புதன், 6 ஜனவரி, 2016

பெருமழைக் காலத்தின் நாப்கின்கள்

பெருமழைக்காலத்தின் நாப்கின்கள்
-- மனுஷி
பள்ளிக்கூட வயதில் மழைக்காலம் வந்துவிட்டாலே புது உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கெடில நதிக் கரையோரத்தில் எங்கள் பள்ளிக்கூடம் இருப்பதால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடும். வெள்ளம் கொஞ்சம் மட்டுப்படும் மட்டும் பள்ளிக்கூடம் விடுமுறை விடுவார்கள். மழை கொஞ்சம் விட்டதும் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று வேடிக்கைப் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது எப்போதாவது ஒன்றிரண்டு குடிசையின் மேல்கூரை மிதந்து வரும். அதன்மீது கல்விட்டு எறிந்து விளையாடுவோம். அழுக்கு நிறத்தில் பேரிரைச்சலுடன் தன் போக்கில் செல்லும் ஆற்றை அவ்வளவு அச்சத்தோடு பார்த்திருக்கிறேன்.
புதுவையின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று ஊசுட்டேரி. படகுப் போக்குவரத்து, ரெஸ்டாரண்ட் வசதிகள் என ஊசுட்டேரி இப்போது சுற்றுலாத்தளமாக மாறிக் கொண்டிருக்கிறது. என் மனதுக்கு மிக நெருக்கமான இடம் அதுதான். (சுற்றுலாத்தளம் என்பதால் அல்ல). அந்த ஏரிக்கரையில் அமர்ந்துவிட்டு வந்தால் மனதுக்குப் பிடித்த தோழியுடன் மனம் விட்டுப் பேசியது போல அவ்வளவு நிறைவாக இருக்கும். சென்ற மாதம் (மழைக்கு முன்பு) அந்த ஏரிக்குச் சென்று பார்த்தபோது, தண்ணீர் இல்லாமல், அங்கங்கே நாணல் புதர்கள் மண்டிப்போய் கட்டாந்தரையாக இருந்தது. சிதைந்துபோன ஒரு எலும்புக்கூட்டைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு வந்தேன். அங்கே வசித்த மீன்கள் என்னவாயின? அங்கே வந்து செல்லும் பறவைகள் வற்றிப்போன ஏரியை வந்து பார்த்துவிட்டு ஏமாந்து திரும்பியிருக்குமே? இந்த ஏரி மீண்டும் எப்போது நிரம்பி வழியும்? சிறு கடலின் சாயலில் இதன் உடல் எப்போது பொலிவு பெறும்? வழக்கம்போலவே அதன் கரையில் அமர்ந்து சின்னஞ்சிறு அலைகளுடன் எப்போது உரையாடுவேன்? கேள்விகளுடன் திரும்பினேன்.
ஜன்னலோரம் இருந்தபடி மழையை வேடிக்கைப் பார்ப்பது, தொட்டிச் செடிகளை மழைநீரில் படும்படி நகர்த்தி வைப்பது, மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியில் போய் தேநீர் அருந்துவது, முகநூலில் மழை குறித்துப் பதிவிடுவது, முகநூலில் பதிவிடப்பட்ட மழைப்பதிவுக்களுக்கு லைக் இடுவது, மழை மீம்ஸ்களைப் படித்து இரசிப்பது - இப்படித்தான் இந்த வருடத்தின் மழைக்காலம் எனக்குத் தொடங்கியது. அவ்வப்போது பக்கத்து வீட்டில் மழை குறித்த செய்திகளைப் பார்ப்பேன். சென்னையில் விடாமல் பெய்து கொண்டிருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவிதப் பதற்றத்தைத் தொற்றச் செய்தது. பள்ளி கல்லூரி விடுமுறை என்னும் செய்தியைத் தாண்டி ஏதோவொரு விபரீதம் கண்முன்னால் நடக்கவிருப்பதைச் சொன்னது.
