செவ்வாய், 26 ஜனவரி, 2016

உயிர்த்திருக்கும் கண்கள்

இந்தக் கடற்கரையில் தான்
வெகுகாலமாகக் காத்திருக்கிறேன்.
கடல் வழியாகப் பறந்து செல்லும் பறவையிடம்
சொல்லியனுப்பி விட்டேன்.
கால்களைத் தழுவிச் செல்லும் அலைகளிடமும்
சொல்லியனுப்பிவிட்டேன்.
நீ வரவேயில்லை.
அலைகளின் மேலெழும்பி
உள் நீந்தும் மீன்களும்
எனது காத்திருப்பை
உன்னிடம் சொல்லவே
நெடுதூரம் பயணிக்கின்றன.
அவை சோர்ந்து விடப் போவதில்லை
என
சத்தியம் செய்திருக்கின்றன.
பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
வசந்தகாலமும் கடந்துவிட்டது.
மாரிக்காலமும் கடந்துவிட்டது.
இளவேனில் கடந்து
கோடைக்காலம் துளிர்க்கத் தொடங்கிவிட்டது.
உன் அரவம் கேட்கவேயில்லை
உன் வாசனை பரவவில்லை.
உன் உருவம் கரைந்து கொண்டிருக்கிறது
கண்களிலிருந்து.

வெகுதூரத்தில்
நீ மொழியற்று இருக்கிறாயா?
அலைகளின் குரலை
பறவைகளின் மொழியை
மீன்களின் புலம்பலை
பருவங்களின் கூவலை
அறியும் திராணியற்று மரத்துப் போய்விட்டாயா?

ஊழிக்காலத்தின் கடைசி நாளில்
ஒருவேளை
நீ வரக்கூடும்.
கடற்கரை பனைமரத்தின் அருகில்
ஒரு சிலையாய் சமைந்திருப்பேன்.
என் கண்கள் உயிர்த்திருக்கும்
அப்போதும் கூட.
-- மனுஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக