வியாழன், 11 ஜனவரி, 2018

தீராநதி நேர்காணல்

துவக்ககால எழுத்துக்கள்?

கவிதை எழுதுவதில் இருந்துதான் எனது எழுத்துப் பயணம் துவங்கியது. என் நினைவு சரியாக இருந்தால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். அப்போது கவிதையைப் பற்றி எந்தப் புரிதலும் எனக்கு இல்லை. ஒரு வரிக்குக் கீழே இன்னொரு வரி. இரண்டாவது வரியைக் கொஞ்சம் உள்ளே தள்ளி எழுதனும் என்கிற அளவில் தான் கவிதை குறித்த புரிதல் இருந்தது. அப்படி எழுதிப் பழகிய கவிதைகளில் ஒன்று கூட என் நினைவில் இல்லை. ஏனெனில் எழுதிப் பார்த்து அதை அப்படியே ஒன்றிரண்டு வாரங்களில் கிழித்துப் போட்டு விடுவேன். இதுதான் கவிதை, இப்படித்தான் எழுத வேண்டும், இதுதான் கவிதை என்று சொல்லித்தர யாரும் இல்லை. நானாக வாசித்து, எழுதிப் பழகிக் கற்றுக் கொண்டதுதான்.

 வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த விருது அறிவிக்கும் வரை நான் கவிதைகள் எழுதுவேன் என்பதெல்லாம் தெரியாது. இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும்போது எப்போ பாரு ஊருக்குப் போறேன் ஊருக்குப் போறேன்னு காச கரியாக்குறா என்று புலம்புவார்கள். புத்தகம் வாங்கி காசை வீணாக்குறதுக்கு நகை வாங்கலாம்ல என்று சொல்வார்கள். அவர்களுடைய வார்த்தைகளை நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதில் பெரிய வருத்தம். பேப்பரிலும் டீவியிலும் எனது பெயரும் புகைப்படமும் வரும் வரை தான் அந்த வருத்தம். இப்போது அக்கா பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார் என் தங்கச்சி ஒரு எழுத்தாளர். விருதுலாம் வாங்கி இருக்காங்க என்று.  பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கிய மாணவியாகச் சேர்ந்தபோது நவீன இலக்கியம், இலக்கியக் கோட்பாடுகள், சிறுபத்திரிகைகள் எனக்கு அறிமுகமாயின. குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகள் அறிமுகமாயின. பெண் எழுத்து குறித்து நிகழ்ந்த வாத விவாதங்களை வாசித்தேன். அவற்றை வாசிக்க வாசிக்க நான் எழுதிய கவிதைகளைக் கிழித்து எறிந்தது சரி என்று தோன்றியது. அப்பொழுது கூட கவிதை எழுத வேண்டும், புத்தகம் போட வேண்டும் என்கிற முன் திட்டமிடல் எழுதுவுமின்றி வாசித்துக் கொண்டிருந்தேன். 

எனது வாசிப்பைச் செழுமைபடுத்தியதில் இரண்டு பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஒருவர் எனது நெறியாளர் பா.இரவிக்குமார். இன்னொருவர் நாடக ஒளியமைப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான செ. ரவீந்திரன். இருவருமே நவீன இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம்  செய்தனர். நூல்களைக் கொடுத்து வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தினர். ரவீந்திரன் சார் உலக இலக்கியம் குறித்து, உலக சினிமாக்கள் குறித்து பேசிய உரையாடல்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது நான்  கவிதைகள் எழுதினேன். எனது முதல் கவிதை கீற்று.காமில் வெளியானது. பிறகு வடக்குவாசல் பத்திரிகையில் சில கவிதைகள் வெளிவந்தன. முதல் தொகுப்பு வெளியாகும் வரை வேறெந்த சிறுபத்திரிகையிலும் எனது கவிதைகள் வெளிவந்திருக்கவில்லை. தொகுப்பு வெளிவந்த பிறகு உயிர்மை, உயிரெழுத்து, தளம், கனவு, திணை, நிகரன், தாமரை, செம்மலர் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவரத் தொடங்கின. 

இலக்கியத்திற்காக வாங்கிய முதல் பரிசு?