முதல்முறையாக தனியாக ஒரு வீட்டில் இருந்து இந்தப் பேய்மழையை எதிர்கொள்ள பயந்தேன். கனவிலும்கூட ஒரு நகரம் முழுக்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் கப்பல்களில் பயணம் செய்கிறார்கள். கனவில், காப்பாற்றச் சொல்லும் அவலக்குரல்கள் தூக்கத்தைச் சிதைத்தன. இனிமேலும் அறைக்குள் இருந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொட்டும் மழையில் ஊசுட்டேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன். புதுவையில் இந்திராகாந்தி சிக்னல் வரை மழையில் நனைந்தபடி போனது கொஞ்சம் ரொமாண்டிக்காகத்தான் இருந்தது. ஆனால், இந்திராகாந்தி சிக்னல் ஒரு சிறு குளம் போல இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்தச் சிறு குளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது கிழக்கு நோக்கி. அந்தச் சிறு வெள்ளத்தில் பச்சை நிற பாட்டிலின் அடிப்பாகம் மிதந்து போய்க் கொண்டிருந்தது. நடந்து வருபவர்களின் கால்களில் அது கிழித்து விடாமல் இருக்க வேண்டுமே என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சிறு படகைப் போல மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தது. பின்னாலேயே இன்னொரு பாட்டில் ஓடும்.
அந்தக் கொட்டும் மழையில் டிராபிக் போலீஸ் தன் பணியை வெகு சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார். எப்போதுமே கடுகடுவென பேசி, விரட்டிக் கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்காரர்களை பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, இவரது செய்கை வித்தியாசமாகத் தெரிந்தது. அவ்வளவு கருணையுடன் வாகங்களையும், பைக்கையும் நிறுத்தி வழி மாற்றி விட்டார். சாலையைக் கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்த இரண்டு வயதான பெண்களைக் கைப்பிடித்து அழைத்து வந்து டெம்ப்போவை நிறுத்தி ஏற்றி விட்டார். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய வயதான பெரியவரையும் அவரது மகனையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பினார். அந்தப் பக்கம் இன்னும் தண்ணி அதிகமா இருக்கு. ஆக்சிலேட்டரை விட்ராதிங்க. அப்புறம் வண்டி நின்னுடும் என்றார். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் புன்னகையுடனேயே இதைச் செய்தார்.
சிக்னல் கடந்ததும் அவர் சொன்னது புரிந்தது. முட்டிக்கால் தாண்டி தண்ணீர். அவர் சொன்னது போலவே என் பக்கத்தில் இருந்தவரின் டிவிஎஸ் நின்று விட்டது. என்னுடைய ஸ்கூட்டியும். இன்னொருவரின் ஸ்கூட்டியும். கிக் ஸ்டார்ட் செய்வதற்கான அவகாசம் இல்லை. பேருந்து கடக்கும்போதெல்லாம் தண்ணீர் இடுப்பைத்தாண்டி அலையாக இழுத்தது. பத்திரமாக தள்ளிக் கொண்டு போய் கொஞ்ச தூரத்தில் சாலையில் நிறுத்தி கிக் ஸ்டார்ட் செய்தால் கிளம்புவேனா என அடம்பிடித்தது. அப்போதுதான் நான் நின்றிருந்த இடத்தைச் சுற்றி அத்தனை பைக்குகள். ஸ்டார்ட் ஆகாமல். எல்லாமே சைலன்சரில் தண்ணீர் புகுந்து கொண்டு கிளம்ப மறுத்தன. ஸ்கூட்டியில் வந்த ஒரு இளைஞன் அவனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அங்கு ஸ்டார்ட்டிங் ட்ரபில் செய்த ஒவ்வொரு வண்டியாக முடிந்தவரை முயற்சி செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தான். மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் ஒரு மெக்கானிக்காக இருக்க வேண்டும். ஆனால், ஒருவரிடம் கூட பைசா வாங்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. இது பெருங்கருணையின் காலமா?
நிறைமாத கர்ப்பினியின் பொலிவான முகத்தைப் போல ஊசுட்டேரி மழையினால் பொலிவு பெற்றிருந்தது. உயிர் பெற்று எழுந்து வந்த ஏதொவொரு புராணக் கதாப்பத்திரம் போல கண்முன்னால் நின்று கொண்டிருந்தது ஊசுட்டேரி. மழை விடாமல் பெய்து கொண்டேதான் இருந்தது.
பயணி நண்பர்கள் இசைப்ரகாஷ், தர்மராஜ், ராஜகோபால், ரத்னவேல் ஆகியோர் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெண்புள்ளி எனும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு முழுக்க சைக்கிள் பயணம் கிளம்பினார்கள். எல்லா ஊர்களையும் சைக்கிளில் சுற்றிவிட்டு, அந்தந்த ஊரில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டு, அதன் தொடர்ச்சியாக புதுவையை வந்தடைந்தனர். சென்னையில் இருந்து கிளம்பிய அவர்கள் நால்வரும் எல்லா ஊர்களையும் சுற்றி முடித்தபின், புதுவையிலிருந்து சென்னையை அடைவது தான் அவர்களின் பயணத் திட்டம். அதன்படி நாகப்பட்டினத்தில் புதுவை வந்தடைந்தனர். சென்னையில் மழையினால் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் செய்தியை முகநூல் வழியாகக் கேள்விப்படுகிறேன். சென்னைக்குப் போய் ஏதாவது இதுக்குச் செய்யனும் என்று நண்பர்கள் பேசி கொண்டிருக்கையில் உள்ளுக்குள் தோன்றியது ‘சுனாமியின்போதும், தானே புயலின் போது கடலூர் மாவட்ட கிராமங்கள் பெரிதாகப் பாதிப்புக்கு உள்ளானது. இந்தப் பெருமழையில் அந்தக் கிராமங்கள் என்னவாயின. ஏன் மீடியாக்கள் எதுவும் கடலூரைப் பற்றிப் பேசவேயில்லை’ என்று. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் திண்டுக்கல்லில் இருக்கும் என் தோழி சாரா சித்தாரா போன் செய்து, இந்த மழையினால் சென்னையில் மட்டுமல்ல, கடலூரிலும் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள். நிறைய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நீங்கள் செய்ய முடியுமா? உங்கள் தொடர்பு எண்ணை முகநூலில் ஷேர் செய்யட்டுமா என்று. ஏற்கனவே தோழி ஜீவலட்சுமி போன்ற பலர் சென்னையில் என்னுடைய அறையில் இவ்வளவு பேர் தங்கிக் கொள்ளலாம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் என்று அலைபேசி எண்ணை முகநூலில் பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். சமூக வலைதளங்களில் செல்பேசி எண்ணைப் பகிர்வதனால் வரும் பின்விளைவுகள் பற்றியெல்லாம் அவர்கள் யோசித்தார்களா தெரியாது. யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அப்போது தோன்றியது. அவ்வளவு பெரிதாய் ஒன்றும் ஆகிவிடாது என்ற எண்ணத்தில் சாராவிடம் ஓக்கே சொன்னேன்.
ஒருபக்கம், உதவி செய்வதற்காக முன்வரும் நல்ல உள்ளங்களின் போன் கால்கள். இன்னொரு பக்கம் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள். உணவு வரவேயில்லை, வேறெந்த பொருட்களும் வரவேயில்லை. கொஞ்சம் அனுப்பி உதவி செய்யுங்க என்று கேட்கும் முகம் தெரியாத அவலக்குரல்கள். கொட்டித்தீர்த்த மழையில் பன்னிரெண்டு நாட்கள் இப்படித்தான் ஓடிப் போயின. இந்த நேரத்தில் தான் போன் வரும் என்று சொல்ல முடியாது. கடலூர் மக்களுக்கு இவ்வளவு உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள் அனுப்பத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி வரும் போன் கால்களைக் கடவுளின் குரல்களாக மட்டுமே பார்த்தேன். உணவுப் பொட்டலங்களையும் பிரெட் பாக்கெட்டுகளையும் பிஸ்கட் பாக்ஸ்களையும் எடுத்துச் செல்லும்போது கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வண்டி வரும் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்து ஏக்கத்துடன் நிற்கும்போது ‘என்னடா இது வாழ்க்கை’ என்று ஒரு கணம் தோன்றும். கை நீட்டி ஒருவரிடம் உதவி கேட்பதற்கு அவ்வளவு எளிதாகத் தன்மானம் இடம் கொடுத்துவிடாது. ஆனால், ஒரு வேளை உணவை யார் நமக்குக் கொண்டு வந்து தருவார்கள் என்று காத்திருப்பது எவ்வளவு கொடுமை. அந்தக் கொடுமையை இந்த மழை என் மக்களுக்குச் செய்தது.
மாதவிடாய்க் காலத்தில் காட்டன் துணி பயன்படுத்துவதை நிறுத்தி, சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தத் தொடங்கிய தருணம் அது. எப்போதும் அக்காவே வாங்கி வந்து விடுவார். ஒருமுறை கடைக்குப் போய் வாங்கும்போது கடையில் இருந்தவர் ஆண். அவரிடம் எப்படிக் கேட்பது என அவ்வளவு தயக்கம். கூச்சம். கொஞ்சம் நேரத்தில் புரிந்து கொண்ட அவர், அவரது மனைவியைக் கூப்பிட்டு, இந்தப் பொண்ணுக்கு என்ன வேணும் கேளு என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். நாப்கின் வேண்டும் என்றதும் ஒரு நியூஸ்பேப்பரில் சுற்றி, கறுப்பு நிற ப்ளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தார். அதை வாங்கிய உடனேயே காலேஜ் பேக்கிற்குள் திணித்துக் கொண்டு சென்ற நாட்கள் உண்டு. ஒருமுறை சீனியர் அக்கா ஒருவர், நாப்கின் வாங்கும்போது ’ப்ரட் வாங்கிட்டுப் போறாங்கடா’ என்று பையன்கள் கிண்டல் பண்ணதாகச் சொல்லி அழுதார். சானிட்டரி நாப்கின்கள் அவ்வளவு கேலிக்குறிய, மறைத்து வாங்க வேண்டிய ஒரு பொருளாக இருந்தது. இந்த மழைக்காலத்துக்கு முன்பு வரை.
இந்தப் பெருமழைக் காலம் இதை உடைத்தது. உணவுப் பொருள்களைத் தாண்டி, நிவாரணப் பொருட்களில் நாப்கின்களும் உள்ளாடைகளும் வந்து சேர்ந்தன. வாங்கி அனுப்பிய பலரும் ஆண்கள். அதைச் சுமந்து சென்ற பலரும் ஆண்கள். ஆனால், களப்பணியின்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். எல்லாப்  பொருட்களையும் கடகடவென்று பிரித்துக் கொடுக்கும் நண்பர்கள், சானிட்டரி நாப்கின்கள்  கொடுக்கும்போது மட்டும் யாராவத் பெண் ஒருவர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன மனநிலை இன்னமும் நெருடலாகவே இருக்கிறது. நாப்கின்களைப் பெற்றுக் கொள்ளும் பெண்களும் கூட, அவ்வளவு கூச்சத்துடன், அவ்வளவு வெட்கத்துடன், அவ்வளவு தயக்கத்துடன் வாங்கி உடைக்குள் அல்லது முதுகுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டதைப் பார்த்ததும் மனம் என்னவோ செய்தது. ஆனால் இதையெல்லாம் மீறி, கூனிமேடு பகுதியில் நாப்கின்களைக் கொடுத்தபோது சில பெண்கள் கைகளைப் பற்றிக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டேன்க்கா இது இல்லாமல். தேங்க்ஸ்க்கா என்று ஒரேயொரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அந்த வார்த்தையை விட கை அழுத்தத்தில் உணர்ந்தேன் அந்த வலியை.
இந்தப் பணிகளுக்கு இடையிலும் சில தொந்தரவுகள் மனதை நெருடச் செய்தன. ஹாய், ஹவ் ஆர் யூ, யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ் என்றெல்லாம் வரும் மெசேஜ்கள் வரும். அதைப்பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படி வரும் மெசேஜ்களுக்கு ’வணக்கம் சார். மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மட்டும் பேசுங்க. பர்சனல் சாட் வேண்டாம்’ என்று சொன்னால் ‘மெசேஜ் அனுப்பக் கூடாதுனு சொல்ற நீ எதுக்குடி ஃபேஸ்புக்ல நம்பர் ஷேர் பண்ற’, ‘மெசேஜ் அனுப்பக் கூடாதுனு சொல்லிட்டு ஒரு மணி வரைக்கும் ஆன்லைன்ல இருக்க’ என்றெல்லாம் ரிப்ளை வரும். உடனடியாக ப்ளாக் செய்துவிட்டு அடுத்த வேலை என்ன, எங்கிருந்து பொருட்கள் வருகின்றன, எந்தப் பகுதி மக்களுக்குத் தேவை இருக்கிறது, யார் மூலமாக, அல்லது எப்படி அதைக் கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்பது இப்படித்தான் யோசித்தோம். என் போன்ற பெண் தோழிகள் பலரும் சந்தித்த பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால், இதற்கெல்லாம் கோபப்பட நேரமில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அப்படித்தான்.
இன்னொரு மனதுக்குச் சங்கடமான இரண்டு நிகழ்ச்சி.
கடலூர் மக்களுக்கென வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து இரண்டு டிரக்கில் நண்பர் ஒருவர் ஏற்றி வைத்தார். நிவாரணப் பொருட்களை அடித்துப் பிடிங்குவது நடந்து கொண்டிருந்ததால் நேரடியாகக் கடலூருக்கு அனுப்பி வைக்காமல் புதுவைக்கு வரவழைத்து இங்கிருந்து களப்பணியாளர்கள் மூலம் கொண்டு சேர்க்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால், டிரக் கிளம்பும்போது பெங்களூர் நண்பர், டிரக் நேரடியாகக் கடலூருக்குக் கிளம்பிடுச்சு, ஒரு பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் கடலூருக்கு அனுப்பச் சொன்னார் என்றார். அந்த நபர் யாரென்று எங்கள் நண்பர்கள் யாருக்கும் தெரியவில்லை. இடையில் எப்படியோ புகுந்து விட்டார். அந்த நபரின் எண் வாங்கி, அவரிடம் விசாரித்தோம். இல்ல மேடம் நாங்களே டைவர்ட் பண்ணிட்டோம். இங்க போலீஸ் பாதுகாப்பெல்லாம் ரெடி பண்ணிட்டோம். கடலூருக்குத்தான் ட்ரக் வருது. நீங்க பயப்பட வேண்டாம் என்றார். உங்களுக்கு இந்தத் தகவலை யார் சொன்னது என்றால் அவரிடம் தெளிவான பதில் இல்லை. பிறகு உடனடியாக அந்த டிரக் டிரைவர் நம்பரை வாங்கி, கடலூருக்குச் செல்ல வேண்டாம். திருவள்ளூர் மாவட்டத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று வழிமாற்றி விட்டு, ஒருவழியாக அந்தப் பொருட்கள் எல்லாம் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேருவதற்குள் ஒருவழியாகிவிட்டது.
இன்னொரு டீம், நிவாரணப் பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு, கடலூருக்குச் செல்லும் வழியில் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு போன் செய்தார். பாண்டிச்சேரிக்கு வாங்க. இங்கிருந்து களப்பணியாளர்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கலாம் என்று சொல்லி பாண்டிச்சேரிக்கு வரச் செய்தோம். பொருட்களை வீட்டின் முன் இறக்கி வைக்க அவ்வளவு யோசித்தார்கள். உண்மையிலேயே நாங்கள் களப்பணியாளர்கள் தானா? அடையாள அட்டையைக் காட்டுங்கள்? ஏன் வீட்டில் இறக்கச் சொல்றிங்க? கரக்டா கொண்டு போய் கொடுத்துடுவிங்களா? என்றெல்லாம் ஏகத்துக்கும் கேள்வி கேட்டுவிட்டு, பிறகு ஒரு நோக் பேட்டில் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை எழுதி, அதில் எங்கள் நண்பர்களைக் கையெழுத்திடச் சொல்லி, நம்பர் வாங்கிக் கொண்டு, எந்தப் பகுதியில் கொடுக்கிறிங்களோ கொடுக்கும் போது போட்டோ எடுத்து அனுப்புங்க என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ப்ரபா ஒயின்ஷாப் ஓனருங்களா கடை எப்ப சார் தெறப்பிங்க என்ற ரேஞ்சில் கொடுத்திட்டிங்களா, போட்டோ எப்ப சார் அனுப்புவிங்க என்று கேட்டு நச்சரித்துவிட்டார். எந்தவிதமான லேபிளும் இல்லாமல், பேனரும் இல்லாமல், பின்புலமும் இல்லாமல் நண்பர்கள் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகள் செய்யும்போது இப்படி நாங்கள் சந்தேகிக்கப்படுவோம் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் பகுதிகளில் எந்தவிதமான புகைப்படங்களையும் எடுக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால், உதவி செய்வதைப் புகைப்படம் மூலமாக ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? இப்படி எல்லாவற்றையும் இழந்து யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்று காத்திருக்கும் அவலச் சூழலில் நாம் இருந்தால் புகைப்படம் எடுத்துக் கொள்வதை அனுமதிப்போமா? நம் தன்மானம் அதற்கு இடம் கொடுக்குமா? பிறருக்கு உதவி செய்வது நமக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், வாங்குபவர்களுக்கு?
நான்கைந்து நாட்களாகச் சென்னையில் இருக்கும் பல நண்பர்களையும் தோழிகளையும் தொடர்பில் பிடிக்க முடிக்காமல் தவித்தவர்களும் நானும் ஒருத்தி. நான்கு நாட்களுக்குப் பிறகு மடிப்பாக்கத்தில் இருந்து பேசிய தோழி, பாரதி, இங்க சாப்பாடே வரல. சொல்லும்போது  கிட்டத்தட்ட அழுதேவிட்டாள். சென்னையில் களப்பணியாளர்கள் மூலம் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மறுநாள் போன் பண்ணி, பாரதி எனக்குக் காரக்குழம்பும் உருளைக்கிழங்கும் வேண்டும் என்றாள். அடியேய் காமெடி பண்ணாத. எவ்வளவு பேருக்குச் சாப்பாடு வேண்டு அதை மட்டும் சொல் என்றேன். இல்லை நிஜமாவே காரக்குழம்பு சாப்பிடனும் என்றாள். இரண்டு நாள் சாப்பிடாமல் கிடந்துட்டு இப்போ சாப்பாடு கிடைக்குது என்றதும், வாய்க்கு ருசியா கேக்குதா என்று கோபப்பட்டேன். அவள் அழுது கொண்டே சொன்னாள். இல்ல இப்படியே மழை பெய்து சென்னை மூழ்கிடுமாம். எப்படியும் சாகத்தானே போறோம். பிடிச்ச காரக்குழம்பு சாப்ட்டு சாகலாமே. உங்களையெல்லாம் திரும்பப் பார்ப்பேனா தெரியல என்றாள். அவளை அணைத்து ஆறுதல் சொல்லும் அளவுக்கு அவள் அருகில் இல்லை. ஆனால், இந்த மழையைச் சபித்தேன். மழைநாளில் இப்படியெல்லாம் வதந்திகளைப் பரப்பிவிடும் மனிதர்களை அதிக அதிகமாய்ச் சபித்தேன்.
மழைவெள்ளம் வடிந்த பிறகும் போர்வை, பாய் போன்ற பொருட்களைக் கொடுப்பதற்காகச் சென்றோம். அப்போது ரங்கநாதபுரம் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீடுகளாகப் பார்த்துப் பார்த்துப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்புகையில் ஒரு அம்மா கேட்டார். ‘ஏம்மா நீங்கள்லாம் அரசியல்ல எதுவும் நிக்கப் போறிங்களா?’ அந்த மனநிலை எனக்குப் புரியாமல் இல்லை. எலக்‌ஷன் டைம்ல ஓட்டு கேட்டு வருவாங்கல்ல. அப்ப ஞாபகம் வச்சுக்கோங்க இதையெல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தோம்.
இந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான காலம். வெள்ளத்தில் நீந்தியபடி உணவுப் பொட்டலங்களையும், பிற அத்தியாவசியப் பொருட்களையும் சுமந்தபடி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்துக் கொடுத்து அவர்கள் மனம் நிறையச் செய்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஏராளமானோரை இந்தப் பெருமழை அடையாளம் காட்டியது. அட்சயப்பாத்திரங்களைச் சுமந்து சென்ற மணிமேகலைகளை அடையாளம் காட்டியது இந்த மழை.
எல்லாவற்றிற்கும் மேலாக, எழுதுவதைத் தாண்டி நான் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்கு உபதேசித்தது இந்தப் பெருமழை.
(நன்றி : உயிர்மை ஜனவரி 2016)

1 கருத்து: