திங்கள், 2 மார்ச், 2015

மனப்பிறழ்வின் மொழி - கடங்கநேரியானின் யாவும் சமீபித்திருக்கிறது கவிதை நூல் குறித்து சில வார்த்தைகள்.
--     மனுஷி


கடங்கநேரியானை முகநூல் வழியாகத்தான் நான் அறிவேன். ஏனோ தெரியாது அவர் மீது பயம் கலந்த மரியாதை. மரியாதை கலந்த பயம் எனக்கு. ஆனால் தற்செயலாக இணையத்தில் வாசிக்கக் கிடைத்த அவரது இரண்டு கவிதைகள் அவர் மீதான பயத்தை வெளியேற்றிவிட்டது.
முதல் கவிதை :-
“பேயையும் முனியையும்
கொன்ற நகரத்து வீதிகள்
          நடுநிசி நாய்களை வளர்த்துவிட்டன
கட்டுக்கடங்காத
எண்ணிக்கையில்”.
இரண்டாவது கவிதை :-
“வெயில் குடித்து வளரும்
பனையைப் போல
நிராகரிப்பைக் குடித்து
வளர்கிறேன்”
‘நிராகரிப்பின் நதியில்’ என்னும் தொகுப்பில் இடம்பெற்ற இவ்விரண்டு கவிதைகளும் கவிஞர் கடங்கநேரியான் மீதான என் முன் மதிப்பீட்டை மாற்றியமைத்தன. அதன்பிறகு அவ்வப்போது அவரது முகநூல் பதிவுகளை வாசிப்பதோடு சரி. இப்போது ஆகுதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள அவரது யாவும் சமீபித்திருக்கிறது எனும் கவிதைத் தொகுப்பு வாயிலாக அவரது கவிமனதை வாசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி எனக்கு.
இந்த ஒல்லியான கவிதை நூல் அடர்த்தியான, நெகிழ்ச்சியான, மனதுக்கு நெருக்கமான பல கவிதைகளை உள்ளடக்கி இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. கடங்கநேரியானின் கவிதை குறித்த எவ்வித முன் அனுமானங்களும் இன்றி இந்தக் கவிதை நூலுக்குள் பயணிக்க எத்தனிக்கும் வாசகனை இக்கவிதைகள் ஏமாற்றமடையச் செய்யாது என்பது என் நம்பிக்கை. அப்படித்தான் யாவும் சமீபித்திருக்கிறது நூலுக்குள் நான் பயணித்தேன்.
சூட்சுமம் எனும் முதல் கவிதையிலேயே கடங்கநேரியானின் கவிதை உலகம் எனக்கு மிக நெருக்கமானதாக பட்டது.
நமக்கான மனிதர்கள் நமது ஒரு புன்னகையின் மூலமோ அல்லது கண்ணீரின் மூலமோ நமது ஆன்மாவின் குரலை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்வர். அவர்கள் தோழிகளாக, நண்பர்களாக, உறவினர்களாக, காதலிகளாக, காதலர்களாக  என யாராகவும் இருக்கலாம்.  கடங்கநேரியான் இன்னும் மேலே போய் எதிரியாகவும் துரோகியாகவும், தன்னிடம் வீழ்ந்தவர்களாகவும் தன்னை வீழ்த்தியவர்களாகக் கூட இருக்கலாம் என்கிறார். ஆனால் இந்தப் பட்டியல்களில் அடங்காத, முன் அனுமானங்களோடு நம்மைப் பற்றிய புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் சுமந்தபடிப் புலம்பித் திரிபவர்கள் மிகவும் வேதனைக்குரியவர்கள். அவர்கள் குறித்து புகார் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை என்பதுதான் கவிஞர் கடங்கநேரியானின் முடிவு. அப்படித்தான் இருக்க முடியும் நம்மால்.