எனது முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் வெளிவந்த பிறகு 2014இல் ஈரோடு தமிழன்பன் விருது வழங்கப்பட்டது. எனது கவிதைகளுக்காக நான் பெற்ற முதல் விருது அதுதான். அதன் பிறகு 2015இல் முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருதும், 2017இல் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலுக்காக திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சக்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கவிதை எழுதத் துவங்கிய பொழுது கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில், புதுவை மாநில அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பிறகு போட்டிகளுக்காக எழுதுவதில் பெரிய விருப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. கவிதை எழுதுவது ஆத்மார்த்தமான உணர்வு.  பெரும் விடுதலை. மன நெருக்கடிகளின் வடிகால்.  திட்டமிட்டு வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருப்பது எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை அல்ல.. கவிதையோ கதையோ எழுது என்று என்னைத் தூண்ட வேண்டும். அப்படி இல்லாதபோது வாசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் கவிதை நூல் வெளிவந்தபிறகு கவிஞர் ரமேஷ் பிரேதன் படித்துவிட்டுப் பாராட்டியதும், விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கணையாழியில் எழுதிய மதிப்புரையும் என் கவிதைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அதேபோல, ஜெராக்ஸ் கடையில் எனது கவிதைகளை மித்ர பதிப்பகத்திற்குக் கொடுப்பதற்காக பிரிண்ட் அவுட் எடுத்தபோது ஜெராக்ஸ் கடை அண்ணா அதில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு கவிதை ரொம்ப நல்லா இருக்கு யார் எழுதியது இதை நான் வச்சுக்கலாமா என்று கேட்டார். ‘வாழ்வதில் ஒன்றுமில்லை / வாழ்க்கை / பிய்த்தெறியப்பட்ட ஒரு மலராகிவிட்டபிறகு / மரணத்திலும் ஒன்றுமில்லை / அது வெறும் சொல்லாகிவிட்ட பிறகு’ என்ற கவிதைதான் அது. எனது கவிதைக்குக் கிடைத்த முகமறியாத முதல் பாராட்டு. இப்போது வரை முகநூல் நண்பர்கள் பலரும் எனது கவிதை நூலை வாசித்துவிட்டு அவர்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது எழுதுவது குறித்த பெரும் நிறைவு இருக்கிறது. யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து குயில் பாடிக் கொண்டிருப்பதில்லை. ஆனால், குயில் கூவுவதை யாரோ ஒருவர் எங்கேயோ அமர்ந்து கேட்டு லயித்துக் கொண்டிருப்பர். அது சந்தேகமேயில்லை. 

 அப்பா அம்மா பெயர்? என்ன பணியாற்றுகிறார்கள்? சகோதரர்கள்? வசிப்பிடம்?

அப்பா பெயர் அம்பலவாணன். அம்மா பெயர் கல்யாணி. அக்காவும் அண்ணனும் இருக்கிறார்கள். நான் கடைசிப் பெண்.  விவசாயக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தவள் நான்.  என்னுடைய பத்து வயதில் அம்மா கேன்சர் நோயால் இறந்து விட்டார். என் நினைவு தெரிந்து அப்பாவோடு எந்தப் பிணைப்பும் பாசமும் இருந்ததில்லை. அம்மா தான் என் உலகம். அம்மா இல்லாத வெற்றிடத்தை கவிதை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கவிதையால் நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

கவிதைகள் மீது தனிப்பட்ட ஆர்வம் வரக் காரணம் என்ன?

எல்லாரையும் போல முதலில் எழுதிப் பார்த்தது கவிதை வடிவம் தான். எனது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிப் பார்க்க கவிதை தான் நல்ல துணையாக இருந்தது. கவிதை எனது மொழியாக, நான் நிகழ்த்த விரும்புகிற உரையாடலாக இருப்பதை நான் உணர்கிறேன்.

கதைகள் மீதான ஆர்வத்திற்கு, எழுத்துக்கு யாரையாவது ஆசான் என்று சொல்ல முடியுமா?

இவர் தான் எனது ஆசான் என்று யாரையும் சொல்வதற்கில்லை. அப்படி யாரையும் நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. வாசித்தவரையில் என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இருந்து புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நான் கொண்டிருந்த மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளனர். வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியமைத்துள்ளனர். அன்பைச் சொல்லித் தரும் எழுத்துகள், மனிதத்தைக் கொண்டாடும் படைப்புகளில் இருந்துதான் என்னைச் செதுக்கிக் கொள்கிறேன். சொல்லப் போனால் பாவமே செய்யாதவர்கள் இவள் மீது கல்லெறியுங்கள் என்று சொன்ன யேசுவிடமிருந்தும் நான் கற்றுக் கொள்கிறேன். 

தமிழில் பாரதியார் தொடங்கி இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் வரை எல்லோரும் எனக்கு ஆசான்கள்தான். என் பள்ளி பருவத்தில் கதைகள் சொன்ன என் பெரியப்பா கூட ஒருவகையில் எனது எழுத்துலக வழிகாட்டி தான். ஒவ்வொருவர் கதைகளை வாசிக்கும்போதும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். எப்படி எழுத வேண்டும், எப்படி எழுதக் கூடாது, எதை எழுத வேண்டும் என பலவற்றையும்.

விரும்பி வாசிக்க கூடிய புத்தகங்கள் என்னென்ன?

பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள்,  பெண் ஏன் அடிமையானாள், டோட்டோசான் - ஜன்னலில் ஒரு சிறுமி நாவல், பெண் எனும் இரண்டாம் இனம், குட்டி இளவரசன் நாவல், ஆண்டன் செகாவ் சிறுகதைகள், தஸ்லீமா நஸ்ரின் கவிதைகள், பாப்லோ நெரூடா கவிதைகள், கமலாதாஸ் கதைகள், சமகால உலகக் கவிதைகள், பாலஸ்தீனக் கவிதைகள்,  பிரபஞ்சன் சிறுகதைகள், வண்ணதாசன் கதைகள், கந்தர்வன் கதைகள், மனுஷ்ய புத்திரன் கவிதைகள், மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள், லண்டாய் - வரை பட்டியல் நிறைய இருக்கின்றது. என்னுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பிரதிபலிக்கனும், எனது உணர்வுகளுக்கு நெருக்கமாக இருக்கனும், அல்லது எனக்குப் புதிய உலகத்தை, நான் அறிந்திராத மனிதர்களை, எனக்குப் பரிச்சயமில்லாத வாழ்வியலைச் சொல்லித் தருகிற புத்தகங்கள் தான் எனக்கு நல்ல நண்பர்கள். ஆசான்கள்.

சமீபத்திய சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது அறிவிப்பு வந்த போது எப்படி இருந்தது? இந்த விருது உங்களுக்கு கிடைக்குமென எதிர்பாத்திங்களா?

நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. திருவனந்தபுரத்தில் நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன். இந்த வருடம் யுவபுரஷ்கார் விருது எனது கவிதை  நூலுக்கு என்ற செய்தி அலைபேசி வழியாக வந்து சேர்ந்தது. என் அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? இந்த மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொள்ள அம்மாவின் அன்பையொத்த நண்பர்கள் இருக்கிறார்கள். அது பெரும் மகிழ்ச்சி.

எழுத்துலகில் எனக்கொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண் கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. இந்த விருதின் மூலம் எழுத்தில் எனக்கிருக்கும் பொறுப்பு கூடுதலாகியிருக்கிறது. அந்தப் பொறுப்பை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஏற்றுக் கொள்கிறேன். 

விருது விழா எப்போது?

இந்த நேர்காணலுக்கான பதிலை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் விருது விழா குறித்து சாகித்ய அகாடமி அனுப்பியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். சண்டிகரில் வருகின்ற டிசம்பர் 22 அன்று விருது விழா நடைபெற உள்ளது. இந்தத் தகவலை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய எழுத்தாளர்களின் தொடரும் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது. ஒரு போராத காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்கிற கேள்வி தினம் தினம் எழுகிறது. கருத்து சுதந்திரம் கேள்விக்குரியாகி இருக்கிறது. படைப்பாளிகள் மீதான அடக்குமுறை இன்று நேற்று நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. பாரதியார், பெரியார், அம்பேத்கர் என வரலாறு முழுக்க படைப்பாளிகள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தை அழிக்க நினைக்கையில் எல்லாம் நூலகத்தை எரித்தது தானே வரலாறு. எப்போதுமே பேனாவைக் கண்டு அதிகார வர்க்கம் அளவற்ற அச்சம் கொண்டிருக்கிறது. அந்தப் பேரச்சத்தின் காரணமாக  எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் எழுத்துகளில் மேலெழும் கலகக்குரலை அழித்துவிட முடியாது.  வெட்ட வெட்ட மரம் துளிர்த்துக் கொண்டே இருப்பது போல அடக்குமுறை மேலோங்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படைப்பின் குரல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பெண் படைப்பாளி என்ற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எதுவென்று நினைக்கிறீங்க? இதே நேரம் பெண்படைப்பாளிக்கு இந்த சமூகம் உண்மையான அங்கீகரிப்பைக் கொடுக்கிறதா?.

இப்படியொரு கேள்வியை ஆண் படைப்பாளிகளிடம் நாம் கேட்போமா? ஆண் படைப்பாளி என்கிற முறையில் உங்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை எது? கேட்க வாய்ப்பில்லை. ஒருவகையில் இப்படியான கேள்வி பெண்ணின் எழுத்தாளுமையை, பொதுவெளி செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கிறேன். பெண் என்பதால் சிறப்பு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன, அவர்களுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதெல்லாம் வெற்றுக் கற்பிதம். ஒரு எழுத்தாளர் அங்கீகரிக்கப்படுகிறார் என்றால் படைப்பு தான் முதற்காரணம். யார் எழுதியது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்தப் படைப்பில் கொண்டாடத் தகுந்த ஓர் உணர்வு இருக்கப் போய்த்தான் அது அங்கீகரிக்கப்படுகிறது.

பெண் என்கிற சிறப்பு சலுகையையும் பெற்றுக் கொண்டு சம உரிமை, சமத்துவம், விடுதலை என்றெல்லாம் பேச முடியாது. எழுத்துலகில் பெண் என்பதற்காக எந்தச் சிறப்புச் சலுகையும் அங்கீகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. எழுத்தில் உண்மையும் எழுத்துக்கான அறமும் இருக்கும்போது அது வாசகர்களைப் போய்ச் சேருகிறது. சிலாகிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது. ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற வேறுபாடு இதில் இருப்பதாகத் தெரியவில்லை.

விலங்குகள் மீது அளப்பரிய அன்பு வைத்துக்கொள்வது போல் தெரியுது. அதுக்கு தனிப்பட்ட ஏதாவது காரணம் இருக்கா?

அன்பு தேவையாய் இருக்கிறது எனக்கு. பேரன்பு இந்த வாழ்வை நகர்த்திச் செல்கிறது என முழுமையாக நம்புகிறேன். செல்லப் பிராணிகளின் பேரன்பு தனித்துவமானது. அவர்கள் கொட்டித் தருகிற பேரன்பில் வாழ்க்கை அழகாகிறது. விடுதியில் தங்கிப் படித்தபோதே நாய்க்குட்டிகளை வளர்த்திருக்கிறேன். பறவைகளில் கிளிகள் ரொம்ப பிடிக்கும். காக்கைகளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எப்போதும் உண்டு. ஆரோவில்லில் நான் தங்கியிருக்கிற வீட்டில் நான்கைந்து காக்கைகள் உரிமையாக வந்து அழைத்து உணவு கேட்கிற அளவுக்குப் பந்தம். இப்போது வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கிறேன். தற்செயல் என்று நினைக்க முடியாதபடி தினமும் நான் வகுப்பெடுக்கும் அறையின் ஜன்னலில் வந்தமர்ந்து இரண்டு நிமிடம் விடாமல் கத்திவிட்டுப்  போகும். நம் மரபில் சொல்லப்படுவது போல என் அம்மாவாகக் கூட இருக்கலாம். அதன்மீது சினேகம் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.  முயல் குட்டிகளைக் கூட வளர்த்திருக்கிறேன். 

என்னுடைய நாய்க்குட்டி கதிர். அவன் என் வாழ்க்கையில் வந்த பிறகு அவ்வளவு மாற்றங்கள் எனக்குள்.  நான் தனியாக இல்லை என்பதை உணரச் செய்த சின்னஞ்சிறு அன்பு. வெளியூருக்குப் போய்த் திரும்புகையில் எனக்காக வீட்டில் ஒரு ஜீவன் காத்திருக்கிறது எனும் உணர்வு அற்புதமானது. அவனுக்கு எனது மொழி புரியும். அவனது மொழி எனக்குப் புரியும். நாய்க்குட்டி வடிவில் இருக்கும் குழந்தை அவன். 

மனுசி - பெயருக்குப் பின்புலம்? இயற்பெயரா?

இயற்பெயர் ஜெயபாரதி. எழுதுவதற்காக மனுசி என்ற பெயரை வைத்துக் கொண்டேன். மனுசி என்ற பெயரைப் பலரும் கிண்டலடித்திருக்கிறார்கள். நீ மனுசி என்றால் அப்போ நாங்க என்ன மிருகமா? நாங்க என்ன பேயா என்றெல்லாம். என்ன வருத்தம் என்றால் சில பெண்களே இப்படி கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் கிண்டல் செய்வார்கள். சுயமரியாதை உணர்வுள்ள எந்தப் பெண்ணும் மனுசியே. மனுசன் – மனுசி. அவ்வளவு தான். மனுசி, சுயமான பெண். 

எத்தனைக் கவிதைத் தொகுப்பு எழுதியிருக்கீங்க? எந்த கவிதைத் தொகுப்புக்கு  விருது?

இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. முதல் தொகுப்பு குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள். இரண்டாவது முத்தங்களின் கடவுள். மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் சண்டிகரில் விருது விழா நடைபெறவுள்ளது.

நாவல் சிறுகதை எழுதுற நோக்கமிருக்கா?

நிச்சயமாக. கவிதை தான் my cup of tea. என்றாலும் விரைவில் சிறுகதைத் தொகுப்பு வெளிவரவுள்ளது. நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது.   

என்ன வேலைப் பாத்துட்டுருக்கீங்க?

சென்னையில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்.

ஒரு கவிதை சொல்லுங்க? 

ஒரு கவிதை என்றால் நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த கவிதையா? அல்லது நான் எழுதியதில் கவிதையா? புதிதாக எழுதிய கவிதையா? எதைச் சொல்ல? பிடித்த கவிதை என்றால் வாழ்க்கையை / வாழ்க்கையில் இருந்து கற்றேன் / காதலை / ஒரு முத்தத்தில் இருந்து என்ற பாப்லோ நெருடாவின் கவிதை மிகவும் பிடிக்கும். 

இலக்கியத்துல என்ன செய்ய திட்டம்?  

பெரிய திட்டம் என்பதெல்லாம் இல்லை. பெரிய பெரிய திட்டங்களோடு வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடிகார முட்களும் நாட்காட்டியின் தாள்களும் என்னை இயக்குவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதேபோல விடிந்து இரவு வந்து சேர்வதற்குள் ஒரு கவிதை அல்லது ஒரு கதை எழுதி முடித்தாக வேனும் என்ற முன் தீர்மானம் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. மனம் எழுத உந்தித் தள்ளும் போது எழுதுவதும் மற்ற நேரங்களில் வாசிப்பதுமாக நகர்கின்றன எனது வாழ்க்கை. இந்த நிமிடம், இந்த நாள் சிக்கல் இல்லாமல் போகிறது. அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

காலம் அனுமதிக்கும் வரை எழுத வேண்டும். நிறைய பயணம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகள் உலகத்திற்குள் சென்று இணைந்து கொள்ள வேண்டும்.

நன்றி :
#தீராநதி நேர்காணல் டிசம்பர் 2017

1 கருத்து:

  1. வணக்கம், நான் தமிழ்த்தேசன் இமயக்காப்பியன். நான் பல முறை உங்கள் நேரசையை வாசித்திருக்கிறேன். உங்கள் ஊர்க்கார எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் அடிக்கடி உங்கள் உரைநடை குறித்து பேசுவேன். எனது இஷ்டமான மனுஷி நீ. மதுரை வந்தால் நம்ம வீட்டுக்கு வாமா. நன்றி

    பதிலளிநீக்கு