ்வளவு ஞானம் இல்லை. வீட்டு ஓனரிடம் ஐடியா கேட்டாள். அவரது ஆலோசனைப்படி மொட்டை மாடியில் குண்டுமல்லிச் செடிப் பந்தலின்மேல் அந்தக் கூட்டை வைத்துவிட்டு வந்தாள். காலையில் இருந்து என்ன சாப்பிட்டிருக்குமோ என்று யோசித்தவள், குட்டி காக்காவுக்கு முதலில் தண்ணீர் கொடுத்தாள். கையளவு தண்ணீரை எடுத்து விரல் வழியே சொட்டு சொட்டாக அதன் வாயில் விட்டாள். கத்திரிக்கோலைப் போல வாயைப் பிளந்து பிளந்து தண்ணீரை வாயில் வாங்கிக் கொண்டது. அதன்பிறகு பிஸ்கட்டைப் பொடி செய்து அதன் வாயில் தூவ, அதையும் வாங்கிக் கொண்டது. அதன் பசி தீர்ந்து போனதோ என்னவோ பிறகு வாயைத் திறக்கவே இல்லை. குழந்தைகளுக்கு வயிறு நிறைந்துவிட்டால் பின் தூக்கம்தானே. தூங்கட்டும் என்று நினைத்துத் திரும்பியவளின் தலையை உரசுவது போல பறந்து சென்று சுவருக்கு அருகில் தலைவிரித்து நின்று கொண்டிருக்கும் தென்னை ஓலையில் போய் அமர்ந்தது ஒரு காக்கா. தலையை உரசிச் செல்லும்போது பலத்த குரலுடன் கத்திக் கொண்டு போனது. அந்தக் குரலில் ஒரு பயமுறுத்தல் தொனி இருந்ததை உணர்ந்தாள். அதைப் பெரிது படுத்தாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அதன் பின் அறையை விட்டு அவள் வெளியில் வரும்போதெல்லாம், குறிப்பாக அறையில் இருந்து பாத்ரூமிற்குச் செல்லும்போதும் பாத்ரூமில் இருந்து அறைக்குத் திரும்பும்போதும் அச்சுறுத்தும் வகையில் கத்தியபடி தலையை உரசிக் கொண்டு பறந்து போனது காக்கா. பறந்து சென்று அமர்வதற்கு ஏதுவாக அறையைச் சுற்றி தென்னை மரம், மாமரம், மின்சாரக் கம்பம் இது போதாதென்று துணி காயவைக்க நடப்பட்ட தடித்த கொம்பு இருந்தன. ஏதோ தவறுதலாகத்தான் காக்கா இப்படிச் செய்கிறது என்று நினைத்தாள். அவளை அச்சுறுத்தவே அப்படிச் செய்கின்றன என்பதை மறுநாளில் இருந்து உணர்ந்து கொண்டாள்.
***********
முதல் நாள் குட்டிக் காக்காவை வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. கூடு மட்டும் இருந்தது. அச்சச்சோ என மனம் பதறியது. கூடு இருப்பதால் பெரிய காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ. தூக்கிட்டுப் போயிருந்தால் சந்தோஷம். ஒருவேளை பூனை ஏதாவது… நினைக்கவே மனம் பதறியது. அப்படியே விட்டிருந்தால் அதன் அம்மா ஏதாவது செய்து தூக்கிட்டு போயிருக்கும். காப்பத்தறேன்னு கூட்டி வந்து பூனைக்கிட்ட கொடுத்திட்டமோ என்று நினைத்தாள். அந்த நினைப்பு அவள் மனதைக் கொன்றது.
“நல்லதுதானே நினைத்தேன். சாப்பாடு கூட கொடுத்தேனே. என்மேல் எந்தத் தப்பும் இல்லை. தன்னுடைய குட்டியைப் பத்திரமா பாத்துக்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு. அவ்ளோ அன்பு என்றால் கூட இருந்து பாத்துக்கனும். இல்ல எடுத்துட்டு போய் கூட வச்சிக்கனும். அதை விட்டுட்டு காப்பாத்த நினைச்ச என்னை ஏன் துரத்தனும். எதிரி போல பார்க்கனும்?’
அவள் கேள்விகளுக்குப் பதில் இல்லை. அவள் கேள்விகளின் நியாயம் காக்கைகளுக்குப் புரியப்போவதும் இல்லை.
அவள் தலையை உரசிச் செல்லும் காக்கைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஒன்று இரண்டானது. இரண்டு மூன்றானது. அடுத்து நான்கானது. எந்தப் பக்கத்தில் இருந்தும் ஏவுகணையால் தாக்கப் படலாம் என்கிற யுத்தக் களத்தின் பதற்ற நிலையை இந்தக் காக்கைகள் உருவாக்கின. அறையை விட்டு பாத்ரூமிற்குச் செல்ல அல்லது மாடிப் படியிறங்கி வீட்டிற்குள் செல்ல என எல்லாமும் கேள்விக்குறியாயின. அடுத்தடுத்த நாளில் அவள் வெளியில் வர வேண்டும் என்பதே இல்லை. மொட்டை மாடி அறையின் வாசற்கதவைத் திறக்கிறாள் என்ற அரவம் கேட்டாலே போதும். முதலில் தென்னங்கீற்றில் அல்லது மின்சாரக் கம்பத்தில் வந்தமரும் காக்கா, 
‘டேய் மச்சான், வாங்கடா வாங்கடா, அவ வெளியில் வராடா வாங்கடா, இன்னையோட இவ கதையை முடிச்சுடலாம்டா’ என்று சொல்வது போல காட்டுக்கத்தல் கத்தும். அந்தக் கத்தலைக் கேட்டு எட்டு அல்லது ஒன்பது காக்கைகள் வந்து கத்தி அந்த இடத்தைக் களேபரப்படுத்தும். அவள் உள்ளே போனதும் கூச்சல் கொஞ்சம் மட்டுப்படும். பல் விளக்க வேண்டும் என்றால் பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு எந்தத் திசையில் காக்கை அமர்ந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு, அதற்கு எதிர்த்திசையில் ஏதேனும் காக்கை அமர்ந்திருக்கிறதா என்றும் பார்த்துவிட்டுத்தான் வெளியில் முகத்தை முதலில் நீட்டுவாள். பிறகு காக்கா எந்தத் திசையில் இருக்கிறதோ அந்தத் திசை நோக்கிப் பார்த்தபடி கையில் சிறு குச்சியை காகத்தை நோக்கி நீட்டியபடி பின்புறமாக நடந்து பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்வாள். பாத்ரூமில் இருந்து வரும்போது நிச்சயம் ஒரு காக்கா, பாத்ரூம் அருகில் உள்ள தென்னை மரத்தில் அமர்ந்தபடி அவளை வன்மத்தோடு பார்த்தபடி அமர்ந்திருக்கும். அல்லது துணி காயவைக்கும் கழியின்மீது அமர்ந்து கொண்டிருக்கும். அதற்குப் பயப்படாத போல காட்டிக் கொண்டு, பழையபடியே குச்சியை நீட்டியபடி பின்புறமாகவே நடந்து அறைக்குள் நுழைந்து கொள்வாள். மாடியில் இருந்து இறங்க வேண்டும் என்றாலும் பின்புறமாகத்தான். அதாவது காக்கைகளைப் பார்த்தபடி. அப்படியும் கொஞ்சம் தலையைத் திருப்பிவிட்டால் போதும். சர்ரென்று பறந்து வந்து தலையை உரசியபடிக் கத்திக் கொண்டு போய் அமரும்.
கிட்டத்தட்ட ஏழு மாதமாக தினமும் காலையில் உணவும், எப்போதாவது மதியத்தில் உணவும் கொடுத்து பசியாற்றிய அவளை ஏன் எதிரியைப் போல நடத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினாள். காக்கைகள் அறிவுள்ளவை என்று கேள்விப்பட்டிருக்கிறாள். காக்கைகள் ஏன் நன்றி இல்லாமல் நடந்து கொள்கின்றன என்று மனதுக்குள் திட்டினாள்.
************
கண்களை மூடிப் படுத்திருந்தாள். ஜன்னல் கம்பிகள் வழியாக உள்நுழைந்த காக்கை ஒன்று அவள் தலையணை அருகில் ஒரு எலும்புத் துண்டைக் கொண்டு வந்து வைத்தது. சற்று நேரத்தில் அவள் படுக்கையைச் சுற்றிச் சிறியதும் பெறியதுமாக எலும்புத் துண்டுகள். இரத்தக் கவிச்சை வாசனை மூச்சுத் திணறச் செய்தது. அவளது மேசையின்மீது இரண்டு காக்கைகள் அமர்ந்து அவள் மூச்சுத் திணறித் தடுமாறுவதைக் கண்டு மகிழ்ச்சியில் இறக்கைகளை அடித்துக் கொண்டன. ஒரு இறகு பறந்து வந்து அவள் கழுத்தின்மீது படர்ந்தது. அதன் அழுத்தம் தாளாமல் அலறினாள். குரல் எழும்பவே இல்லை. கைகளை அசைக்க முயன்றாள். ஆணியில் அறையப்பட்டதைப் போல கிடந்தது அவள் உடல். அம்மா, அம்மா என்று  முணகியவள், வேகமாய் அலறி எழுந்தாள்.
அவளருகில் ஸ்மைலி பொம்மை நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. கண்களை மேசை பக்கம் திருப்பினாள். காக்கைகள் அங்கு இல்லை. படுக்கையைச் சுற்றி எலும்புத் துண்டுகளும் இல்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்த அழுகை கண்ணீராகப் பொங்கிப் பெருகியது. வீறிட்டு அழுதாள்.
*********
அவளால் நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை. முன்பு போல் மொட்டை மாடியில் வாக்கிங் செல்ல, மதிய வேளையில் துணி துவைத்து காயவைக்க, போன் பேச என எதுவும் செய்ய முடியவில்லை. காக்கா வருவதற்குள் துணி துவைத்துக் காயவைத்துவிடுவாள். மாலையில் காக்கைகள் அடங்கியபிறகு தான் துணியை எடுப்பாள். முடிந்தவரை மாடிக்குச் செல்வதைத் தவிர்த்தாள். தவிர்க்கும் சூழலுக்குக் காக்கைகள் கொண்டு வந்துவிட்டன.
இதையெல்லாம்விட கொடுமை. இப்போதெல்லாம் அவள் காலையில் பிஸ்கட்டோ, சோறோ, சிப்ஸோ வைத்தால் அவை தொடுவதே இல்லை. அது இன்னும் அவளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அத்தனை தூரம் அவைகளுக்கு எதிரியாக, துரோகியாக ஆகிவிட்டேனா என்று மனதுக்குள் புழுங்கினாள். பால்கனியில் வந்து நின்றதும், எதிரில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வந்தமர்ந்து காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருக்கும் காக்கைகளிடம் மனம் திறந்து பேசிவிடுவது என முடிவெடுத்தாள்.
“இங்க பாருங்க. நீங்க பண்றது கொஞ்சமும் நல்லாயில்ல. உங்களையெல்லாம் அறிவாளிகள்னு எவன் சொன்னது? முட்டாப்பய. யோசிங்கப்பா. ஆறு மாசமா வயிறாற சோறு போடற நானா உங்க குழந்தையை ஏதாவது செய்திருப்பேன். அப்படி நீங்க நினைச்சு என்னைப் பயமுறுத்தறது கொஞ்சமும் நியாயம் இல்ல. உண்மையில் எனக்குத் தெரியாது அந்தக் குட்டி எங்கன்னு. ப்ளீஸ். ஒரு ஃப்ரண்டு போல இல்ல என்றாலும் பரவாயில்லை. எதிரி போல நடத்தாதிங்க.”
பேசப் பேச அவளுக்கு அழுகை வந்தது. அவள் பேசுவதை உற்றுக் கேட்டன மின்கம்பிகளில் அமர்ந்தபடி.
இந்தக் காக்காவுக்குக் கூட இளக்காரமா போயிட்டமா என்று நினைக்க அழுகைப் பெருக்கெடுத்தது.
மனசு கேட்காமல் இரவில் குட்டிக் காக்காவை வைத்த இடத்தில் போய் பார்த்தாள். துடைப்பம் கிழிக்கப் போட்டிருந்த காய்ந்த தென்னை ஓலைக்குள் இருந்து சின்ன கீச் கீச் சப்தம் கேட்டது. லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அதன் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அறைக்குள் சென்று தம்ளரில் தண்ணீரும் சோற்றுப் பருக்கைகளை நன்றாக நசுக்கிக் கொஞ்சாமாய் கூழ் போல செய்து ஒரு தட்டில் எடுத்து வந்து மிளகு அளவு உருண்டை உருட்டி அதன் வாயில் வைத்தாள். தன் சின்ன வாயால் ஐந்தாறு உருண்டைகள் வாங்கிக் கொண்டது. விரலில் தண்ணீரை எடுத்துச் சொட்டுச் சொட்டாக வாயில் விட்டாள். வயிறு நிறைந்ததிருக்கும் போல. ஓலைக்குள் சென்று ஒளிந்துகொண்டது பழையபடி.
************
தென்னங்கீற்றில் அமர்ந்திருந்த அம்மா காக்கா சொன்னது தன் அண்ணனிடம்,
‘அவகிட்ட இருந்து நம்ம புள்ளையை எப்படியாவது காப்பாத்திடனும். அவ தான் எங்காவது வச்சிருப்பா. புள்ளைக்கு ஏதாவது ஆச்சு அவளைச் சும்மா விடக்கூடாது’.
***********
                                          நன்றி : தளம் காலாண்டிதழ் (ஜன - மார்ச், 2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக