ஞாயிறு, 10 ஜூலை, 2016

எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்

எழுத்தாளர் சா தேவதாஸ் சுதந்திர சிந்தனை அமைப்பின் சார்பில் ஒருங்கிணைத்த எழுத்தாளர் பிரபஞ்சனுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு பேரனுபவம்.

திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி இருந்தார்கள்.  காற்றோட்டமான அறை. எந்தவிதமான அலங்கார மேடையமைப்புகளும் இல்லாமல் கிட்டத்தட்ட வட்ட வடிவ ஒழுங்கமைப்பில் தோழர்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர். எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய சிறு அறிமுகத்திற்குப் பிறகு சா.தேவதாஸ் பேசும்போது "எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்" என்றொரு வாசகத்தை முன்னிறுத்திச் சில நிமிடங்கள் பேசினார். சக படைப்பாளியை இவ்வளவு குறைந்த வார்த்தையில் அழகாக அங்கீகரிக்க முடியுமா? தெரியவில்லை.

அவருக்குப் பிறகு, பிரபஞ்சன் பேச எழுந்தார். ஒரு பத்து நிமிடம் பேசுகிறேன். பிறகு நீங்கள் கலந்துரையாட, பேச்சினைத் தொடர்வோம் என்று சொன்னார். அப்போது மணி காலை பத்தரை. ஒரு நாட்டுப்புறக் கதையிலிருந்து பேச்சைத் தொடங்கினார். அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் சொல்லி முடித்தார். பிறகு, புரட்சிக் கவிதையாக எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தன்னைச் சரியான எழுத்தை நோக்கி புதுமைப்பித்தனின் கதைகள் தான் நகர்த்திச் சென்றன என்று சொன்னவர் புதுமைப்பித்தன் எழுதிய மெஷின் மனிதன் கதையை அழகாகத் தனக்கேயுரிய பாவனையுடனும் ஏற்ற இரக்கங்களுடனும் சொன்னார்.

இப்படியாகக் கொஞ்சம் கதைகள், பிறகு அவரது அப்பா - அம்மா - குடும்ப சூழல், சிறு வயதில் தான் வாசிப்புக்குள் நுழைந்த அனுபவம், இளமைக்காலக் குறும்புகள், தான் எழுதிய முதல் கதை, அந்தக் கதை முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு வேறொரு பத்திரிகையால் அங்கீகரிக்கப்பட்ட கதை, பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம், மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களின் பால் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு, மகாபாரதக் கதைகளைக் களைத்துப் போட்டு வேறொரு கோணத்தில் பாரதக் கதை மாந்தர்களை முன்வைத்த அவரது பார்வை, இன்றைய இலக்கியச் சூழல் - இப்படி ஏராளமான அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் தனது பேச்சினூடாகச் சொன்ன ஒரு விடயம் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டது. "சமூகத்தை நேசிக்கின்ற ஒருவனை, சமூகம் ஒருபோதும் கைவிடுவதில்லை. தோழர்களை நேசிக்கின்ற ஒருவனை, தோழர்கள் ஒருபோதும் கை விடுவதில்லை" என்பதுதான் அது. உண்மை.

கிட்டத்தட்ட மணி 12.45ஐத் தொட்டிருந்தது இத்தோடு முடிச்சுக்கலாமா என்று அவர் கேட்டபோது. கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கூட சோர்வடையவில்லை என்பதுதான் அந்த நிகழ்வின் வெற்றி. உடலும் மனமும் ஒரேயிடத்தில் இருக்கும்படியாகப் பேச்சினால் கட்டிப் போடுவது அவ்வளவு சுலபம் இல்லை.
பிரபஞ்சனின் பேச்சு கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. நெகிழ வைத்தது. மனம் ஒன்றி அங்கேயே இருக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்தது. அதுதான் பிரபஞ்சன் என்ற எழுத்தாளனின் வெற்றி. ஏனெனில் அந்தப் பேச்சில் உண்மை இருந்தது.
சமூகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் எனக்கு அன்பு இருக்கும் வரை நான் எழுதிக் கொண்டிருப்பேன் என்று சொல்ல அவரால் முடிகிறது எனில் மனிதர்கள் மீது இன்னமும் நம்பிக்கையும் அன்பும் வற்றிப் போகாத ஓர் ஆன்மாவாக அவர் எழுதிக் கொண்டேயிருப்பார்.

கவிஞர் இரா ஆனந்தி, ஸ்ரீமதி பிரசன்னா, தோழர் ரத்தினவேல், கண்மணி ராசா, பெரியார் குமார், நிகரன் பாஸ்கரன், பால்ராஜ் உள்ளிட்ட பல தோழர்களையும் நண்பர்களையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. சிறப்பான நிகழ்வை ஒருங்கமைத்த தோழர் சா தேவதாஸ் அவர்களுக்கு எனது அன்பு எப்போதும்.

1 கருத்து:

  1. அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Manushi Bharathi

    பதிலளிநீக்கு