"இவர்கள் அனைவரும்
புருவம் உயர்த்தும்படியான புன்னகை
ஒன்று கைவசமிருக்கிறது.
ஏதேனும் ஒரு பாத்திரத்தோடு மட்டும்
என்னைத் தொடர்பவருக்கு
என் சாம்பல் பூத்துக்கிடக்கும்
சிற்றாற்றங்கரையில்
அப்புன்னகையின் ரகசியத்தை           
உரைப்பேன்"
என்ற வரிகள்தான் இக்கவிதைநூலைப் பற்றிக் கொண்டு அதற்குள் பயணிக்க காரணமானது.
இத்தொகுப்பில் இரண்டுவிதப் பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தன. ஒன்று காதல். இன்னொன்று மரணம். இவை இரண்டிலும்தான் கடங்கநேரியானின் கவிதைப்பயணம் மிக இயல்பாகவும் இலகுவாகவும் செல்கிறது. 
“இப்படி
எத்தனை மழை இரவுகளைத்தான்
மதுக்கோப்பைக்குள்
ஏந்திக் குடிப்பேன்.
வந்து சேர்
மழையாக முடியாவிட்டாலும்
மதுவாகவாவது."

இந்த ஒரு கவிதை போதும் காதலுக்கு. இந்த ஒரு கவிதை போதும் காதல் கவிதை தரும் போதையில் கிறங்கிக் கிடப்பதற்கு.
இந்தத் தொகுப்பில் மரணம் குறித்த உரையாடல்கள் கொஞ்சம் மிகுதி. மரண மாலை என்னும் தலைப்பிடப்பட்ட 10 கவிதைகளும் நாம் அன்றாடம் கடந்து போகிற, கடந்து போக நினைக்கின்ற இறுதி ஊர்வலத்தின் குறிப்புகள்தான்.
 “சற்றே பொறுத்துக் கொள்
அலங்காரம் முடியட்டும்
தொடங்கலாம்
இறுதி யாத்திரையை”

“வீட்டிலிருந்து துவங்கி
காடடையும்
மலர்ப்பாதை பயணத்திற்குத்தான்
இத்தனையும்”
நீர்க்குமிழி போன்ற இந்த மனித வாழ்க்கை மீதான தத்துவவிசாரனனையைப் போகிற போக்கில் நிகழ்த்திச் செல்கின்றன இவ்விரு கவிதைகளும்.
இன்னும் சில கவிதைகள் மரண வீட்டின் குறிப்புகளாக மனதிற்குள் அழுத்தமாக பதிகின்றன.
“திரும்பி வரும் வழியை
நினைவுபடுத்தி
எண்ணற்ற குறிப்புகளோடுதான்
அனுப்பி வைத்தது வீடு.
நினைவு தப்பியவன்
என் செய்வான்?”

“சாவுக் கொட்டுச் சத்தம்
நெருங்கி வருகிறது.
நேற்றைய திருட்டு முத்தத்தின்போது
துடித்ததைவிட
மிக வேகமாக துடிக்கிறது
இதயம்”

“இறுதி யாத்திரையில்
முன்னும் பின்னுமாக
நசநசத்துக் கொண்டே வந்த மழை
இந்நேரம்
ஏதாவது நீர்நிலையில் தலைமூழ்கி
துக்கத்தில் கரைந்திருக்கும்”

மரணம்தான் இந்த வாழ்வின்மீதான மர்ம முடிச்சுகளைக் கட்டவிழ்க்கின்றன. நம்முள் புதைந்திருக்கும் ஈகோவை நாம் கொன்று புதைக்கும் பலிபீடங்கள் மரணவீடுகளும் இறுதி ஊர்வலங்களும்தான்.

மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும். வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் என்ற வைரமுத்துவின் வரிகள் அவ்வளவு சாஸ்வதமான உண்மை. அதைக் கடங்கநேரியானின் மரணம் குறித்த கவிதைகளும் உணர்த்துகின்றன.
 “என் சவப்பெட்டியை
இத்தனை அழகாகச் செய்தவனின்
கரங்களில்
முத்தமிட ஆசைதான்
அவன் யாரென்று
எப்படிக் கேட்பேன்
செத்துப்போன நாவை
வைத்துக்கொண்டு.

இக்கவிதை மரணம் என்பதையும் தாண்டி அறம் பொய்த்துப் போன, அறம் மரித்துப்போன நவீன வாழ்வின்மீதான கதையாடலாக விரிவு கொள்கிறது.  இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கவிதைகள் தேடல், யாவும் சமீபித்திருக்கிறது ஆகியவை.
முப்பது வெள்ளிக் காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசுகள் நிறைந்த சமூகத்தில் இயேசுவைக் காணவேயில்லை என்பது கடங்கநேரியானின் மனக்குறை. ஆற்றாமையும்கூட. என்ன செய்வது? மக்களைக் காப்பதாகச் சொல்லும் கர்த்தர்களே யூதாசுகளாக மாறிப் போன, மாறிப் போகிற துரோக வரலாறுதான் தேடல் எனும் இக்கவிதை.

"போதுமான சிலுவைகளும்
ஆணிகளும்
கைவசமிருக்கின்றன.
இரண்டாயிரத்து பதினான்கு வருடங்களாக
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒரேயொரு கர்த்தரை."
படைப்பு என்பது பகற்கனவு போன்றது. படைப்பாளன் என்பவன் ஒரு மனப்பிறழ்வாளன் அதாவது நரம்புநோயாளி என்கிறார் உளவியலறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். கவிஞனை, மற்ற மனிதர்களைப் போல பார்க்காமல் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப் போன நரம்புநோயாளியாகப் பார்ப்பது உளப்பகுப்பாராய்ச்சியின் முக்கிய நிலைப்பாடு. சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புகளால் மன அழுத்தத்திற்கு ஆளான மனித மனம், அதிலிருந்து வெளியேற படைப்பைக் கருவியாகக் கொள்கிறது. அது ஒருவகையான பகற்கனவு போன்றது. அங்கேதான் படைப்பாளனின் ஆன்மா பரிசுத்த நிலையில் இயக்கம் கொள்கிறது. அமுக்கப்பட்ட உணர்வுகள், நிறைவேறாத ஆசைகள் கனவின் மூலம் நிறைவாக்கம் பெறுவது போல படைப்பின் வழியேயும் நிறைவு பெறுகிறது.
யாவும் சமீபித்திருக்கிறது எனும் நேர்மறையான சொல்லாடல் கொண்ட இக்கவிதை, எதிர்மறையான தொனியுடன் நிறைவு பெறுவது கவிதை விளையாட்டு. ஆனால் நவீன வாழ்க்கையில் நாம் தவறவிட்ட வெற்றிகள், நட்புகள், காதல்கள், போராட்டங்கள், மகிழ்ச்சி என எல்லாம் சமீபித்திருக்கிறது என்று நம்புவதற்கான சாத்தியங்கள் அரிதாகவே உள்ளன. மனப்பிறழ்வு மட்டுமே சமீபித்திருக்கிறது என்னும் கசப்பான உண்மையை யதார்த்தமாகவும் கொஞ்சம் அரசியலோடும் சொல்லும் கவிதை இது.
 
“சிகையலங்காரத்தில்
சிலுவையில் அறையப்பட்ட
தேவகுமாரனைப் போலிருக்கிறான்.
ஒரு சாயலில்
கங்கையை தன் சிகையில் முடிந்திருக்கும்
சிவனைப் போலிருக்கிறான்.
உடையலங்காரத்தில்
சமணத்துறவிகளை நினைவுபடுத்துகிறான்.
ப்ளாஸ்டிக் குவளையில்
தேநீர் அருந்தியபடி
எதிர்ப்புற கழிவுநீர் ஓடையில்
தேங்காய் சிரட்டையில்
நீரள்ளிப் பருகுகிறவனைக்
கவனிக்கிறேன்.
மனப்பிறழ்வு சமீபித்திருக்கிறது”

மனப்பிறழ்வு சமீபித்திருப்பது தேங்காய்ச் சிரட்டையில் நீரள்ளி பருகும் அவனுக்கா?  சாதிய வெறியும் மதவெறியும் இனவெறியும் புரையோடிப் போன இச்சமூகத்துக்கா? என்பது அவரவர்க்கே வெளிச்சம்.

காதல், மரணம், விரக்தி இவைகள் தாண்டியும் சமகால சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கவிதைகளும், அரசியல் கவிதைகளும் ஒன்றிரண்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நகரவாசியாக மாறிவிட்டவனின் கிராம வாழ்வியல் மீதான ஏக்கமும் கடங்கநேரியானின் பலம் என நினைக்கிறேன்.

மாவீரன் என்னும் கவிதை, ஈழப்போராட்டத்தில் துயர முடிவை விரக்தி தொனியுடன் பதிவு செய்கிறது.

"துவக்குகளின்வழி
எனைக் குறிபார்த்த கண்களுக்கு
ஒருபோதும்
என் கண்களை
நேர்கொண்டு பார்க்கும் தைரியம்
இருந்ததில்லை என்பதனை
வான் நோக்கி நிலை கொண்ட
என் விழிகள் பறைசாற்றலாம்.
ஆனாலும்
உங்களின் பார்வையில்
தோற்றுப்போனவன் தானே?"

நிறைவாக, நவீன கவிஞர்களின் கவிதைகளில் இயல்பாகவே மையம் கொள்கின்ற அந்நியமாதல் உணர்வும் விரக்தி மனோபாவமும் இவரது கவிதைகளிலும் மிகுந்திருக்கின்றன.
இத்தகைய அந்நியமாதல் உணர்விலிருந்து மீள்வதற்கான எத்தனிப்புகளைக் கவிதை வழி சாத்தியப்படுத்திக் கொள்கிறார் கடங்கநேரியான்.

"அடையாளம் காணப்படாமல்
அனாதைப் பிணமென்று
புதைக்கப்பட்டவனின்
சவக்குழிக்கு மேல் நின்று
அழும் மேகம்
அவன் வீட்டில் இருந்துதான்
தன் அழுகையைத்
துவக்கியிருக்க வேண்டும்"
என்னும் கவிதையை வாசித்து முடிக்கையில் மனம் கனத்துப் போனது. கடங்கநேரியானின் கவிதை மனமும், கவிதை உலகமும் இப்படியான கவிதைகளில்தான் உயிர்த்தெழுகிறது. எழுத்தாளர்கள் போன்ற பின் நவீன சோதனை முயற்சி கவிதைகளுக்காக வார்த்தைகளையும், நேரத்தையும் வீணாக்காமல் இப்படியான மனிதம் பேசும் கவிதைகளினூடாகக் கடங்கநேரியானின் எழுத்துப் பயணம் தொடர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

4 கருத்துகள்:

  1. வியப்பாக இருக்கிறது மிக நேர்த்தியான விமர்சன பார்வை உளவியல்பூர்வமான உருவான கவிதையை உளபூர்வமாய் உணர்ந்து அருமையான ஆய்வு

    பதிலளிநீக்கு
  2. வியப்பாக இருக்கிறது மிக நேர்த்தியான விமர்சன பார்வை உளவியல்பூர்வமான உருவான கவிதையை உளபூர்வமாய் உணர்ந்து அருமையான ஆய்வு - yenakku thanks sollamattiya.. athey vimarsanam dhan kodukka virumburen.. i think un lover ku thanks solla koodathunu sollamatturiya?? any way all the best dear..

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் கனக்க வைக்கின்றன இதயத்தை எங்கோ யாரோ பாடும் துயரகீதத்தை நம் செவிகளுக்கு அருகில் கொண்டுவந்த கடங்கநேரியனுக்கும் அதை அற்புதமாக ஆய்வு செய்த மனுசிக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு